வேதம் பரமப் பிரமாணம்
(முக்கூர் ஶ்ரீ லக்ஷ்மீ நரஸிம்ஹாச்சாரியார்)
– பாகம் 4 –
அடுத்தது அபௌருஷேயத்வம் . மற்றொரு குணம் வேதத்திற்கு. புருஷனால் இயற்றப்படாதது.
அதைத்தான் இங்கே வித்யாரண்யர் வேத பாஷ்யாதிகாரி சிருங்கேரி பீடத்தை அலங்கரித்தவர் அவர், 13-வது பீடத்தை அலங்கரித்தவர் வித்யாரண்ய ஸ்வாமி. அவர் பூர்ணமாய் லக்ஷ்மி கடாக்ஷத்தையும் பெற்றவர் அந்த வித்யாரண்யர்.
அந்த லக்ஷ்மி கடாக்ஷம்னா இப்ப பாருங்கோ நம்முடைய ஆச்சாரிய பரம்பரையிலே மூன்று பேருக்கு மகாலக்ஷ்மி பிரத்யக்ஷமானா. அதுல மூன்று பேர் யாருன்னா ஸ்வாமி தேசிகன். அதே மாதிரி ஆதி சங்கர பகவத்பாதாள், வித்யாரண்யர்.
ஸ்வாமி தேசிகன் நித்யம் ஊஞ்சவ்ருத்தி பண்ணி ஜீவிக்கக் கூடியவர். மறுநாளைக்கென்று எதையும் சேர்த்து வைக்காத மஹா வைராக்கிய நிதி அவர். அவர் ஆங்காங்கு ஊஞ்சவ்ருத்தி பண்ணி அந்த அரிசியை கொண்டு போய் தன் பத்தினியினிடத்துல கொடுத்தார் தேவிகளிடத்திலே.. ஸ்வாமி தேசிகனுடைய தர்மபத்தினி அதை சோதனம் பண்ணி அதை அன்னமாக்கி பகவானுக்கு நிவேதனம் பண்ணனும் இல்லையோ? அதுக்காக அதை முறத்துல கொட்டினாளாம் அந்த அரிசியை.
அப்ப என்ன ஆயிட்து? ஒரு கிரகத்துல ஒரு பெரிய தனிகருடைய கிரகத்துல, இவ்வளவு பெரிய மஹான் இவ்வளவு பெரிய வித்வான் நடுந்தெருவுல பிச்சை கேட்டுக் கொண்டு வருவதே, இவருக்கு நாம் பிச்சையிட்டால் அது நன்னா இருக்குமோ..? இவர் வீதி வழியா வெயில்ல நடந்து வரேரேன்னு வருத்தத்தோட ஒரு படி தங்க அரிசியே பண்ணி அவர் பாத்திரத்துல கொட்டிட்டார். அந்த தங்க அரிசி பாத்திரத்துல கலகலன்னு விழறது. அதை பார்த்துட்டு ‘கீடவத் பாதிமே’ அப்படின்னார். புழுவை கொண்டு வந்து என்னுடைய பாத்திரத்துல கொட்டிட்டீங்களே, புழுக்களை கொட்டிட்டீங்களே, இது பகவானுக்கு எப்படி நான் நிவேதனம் பண்ணுவேன் கீழே அரிசி இருக்குது அது மேல தங்க அரிசி விழுந்துடுத்து. அத்த அவர்கள் வீட்டு வாசல்லயே கொட்டிட்டார்..!!
மற்ற இடங்களில் பிக்ஷை எடுத்துண்டு போனார். அதை கொண்டு போய் தன் பத்தினி இடத்துல கொடுத்தார். பத்தினி அதை முறத்துல கொட்டினாள். கொட்டினா இந்த ஒரே ஒரு தங்க அரிசி அதுல இருக்கு. உடனே அங்கிருந்து, அங்க நின்னுண்டு இருக்கிற ஸ்வாமி தன் கர்த்தாவை கூப்பிட்டு ஸ்வாமி இது என்னதுன்னு கேட்கிறாள்..? இது என்னது இது அப்படின்னா..? உடனே அவர் சொல்றார் அது புழு அதை தூர தள்ளி விடுன்னுட்டார்..!! அதை தூர தள்ளி விட்டாள். அப்புறம் பகவானுக்கு நிவேதனம் பண்ணப்பட்டது.
இவரை பரீக்ஷை பண்ணனும்னு சில பேர் ஒரு பிரம்மச்சாரி கல்யாணம் பண்ணிக்கணும்னு பணம் கேட்டுண்டு வந்தான். இவர்ட்ட போனா அரிசி கொடுப்பார் மூட்டை கட்டி அங்க போய் வாங்கிக்கலாம்னு இவரிடத்துல ஸ்வாமி தேசிகனிடத்துல அனுப்பினார்கள். அந்த பையனும் வந்து கேட்டான். அவரிடத்துல என்ன இருக்கிறது நாளைக்கென்று ஒன்றும் சேர்த்து வைக்காதவர்.
அப்படியேப்பட்டவர் அவர்:
‘க்ஷோணீ கோண ஷதாம்ஷ பாலன கலா துர்வார கர்வானல
க்ஷுப்யத் க்ஷுத்ர நரேந்த்ர சாடு ரசனா அன்யாம் ந மன்யாமஹே
தேவம் ஸேவிதுமேவ நிச்சி நுமஹே யோஸௌ தயாலு: புரா
தானா முஷ்டி முச்சே குசேல முனயே தத்தேஸ்ம வித்தேஷதாம்’
அதாவது வித்யாரண்யர் அங்க விஜயநகர ஸமஸ்தானத்துல ஆஸ்தான வித்வானா இருக்கச்சே அவரோட ஸமகாலத்துல இருந்தவர் ஸ்வாமி தேசிகன் காஞ்சீபுரத்துல இருந்தார். வித்யாரண்யர் அங்க இருக்கார். நீர் இவ்வளவு பெரிய வித்வானா இருக்கிறீரே இங்க ஆஸ்தான வித்வானா விஜயநகர ஸமஸ்தானத்துல இருக்கலாம் வாங்கோன்னு எழுதி அனுப்பிச்சா, அதுக்கு பதில் எழுதினார் அவர். ஒரு க்ஷோணீ கோணன்னா.. பூமியில் ஒரு அது ஒரு மூலை அதுல நூறு கூறு போட்டா அதுல ஒரு பாகத்தை பரிபாலனம் பண்ணக்கூடிய ஒரு ராஜா அவன். அவனைப் பார்த்து இந்திரன் என்றும் சந்திரன் என்றும் இப்படியெல்லாம் ஸ்தோத்திரம் பண்ணி என்னுடைய வாக்கை வீணடிக்க மாட்டேன்..!!
