வேதம் பரம ப்ரமாணம்
(முக்கூர் ஶ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹாச்சாரியார்)
– பாகம் 1 –
ஆதெள வேதா: ப்ரமாணம் ஸ்ம்ருதிர் உப குருதே ஸேதிஹாஸை: புராணை:
ந்யாயைஸ் ஸார்த்தம் த்வதர்ச்சா விதி முபரி பரீக்ஷீயதே பூர்வ பாக:
ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரி ஞாபநே த்வத் பதாப்தெள
வேத்யோ வேதைஸ் ச ஸர்வை: அஹமிதி பகவந் ஸே ந சௌ யாச கர்தா
(ஸ்ரீ பராசர பட்டர் - ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்)
நம்முடைய ஸம்ப்ரதாயத்திற்கு, மதத்திற்கு ஆணி வேர் மூலமானது வேதம்.
ஆதெள வேதா : ப்ரமாணம்
முதல் ப்ரமாணம் எது? அப்படின்னா வேதம் தான். அதாவது மாணம், ப்ரமாணம், பரம ப்ரமாணம், மேயம், ப்ரமேயம், பரம ப்ரமேயம் என்று சொல்வார்கள் பெரியோர்கள்.
இப்பொழுது பாருங்கள் ! …..” மாணம் ” என்றால் எதை நாம் உணர வேண்டுமோ, அதை உணர்த்தும்படியான ஸாதனத்திற்கு ” மாணம்” என்று பெயர். இதைக் கொண்டு தான் அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஸாதனமாக, கருவியாக இருக்கின்றதே, அதற்கு ” மாணம்” என்று பெயர். அதில் உயர்ந்தது ” ப்ரமாணம் “. தந்நிகரற்றது. பரம ப்ரமாணம்,
மேயம், நாம் அறிய வேண்டிவற்றுள்ளே சிறந்தது. ப்ரமேயம் என்றால் மிகவும் சிறந்தது. பரம ப்ரமேயம் என்றால் அதற்கு நிகரில்லாதது, உயர்ந்தது என்று அர்த்தம். பரம ப்ரமாணம் எது? என்றால் வேதம்.
வேதமாகிற பரம ப்ரமாணத்தைக் கொண்டு பரம ப்ரமேயமாகிற பரப்ரஹ்மத்தைக் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பரம ப்ரமாணமாகிற வேதத்தைக் கொண்டு தான் பரம ப்ரமேயம், நாம் அடைய வேண்டிய அந்த பரப்ரஹ்மத்தினுடைய தன்மையை, உணர வேண்டும் என்று மஹான்களான ஆசார்யர்கள் விவரிக்கிறார்கள். ஆகையால் அவனை உணர அந்த வேதத்தைத் தான் நாம் பார்க்க வேண்டும்.
அவனை உணர, அந்த வேதத்த தான் பார்க்கணும்.
ஏன்னா,
“ஒத்தார் மிக்கார் இலையாய மாமாயா” நம்மாழ்வார் சொல்றார்.
ஒத்தார் மிக்கார் இலையாய மாமாயா.. ஒத்தாரும் இல்லை, மிக்காரும் இல்லை அவனுக்கு. எல்லாவற்றை காட்டிலும் மேம்பட்டவன் அவன்..!
ஒருத்தர் பகவானுக்கு அர்ச்சனை பண்ணிண்டே இருந்தார். அவர் வேகமா அர்ச்சனை, ஓம் விபவாய நமஹ, ஓம் பிரபவே நமஹ, ஓம் சர்வதோ முகாய நமஹ, தீப்த ரஷ்மயே நமஹன்னு இப்படி அர்ச்சனை பண்ணிண்டே இருக்கச்சே, திடீர்னு நடுவுல “ஓம் தரித்ராய நமஹ”ன்னார். தரித்ராய நமஹன்ன உடனே அந்த திருவுருவ படத்தில எழுந்தருளி இருக்கானே பகவான், அவர் திடீர்னு அர்ச்சனை தட்ட பிடுங்கிண்டுட்டான். அவர் கையில இருந்து.
இது என்னா இது புது பிரயோகமா இருக்குதே..? யாராவது இதுவரைக்கும் இந்த மாதிரி பண்ணிருக்காளா அர்ச்சனை? நீர் என்ன விஷயம் தெரிஞ்சு பண்றீரா..? நீரா புஸ்தகத்த படிச்சுப்புட்டீரா.? தப்பா பிரிண்ட் ஆயிருக்கா? பகவான் கேட்கிறான். “தரித்ராய நமஹ”ன்னு அர்ச்சனை பண்றீரே, இது எங்கேயாவது பாவியமா..?! அப்படின்னான் பகவான்…ரொம்ப கஷ்டத்தோட..
இவர் சொல்றார், நான் ஒன்னும் புதுசா பண்ணல. இருக்கறத தான் பண்றேன், நன்னாதான் பண்றேன்னார் அவர். நான் சொன்னதுல தப்பே இல்லை. அது.. நீ தோஷம் சொல்ல முடியாது, அப்படின்றார்.
அப்படின்னா பகவான் கேட்கிறான், “தரித்ராய நமஹ”ன்னு பண்றீரே, அது உண்டா எனக்குன்னு கேட்டான்.?
