வேதம் பரமப் பிரமாணம்
(முக்கூர் ஶ்ரீ லக்ஷ்மீ நரஸிம்ஹாச்சாரியார்)
– பாகம் 3 –
கோதாவரி தீரத்துல, ராஜமகேந்திரியில இது நிஜமா நடந்தது. அடியேன் பொய் சொல்லல. நிஜமா நடந்த விஷயம் இது. ஜகன்னாத கனபாடின்னு ஒருவர். அவர் சலக்ஷண கனபாடி. ‘கம்சுகண்டம்’னு அவர் மந்திரம் சொல்ல ஆரம்பிச்சா அப்படி வெண்கலம் மாதிரி ஒலிக்கும்..! ஒரு நூறு பேர் சொன்னா எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். தனியா சொல்லுவார் அவர். அவ்வளவு காம்பீரியமா இருக்கும் அவர் சொல்றது.
அவர் பரீட்சா அதிகாரி. அவரிடத்துல ஒருத்தர் வந்து எனக்கு உங்களிடத்துல தான் கனம் அத்தியயனம் பண்ணனும்னு இருக்குது. நீங்கள் எனக்கு சொல்லி வைக்கணும்னு கேட்டுண்டார். அவரும் சரின்னுட்டார். அவர் என்ன சொல்லி கத்துண்டார். எல்லா இடமும் நன்னா சொல்லிட்டார். கடைசியில ஏழாம் காண்டத்துல ஒரு இடம். அது…
“வ்ருஷாவாம் வாம் வ்ருஷா வ்ருஷாவாகும் ரேதோ தாரேதோ வாம் …. துத் ததாது ததாது த்ஸ்க்யோ த்ஸ்க்யோ ததாது துத் ததா துத ததாது த்ஸ்க்யோ ஓஹோ… த்ஸ்க்யோ துது த்ஸ்க்யோ க்ருதம் க்ருதகும் த்ஸ்க்யோ துது த்ஸ்க்யோ க்ருதம்…“
இந்த இடத்துல இஸ், இத்து, இக்கு இத்தனை அக்ஷரம் சேர்ந்திருக்குது இந்த இடத்துல. ‘த்ஸ்க்யோ துது த்ஸ்க்யோ க்ருதம் க்ருதகும் த்ஸ்க்யோ துது த்ஸ்க்யோ க்ருதம்‘
இந்த இடம் அவருக்கு பிடிபடல. ஒரு பதினஞ்சு நாள் சொல்லிக் கொடுத்தார். எத்தனை நாழி சொன்னாலும் அவருக்கு வேறெதையோ சொல்றாரே ஒழிய ‘த்ஸ்க்யோ துது த்ஸ்க்யோ க்ருதம் க்ருதகும் த்ஸ்க்யோ துது த்ஸ்க்யோ…‘ அது வரமாட்டேங்கறது. இவர் பார்த்தார், உமக்கு சொல்லிக்கொடுக்க என்னால முடியாது. நீர் இனிமேல சித்ரவதை பண்ணாதீயும். நீர் பர்ட்டு போடும்ன்னுட்டார்..!
இவர் அழுகையே வந்துடுத்து அவருக்கு. எல்லா இடமும் சரியா சொல்லுட்டார். இந்த ஒரு இடம் வரலையே. இது ஜென்மாந்திரத்துல என்ன பாவம் பண்ணோமோ..? இந்த சப்தம் பிடிபடலையேன்னு ரொம்ப வருத்தம் அவருக்கு. அவர் என்ன பண்ணார், இனிமேல் முடியாதுன்னுட்டார் அவர். அவர் எழுந்து உள்ள போகப்போறார். இவர் நித்யம் சைக்கிள்ல வருவார். சைக்கிள இப்படி தள்ளிண்டு கிளம்பினார்.