ஒரு பிடி அவலுக்காக ஸமஸ்த ஐஸ்வர்யத்தையும் கொடுத்த அந்த தனஞ்ஜய ஸ்யந்தன பூஷணம் தனம். அந்த தனஞ்ஜயன்னு இருக்கானே அர்ஜுனன் அவனுடைய ரதத்துல முன்ன உட்கார்ந்து இருக்கானே
இந்திரன் சிறுவன் தேர்முன் நின்றானை திருவல்லிக்கேணி கண்டேனேன்னார்.
பார்த்தன் மாமணி தேர்வோடும் பாகம்னார் ஸ்ரீவில்லிபுத்தூரார்.
அன்ன மாதிரி அவனாகிற தனம் கிருஷ்ணனாகிற தனம் எனக்கு இருக்கச்சே வேற தனம் எனக்கு வேண்டியதில்லைன்னுட்டார்.
அஹோபில மடத்துல நாற்பத்தி நாலாவது பட்டத்துல, மூர்த்தாபிஷிக்தராய் எழுந்தருளி இருந்த முக்கூர் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஸ்ரீரங்கத்துல கோபுரம் கட்டினவர், வேடிக்கையா ஒன்னு சொல்லுவார். டோல நடந்துண்டே இருக்குது ஒர்த்த ஆத்துல. இந்த கிருஷ்ணன், இந்த கிருஷ்ண தனத்தை நான் வச்சுன்று இருக்கேன். என்னை யார் பிடிக்க முடியும்ன்னார். எல்லாருக்கும் ஒன்னும் புரியல கொஞ்ச நாழி. கிருஷ்ண தனம்னா, அப்படியே தமிழ் படுத்தினா கருப்பு பணம்னு அர்த்தம்..!! இந்த கிருஷ்ண தனத்தை நான் வச்சுன்று இருக்கேன். என்னை யார் பிடிக்க முடியும்னு கேட்டார். ஏன்னா கிருஷ்ணனாகிற தனத்தை நான் வச்சுன்டு இருக்கேன். அந்த கிருஷ்ண தனம் இல்ல, இந்த கிருஷ்ணனாகிற தனம்னு வேடிக்கையா சொன்னார்.
ஆகையினால கிருஷ்ணம் தனம். தனஞ்சய ஸயந்தன பூஷணம் தனம். அந்த தனஞ்சயனுடைய தேர்ல இருக்கிற தனத்தை நான் தனமாய் பற்றியிருக்கிறேன். அதுக்கு மேல சொல்றார் ஸ்வாமி தேசிகன்..
கிலம் கிமனலம் பவேத் அனல மௌதரம் பாதிதும்
பயஹ பிரசுதி பூரகம் கிமுன தாரகம் தாரகம்
அயத்ன மலமல்லகம் பதி படச்சரம் கச்சரம்
பஜந்தி விபுதா முதா அஹஹ குக்ஷித குக்ஷித:
‘அஹஹ’ன்னா பரியாசம் பண்றார். அது என்ன வயிறு அது? அஹஹ அப்படின்னார். அது என்ன? கிலம் கிமனலம் பவேத் அனல மௌதரம் பாதிதும். இந்த அறுவடையான நிலத்துல கீழ தானியம் சிந்தி இருக்கும். அதெல்லாம் சின்ன பறவைகள் சென்று தன் அலகினால் எடுத்துண்டு போகும். அந்த மாதிரி பூர்வ காலத்துல மகான்கள் எல்லாம் ஒருத்தரிடத்துல போய் கை நீட்டி யாசிச்சு கேட்க மாட்டார்கள். இந்த மாதிரி கீழ சிந்தி இருக்கிற தானியத்தை பொறுக்கி, அதை எடுத்துண்டு போய் அதை அரிசியாக்கி, அதை அன்னமாக்கி சாப்பிடுவார்கள். இந்த ஜாடராக்னியை தணிக்க, இந்த மாதிரி சிந்தி இருக்கிற தானியம் போறாதா?
இந்த தாக சாந்தி பண்ணிக்கொள்ள நதிகள் ஓடுகின்றனவே இந்த நாட்டிலே. ஒரு அஞ்சலி தீர்த்தம் எடுத்து பருகினால் போறாதா?
இந்த மான சம்ரக்ஷணத்திகு ஒரு முழம் துணி இருந்தால் போறாதா?
இந்த துணிக்காகவும், இந்த வஸ்திரத்துக்காகவும், இந்த அன்னத்துக்காகவும், இந்த தீர்த்தத்துக்காகவும் ஒருவரிடத்திலே போய் தந்த பந்திகளை காட்டணுமா? அவனை இல்லாத விதத்திலே புகழ வேண்டுமா? ஆகையினால
நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சித்
நமயா கிஞ்சித் ஆர்ஜிதம்
அஸ்திமே ஹஸ்தி சைலாக்ரே
வஸ்து பைதாமஹம் தனம்’னார்.
நானா சம்பாதித்தது ஒன்றும் இல்லை. என்னுடைய பூர்வீகர்கள் எனக்கு வைத்தது ஒன்றும் இல்லை. பிரம்மா அஸ்வமேத யக்ஞம் பண்ணச்சே, அந்த வபாஹோம சமயத்துல தோன்றினானே அத்திகிரி வரதன். அந்த வரதனாகிற தனம் என்னிடத்துல இருக்கிறது. வேற தனம் எனக்கு வேண்டியதில்லைனுட்டார். அதனால விஜயநகர சமஸ்தானத்துக்கு போகவே இல்ல அவர். அப்படி அரச சன்மானத்தையும் திக்காரம் பண்ணி, நித்தியம் ஊஞ்ச விருத்தி பண்ணிண்டு இருக்கிற அவரிடத்துல என்ன இருக்கும்..?
