வேதம் பரமப் பிரமாணம்
(முக்கூர் ஶ்ரீ லக்ஷ்மீ நரஸிம்ஹாச்சாரியார்)
-பாகம் 5-
(கடைசி பாகம்)
அதற்கு அடுத்தது பாருங்கோ ‘அவிச்சின்ன பரம்பராகதத்வம்‘. ஒருவர் பின் ஒருவரால் சொல்லப்பட்டு, தரிக்கப்பட்டு, அறுபடாமல் வந்து கொண்டிருக்கிறது. அது தான். ஸ்வரம் பிழையாமல் ஆதியில் ‘சுருதி’னு பெயர் அதற்கு. கேட்கப்பட்டதனால் சுருதி. அதனால வேதம் கேட்கப்பட்டது ஆதியிலே. நன்னா கேட்டு கேட்டு கேட்டு உள்ளே தரிக்கப்பட்டது. கேட்டு கேட்டு தரிக்கணும். அதனால அதுக்கு சுருதினு பெயர்.
அதே பிரகாரம் சொல்லணும். இப்போ மாத்தி சொன்னா என்ன ஏற்படும்? ‘மித்யா தீதஹ’. அதாவது ‘ஸ்வரதோபராதாத் யதேந்திர சத்ருஹு ஸ்வரதோபராதாத் ச வாக்வஜ்ரஹ யஜமானம் ஹினஸ்தி’. இந்த வேதத்த அபஸ்வரமா ஒருத்தர் சொன்னா, அதனால விபரீதமான பலன்கள் ஏற்படும். சஸ்வரமா சொன்னா எவ்வளவு நல்ல பலன்கள் ஏற்படுமோ, அபஸ்வரமா சொன்னா விபரீதமான பலன்கள் ஏற்பட்டு, சொன்னவனை அந்த அபஸ்வரமாக சொல்லப்பட்ட அந்த சப்தம் வஜ்ராயுதமாக மாறி அடிக்கிறது. கேக்கறவாள என்ன பண்ணும்னு சொல்ல முடியாதுன்னுட்டார். கேக்கறவாள பிளந்து எடுக்குமது. ஆகையினால சொல்றவாளையும் கேக்கறவாளையும் சித்ரவதை பண்றதாம் அபஸ்வரமா சொன்னா. அப்படி அபஸ்வரமா கேட்க கூடாது, அபஸ்வரமா சொல்ல கூடாதுன்னார்.
அப்படி என்ன ஆயிற்றுன்னு பாருங்கோ… ஸ்வரத்துக்கெல்லாம் அப்படி அர்த்தம் உண்டானா, லௌகிக ஸ்வரத்துக்கே அர்த்தம் இருக்குது. கொஞ்சம் இழுத்தா, கொஞ்சம் இறக்கினா, கொஞ்சம் அழுத்தி சொன்னா அர்த்தம் மாறி போயிடுறது.
ஒருத்தர் உட்கார்ந்து இருக்கார். ஒருத்தர் வர்றார் கேட்டை திறந்துண்டு அவர் வீட்டுக்கு. இவர் பார்த்தார், இவர் ஏன் வர்றாரோ தெரியலையே இப்போ..? இவர் சாயங்காலம் வரைக்கும் போக மாட்டாரே. இப்படியே உட்கார்ந்துருவாரே. இவர் வரத்துல அவருக்கு இஷ்டம் இல்ல. ஆனா அவர் உள்ள வந்துட்டார். வேற என்ன பண்றது? ‘வாங்கோ’ அப்படின்னார். அதுக்கு என்ன அர்த்தம்? ‘போங்கோ’ அப்படினு அர்த்தம். வாங்கோனு தான் கூப்பிடுறார். ஆனா அந்தத் தொனியில என்ன அர்த்தம்? இவர் ஏன் வந்தாரோன்றத தொனியிலேயே காட்டறார், அவர் இஷ்டம் இல்ல. இன்னொருத்தர் வர்றார், இவருக்கு ரொம்ப இஷ்டம். ‘வாங்கோ வாங்கோ வாங்கோ வாங்கோ’ன்றார். அந்த வாங்கோ சப்தத்தையே அடுக்கடுக்கா சொல்லிட்ன்டே இருக்கார். ‘வாங்கோ வாங்கோ’ன்னா அவர் இன்னும் வேகமா காலை எடுத்து வைக்கிறார் உள்ள. அப்ப அவர் வருகையில இவருக்கு இஷ்டம்ன்றது அந்தத் தொனியில தெரியறதா இல்லையா..?
இப்ப நாம பேசுற பேச்சில நித்தியமே கொஞ்சம் அழுத்தி, திருத்தி, கொஞ்சம் நீட்டி, இறக்கி சொன்னா அர்த்தம் மாறி போடுறது. வேதம் மொத்தம் ஸ்வரத்துலேயே இருக்குது. அந்த ஸ்வரத்துல இந்த ஸ்வரத்த சொன்னா தான் அந்த தேவதைகளுக்கு திருப்தி.
இப்ப பாருங்கோ ‘அக்னயே ஸ்வாஹா… சவித்ரே ஸ்வாஹா… பூஷ்ணே ஸ்வாஹா… ஸ்வாஹா…’ இதுக்கு தீர்க்க ஸ்வரிதம்னு பெயர். இந்த ஸ்வரத்துல தான் ஹோமம் பண்ணனும்னு இருக்குது சாஸ்திரத்துல. இந்த ஸ்வரத்த சொன்னா தான் அந்த தேவதைகள் வந்து அவிஸ்ஸ வாங்கிண்டு போவா. நமக்கு நாழி ஆயிடுத்துன்றதுக்காக ‘அக்னயே ஸ்வாஹா சவித்ரே ஸ்வாஹா பூஷ்ணே ஸ்வாஹா…’ இப்படி ஒருத்தர் சொன்னார்னா ஒரு தேவதையும் வர மாட்டார்கள். ஏன்னா அவரை கூப்பிட வேண்டிய முறையில கூப்பிடலையே நாம. இந்த ஸ்வரத்துக்கு வர மாட்டார்கள். இது ‘வாங்கோ’ன்ற கதை தான். ஆகையினால ‘ஸ்வாஹா’ அந்த ஸ்வரம் சொல்லணும். அத சொன்னா தான் அவர்கள் வருவார்கள். அத வாங்கிண்டு போவார்கள்.