இருப்பதனால தானே பண்றேன்னார் அவர்.
என்ன இது? எனக்கு தரித்ரமா? எனக்கு ஏழ்மையா? எனக்கு தாரித்ரியமான்னு கேட்கிறான் பகவான்.?
கட்டாயம் இருக்கிறதுன்னார் இவர்.
இல்லையேன்னான்.
இருந்தால்… இருக்கிறதுன்றத நான் நிரூபித்தால் நீ ஒத்துக்கொள்வியான்னு கேட்டார் அவர்.
இருந்தா கட்டாயம் ஒத்துக்குறேன்னான் பகவான்.
அப்போ அவர் பகவானை பார்த்து கேட்கிறார். எல்லாத்தையும் காட்ட சாமர்த்தியம் உனக்கு இருக்கிறது. உனக்கு சமானமானவன் என்பவனை காட்டு அப்படின்னார். இவன் எனக்கு துல்யம், எனக்கு சமானம்னு ஒருத்தனை காட்டு அப்படின்னார்.
எல்லாத்தையும் காட்ட சக்தியுடைய பரமாத்மாவுக்கு இத காட்ட முடியல. முழிக்கிறான். அவனை போல இன்னொருத்தன் இருந்தால் தானே காட்ட முடியும்!!
அவன் தயங்குவதை பார்த்தார் அவர். “அஸ்மின் விஷயே தாரித்ரியம் அஸ்திவா நவா?” அப்படின்னார் அவர். உடனே சம்ஸ்கிருதத்துல ஆரம்பிச்சுட்டார். இந்த விஷயத்துல உனக்கு தாரித்ரியம் இருக்குதா இல்லையான்னார். “அஸ்தி அஸ்தி”ன்னான் பகவான். இருக்கிறது இருக்கிறதுன்னு ஒத்துண்டுட்டான்.
“அதிகஹா குதோன்யஹா?” உன்னை காட்டிலும் மேம்பட்டவன் எவன் இருக்கிறான்? சமானமே இல்லையே மேம்பட்டவன் உண்டான்னார்.
அதுலையும் இல்லேன்னான் பகவான். அப்ப நான் அர்ச்சனை பண்றேன் வாய் மூடுன்னார் அவர்.
என்ன அர்ச்சனை பண்ண போறீர்னு கேட்டான்..?
“ஓம் சமாப்யதிக தரித்ராய நமஹ” உனக்கு தாரித்ரியம், ஏழ்மை எதிலே? உன்னை போல ஒருத்தனை காட்ட முடியல, அதுல ஏழ்மை தானே? உன்னை காட்டிலும் அதிகம் இல்லை, அந்த விஷயத்துல உனக்கு ஏழ்மை இருக்குதா இல்லையா? ஆகையினால அந்த ரெண்டு விஷயத்துலயும் உனக்கு ஏழ்மை இருக்கிறதுன்றத நீ ஒத்துண்டு ஆணும் அப்படின்னார். பகவான் ஏன் வாய திறக்கறான்? வாய் மூடிண்டுட்டான். மேல பண்ணுன்னுட்டான்..!!
ஆகையினால பகவானுடைய பெருமையை, சமாப்யதிக சம்பாவனஹ. ஆகையினால ஒத்தாரும் மிக்காரும் இலையாய மாமாயன்.
நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
தளிரொளி யிமையவர் தலைவனும் முதலா
யாவகை யுலகமும் யாவரும் அகப்பட
நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
ஒருபொருள் புறப்பா டின்றி
முழுவதும் அகப்படக் கரந்து
ஓர் ஆலிலைச் சேர்ந்த
வெம் பெருமா மாயனை யல்லது
ஒருமா தெய்வம் மற்றுடையமோ யாமே !!
( ஸ்வாமி நம்மாழ்வார் – திருவாசிரியம் )
பெற்றனை நீயே மற்றுள வெல்லாம்
பெறுவது நின்னை உறுவது கொள்வார்
நின்னலால் அன்றி மன்னார் இன்பம்
நின்பொருட்டு நீ என்பொருட்டிலை |
நின்னுரு நின்றும் மின்னுருத் தோன்றும்
நின்தனக்கு நிகர் நின்னடி அடைவார்
நின்னலால் அன்றி அன்பால் உய்யார்
வாரணம் அழைக்க வந்த காரணனே ||
( ஸ்வாமி தேஶிகன் – மும்மணிக்கோவை )
என்று நம்மாழ்வார், ஸ்வாமி தேசிகன் இப்படிப்பட்ட மகான்களுடைய ஶ்ரீசூக்திகளை நாம பார்த்தோமானா அவனை காட்டிலும் மேம்பட்டவன் இல்லை. ஆகையினால மேம்பட்டவன் இல்லாத அந்த சர்வேஸ்வரனுடைய பிரபாவத்த நாம் தெரிந்து கொள்ளணும்னா, அவனை விளக்குவதிலே, அவனை காட்டுவதிலே, உயர்ந்ததாய் அதை காட்டிலும் மேம்பட்டது இல்லாததாய் இருக்கும்படியான வேதத்த தான் பார்க்கணும்..!!