அந்த பிரம்மச்சாரி வந்து கேட்டான். உடனே அம்மா இது உன்னுடைய லீலையான்னுட்டு,
மானாதீத பிரகித விபவாம் மங்களம் மங்களானாம்
வக்ஷ பீடம் மது விஜயினோ பூஷயந்தீம் ஸ்வகாந்தியா
பிரத்யக்ஷ அனுஸ்ரவிக மகிம பிரார்த்தினீனாம் பிரஜானாம்
ஸ்ரேயோ மூர்த்திம் ஸ்ரியம சரணத்வாம் சரண்யாம் பிரப த்யே ‘ன்னு
ஸ்ரீ ஸ்துதி ‘ன்னு பெயர். இந்த மகாலக்ஷ்மியை குறித்து ஸ்தோத்திரம் பண்றார்.
யஸ்யாம் யஸ்யாம் திஷி விஹரதே
தேவி திருஷ்டிஸ் த்வதியா
தஸ்யாம் தஸ்யாம் அஹமஹமிகாம்
தன்வதே சம்பதோகா ‘
எந்தந்த திக்குக்கு மகாலக்ஷ்மியினுடைய கடாக்ஷம் வருதோ, அந்த இடத்தெல்லாம் அஷ்ட ஐஸ்வர்யமும் நான் முன்னே நான் முன்னேன்னு போட்டி போட்டுண்டு போறதாம். இப்படி ‘வாஞ்சிதானாம் வசுனாம்’னு அப்படி சொல்லச்சே, மேல இருந்து கனக வருஷம் கொட்றது. ஏகமா வருஷம், நவநிதிகள் கீழே கொட்டுகின்றன..!!. அந்த பிரம்மச்சாரியை பார்த்து மூட்டை கட்டிக்கோன்னார். அவன் ஏகமா கட்டிண்டான். சுவாமி இதுக்கு மேல எனக்கு வேண்டாம் போரும்னான். உன்னை யார் இங்க அனுப்பினார்களோ அவர்களுக்கு கொண்டு போய் குடுன்னார்.
ஆகையினால சுவாமி தேசிகன் தங்க அரிசியை புழுன்னு நினைக்கிறார். அவருடைய தர்ம பத்னிக்கு அது என்னதுன்னே தெரியல. இவராவது புழுவா நினைக்கிறார். இது என்னது சுவாமின்னு கேட்கறா. அப்படியே பட்டவர் ஒரு ஸ்லோகம் சொன்னா கனக வருஷம் கொட்றது. நமக்கு கொட்டுமோ..? ஆகையினால அவ்வளவு வைராக்கிய நிதியா அவர் இருக்கறதுனால தானே அந்த கனக வருஷம் மகாலக்ஷ்மி கூட வந்து அப்படி விசேஷமா அனுக்கிரகம் பண்றாள்.
ஆதி சங்கர பகவத் பாதாள் பிட்சாடனத்துக்கு போன பொழுது, துவாதசி அன்னிக்கு ஒரு பிரம்மச்சாரிக்கு அன்னமிட்டால் ஆயிரம் பிரம்ம வித்துக்களுக்கு அன்னமிட்ட பலன். சன்னியாசிகளுக்கு அந்த மாதிரி பிட்சை சாதித்தாலும் விசேஷம். அந்த கிரகத்துல ஒன்னும் இல்ல. அவர்கள் படுற அவஸ்தையை பார்த்துட்டு, அப்பொழுது
‘ அங்கம் ஹரேஹே புலக பூஷணம் ஆஸ்ரயந்தி ‘ன்னு கனகதாரா ஸ்தோத்திரம்னு பெயர். அதை சொல்லச்சே கொட்றது கனக வருஷம். அந்த கிரகத்துல உள்ளவாளை உயர்ந்த ஐஸ்வர்யம் உடையவர்களாக ஆக்கி வைத்தார் ஆதி சங்கரர். அவருக்குன்னு பிரார்த்திக்கல. அவர்களுக்காக கொட்டித்து கனக வருஷம்.
அதே மாதிரி வித்யாரண்யர் மகாலக்ஷ்மியை ஸ்தோத்திரம் பண்ணார். மகாலக்ஷ்மி பிரத்யக்ஷமானாள். என்ன வேண்டும்னு கேட்டா. எனக்கு நிறைய ஐஸ்வர்யம் வேண்டும்னார். உடனே அவள் மகாலக்ஷ்மி சொல்றா, இந்த ஜென்மாவில உமக்கு ஐஸ்வர்யம் பெறும்படியான பாக்கியம் இல்லை. அடுத்த ஜென்மாவில தரேன்னுட்டாள். உடனே வித்யாரண்யர் யோஜனை பண்ணார். அடுத்த ஜென்மானு சொல்றாளே மகாலக்ஷ்மி. இனிமேல் நாம பரமபதித்து மறுபடியும் அடுத்த ஜென்மா எடுக்கறதுன்னா எவ்வளவு நாளாகும். அதனால உடனே அபர சங்கரர்னு பேரு அவருக்கு. அடுத்த ஜென்மாவை இப்பவே வரவச்சுக்கணும்னு தீர்மானம் பண்ணி சன்னியாசம் வாங்கிண்டுட்டார். சன்னியாசம்னா அடுத்த ஜென்மா, நூதனம், புதிய ஜென்மா அது. அதிலேயிருந்து தான் அவாளுடைய வயசு நிர்ணயம், சாதுர்மாஸ்ய சங்கல்பத்தை வைத்து இவ்வளவு வயசாயிடுத்துன்னு நிர்ணயம் பண்ணுவார்கள். அதை வைத்து பெரியவர் சின்னவர் என்பது. இப்ப வித்யாரண்யர் சன்னியாசியாயிட்டார். காஷாய வஸ்திரத்தை தரிச்சு மறுபடியும் மகாலக்ஷ்மியை பிரார்த்தனை பண்ணார். மகாலக்ஷ்மி பிரத்யக்ஷமானாள். கிமபேக்ஷசேன்னு..? கேட்டா. ஐஸ்வர்யம் வேண்டும்னார். அடுத்த ஜென்மாவில தானே தரேன்னு சொன்னேன்னாள் மகாலக்ஷ்மி. வந்துடுத்தேன்னு காஷாயத்தை காட்டினார். ஓஹோ இப்படி வந்துடுத்தா சந்தோஷம். அப்படியே கொடுத்தேன்னு, கொடுத்தா. கொட்றது கனக வருஷம். ஏகமா வந்து விழறது. போருமான்னு கேட்டாள். போரும் போரும்னார். நான் போட்டமான்னு கேட்டாள். சரின்னுட்டார். ஏன்னா மகாலக்ஷ்மியை போன்னு யார் சொல்லுவா. ஆகையினால வாய் மூடிண்டு இருந்தார். மகாலக்ஷ்மியும் அந்தர்தானமாயிட்டா.