அப்ப நாம காத்தாலேயிருந்து சாயங்காலம் வரைக்கும், இல்ல ராத்திரி மொத்தம் ஹோமம் பண்றார் ஒருத்தர். ஸ்வாஹா ஸ்வாஹா ஸ்வாஹானு எடுத்து போட்டுண்டு இருந்தா, அந்த தேவதை வருமா? வாங்கிண்டு போகுமா? அப்ப விதிஹீனஸ்ய யக்ஞஸ்ய சத்யஹ கர்த்தா வினச்யதி. விதிஹீனமா யக்ஞம் பண்ணா, அந்த பலனை அடையறத விட விபரீதமான பலன்கள் தானே வந்து சேர்றது? அப்ப யக்ஞம் பண்றதுனா எவ்வளவு சிரமமான காரியம்! ஆகையினால அப்படியேப்பட்ட அந்த ஸ்வரத்துல தான் கூப்பிடணும்.
இப்ப பாருங்கோ மழை பொழியணும். மழை கொஞ்சம் குறைவா இருக்குதுன்னு சொல்லின்டு இருக்கா. நிறைய மழை பெய்யணும். அந்த மாதிரி தீர்த்தம் எங்க பார்த்தாலும் தீர்த்தம் நிறைந்து வழியணும், எல்லா நீர் நிலைகளிலும். அதை இந்திரனுக்கு நாம தெரியப்படுத்தணும். அவனுக்கு சொல்லிட்டோம்னா மந்திரத்துல, கொட்டிப்புடுவான். மழை பொழியணும்னா அதுக்கு ஒரு மந்திரம். மழை வேணாம்னா அதுக்கு ஒரு மந்திரம். அப்படி மந்திரத்தினாலேயே மழையை வரவழைத்தார்கள். வேண்டாம்னா ஒரு மந்திரம் ‘சமுத்திரங்கச்ச ஸ்வாஹா’. இந்த மந்திரத்த சொன்னா மழை பொழியாது, சமுத்திரத்துல போய் பொழியும். இங்க வான்னா அதுக்கு ஒரு மந்திரம். அந்த மந்திரத்த, வருண ஜெபம், அந்த மந்திரத்த பண்ணான்னா அப்ப விசேஷமா மழையானது இந்த இடத்துல வந்து விசேஷமா விழும். ஆகையினால ‘ஆப பிரணயதி’. அந்த மந்திரத்த சொன்னா மழை பொழிய ஆரம்பிச்சுரும். ஆகையினால அப்படியேப்பட்ட உத்தமமான மந்திரத்த சொல்லி மழையும் வரவழைக்கலாம், மழையை நிறுத்துவதற்கும் மந்திரத்தினாலேயே பூர்வ காலத்துல விசேஷமாக மகரிஷிகள் அந்த மந்திரத்தினாலேயே ஆண்டார்கள்.
இப்ப நீர் நிலைகள்ல ஜலம் தேங்கி வழியணும்னா, அத இந்திரனுக்கு தெரியப்படுத்தணும். சப்தத்துல தெரியப்படுத்துறது பாருங்கோ வேதம். ‘ஆவத வதா வத வதத்… த்யுமத் த்யுமத் வதா வத வதத் த்யுமத்…’. இது என்னது என்றார். எங்க பார்த்தாலும் மழை பொழிஞ்சு, கழனி கட்டு நீர் நிலைகள், ஆறு, குளம் எல்லாம் ஜலம் வழியறதுனு வச்சுக்கோங்கோ… எப்படி மழை பெஞ்சிருக்குதுன்னு ஒருத்தர் ஊர போய் பார்க்குறதுக்கு இப்படி போறார். ‘அங்க ஒரு தவளை வத வத… இங்க ஒரு தவளை வத த வத த… வத வத வத த வத த…’ அப்படியே தவளை கத்துற மாதிரி இருக்கு பாருங்கோ. ஆகையினால தவளை கத்துற மாதிரி அந்த சப்தத்த நாம சொல்லிட்டோம்னா, நீர் நிலைகள் மொத்தம் ஜலம் வழியும். நிஜமாவே தவளை கத்தும், அந்த மாதிரி கத்தும். அந்த மாதிரி தவளை கத்தும்படியான ஒரு ஜல சம்ருத்தி உலகத்துக்கு இருக்கணும்.
ஒருத்தர் போய் வித்யாரண்யர்ட்ட, ருத்ரனுடைய தாண்டவம் எப்படி இருக்கும்னு கேட்டார். நீர் என்ன நமகம், வேதம் மொத்தம் அத்தியயனம் பண்ணிருக்றீரான்னார். சலக்ஷண கனபாடினார் அவர். அதுல நமகத்துல எட்டாவது அன்வாகத்த சொல்லும், அந்த ருத்ரனுடைய தாண்டவத்த பார்க்கலாம்னார். உடனே அவர் எதிரவே சொல்ல ஆரம்பிச்சுட்டார் அவர், வித்யாரண்யர் எதிரவே.
‘நமஸ் சோமாய சோமாய… ருத்ராய ருத்ராய…’
அந்த திருவடி, அந்த ருத்ரனுடைய பத விநியாசம் அப்படி அப்படி தாண்டவம் ஆடுறானாம். இப்படி அப்படியும்.