உள்ள போற ஆச்சாரியன், அந்த ஜகன்னாத கனபாடி அவரை கூப்பிட்டார். இப்படி வாரும் அப்படின்னார். இந்த சைக்கிள் காத்து நன்னா இருக்கா பூர்த்தியான்னார். இருக்குதுன்னேர். இப்படி உட்காருங்கோன்னார். அந்த பின்னால இருக்கிற சக்கரத்துல காத்து அடிக்கிற இடம் இருக்குது பாருங்கோ, அந்த இடத்த கொஞ்சமா அப்படி திறந்து விட்டார். அது ‘ஸ்ஸ்ஸ்’ன்றது. இந்த மாதிரி தான் சொல்லணும்னார். அத்த ரெண்டு தடவை அப்படி தூக்கி விட்டார். அவருக்கு வந்துடுத்து…!! ‘த்ஸ்க்யோ துது த்ஸ்க்யோ த்ஸ்க்யோ துது த்ஸ்க்யோ‘ன்னா அந்த காத்த எடுத்து விட்டா அந்த த்வனியானது அதுல வந்துடுத்து. அவருக்கு உடனே வந்துடுத்து. நன்னா சொல்ல ஆரம்பிச்சுட்டார். சந்தோஷம் அவருக்கு. உடனே அவரை ஜகன்னாத கனபாடிய விழுந்து விழுந்து சேவிச்சார், நமஸ்காரம் பண்ணார். என்ன பண்ணாதீயும் சைக்கிள பண்ணும்..!!. நான் சொல்லிக் கொடுத்து உமக்கு வரல. இந்த அசேதனமான இந்த சைக்கிள் சொல்லி உமக்கு வந்துடுத்து. சைக்கிள சேவியும்னார்..!!
பாருங்கோ நாம மனிதர்கள் நமக்கு எல்லா சப்தத்தையும் நம்மால சொல்லிட முடியும்னு நாம நினைக்கிறோம். ஆனா நம்மை காட்டிலும் மட்டமான அசேதனம், பக்ஷி வர்க்கங்கள் இதெல்லாம் நம்மை காட்டிலும் விலக்ஷணமா பேசுறது அதெல்லாம். நம்மை காட்டிலும் ரொம்ப அழகா சப்தத்த உச்சாணரம் பண்றது. ஒரு அசித் பதார்த்தம் ஒரு சைக்கிள் டயர்ல இருந்து வரக்கூடிய சப்தம் வேத த்வனியை எழுப்புறதுன்னா, அத கேட்டு அவர் தெரிஞ்சுண்டார். இதுவரைக்கும் இவர் சொல்லி குடுத்து வரல. அன்ன மாதிரி பிரத்யக்ஷமாவே நடந்தது இது. ஆகையினால அந்த வேதோச்சாரணம்ன்றது ரொம்ப சிரமமானதுனால, இந்த சப்த உச்சாரணம் அதை ரொம்ப சிரமப்பட்டு சம்பாதிக்க வேண்டிய ஒரு நிலை இருப்பதுனால, அந்த குருகுலத்துல போய் சிரமப்பட்டு கற்றுக்கொள்ளனும். ‘ஆதௌ வேதா: பிரமாணம். அக்ஷர ராசி கிரஹணம்.“
அதனால அந்த ‘நாதபநிஜநித நாட்டிய கண்ட மூலாதோ பாக ஆப்யந்தர ஸம்ஞக ஸம்வாரணாத அல்பப்ராண ப்ரயத்ன அர்த்தமாத்ரிக பராங்கபூத அர்க்க தேவதாக பிராமண ஜாதி அகார’ – அப்படின்னு வேதத்துல சொல்லச்சே ஒரு ஒரு அக்ஷரத்துக்கும் ஜாதி சொல்றது வேதம் இங்கே.