அப்புறம் அது மொத்தத்தையும் பார்த்தார். ஐயோ நான் ஏமாந்து போட்னேன்னார். ஏன்னா மகாலக்ஷ்மிட்ட கேட்டுருக்க கூடாது இத்த, கேட்டுட்டேனேன்னார். ஏன்? இதுக்கு மின்னேன்னா அந்த ஆசிரமத்துல இருந்தேன் கேட்டேன். இப்ப இதை கையால தொடக்கூடாத ஆசிரமம்னா வந்துடுத்து. இவ்வளவு ஐஸ்வர்யத்த சன்னியாசத்துல கையால இதெல்லாம் தொடலாமோ? இந்த ஆசிரமம் வந்துடுத்தே இது என்ன பண்றது? அப்படின்னு யோஜனை பண்ணி, அதுக்கப்புறம் அதை மாலிகாபூருடைய படையெடுப்புனாலே சிதிலமாய் இருந்த கோவில்களை எல்லாம் புனருத்தாரணம் பண்ணார். அந்த விஜயநகர சமஸ்தானத்துல விசேஷமா அந்த ஐஸ்வர்யத்தை வைத்து பல உயர்ந்த தர்மங்களை நடத்தி வைத்தார் வித்யாரண்யர்.
அப்ப வேதத்திற்கு பாஷ்யம் எழுதினார். சிருங்கேரி பீடத்தையும் அலங்கரித்து லக்ஷ்மி நரசிம்மனை ஆராதித்தார். நரசிம்ம ஆராதனத்தினால தான் வேதத்துக்கே அர்த்தம் சொல்ல முடிந்ததுன்னு அந்த வேத பாஷ்யத்துல ஆரம்பத்துல மங்கள ஸ்லோகத்துல
கமலா குச கர்பூர கஸ்தூரி வாசிதோரசம்
சம்பூர்ண சுபகம் தேவம் பஜே நரஹரிம் ஹரிம்‘
என்று தியானம் பண்றார்.
மங்களத்தை கொடுக்கும்படியான லக்ஷ்மியுடன் சேர்ந்திருக்கும்படியான அந்த நரஹரியை தியானம் பண்றேன் என்று ஆரம்பித்து வேதத்திற்கு பாஷ்யம் எழுதுறார்.
வேதத்திற்கு பாஷ்யம் எழுதணும்னா அவ்வளவு சுலபமா எழுத முடியுமா..?
‘ நனு கோயம் வேதோ நாமா? கேவா தஸ்ய விஷய பிரயோஜன சம்பந்தாதிகாரிணஹா? கதம்வா தஸ்ய பிராமாண்யம் அத்ரோச்யதே? இஷ்ட பிராப்தி அனிஷ்ட பரிகாரயோஹோ அலௌகிகம் உபாயம் யோ கிரந்தோ வேதயதி ச வேதஹா ‘ என்று எழுதுறார்.
நனு கோயம் வேதோ நாமா, வேதம் என்றால் என்ன? வேதத்தோட சம்பந்தப்பட்டவர்கள் யார்? வேதம் எப்படி நமக்கு பிரமாணமாகின்றது என்று கேட்டுண்டு, இஷ்ட பிராப்தி அனிஷ்ட பரிகாரயோஹோ அலௌகிகம் உபாயம் யோ கிரந்தோ வேதயதி ச வேதா: இஷ்டத்தை கொடுப்பதிலேயும், நமக்கு வேண்டாததை நிவிருத்தி பண்ணுவதிலேயும், கண்கூடா பார்த்து உணர முடியாததை வேதம் உணர்த்துவதனாலே வேதம் என்று பெயர். இப்ப இஷ்டம் எது, அனிஷ்டம் எதுன்றத நாம உலகத்துல பாத்துண்டு இருக்கோம். இப்ப சரீரம் ஆரோக்கியமா, புஷ்டியா இருக்கணும்ன்றது எல்லாருக்கும் இஷ்டம்.
இப்ப ‘புஷ்டிம் தத்தோ தத்த புஷ்டிம் புஷ்டிம் தத்த புஷ்யதி புஷ்யதி தத்த புஷ்டிம் புஷ்டிம் தத்த புஷ்யதி’ இப்ப இந்த மந்திரத்தை சொல்லணும்னா உடம்புல புஷ்டி இருக்கணும். புஷ்டி இல்லாத பலம் இல்லைன்னா இந்த மந்திரத்தை சொல்ல முடியுமோ? அப்ப புஷ்டியை எல்லாரும் விரும்புவார்கள். சரீரம் பலமா இருக்கணும், ஆரோக்கியமா இருக்கணும், இதெல்லாம் இஷ்டம்.
அனிஷ்டம் எது அப்படின்னா..?, அனாரோக்கியம், வியாதி. எழுந்துண்டா உட்கார்ந்தா மூச்சு வாங்குறது, ரெண்டு அடி நடந்தா தலை சுத்துறது, எழுந்திருக்க முடியல, உட்கார முடியல. இப்படி ஒரு அவஸ்தை. இது அனிஷ்டம். இப்ப அனிஷ்ட நிவிருத்தி பூர்வக இஷ்ட பிராப்தி. இந்த ரோகம் நம்மை விட்டு போனும். அதனால உடனே ஒரு மருத்துவரிடத்துல போய் கையை காண்பிக்கிறோம். அவர் கைய பிடிச்சு பார்த்து இந்த மருந்தை சாப்பிடுங்கோ அப்படின்றார். அந்த மருந்தை சாப்பிட்ட உடனே அவுஷத சேவனம். மருந்தை சாப்பிட்ட உடனே ரோகம் போயிடுறது. அந்த வியாதியிலேர்ந்து விடுபடுறோம். இந்த வியாதி இத்தன்னாளா உடம்பை ஆக்கிரமிச்சுண்டு இருந்ததுனாலே, சரீரத்துல பலம் குன்றி கொஞ்சம் ஆயாசம் அதிகமா இருக்கு. எழுந்திருக்க முடியல, சிரமமா இருக்குது. அதை சொல்றார் அவரிண்ட. அதுக்கு இதை சாப்பிடுங்கோன்னு இன்னொன்னு எழுதிக் கொடுக்கிறார். அதை சாப்பிட்ட உடனே மறுபடியும் அவருக்கு தெம்பு, மறுபடியும் பழைய மாதிரி ஓடி ஆடி வேலை செய்யுறார்.