‘தாம்ராஜ ச ச தாம்ராஜ… தாம்ராஜ தாம்ராஜ…’ அந்த தாளம் அடிக்கிற மாதிரியே சப்தம் வருதே. அப்ப நந்தீஸ்வரர் எதிர நின்னுண்டு மிருதங்கம் வாசிக்கிறாராம். அவர் என்ன மிருதங்கம்னு ஒரு வாத்தியம் வாசிக்கல. அவர் மந்திரத்தையே சொல்றார். மந்திரமே மிருதங்கமா இருக்கு. ‘தம்ரு ருக் தம்ரு ருக்… தாம்ராஜ ச ச தாம்ராஜ…’ அப்படின்னு இவர் நாட்டியம். ‘தம்ரு ருக் தம்ரு ருக்…’ அப்படின்னா மிருதங்கத் தொனிய, இந்த மிருதங்கத்த அவர் சப்தத்தினால வேதத்தினால அடிச்சு காண்பிக்கிறார். இவர் வேத சப்தத்துல நாட்டியம் ஆடுறார். அப்ப நமகம் மொத்தம் ருத்ர தாண்டவத்த அங்க பார்க்கலாம். அப்ப வேதத் தொனியிலேயே எல்லாம் நமக்கு தெரியறது.
ஆகையினால வேதத்துல இல்லாததுன்றது ஒன்று உண்டோ? ‘அனு மர்யோ மர்யோ… அர்வன் அர்வன் மர்யோ…’ இது வந்து விசேஷமா விஜயவாடாவுல சிருங்கேரி பெரியவா அங்க வந்திருந்த போது ஒரு பெரிய சதஸ் நடந்தது. அப்ப அங்க கனபாடிகள் எல்லாம் அன்னிக்கு தினம் இந்த பஞ்சாதி ஆரம்பித்தார்கள். ‘பதயந்தம் பதங்கம்’னு பஞ்சாதி ஆரம்பம். இதுல ‘அர்வன் அர்வன்’ அப்படின்னச்சே சுவாமி அவர் பெரியவர் சிரிச்சுட்டு, ‘புனஹ உச்சதாம்’னார். மறுபடியும் சொல்லுங்கோனார்..!
ஆச்சாரியாள் கேட்டுட்டாளேன்னு எல்லாருக்கும் உற்சாகம். இன்னும் ரொம்ப நன்னா சொன்னா. அப்போ அவர் சொன்னார், வேதத்துல இல்லாததுன்றதே கிடையாது. இன்னைக்கு தான் எனக்கு தெரியறது, வேதத்துல ‘டவுல்’ (Davil) கூட இருக்குதேன்னார் அவர் சுவாமி. ‘தவுலா’ன்னாார்கள் எல்லாரும். ஆமா அந்த தவுல் வாசிக்கிற வித்வான், ஒரு கையால கொம்ப வச்சுண்டு அடிக்கிறார், இன்னொரு கையால விரலால தட்றார். ஒரு சமயம் அந்த கொம்பையும் எடுத்துண்டு இந்த பக்கம் வச்சுண்டு தட்றார். அப்ப பாருங்கோ, )’அர்வன் அர்வன்… நன்வன் வர்வன்… அர்வன் அர்வன் நன்வன்…’‘அர்வன்’னா அந்த தவுல் சப்தம் கூட வேதத்துல இருக்குதே. ஆகையினால அந்தத் தொனியில எல்லாத்தையுமே… மிருதங்கம் இல்ல, தவுல் சப்தமும் இருக்கிறது..!!
இப்படி நாம பாத்துண்டே போனோமானா வேதத்தில் இல்லாததுன்றது ஒன்று உண்டோ? எல்லாத்தையும் இந்த வாக்கினாலேயே நாம சொல்லலாம். சமஸ்தமும் அந்த வேதத்திலே அடங்கியிருக்கிறதுனால, இது ஒரு புருஷ கிருத்யம், ஒரு மனிதனுடைய மூளைக்கு உட்பட்டு இருந்ததுன்னா, இப்ப அடியேனை பார்த்து நீங்க ஒரு நூல் இயற்றுங்கள், நீங்கள் இயற்றினா எல்லாருக்கும் உபகாரமா இருக்கும்னு ஒருத்தர் சொல்றார். அடியேன் நூல் இயற்ற ஆரம்பிச்சா, அடியேன் எதை அதிகமாக கற்றேனோ அதை அதுல வலியுறுத்துவேன். அதுல பிரமை, வஞ்சனைக்கு இடம் இருக்கும். ஆகையினால ஒரு சங்கோஜமா இருக்கும். அது ஒரு சாராருக்கு பிடிக்கும், ஒரு சாராருக்கு பிடிக்காமல் போகலாம். இப்படி எல்லாம் ஒரு மனிதனால் இயற்றப்படும் கிரந்தத்திற்கு எத்தனையோ தோஷங்கள் சம்பவிக்கின்றன. இப்ப வேதம் எல்லோருக்கும் பொது. ஆகையினால ஒருத்தருக்குன்றது இல்ல. அதுல ஒருத்தருக்கு பிடிக்கக்கூடிய விஷயம், பிடிக்காத விஷயம் அவருக்குன்னு உண்டோ, அப்ப அது ஒரு மனிதனுக்கு உட்பட்ட மூளையிலிருந்து உண்டாக்கப்பட்டிருக்குமா அப்படின்றத எல்லாரும் உட்கார்ந்து ஆலோசனை பண்ணி பார்க்கணும். ஒரு நாளும் அவ்வாறு இல்லை. ஒரு மூளைக்கு கட்டுப்பட்டு ஒரு மனிதனுடைய பிரயத்தனத்தினால இயற்றப்பட்டதாக ஒரு நாளும் இல்லையது. பகவானாலையும் இயற்றப்படாதது. அது ஓராண் வழியாக உபதேசிக்கப்பட்டு வருகிற காரணத்தினால, ஸ்வரம் மாறாமல், பிறழாமல் சொல்ல வேண்டிய கிரமமும் அதற்கு இருக்கிறது..!