‘அ’ இதெல்லாம் பிராமண ஜாதி. ‘ஜ, க்ஷ’ க்ஷத்ரிய ஜாதி. ‘ண’ வர்க்கமெல்லாம் ‘ண’ அதெல்லாம் வைஸ்ய ஜாதி. ‘த’ வர்க்கமெல்லாம் சதுர்த்த வர்ணம், நான்காவது வர்ணம். இப்படி நான்கு ஜாதியுசிதமான அக்ஷரங்கள் சேர்ந்து ஒரு பதம் உண்டாகிறது. பல பதங்கள் சேர்ந்து ஒரு வாக்கியம், பல வாக்கியங்கள் சேர்ந்து ஒரு பஞ்சாசத், பல பஞ்சாசத்துக்கள் சேர்ந்து ஒரு அன்வாகம், பல அன்வாகங்கள் சேர்ந்து ஒரு பிரச்னம், பல பிரச்னங்கள் சேர்ந்து ஒரு காண்டம், பல காண்டங்கள் சேர்ந்து ஒரு ஸம்ஹிதைன்னு வேதமானது பூர்த்தியாகிறது..!!
இப்படி வேதத்துல அக்ஷரம் அக்ஷரத்தை நாம பார்த்தோமானா சில சப்தங்கள் நாபியிலிருந்து உச்சரிக்கணும்.
‘யத்தரதி தரதி யத்யத்தரதி தத்தத்தரதி யத்யத்தரதி தத்’
இதை நாபிலேருந்துதான் சொல்லணும். ‘யத்தரதி தரதி யத்…’ அப்படின்னு ஒருத்தர் சொல்லிட்டு இருந்தார். அப்படி சொன்னா பிரயோஜனமே இல்லை. ‘யத்தரதி தரதி யத்யத்தரதி’ன்னு நாபிலேருந்து அந்த சப்தம். அதுக்கு த்வனி ஸ்தானம்ச்ச கரணம். அந்த த்வனி அது சொல்ல வேண்டிய ஸ்தானம் எங்கேருந்து இதெல்லாம் நிர்ணயிக்கப்பட்ட விஷயம். அதனால நாபியிலிருந்து பிடித்து சொல்லணும்.
சில சப்தங்கள் நாபிலேருந்து சொல்ல வேண்டியதில்லை. களம், அதாவது இந்த கண்டத்திலிருந்தே வருது. அது சிலது, அது பாருங்கோ:
‘சந்த்ரமஸ்யஸி சந்த்ரம் சந்த்ரமஸி மம மாஸி சந்த்ரம் சந்த்ரமஸி மம அஸி மம மம ஆஸ்யஸி மம போகாய போகாய மம ஆஸ்யஸி மம போகாய போகாய மம மம போகாய பவ பவ போகாய மம மம போகாய பவ’
இது கண்டத்திலிருந்தே வருது. நாபி வரைக்கும் இறங்கிச் சொல்ல வேண்டியதில்லை. அப்படி சில பதங்கள்.
சிலது தாலு மத்யம்னு சொல்லி இந்த வாயிலிருந்தே வருது. கண்டத்தளவும் செல்லாமல் வாயிலிருந்து:
‘தாம் வாவ வாவ தாம் தாம் வாவ தேவா தேவா வாவ தாம் தாம் வாவ தேவா தேவா வாவ வாவ தேவா’ இங்கிருந்தே வருது பாருங்கோ, கீழே இறங்கல.
சில சப்தம் உதட்டிலிருந்தே வருது.
‘தே ஹுவே ஹுவே தே தே ஹுவே ஸவ ஸவ ஹுவே தே தே ஹுவே ஸவ ஹுவே ஸவ ஸவ ஹுவே ஹுவே ஸவாஹ் மஹகும் ஸவ ஹுவே ஹுவே ஸவஹம்’
உதட்டிலிருந்தே வருது. அதனால நாபியிலிருந்து ஆரம்பித்து உதடு பரியந்தம் வேதோச்சாரணத்திற்கு ஸ்தானம். அதனால ஒருத்தர் உட்கார்ந்து வேதத்தை சொல்றார்னா…
‘த்ரியஸ்த்ரிகும் ஷத்வை தேவதாஹா’
அவருடைய திருமேனியில, அவருடைய உடம்புல நாபியிலிருந்து அந்த உதடு பரியந்தம் அந்தந்த இடத்துல அந்த முப்பத்து முக்கோடி தேவதைகளும் அமர்ந்திருக்கிறார்கள். அதனால ‘வேதவித்யா பிராமணேப்ய: வேதவித்யா திவே திவே நமஸ்குர்யாத்’. அந்த வேதத்தை உச்சாரணம் பண்ணக்கூடிய வேதவித்துக்களை தினம் வணங்கி நாம் வழிபட வேண்டும். அவர்களை நாம் சேவிக்க வேண்டும்னு வேதமே தன்னைத் தாங்கக்கூடிய மகான்களை விழுந்து வணங்க வேண்டும்னு ஆக்ஞாபிக்கிறது நம்ம பார்த்து அதை செய் என்று சொல்கிறது.