இப்ப நன்னா கவனிக்கணும். இப்ப இந்த மருந்து நாம ஒன்னு வாங்கிட்டு வந்தோமே, அது மேல பார்க்கணும். அதுல உற்பத்தி நாள் அப்படின்னு ஒரு நாள், முடிவு நாள்னு எழுதி இருக்குது அந்த மருந்துல. அது உண்டாக்கப்பட்ட தினம், அது முடிவு தினம். அதனால அதுக்கப்புறம் அந்த மருந்தை உபயோகப்படுத்தினா, அந்த மருந்துக்கு அவ்வளவு சக்தி கிடையாது. அப்படியே ஒரு கால நிர்ணயம் அந்த மருந்துல போடப்பட்டிருக்கிறது. அதுக்கப்புறம் அந்த மருந்து பிரயோஜனம் இல்லை. அதே மாதிரி இந்த சரீரத்துக்கும் உற்பத்தி நாள், முடிவு நாள் ரெண்டும் எழுதி இருக்குது. இது நமக்கு கண்ணுக்கு தெரியல. அதுல தெரியறது. அந்த மருந்தை நாம உண்டாக்கினோம், அதனால அதுல எழுதியிருக்குது, நாம எழுதி வச்சிருக்கோம் தெரியறது. இந்த சரீரத்தை பகவான் நமக்கு கொடுத்திருக்கான். இதுல அவன் எழுதி வச்சிருக்கான். அது நம் கண்ணுக்கு தெரிவதில்லை. இதிலேயும் முடிவு நாள்ன்றது எழுதப்பட்டிருக்கிறது. அப்போ உற்பத்தி நாள் முடிவு நாள்னு இருக்கும்படியான தாற்காலிகமான பலனை கொடுக்கக்கூடிய அழியக்கூடிய மருந்தினாலே, அழியக்கூடிய சரீரத்தை பாதுகாத்துண்டு இருக்கோம் நாம. இதுவும் அழியக்கூடியது தானே.
ஏன்னா ஒருத்தரை பார்த்து ஒருத்தர் ரொம்ப பரிபாஷையா வைஷ்ணவ பரிபாஷைனு சொல்லுவா. திருமேனி பாங்கா அப்படின்றார்..?. அப்படின்னா என்ன அர்த்தம் அதுக்கு. உடல் நலமா? திருமேனி அபி குசலம்? சம்ஸ்கிருதத்துல கேட்டா. என்ன சௌக்கியமா இருக்கிறீரா? திருமேனி பாங்கா உடல் நலமா அப்படின்னு கேட்கிறார். இதற்கு உண்மையான பொருள் என்ன அப்படின்னா, உம்மிடத்திலே இருக்கக்கூடிய அழியக்கூடிய வஸ்து சௌக்கியமா? ஒருத்தரை பார்த்து நாம நித்தியம் திருமேனி பாங்கானு கேட்டாலும், உடல் நலமானு கேட்டாலும் உண்மையான அர்த்தம் என்ன? நீர் வச்சுண்டு இருக்கிறீரே ஒன்று, அது அழியக்கூடியது தானே. அழியக்கூடிய வஸ்து சௌக்கியமா?
இப்ப நாம அழியக்கூடிய வஸ்துவை குறித்து தான் விசாரமே இந்த உலகத்துல. அழியாத நாமாகிற ஆத்ம வஸ்துவை பத்தி விசாரப்படுறவா ஒருத்தரும் கிடையாது. அது நம் கண்ணுக்கு தெரிவதில்லை. இதை நாம பாத்துண்டு இருக்கோம் இந்த சரீரத்தை. அதனால இப்படி இளைச்சு பூட்டேளே, இவ்வளவு அப்ப பார்க்கச்சே நன்னா இருந்தேளே, இப்ப இளைச்சு பூட்டேளே எல்லாமே சரீரத்தை பத்தி விசாரம். அப்ப மருந்தும் அழியறது, சரீரமும் அழியறது.
ஆகையினால இதை சொல்லல வேதம் இப்போ.
ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி
ரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக்குரம்பை பிரியும் போது
உந்தன் சரணமே சரணம் என்று இருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே
திரை கொள் மாநெடுங்கடல் கிடந்தாய்
நானுடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்
நைமிசாரணியத்துள் எந்தாய்
இந்த நைமிசாரண்யத்துல மகா யக்ஞம் நடந்தது. அரண்யமே தேவதை. அந்த எம்பெருமான் வன ரூபியா இருக்கான் அங்கே. புஷ்கரம்ன்ற க்ஷேத்திரத்துல ஜல ரூபியா இருக்கான். திருமலையிலே பர்வத ரூபமா இருக்கான்.
‘ஜோதிம்ஷி விஷ்ணுஹு புவனானி விஷ்ணுஹு சலிலானி விஷ்ணுஹு சர்வத்ர விஷ்ணுஹு’ என்கிறார் விஷ்ணு புராணத்துல.
ஜோதிஸா இருக்கிறவன் அவன். காடா இருக்கிறவன் அவன். ஜலமா இருக்கிறவன் அவன். எல்லாம் விஷ்ணு. ஆகையினால அங்க வன ரூபி. அந்த வனத்தை பார்க்கச்சே திருமங்கை ஆழ்வாருடைய உடம்பு நடுங்கறது. நடுங்கி அவர் நிர்வேதப்பட்டு சொல்றார் இந்த பாசுரத்துல. ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி. இந்த சரீரத்துல மாம்சமும் ரத்தமும் பிசைந்து அரைந்த சுவர் இது. இது நிற்பதற்கு எலும்புகளால தூண்கள் நாட்டப்பட்டிருக்கின்றன. மேல கூரை போடணுமே. ரோமம் வேய்ந்து.. ரோமங்களால கூரை போடப்பட்டிருக்கிறது. இதற்கு வாஸ்து சாஸ்திர ரீதியா ஒன்பது வாசல். ஒன்பது வாயிற்படிகளும் இந்த சரீரத்திற்கு வைக்கப்பட்டிருக்கிறது. அந்த க்ஷேத்ரக்ஞன்னு பெயர் ஆத்மாவிற்கு. க்ஷேத்ரக்ஞன்னா பரமாத்மாவுக்கும் பெயர்.