இப்ப பாகவத புராணம்னா ஸ்லோகத்த நாம எப்படி வேணாலும் சொல்லலாம். ஒருத்தருக்கு ஸ்லோகத்த கிரமமா பாடமா சொல்றார் அவர். ‘ஜன்மாத்யஸ்ய யதஹ…’ அப்படின்றார். ஒருத்தர் சங்கீத ஞானம் உடையவர் இத்தையே ஆலாபன பண்ணி ஒரு ராகத்துல இந்த ஸ்லோகத்த அழகா பாடுறார். ஒருத்தர் சாமான்யமா பாடுறார். ஒருத்தர் ஸ்லோகமா சொல்றார். எப்படி வேணாலும் சொல்லலாம். அதுல தோஷம் கிடையாது. வேதத்த எப்படி வேணாலும் சொல்ல முடியுமா..?
விஜயவாடாவுல ஒரு இடத்துக்கு அடியேன் போயிருந்தேன். அங்க ஒரு 60 பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஒரு கிரகத்துல ‘த்ரியம்பகம் யஜாமஹே… சுகந்திம் புஷ்டி வர்த்தனம்… உர்வாருகமிவ பந்தனாத்… ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்…’ இப்படி தாளம் போட்டுண்டு இருக்கா. அடியேன் உபன்யாசத்துக்கு அங்க கூட்டிட்டு போனா. இத கேட்ட உடனேவே நடுநடுங்கி போயடுத்து அடியேனுக்கு. அப்புறம் முதல் விஷயமே, இப்படி பாட்டா பாடுறீங்களே இது யாரு உங்களுக்கு சொல்லி வச்சா அப்படின்னு கேட்டேன். இல்ல நாங்களே புஸ்தகத்த பார்த்து மனப்பாடம் பண்ணிட்டோம். ம்ருத்யுஞ்சய மந்திரம்னு இருக்குது. அத்த நாங்க ராகம் போட்டுருக்கோம். இது தாளத்துக்கு எவ்வளவு அழகா வருது பாருங்கோ. ‘ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்…’ இப்படி 60 பேரும் தாளம் போட்டுண்டு சொல்ல ஆரம்பிச்சா.
என்ன விபரீதம், இப்படி நீங்க சொல்ல கூடாது. அதுக்கு ஒரு கிரமம் இருக்கு. ‘த்ரியம்பகம் யஜாமஹே…’ அப்படின்னு ஸ்வரமாச்சே. இத மாத்தி சொன்னா விபரீதமான பலன் கிடைக்குமே. அதனால இந்த ஸ்வரத்துல மாத்தி சொல்லக்கூடாது. அதுவும் ஸ்திரீகள் நீங்கள் இந்த மந்திரத்த சொல்லவே கூடாது. ஆகையினால இதுக்கு பதில் எத்தனையோ சிவ ஸ்தோத்திரங்கள் இருக்கின்றனவே. அத சொல்லணும் அப்படின்றத அன்னைக்கு தினம் அடியேன் அங்க சொல்லும்படியா நேர்ந்தது. அப்படின்னா என்ன அர்த்தம்னா, நாம இஷ்டப்படி அத பாட்டாவோ, நமக்கு தோணின பிரகாரம் அத சொல்றதுக்கு இல்ல. அது எப்படி இருக்கோ அப்படித்தான் அத சொல்லணும். அத மாத்தி சொன்னா விபரீதமான பலன்கள் ஏற்படும்.
ஏற்பட்டுருக்கா அப்படின்னா? பூர்வ காலத்துல பாருங்கோ, த்வஷ்டான்னு ஒருவர். அந்த த்வஷ்டான்றவர் புத்திர காமேஷ்டி யக்ஞம் பண்ணார். அதுல தனக்கு ஒரு பிள்ளை உண்டாகணும். அவன் அமராவதி பட்டணத்துக்கு போய், இந்திரனுடைய மணிமுடியை வீழ்த்தி, இந்திர சிம்மாசனத்துல உட்கார்ந்து கொண்டு, அந்த இந்திர பதவியை வகிக்கும்படியான பிள்ளை தனக்கு உண்டாக வேண்டும்னு ஒரு யக்ஞம் பண்ணனும்னு காம்யமா மனதில கோரிக்கையோட அந்த யக்ஞத்த நடத்தணும்னு பார்த்தார்.
ஆசாரியரிடத்துல சொன்னார் புரோகிதரிடத்துல. அவர் சொல்றார், ‘இந்த மாதிரி கோரிக்கையோட யக்ஞம் நீ பண்ணனும்னு நினைக்கிறியே, இதுக்கு கர்த்தாவான நீ மந்திரத்த சொல்லணும். புரோகிதனான நானே மந்திரத்த சொன்னா பிரயோஜனம் இல்ல’. இது அந்த காலத்துல இருந்தே இருக்குதுன்னு ஏற்படுறது. ஆகையினால கர்த்தா மந்திரத்த சொன்னா தானே நல்லது. வாயை விட்டு அவர் சொல்லணும். புரோகிதர் மாத்திரம் சொல்லியிருந்தா பிரயோஜனம் இல்ல. ஆகையினால தான் கூட சொல்லணும். அப்ப சில மந்திரங்களையாவது கர்த்தா சொல்லி தான் ஆகணும்.
அதனால இப்ப யக்ஞத்த நான் ஆரம்பிக்கணும்னா, அதுக்கு உண்டான மந்திரங்களை முதல்ல என்னிடத்துல கத்துக்கோ. அத நன்னா சொல்ல தெரிஞ்சுண்ட பிற்பாடு யக்ஞத்த ஆரம்பிக்கிறேன்னார். அதுக்கு அவன் சொல்றான், இப்ப வேதாத்யயனம் பண்ண யாரால முடியும் சுவாமி? நீங்க எப்பப்போ எப்படி சொல்ல சொல்றீங்களோ அப்படி சொல்லிப்புடுறேன். அதனால யக்ஞத்த ஆரம்பிச்சுடுங்கோன்னான். திடீர்னு ஏற்கனவே அபியாசம் இல்லாமல் மந்திரத்த அத்தியயனம் பண்ணிட்டு திடீர்னு ஹோம குண்டத்துக்கு எதிர வந்து மந்திரத்த சொல்லுன்னா யாரால சொல்ல முடியும்? திடீர்னு வருமா அப்படி?