அதனால அப்படி நாபியிலிருந்து இந்த உதடு பரியந்தம் ஸ்தானம். அன்ன மாதிரி உச்சரிக்கணும். சிலது இந்தந்த த்வனியில:
‘இடா இடோபஹூதே டா இடா’ – ஆடு கத்துற மாதிரி உச்சரிக்கணும். ஆடு கத்துற மாதிரி அந்த இடத்துல சொல்லணும்.
‘ஹிங்காராய ஸ்வாஹா ஹிங்க் ஹி ஹி இஹேவ கேவ ஹி ஹி’ – அப்படின்னா குதிரை கத்துற மாதிரி சொல்லணும்.–!! ‘ஹி ஹி…’ அப்படின்னா அந்த குதிரை கனைக்கிற மாதிரி அந்த சப்தத்தை சொல்லணும்.
‘தத்க்ரௌஞ்ச த்வனி வீதயா ஸுமங்கலா’ மணியை அடித்து அப்படி விட்டா அந்த ரீங்காரமானது எப்படி சிறிதுநாழி இருக்குமோ அன்ன மாதிரி சில சப்தங்களை உச்சரிக்க வேண்டும். அதனால அந்த உச்சாரணத்தை மாற்றிச் சொல்லாமல் அப்படியே சொல்ல வேண்டிய ஒரு கிரமம் அமைந்திருக்கிறது அந்த வேதத்திற்கு. அப்படியேப்பட்ட வேத ஸம்பத் ஆதௌ வேதா பிரமாணம். அப்படியேப்பட்ட வேதம் பரம பிரமாணம்
வேதம் ‘சத்வாரோ வேதா’. ரிக், யஜுர், ஸாமம், அதர்வணம்னு சொல்றோம். இந்த வேதங்கள் எப்படி நான்கோ அன்ன மாதிரி வேதத்தினிடத்து அசைக்க முடியாத குணங்கள் நான்கு இருக்கின்றன. மற்றெங்கிலும் காண முடியாத அந்த வேதத்திற்கே இருக்கும்படியான குணங்கள் அது. ‘அனிதர சாதாரணம்’ என்று சொல்வார்கள். மற்றெங்கிலும் பார்க்க முடியாது. அந்த வேதமாகிற பரம பிரமாணத்திற்குதான் அந்த குணங்கள் உண்டு அந்த நான்கும்.
அது என்னது அப்படின்னா அதை மகான்களான ஆச்சாரியர்கள் விவரிக்கிறார்கள். ஆதி சங்கர பகவத்பாதாள் என்ன, விசிஷ்டாத்வைத ப்ரவர்த்தகாச்சார்யார் ராமானுஜர் என்ன, அதே மாதிரி மத்வாச்சார்யார் ஆனந்த தீர்த்தர் – இந்த மூன்று ஆச்சாரியர்களும் ஏக கண்டமா ஒரே குரல்ல ஒரே மாதிரி சொல்கிறார்கள் எல்லோருமே.