அவன் என்ன பண்றான் இந்த ஆத்மாவை மெதுவா எடுத்துண்டு வந்து, இந்த வீட்டை அழகா கட்டி கொடுத்து, இதற்குள்ள பிரவேசிக்க பண்றான். புது மனை புகு விழான்னு ஒன்னு பண்றா பாருங்கோ. நூதன கிரக பிரவேச முகூர்த்தோஸ்தி பவந்தோ மஹாந்தோனுக்ருஹ்ணந்துனு புதுசா கிரக பிரவேசம். இந்த வீட்டையும் கட்டி கொடுத்து, இதுக்குள்ள கொண்டு வந்து உட்கார வச்ச உடனே, இந்த வீட்டை எவன் கட்டி கொடுத்தானோ அவனை மறந்துடுறான் முதல்ல. கிருதக்னனா யார் கட்டி கொடுத்தானோ அவனை பத்தி ஞானம் கிடையாது. இதுல வந்து உட்காந்த உடனே, இது தான் தன்னை காப்பாத்தும், இது தான் தனக்கு சர்வ வித பந்துனு நினைச்சுண்டு தன்னையும் மறந்துடுறது அது. இந்த சரீரத்தையே பலமா நினைச்சுண்டு இருக்குது. ஆனா இந்த சரீரம் பலமா நிக்கறதா?
‘ துளவ துளவ வென்கிற சொல்லும் சொற்போச்சே
அளவின் நெடு மூச்சுமாச்சே கண்ணும் பஞ்சாச்சே
அரங்கா இரங்காயோ இனி ‘
பிள்ளை பெருமாள் ஐயங்கார் ரங்கநாதனை பார்த்து துளவ துளவ…
ககன சர கனக கிரி கரி மத ர நிகம மய நிஜ கருட கருதனில லவ கலித பஷ பதன சர கதன..!!
ஒரு காலத்துல இப்படி சொன்னேனே. இப்ப ஒன்னும் சொல்ல முடியலையே. துளவ துளவ வென்கிற சொல்லும் சொற்போச்சே. எழுந்துண்டா உட்காந்தா மூச்சு வாங்குறதே. அளவின் நெடு மூச்சுமாச்சே. எதிர வரவா யாரும் தெரிய மாட்டேன்றதே. கண்ணும் பஞ்சாச்சே. ரங்கநாதா உனக்கு என்னிடத்துல இரக்கம் இல்லையான்றார். அப்படின்னா என்ன அர்த்தம்? இன்னும் எல்லாம் பலமா குடுன்னு அர்த்தமா? எனக்கு இன்னும் நல்ல கண்ண குடு, நல்ல பலத்த குடு அப்படின்னு அர்த்தமான்னா..? இன்னும் என்னத்துக்கு இங்க வச்சுண்டு இருக்க. உன் திருவடி சேர்த்துக்க மாட்டியா? உனக்கு என்னிடத்துல இரக்கம் இல்லையே அப்படின்னு கேட்கிறார்.
ஆகையினால நாம பாத்துண்டே இருக்கச்சேவே ஒவ்வொன்னத்துக்கும் பலம் குறையறது. ஒன்னு ஒன்னு நம்ம விட்டு போயிண்டே இருக்குது. காது வேலை செய்ய மாட்டேன்றது சரியா. ஆகையினால சரியா உட்கார முடிய மாட்டேன்றது. எதனால ரொம்ப சிரமப்படுத்துறது. இது நமக்கு தெரிஞ்சுண்டே இருக்குதே. ஆகையினால இந்த சரீரத்துல பற்று வைக்க கூடாது.
இப்ப இதையும் சொல்லல வேதம். இது எல்லாருக்கும் தெரியும். இப்ப கண்ணுக்கு தெரியாத ஆத்ம வஸ்து. அது சரீரத்தை காட்டிலும் வேறானது. இந்த ஆத்மாவுக்கு அழிவு கிடையாது. அதை தான் பகவான் சொன்னான்
ந ஜாயதே ம்ரியதே வா கதாசித் நாயம் பூத்வா
பவிதா வா ந பூயஹ அஜோ நித்யஹ
சாஸ்வதோயம் புராணோ ந ஹன்யதே
ஹன்யமானே சரீரே’
சரீரம் தான் அழியுமே ஒழிய, உள்ளே இருக்கிற ஆத்மா அழியாது. அதுக்கு பிறப்பும் கிடையாது, இறப்பும் கிடையாது. இந்த ஆத்மா தேகாந்தர பிராப்தி. இன்னொரு சரீரத்தை அடைந்து கொண்டே இருக்கும். நடுவுல மரணம்னு ஒன்னு வருதே. மரணம்னா என்ன அர்த்தம்..? அப்படின்னா, இந்த ஆத்மா தான் செய்த கர்ம வினைக்கு ஏற்ப ஒரு சரீரத்தை எடுத்துண்டு இருக்குது. அந்த கர்மாவினுடைய பலன் முடிந்து விட்டால், அந்த சரீரத்தை போட்டுவிட்டு வேறொரு சரீரத்துக்கு போறதுக்கு மரணம்னு பெயர். இப்ப நாம இங்க உட்கார்ந்துண்டு இருக்கோம். வெளியில போறோம். இங்கிருந்து வெளியில போறதுக்கு என்ன பெயர்? அதே மாதிரி ஒரு சரீரத்திலேர்ந்து இன்னொரு சரீரத்துக்கு போறதுக்கு மரணம்னு பெயர்.