அவனுடைய நிர்பந்தத்தினால யக்ஞத்த ஆரம்பிச்சுட்டார். வேற வழி இல்ல என்ன பண்றது, நடந்துண்டே இருக்குது. இந்த மீதி மந்திரத்தெல்லாம் நான் சொல்லிடறேன். இப்ப முக்கியமா ஒரு மந்திரம், இத நீ தான் சொல்லணும். அப்படின்னு ஷ்ருக் ஸ்ருவத்த கையில எடுத்துக் கொடுத்தார். புரோடாசத்த வச்சார். ‘ஆஜ்யேனாபி அபிகார்யா’ அபிகாரம் பண்ணியாச்சு. இப்ப ஹோமம் பண்றதுக்கு சித்தமா இருக்கச்சே, நீர் சொல்லும்னு அவரை பார்த்து நிந்துண்டு ஹோமம், நிந்துண்டார். ‘இந்திர சத்ருர் வர்த்தஸ்வ ஸ்வாஹா…’ அப்படின்னு ஹோமம் பண்ண சொன்னார். அவன் ஒரு நாளும் வேதத்த சொல்லி அறியாதவனானதுனால அவன் என்ன பண்ணான், ‘இந்திர சத்ரோ…’ அப்படின்னான். அவன் பாட்டுக்கு இழுக்கிறான். இவர் சொன்ன ஸ்வரம் ‘இந்திர சத்ருர் வர்த்தஸ்வ ஸ்வாஹா…’ அப்படின்னார். அவனும் ‘இந்திர சத்ரோ…’ அப்படின்னான்.
இதுக்கு என்ன ஆயிடுத்துன்னார். இதுக்கு ‘இந்திரனுடைய சத்ரு உண்டாக வேண்டும்’ என்று பொதுப்படையான அர்த்தம். ஆனா அவர் சொன்ன சொல்லிக் கொடுத்த புரோகிதர் சொன்ன ஸ்வரத்துக்கு என்ன அர்த்தம்னா, ‘இந்திரனால் வீழ்த்தப்படக்கூடிய இந்திர சத்ரு இதிலே உண்டாக வேண்டும்’ என்று அர்த்தம். இவன் சொன்ன ஸ்வரத்துக்கு என்ன அர்த்தம்னா, ‘இந்திரனை வீழ்த்தக்கூடிய பிள்ளை உண்டாக வேண்டும்’னு அர்த்தம். ஆனா அவன் மாத்தி சொன்னதுனால என்ன ஆயிடுத்து, இந்திரனை வீழ்த்த பிறந்த பிள்ளை இந்திரனால் வீழ்த்தப்பட்டான். ‘இந்த்ரோ வித்ரமஹன்…’ அந்த ஹோம குண்டத்திலேர்ந்து வித்ராசுரன் என்கிற அசுரன் உண்டானான். அவன் எதற்கு உண்டானான்? இந்திரனை அடித்து வீழ்த்த. ஆனால் என்ன நடந்தது? இந்திரனால் அடித்துக் கொல்லப்பட்டான். காரணம் ‘யதேந்திர சத்ருஹு ஸ்வரதோபராதாத்’. ஸ்வரத்துல அபராதம், ஸ்வரத்துல மாறுபாடு வந்ததுனால விபரீதமான பலன் ஏற்பட்டு போச்சு, அதனால யக்ஞமே கெட்டு போச்சு. வேற பலன் கிடைத்தது. அதனால ஸ்வரத்த சஸ்வரமா அது சொல்ல வேண்டிய முறையில சொல்ல வேண்டும் என்கிற ஒரு கிரமம் வேதத்திற்கு அமைந்திருக்கிறது.
அது மூணாவது விஷயம் ‘அவிச்சின்ன பரம்பராகதத்வம்”
நாலாவது வேதத்திற்கு ‘அனந்தத்வம்‘ என்கிற குணம். அனந்தம், முடிவில்லாததுனு அர்த்தம். அதாவது பாருங்கோ சலக்ஷண கனபாடி என்று சொல்வார்கள். வேதம் பூர்ணமாக ஒருத்தர் கற்று முடிச்சுட்டார்னா, லக்ஷணம் வரைக்கும் சொல்றார் வேதத்த. கனம் சொல்லி லக்ஷ்ணம் சொல்றார். இப்ப ‘நமஹ’ அப்படின்னு இருக்குதுன்னா நகார அகார மகார அகார விசர்ஜனீயஹ த்விமாத்ரிக விராமாஹ நமஹா தே. தைரோ வ்யஞ்சன ஸ்வரிதம் என்று பெயர். ‘நமஸ்தே தே நமோ நமஸ்தே ருத்ரா நமஹா’னு ஆரம்பிக்கிறது. இந்த ‘நமஹ’ன்றச்சே எத்தனை அக்ஷரங்கள் இருக்கு அதுல? நகார அகார மகார அகார விசர்ஜனீயஹ த்விமாத்ரிக விராமாஹ. நா, ஆ, மா, அதுக்கப்புறம் ஒரு ஆ, ஒரு விஸர்கம். ரெண்டு மாத்ர விராமத்துல அத சொல்லணும். இப்ப ‘கிருஷ்ணஹ’னு சப்தம். _ககார ருகார ஷகார அபினிதான டகார நகார அகார விசர்ஜனீயஹ த்விமாத்ரிக விராமஹ கிருஷ்ண:. கிருஷ்ண: ன்ற பதம் அந்த கீழ இருக்கிற டாவும் உச்சரிக்கணும். ககாரம், ருகாரம், ஷகாரம் அதுக்கு கீழ ஒரு டகாரம். நகாரம், அகாரம், விஸர்கம். இந்த ‘கிருஷ்ண:’ன்ற சப்தத்துடைய முழுமையான ஒரு நிலை. இப்படி ஒரு ஒரு பதத்தையும அலசி அலசி அக்ஷரங்களை எல்லாம் சொல்றது ‘லக்ஷணம்’னு பெயர். இப்படி ஒருத்தர் பூர்ணமா பண்ணியிருந்தாலும் அவர் முழுமையாய் கற்றார் என்பது இல்லை. வேதத்தை பூர்ணமாய் முழுமையாய் யாராலையும் கற்க முடியாது. ஆகையினால அந்த வேதம் அனந்தம்.