இப்ப பாருங்கோ மதம் ஏற்பட்டது. அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்று.. மதம்னா அபிப்ராயம்னு அர்த்தம்..! ஆதி சங்கரருடைய அபிப்ராயம் அது. ராமானுஜருடைய அபிப்ராயம் இது. ஆனந்த தீர்த்தருடைய அபிப்ராயம் இது. அவரவர்கள் அபிப்ராயத்தை வேதத்திலிருந்து எடுத்துத் தெரிவித்தார்கள். அவர்களை அடியொற்றியவர்கள் அந்த ஆச்சாரியர்களைப் பின்பற்றியவர்கள் அந்த ஸம்ப்ரதாயப்படி இன்று வரையில் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், வேதத்துக்குப் பொருள் காணச்சே, வேதத்துக்கு அர்த்தம் சொல்லச்சே அவர்களுக்குள்ளே அபிப்ராய பேதம் வந்ததே ஒழிய, வேதத்தைக் குறித்துச் சொல்லச்சே, வேதத்தினுடைய பெருமையைச் சொல்லச்சே எல்லோரும் ஒரே மாதிரிதான் பேசியிருக்கிறார்கள்..! அதுல அபிப்ராய பேதம் கிடையாது யாருக்குமே எந்த ஆச்சாரியர்களுக்கும். வேதத்துக்குப் பொருள் சொல்லச்சே, வேத வாக்கியத்துக்குப் பொருள் சொல்லச்சே அர்த்தத்துல அபிப்ராய பேதம் வந்துடுத்து. ஆனால் வேதத்தைப் குறித்துச் சொல்லச்சே எல்லோரும் ஒரே மாதிரிதான் சொல்லியிருக்கிறார்கள் வைதிகர்களான நம்முடைய ஆச்சாரியர்கள்.
அதுல கவனிக்கச்சே நித்யத்வம், அபௌருஷேயத்வம், அவிச்சின்ன பரம்பராகதத்வம், அனந்தத்வம் என்று இந்த நான்கு குணங்கள் வேதத்தினிடத்து அசைக்க முடியாத குணங்கள்.
நித்யத்வம்னு ஒரு குணம் வேதத்தினிடத்தில. நித்யத்வம்னா எப்போதும் இருக்கிறது. ‘அத ஏவச்ச நித்யத்வம்’ அப்படின்னு பிரம்ம சூத்திரம். ‘அத ஏவச்ச நித்யத்வம்’னு பிரம்ம சூத்திரம். அது ‘அத:’ அதனாலல்லவோ அது நித்யமாய் இருக்கிறது வேதம்.
நித்யம் என்றால் ஸ்வரூபத: ப்ரவாஹத: ஸ்வபாவத: என்று ஆச்சாரியர்கள் அதை வகுத்தார்கள். ஒரு வடிவத்துடன் நித்யமா இருக்கணும் வேதம். கால வெள்ளோட்டத்திலே நித்யமாய் இருக்க வேண்டும். எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருக்கிறதா வேதம்னு விசாரித்தார்கள்.
இப்ப நன்றாக கவனித்துப் பார்க்கணும் வேதம் இந்த கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் இப்படி யுகங்கள் மாறி மாறி எத்தனையோ சதுர்யுகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. யுகங்கள் மாறினாலும் வேதம் மாறாமல் இருந்து கொண்டே இருக்கணும் அந்த கால வெள்ளோட்டத்துல. அப்படி இருக்கிறதான்னா..? இருந்து கொண்டிருக்கிறது..!
‘யோ பிரம்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாச்ய ப்ரஹிணோதி தஸ்மை’ நான்முகனை நாராயணன் படைத்தான்னு சொல்லி, நான்முகனை தன் நாபிகமலத்திலிருந்து பகவான் படைத்து
‘ஜகாத ஸாமவேதம் தம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே’ அந்த பிரம்மாவுக்கு வேதங்களை உபகரித்தான். வேதங்களை உபதேசம் பண்ணான். நான்கு முகத்தினாலேயும் பிரம்மா நான்கு வேதங்களையும் கற்றார். அவரிடத்திலிருந்து பல பேர்கள் கற்றார்கள். ஓராண் வழியாக இன்று வரையில் ஒருவர் பின் ஒருவரால் அது கற்று தரிக்கப்பட்டு சொல்லிக் கொடுக்கப்பட்டு வருகிறது. அதனால் கால வெள்ளோட்டத்திலே நித்யமாய் இருக்கிறது.