வாசாம்சி ஜீர்ணானி யதா விஹாய
நவானி க்ருஹ்ணாதி நரோபராணி
ததா சரீராணி விஹாய ஜீர்ணானி
அன்யானி சம்யாதி நவானி தேஹி
எப்படி கிழிந்த சட்டையை போட்டுவிட்டு புது சட்டையை போட்டுக் கொள்கிறோமோ, அதே மாதிரி இந்த ஆத்மா க்ஷீணித்துப் போன சரீரத்தை போட்டுவிட்டு புது சரீரத்தை எடுத்துக் கொள்கிறது. இது தான் விஷயம். இதை தான் வேதம் சொல்கிறது. இது கண்ணுக்கு தெரியாது. ஆகையினால வேதம் பிரமாணம். வேதம் எதை சொல்றதோ அது சத்தியம். அதுல சந்தேகம் படக்கூடாது. அதை மகான்கள் நமக்கு விவரித்து சொல்லியிருக்கிறார்கள். அதை தெரிந்து கொண்டு நாம் உய்ய வேண்டும்.”
” பிரத்யக்ஷத்துக்கும் அனுமானத்துக்கும் மாத்திரம் தோஷங்கள் சம்பவிக்கலாம். ஆனால் சப்தமாகிய அந்த வேதத்திற்கு தோஷமே கிடையாது . ‘ ஏஷாது தோஷ ரஹிதா மஹிதா புராணி ‘. வேதத்திற்கு எந்த தோஷமும் சொல்ல முடியாது.
இப்போ பிரத்யக்ஷத்துக்கே தோஷம் வந்துரும் பாருங்கோ. ஒருத்தருக்கு மஞ்சக்காமால வியாதி வந்துடுத்து. எதை பார்த்தாலும் மஞ்சளா இருக்குது அவருக்கு. வெள்ளை வெளேர்னு மல்லிப்பூவ பார்த்து, ‘இது என்ன மஞ்சளா இருக்குதே, இது சாமந்தி பூவா?’ அப்படின்றார் அவர். ஏன்னா மஞ்சளா இருக்குது அவருக்கு? அவருக்கு தோஷம் பிரத்யக்ஷமே கெடுத்துடுத்து. பிரத்யக்ஷமே இப்ப பலன் கொடுக்கல.
அனுமானமும் கெடுத்துடும். அனுமானம் கூட சில சமயத்துல நமக்கு தப்பா தெரியும். அது எப்படி அப்படின்னார், இப்போ பாருங்கோ… ஒரு பஸ் ஸ்டாப்பிங்ல ஒரு நாலு பேர் நின்னுண்டு இருக்கா. அவர்கள் எல்லாம் காத்தால பிரம்ம சூத்திர காலட்சேபம் கேட்டுட்டு, ஒரு நாலு பேர் பஸ் ஏறுறதுக்காக மெட்ராஸ்ல டி.நகர்ல நின்னுண்டு இருக்கான்னு வச்சுக்குங்களேன். அந்த பஸ் ஸ்டாண்ட்ல நின்னுண்டு இருக்கார். திடீர்னு ஒரு டாக்ஸி ஒன்னு வருது. அந்த டாக்ஸிலேர்ந்து அடியேன மாதிரி இந்த மாதிரி 12 திருமண் எல்லாம் இட்டுண்டு, இந்த மாதிரி சால்வை போட்டுண்டு, ஒருத்தர் அந்த டாக்ஸிலேர்ந்து இறங்கினார். இறங்கி நேர பிரம்மாண்டமான பெரிய ஹோட்டல்… அந்த ஹோட்டலுக்குள்ள அவர் நுழைஞ்சார்.
இத்த அந்த பஸ் ஸ்டாப்பிங்ல எல்லாரும் ஒரு நாலு பேர் நின்னுண்டு இருக்காளே, அவா பார்த்தா. ‘என்ன அக்கிரமம்! கலிகாலம் 4 லட்சத்தி 32 ஆயிரம் வருஷம்னு சொன்னா… இப்ப அஞ்சு வருஷம் தான், ஐயாயிரம் வருஷம் தான் ஆயிருக்கிறது. இந்த ஐயாயிரம் வருஷத்துலேயே இவ்வளவு அக்கிரமம் நடக்கிறதே! என்ன அக்கிரமம், பட்டப்பகல்ல இவ்வளவு விலக்ஷணமான ஒருத்தர் ஹோட்டலுக்குள்ள இவ்வளவு தைரியமா போயிருக்காரே! என்ன சாப்பிடுறாரோ அங்க போய்? அவாளுக்குள்ள விசாரம். இந்த நாலு பேரும் அவர் என்ன சாப்பிட்டுண்டு இருக்காரோ அங்கே, இப்படி எல்லாம் விச்சாரம் பண்ணிண்டு இருக்கா.
இங்க பிரத்யக்ஷமா இங்க என்ன நடந்ததுன்றத நாம கவனிக்கணும். இங்க டாக்ஸி டிரைவர்ட்ட அவர் 100 ரூபா காயிதத்தை காட்டினார். அவர் சொல்றார் டாக்ஸி டிரைவர், ‘சுவாமி அவ்வளவு சில்லறை என்கிட்ட இல்லையே. நீங்க மாத்தி கொடுத்தா நன்னா இருக்கும்’னார். ‘நீயே மாத்திண்டு வாயேன்ப்பா’னார். ‘நான் போனா அந்த ஹோட்டல்காரர் கொடுக்க மாட்டார். உங்களை பார்த்தா வெங்கடாஜலபதி மாதிரி இருக்குது. நீங்க போன உடனே கொடுத்துடுவார். அதனால போய் வாங்கிண்டு வாருங்களேன்’ அப்படின்னார்.
அவர் டாக்ஸி டிரைவர், ‘நீங்க போனீங்கன்னா கொடுத்துடுவார் வாங்கிண்டு வாங்கோ’னார். வேற வழி இல்லாத 100 ரூபா நோட்டுக்கு சில்லறை வாங்குறதுக்காக உள்ள நுழைஞ்சார். அங்க இருந்தவா மொத்த பேரும் இவர் என்ன சாப்பிட்டாரோ, உள்ள எதுக்கு போனாரோ என்று அனுமானம்! அனுமானத்தினால அவர் என்ன பண்ணாரோனு அவா என்றா பாருங்கோ… இப்ப அனுமானத்துக்கும் தோஷம் வந்துடுத்து. அனுமானம் பண்ணி இப்படி இருக்கும்னு நினைச்சா, அது கூட நம்ம கவுத்துரும்.