அத பாருங்கோ ‘காடகம்‘ என்கிற வேதத்துல, அது தானே சொல்றது. வேதமே மார்தட்டிக் கொள்றது. பரத்வாஜ கோத்திரத்துல பிறந்தவாளுக்கு ஒரு ஏற்றம். ஏண்டான்னார்?, பரத்வாஜ மகரிஷி மாதிரி வேதத்துல சிரமப்பட்டவர்கள் வேற யாரும் இல்ல. அவ்வளவு சிரமப்பட்டார் அவர்.
அந்த பரத்வாஜ மகரிஷிக்கு பிரத்யக்ஷமானவர் மட்டபல்லி க்ஷேத்திரத்துல எழுந்தருளியிருக்கும்படியான அந்த லக்ஷ்மி நரசிம்மன் குகைக்குள்ள இருக்கானே, அந்த பரத்வாஜ மகரிஷிக்கு பிரத்யக்ஷம். நேர பார்த்து சேவித்தார் அவனை, அந்த கிருஷ்ணா நதி தீரத்துல. ஆகையினால தான் அந்த ‘கிருஷ்ணவேணி தரங்கால்லோ சாம வேதமு… ஆ பரமாத்மா…’ அந்த பரமாத்மா அடியேனுடைய வாக்குல தெலுங்கு பத்யத்துல இந்த மாதிரி வரவழைத்தான். அது என்னதுன்னா அந்த ‘செட்டுல்லோ சேமல்லோ ருக்வேதமு… கொண்டல்லோ கோணல்லோ யஜுர்வேதமு… கிருஷ்ணவேணி தரங்கால்லோ சாம வேதமு… த்வனிஞ்சேட்டி அதர்வணமு வனமந்தயு பத பத போதாமு மட்டபல்லிகி’.
மட்டபல்லி க்ஷேத்திரத்துக்கு எல்லாரும் வாங்கோ, அங்க இருக்கிற லக்ஷ்மி நரசிம்மனை சேவியுங்கோ. அந்த க்ஷேத்திரத்துல என்ன விசேஷம்னா அந்த மலை, அந்த செடி கொடிகள், மரங்கள் அதெல்லாம் அசைஞ்சா ‘தே ஏஸ்மின் அஸ்மின் தே தே ஏஸ்மின் த்விவிதே’னு ருக்வேதம் த்வனிக்கிறது. இந்த காற்று வந்து அந்த மலையில வந்து படுறது, அந்த குகையில வந்து படுறது. அதிலிருந்து ‘தத் த்ருடம் த்ருடம் தத் தத் த்ருடம்’ யஜுர்வேதம் த்வனிக்கிறது. அந்த கிருஷ்ணா தரங்கம் அந்த அலைகள் எல்லாம் வந்து அடிச்சுட்டு திரும்பி போறது. அந்த அலையில ஒரு ஓசை. அது என்ன ‘ஹா… யா… ஹி… டா… ஹா…’ என்கிற ‘ரதம்தரம்’ன்ற சாமம் அதுல ஒலிக்கிறது. அந்த வனம் பூராவும் ‘யாஹா மனீஷினோ மனஸா’ என்கிற அதர்வண வேதம் த்வனிக்கிறது. இந்த நான்கு வேதங்களும் அந்த குகைக்குள்ள இருக்கிற லக்ஷ்மி நரசிம்மனை காட்டிக் கொடுக்கிறதுனு அந்த க்ஷேத்திரத்துல மகா ஞானிகளான பரத்வாஜர் கண்ட உண்மை அது..!!
அவர் தபஸ் பண்ணச்சே இந்த வேதங்கள் எல்லாம் அந்த நரசிம்மனை உபாசிக்கிறது, வேத சப்தம் அப்படி கேட்கிறதுன்றார். இப்ப கூட நாம ஏகாந்தமா அங்க உட்கார்ந்து அனுபவித்தோமேயானால் ருக், யஜுஸ், சாம, அதர்வணம் காதுல விழறத நாம கேட்க முடியும். ஆகையினால அதுக்கு அந்த இடத்துக்கு போய் ஒரு கம்பீரமா அந்த எம்பெருமானை நினைத்துக் கொண்டு சஞ்சல சித்தம் இல்லாமல் உட்காரணும். அந்த க்ஷேத்திரத்துக்கு போயிட்டாலே, அந்த கிருஷ்ணா நதியில உட்கார்ந்துட்டாலே, நமக்கு ஓடக்கூடிய மனது ஓடவே ஓடாது. அங்கேயே இருந்துடனும் போல தோணும். அப்படி ஒரு சன்னிவேசம், சேவித்தவர்களுக்கு அந்த இடத்துக்கு வந்தவா எல்லாருக்கும் தெரிந்த உண்மை அது..!
ஆகையினால அப்படியேப்பட்ட க்ஷேத்திரத்துல பரத்வாஜ மகரிஷி பூர்வத்துல இருக்கச்சே, அவர் ஏழு வயசுல உபநயனமாகி குருகுலத்துக்கு போனார். வேதாத்யயனம் பண்ண ஆரம்பிச்சார். பண்ணிண்டே இருக்கார். 12 ஆச்சு, 20 ஆச்சு, 30 ஆச்சு, 40 ஆச்சு, 80 ஆச்சு, 90 ஆச்சு, 96 வயசு ஆயிடுத்து அவருக்கு. வேதம் முடிந்தபாடில்லை. வேதத்த முடிக்காமல் போயிடப் போறோமேனு பயம் அவருக்கு. ஏன்னா அவர் கற்ற வேதத்துல ‘அம்ருதம் வை ஹிரண்யம் அம்ருதகும் சுவர்கோ லோகஹ அம்ருத யேவ சுவர்கே லோகே பிரதிதிஷ்டதி சதமானம் பவதி சதாயுஷ் புருஷ சதேந்திரிய:’. இந்த வேத சப்தம் மனிதனுடைய வயச 120னு நிர்ணயம் பண்றது. அதனால தான் பாருங்கோ 60 ஆன உடனே ஒரு காரியகலாபம் நடக்கிறது உலகத்துல. சஷ்டியப்த பூர்த்தினு பண்ணிக்கிறா பாருங்கோ. அது காம்யமா ஒரு காரியம். ஏன்னா 120 மனிதனுடைய வயசு, 60 தாண்டிட்டீர். இதுவரைக்கும் போனது போட்டும். இனிமேலாவது ஜாக்கிரதையா இருக்கணும்ன்றத காட்டக்கூடிய அந்த இடையிலே 60 ஆண்டு அந்த கல்யாணமானது நடக்கிறது. இது கணக்கு பிரகாரம்.
இங்க பாருங்கோ ஆழ்வார் சொல்றார் பாருங்கோ. ‘வேதநூல் பிராயம் நூறு, மனிதர்தாம் புகுவரேலும், பாதியும் உறங்கிப் போகும், நின்றதில் பதினை யாண்டு, பேதை பாலகனதாகும், பிணி பசி மூப்புத் துன்பம், ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே’ என்று தொண்டரடிப்பொடியாழ்வார் ரங்கநாதனை பார்த்து சொல்றார். தனக்கு பிறவி வேண்டாம்ன்றதுக்கு காரணம் சொல்றார். என்ன 120 வயசே ஒருத்தர் பூர்ணமா இருக்கார்னு வச்சுக்குங்கோ, பாதியும் உறங்கிப் போகும். ராத்திரில நாம தூங்கிடுறோமோ இல்லையோ. அதனால 120 வயசு அவர் இருந்தா கூட, 60 வயசு தூக்கத்துல போயிடுறது. இவர் உண்மையா வாழுற காலம் 60 வருஷம் தான். ஆழ்வார் சாஸ்திர ரீதியா பேசுறார். மத்தியான தூக்கத்தையும் சேர்த்துண்டா, இப்ப பாசுரத்தையே நாம மாத்த வேண்டியதா வரும். முக்காலும் உறங்கிப் போகும், பாதியும் உறங்கிப் போகும்னு ஆழ்வார் சொன்னது சாஸ்திர ரீதியா. ராத்திரி வேளைல தூங்கக்கூடாது, சாஸ்திரம் மத்தியான வேளைல தூங்கக்கூடாதுன்றது. ராத்திரி வேளைல தான் தூங்கலாம், அத வச்சுண்டு சொல்றார். மத்தியான தூக்கத்தையும் சேர்த்துண்டா நாம வாழுற காலம் ரொம்ப குறைவு. இதுல பேதை, பாலகன், பிணி, பசி, மூப்புத் துன்பம். இதற்கு இப்படி ஒரு பிறவி வேணுமா? என்னத்துக்கு? ‘ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே’ என்று பிறவி வேண்டாம் என்பதற்கு உண்டான நிலையை அவனுக்கு அப்படியே எடுத்து சொல்றார்.
இப்போ 120 வயசு பூர்ணமா நாம வாழ்ந்தா கூட இப்ப 96 வயசு ஆயிடுத்து. வேதத்த முடிக்க முடியலையே என்ன பண்றதுனு பார்த்தார் பரத்வாஜர். இந்திரனை குறித்து தபஸ் பண்ண ஆரம்பிச்சார். வேதாத்யயனத்த நிறுத்திப்புட்டு. இந்திரன் பிரத்யக்ஷமானான். ‘கிமபேக்ஷசே பரத்வாஜ மகரிஷே?’ன்னான். உமக்கு என்ன வேண்டும்னு கேட்டான். ‘ஆயுர்தாயமேகம் பிரசாத்யதாம்’னார் அவர். இன்னொரு 100 வயசு கிடைச்சா ரொம்ப சந்தோஷிப்பேன்னார். ‘ததாஸ்து’ அப்படின்னான் இந்திரன். இரண்டாவது 100 வயசு கிடைச்சுடுத்து அவருக்கு. ரொம்ப சந்தோஷம். என்ன அந்த வேதாத்யயனம் பண்றதுல எவ்வளவு உற்சாகம் பாருங்கோ அவருக்கு. அதுல ரொம்ப உற்சாகமா அத்தியயனம் பண்றார்.
இந்த இரண்டாவது 100 வயசுலையும் 96 வயசு ஆயிடுத்து. முடிக்க முடியல. மறுபடியும் இந்திரனை குறித்து தபஸ் பண்ணார். இந்திரன் பிரத்யக்ஷமானான். ‘புனஹ கிமபேக்ஷசே‘ன்னார். மறுபடியும் என்ன வேண்டும்? ‘புனஹ ஆயுர்தாயமேகம்‘னார். மறுபடியும் எனக்கு 100 வயசு வேண்டும் அப்படின்னார். ‘ததாஸ்து’ன்னான். மூணாவது 100 வயசு கிடைச்சுடுத்து. அதுல அத்தியயனம் பண்ணிண்டே இருக்கார் 96 வயசு ஆயிடுத்து.