பிரத்யக்ஷத்துக்கும் தோஷம் இருக்குது. ஆனா சப்தம் இருக்கு பாருங்கோ வேதம்… ஒரு தோஷமும் அற்றது . இப்படி நம்மை பிரமிக்க வைக்காது. ஒருத்தருக்காக ஒன்னு சொல்லாது. ஒரு சாராருக்காக இல்ல வேதம். ‘சர்வா பிரஜா பிரதிநந்தந்தி’. ஒரு மனிதர்களுக்கு மாத்திரம் அல்ல, மனிதர்களுக்குள்ள ஒரு ஜாதிக்கு மாத்திரம் அல்ல. மனித வர்க்கத்துக்கு மாத்திரம் அல்ல. பக்ஷி வர்க்கம், தாவர வர்க்கம்… இந்த உலகத்துல என்னென்ன பிராணி வர்க்கங்கள் இருக்கோ, தேவதைகள்… எல்லாவற்றிற்குமே நலத்தை சொல்லக்கூடியது வேதம். ஆகையினால வேத வாக்கியத்தினால எல்லாத்துக்கும் நலன் ஏற்படுறது.
இப்போ பிரத்யக்ஷமா ஷோலாப்பூர் என்கிற ஊர்ல, வெளிநாட்டுல இருந்து, அமெரிக்காவிலேர்ந்து எல்லாரும் அக்னி ஹோத்ரத்தை கத்துண்டு வந்து, ஷோலாப்பூர்ல ஒரு தோட்டத்துக்குள்ள உட்கார்ந்து ஒரு 20 பேர் நித்தியம் அக்னி ஹோத்ரம் வெளிநாட்டவர்கள் பண்ணிண்டு இருக்கா. அதை கோயம்புத்தூர்ல அடியேன் உபன்யாசம் பண்ணச்சே, அவர் கையில ஹோம குண்டத்தையே எடுத்துண்டு வந்துட்டார் அந்த வெளிநாட்டுக்காரர். அந்த ஹோம குண்டம் செப்பினால் இவ்வளவு பெரிசு இருக்குது அழகா. அவர் எங்கெங்க போறாரோ அத வச்சுண்டு ஹோமம் பண்ணிடறார் அக்னி ஹோத்ரம். அந்த மந்திரங்கள் எல்லாம் ரொம்ப சஸ்வரமா அடியேன் எதிர்ல சொல்லி காண்பிச்சார்.
அந்த ஷோலாப்பூர்ல தாவர வர்க்கங்கள்… செடி எல்லாம் நட்டுட்டு, அதுக்கு எதிர உட்கார்ந்து அக்னி ஹோத்ரம் பண்ணிக்கிறார்கள். மற்ற இடங்களை காட்டிலும் அந்த இடத்துல வளரக்கூடிய செடிகள் ரொம்ப விசேஷமாய் வளர்ந்து பெரும் பலனை தருகிறதுன்றத பிரத்யக்ஷமா கண்டுபிடித்து காட்டியிருக்கிறார்கள். இந்த ‘அக்னி ஹோத்ர பலா வேதாஹ’ அது பிரத்யக்ஷமா அங்க நடந்து கொண்டிருக்கிறது. ஆகையினால பாருங்கோ, அந்த மந்திரங்களுக்கு அவ்வளவு சக்தியானது விசேஷமா அமைந்திருக்கிறது.
இப்ப தாவர வர்க்கங்கள் உலகத்துல நல்ல முறையில வளரணும்னாலும், பிராணி வர்க்கங்கள் பசு பக்ஷியாதிகள் சவுக்கியமா இருக்கணும்னாலும், மனித வர்க்கங்கள் சவுக்கியமா இருக்கணும்னாலும் எல்லாவற்றினுடைய க்ஷேமத்தையும இந்த வேதம் தான் நமக்கு விளக்கி சொல்றது.
அப்படியேப்பட்ட அந்த வேதத்துல இல்லாதது என்பது இல்லையானதினால, பரோக்ஷமான விஷயத்தை, கண்ணுக்கு தெரியாத விஷயங்களை எல்லாம் நமக்கு விளக்கி காட்டுவதிலே வேதம் மிகவும் விசேஷமான அர்த்தத்தை காட்டுவதனால ‘ அபௌருஷேயத்வம் ‘.
அபௌருஷேயத்வம்னா…? காளிதாச வாக்கியம்வத்துன்றார். இங்க வித்யாரண்யர். இப்ப ரகுவம்சம் இருக்கிறதுன்னா யார் இயற்றினது? காளிதாசன். குமாரசம்பவம் இருக்கிறது, இயற்றினது யாரு? காளிதாசன். யாதவாப்யுதயம் யார் இயற்றியது? சுவாமி தேசிகன். தமிழிலே ராமாயணம் இயற்றியது யாரு? கம்பன். அதே மாதிரி சௌந்தர்ய லஹரி ஆதிசங்கர பகவத் பாதாள். இப்படி ஒரு ஒரு கிரந்தத்த நாம எடுத்துண்டோமானா அதற்கு கிரந்த கர்த்தா, இயற்றினவர் யாருன்றது தெரியறது.
ஆனா வேதத்தை இயற்றினது யாரு? ‘ கர்த்ராத்யபாவாத் ‘. வேதத்தை ஒருவரும் இயற்றவில்லை. ‘ஓலை படா பிரமாணம்’, ‘எழுதாக்கிளவி’னு பெயர். அந்த வேதத்தை இப்பொழுது தான் அதுக்கு ஸ்வரம் எல்லாம் போட்டு புஸ்தகம் வந்திருக்கு. பூர்வ காலத்துல அப்படி எல்லாம் கிடையாது. ஆகையினால அது அப்படியே ஒருவர் பின் ஒருவரால் அத்தியயனம் பண்ணி தரிக்கப்பட்டது.
ஆகையினால ‘ அபௌருஷேயத்வம் ‘ ஒரு மனிதனால் இயற்றப்படாதது. மகரிஷிகளால் இயற்றப்படாதது. இங்க புருஷ சப்தத்திற்கு மனிதன்னு அர்த்தம் இல்ல, புருஷன்னா பகவான்னு அர்த்தம். புருஷ சூக்தம் நாராயண… அவராலையும் இயற்றப்படாதது வேதம்னா, அவனுடைய மூச்சுக்காற்றாய் இருப்பதனாலே அவனோட கூடவே அந்த வேதம் இருக்கிறதுன்றத நாம உணரனும்.
ஆகையினால ‘அபௌருஷேயத்வம்’ என்கிற உயர்ந்த குணம் அந்த வேதத்திற்கு இருக்கிறது.