பார்த்தான் இந்திரன். இவர் நாலாவதுக்காக தபஸ் பண்ணுவாரோ என்னமோ, அதுக்குள்ள நாமே போயிடுவோம்னுட்டு ‘இந்திர உபவ்ரஜ்யோ வாசா பரத்வாஜா’. அவரை தபஸ் பண்ண விடல அவன், அவனே வந்துட்டான். வந்துட்டு அங்க உட்கார்ந்துருக்கார் அவர். ‘பரத்வாஜா‘. அங்க கேசவன்னு உட்கார்ந்துருக்கான், மாதவன்… ராமா… கேசவா… மாதவா… இந்த விளி சம்போதனம். ‘பரத்வாஜா’. இந்த ஸ்வரத்துல காமிக்கிறது பாருங்கோ வேதம்..!
அவன் இந்திரன் வந்து கூப்பிடுறான். ‘பரத்வாஜா’. ஹே பரத்வாஜ மகரிஷே, இப்போ உமக்கு நான் நான்காவது 100 வயச கொடுத்தா என்ன பண்ணுவீர்? ‘யத்தே சதுர்த்தம் ஆயுர் தத்யாம் கிமேனேன குர்யா இதி‘. நான்காவது வயச நான் கொடுத்தா, ‘அனேன கிம் குர்யா இதி’. அந்த நான்காவது ஆயுர்தாயத்துனால நீர் என்ன பண்ணலாம்னு நினைக்கிறீர்? அப்படின்னான்.
அதுக்கு அவர் சொல்றார், ‘ஏ இந்திரா என்ன புதுசா கேட்கிறியே? வேற எனக்கு காரியாந்தரம் வேற ஒன்னும் கிடையாது. பிரம்மச்சரிய விரதத்துல இருந்து வேதாத்யயனம் பண்ணுவது தவிர எனக்கு வேற வேலை இல்ல’ அப்படின்னார்.
அப்போ அவர் பார்த்தான் இந்திரன். இவருக்கு வேதம்னா என்னதுனு தெரியல. வேதத்தை இவருக்கு காட்டி விடுவோம் அப்படின்னுட்டு ‘பூஹு புவஹ சுவஹ‘ என்கிற வியாக்ருதி மந்திரத்துனால மூன்று மலைகளை அங்கே உண்டாக்கினான் இந்திரன். உண்டாக்கி ‘வேதாவா ஏதே ஏதே‘, இதோ தெரிகின்றனவே இந்த மூன்று பர்வதங்கள், இவைகள் தான் வேதங்கள் அப்படின்னு காட்டினான்.
பரத்வாஜ மகரிஷிக்கு ரொம்ப சந்தோஷம். ஏனென்றால் இவருக்கு கடந்த ஆயுர்தாயங்கள் மூன்று. காட்டப்பட்ட பர்வதங்கள் மூன்று. அதனால அது மொத்தத்தையும் தான் கரைச்சு குடிச்சுட்டதா நினைச்சுண்டு, ‘ஹே இந்திரா இது மொத்தம் எனக்கு வந்துடுத்தா’னு கேட்டார்..?
‘சுவாமி இது வேதத்தினுடைய நிலை. உமக்கு வந்தத காட்டட்டுமா’ன்னான்?
‘காட்டு’ன்னார்.
‘தேஷாகம் ஹைகைகஸ்மான் முஷ்டினாததே சஹோவாச பரத்வாஜேத்யா மந்த்ர்யா வேதாவா ஏதே அனந்தாவை வேதாஹ‘. ஒரு ஒரு மலையிலிருந்தும் ஒரு ஒரு பிடி மண்ணை எடுத்து அவர் எதிர்ல போட்டு, ‘300 வருட காலத்திலே தேவரீர் அத்தியயனம் பண்ண வேத பாகம் இதுதான். இன்னும் எத்தனை நூறு வயது எடுத்தால் இந்த மலைகளை உம்மால கடக்க முடியும்..? கொஞ்சம் யோஜனை பண்ணி பாரும்..!!’ அப்படின்னான். நடுநடுங்கி போயிட்டார் அவர். ‘இப்ப என்ன பண்ண சொல்றே’ன்னார். ‘வேதாத்யயனம் பண்ணது போரும். பகவான தியானம் பண்ணி மோக்ஷத்த அடையறதுக்கு உண்டான வழியை பாரும். யாராலயும் பூர்ணமா வேதத்த அத்தியயனம் பண்ண முடியாது. அனந்தாவை வேதா:. வேதங்கள் அனந்தங்கள்னு வேதமே சொல்லிடுத்து இங்க..!!‘.
கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவுனு உலகத்துல ஒரு வழக்கு இருக்கு பாருங்கோ. இது எங்கிருந்து வந்ததுனா வேதத்திலிருந்து தான். ‘தேஷாகம் ஹைகைகஸ்மான் முஷ்டினாததே‘. ஒரு ஒரு பிடி மண். ‘ஏ ஏ வைதிகாஹா தே தே லௌகிகா:‘. எது எது வைதிகத்துல இருக்கோ அது மொத்தம்தான் லௌகிகத்துலயும் இருக்கு. ஆகையினால இந்த கைமண்ணளவுன்று சொல்றதுக்கு காரணமே, இங்க பரத்வாஜருக்கு எதிரிலே இந்திரன் எடுத்து போட்டதுதான்.
அப்படி வேதத்த ஒருவரால பூர்ணமா அத்தியயனம் பண்ணி முடிக்க முடியாது.
இப்படி வேதத்துக்கு மற்றதுக்கு இல்லாத உயர்த்தி இந்த வேதத்திடம் ‘நித்யத்வம், அபௌருஷேயத்வம், அவிச்சின்ன பரம்பராகதத்வம், அனந்தத்வம்‘ என்கிற இந்த நான்கு குணங்கள் அசைக்க முடியாமல் சுதிருடமாய் வேதத்திடம் இருப்பதனால தான் ‘ஆதௌ வேதாஹ பிரமாணம்’. அதனால தான் வேதமானது பரமப் பிரமாணம் என்று கொள்ளப்படுகிறது..!!“