அதுக்கு அடுத்தது பாருங்கோ, எப்போதும் அது நித்யமாய் இருந்து கொண்டிருக்கிறது. அதை ஆச்சாரியர்கள் பேசச்சே ‘யத் ஸத்வே யத் ஸத்வம், யத் அபாவே தத் அபாவ:’ என்றார்கள். வேதம் இருக்கிறது என்றால் பரமாத்மா இருக்கிறான். வேதமே இல்லை என்றால் பரமாத்மா இல்லை என்றார்கள். இதுல ஒன்றை நாம் ஒப்புக் கொள்வோம், இரண்டாவது சொன்னது எல்லோரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். வேதம் இருக்கிறது என்றால் பரமாத்மா இருக்கிறான் என்றதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள். வேதம் இல்லை என்றால் பரமாத்மா இல்லைன்னு எப்படி சொல்ல முடியும்? வேதம் இல்லை என்றால் பரமாத்மா இல்லைன்னு சொல்ல முடியுமா..?
இப்ப.. இந்த உலகத்துல வேதத்தை அத்தியயனம் பண்ணக் கூடியவர்கள் குறைந்து போகலாம். நாளடைவில் வேதோச்சாரணமே இல்லாமல் போகலாம். அதனாலேயே பரமாத்மாவே இல்லைன்னு சொல்ல முடியுமா? இங்க சொல்லல, பூலோகத்துல சொல்லலன்னா இன்னொரு இடத்துல வேதத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தேவலோகத்துல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் , வேறொரு இடத்துல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் . இந்த ஊர்ல இல்லைன்னா இன்னொரு ஊர்ல சொல்லுகிறார்கள். அதனால வேதம் இல்லை என்றால் பரமாத்மா இல்லைன்னு சொல்லிட முடியுமா..?
அப்படின்னா இதுக்கு என்ன உண்மையான பொருள்..? – வேதம் இருந்தால் தான் பரமாத்மா இருக்கிறான் என்பதை நம்மால் உணர முடியும்..!! வேதமாகிற பிரமாணத்தினால்தான் அவனை உணர வேண்டுமானதால, வேதமே இல்லை என்றால் பரமாத்மாவை உணர்வது கடினமானதால அந்த வேதம் மிகவும் முக்கியம்.
அதனால பரமாத்மாவினுடைய ‘யஸ்ய நிஸ்வஸிதம் வேதா:’ பகவானுடைய மூச்சுக்காற்றாய் வேதம் இருக்கிறது. இப்போ மனிதனுக்கு எதனால கௌரவம்.? மூச்சு இருப்பதனால் கௌரவம். அதனால சுவாசம் இருந்தால் தானே அவருக்கு ஏற்றம். அந்த சுவாசமே இல்லை என்றால் இந்த சரீரத்துக்கு கௌரவம் இல்லை. அது போன்று பரமாத்மாவுக்கு மூச்சுக்காற்றாகிற வேதமே இல்லை என்றால் அவனுக்கே கௌரவம் இல்லை.
அதனால நாம் எதையாவது சொல்லணும்னா வேதத்தைச் சொல்லிதான் சொல்றோம். பகவான் நமக்கு ஏதாவது சொல்லணும்னா ‘வேத மூல பிரமாணாத்’ வேதத்தைப் பாருங்கோன்றான். வேதத்துல இருக்கிறதே என்று வேதத்தைத்தான் அவன் மேற்கோள் காட்டுகிறான். இப்படி பகவானுக்கும் நமக்கும் இடையிலே அவனையும் நம்மையும் சேர்த்து வைக்கக் கூடியது இந்த வேதமானதால, வேதம் எப்போதும் அவனுடைய மூச்சுக்காற்றாய் அவனோட கூடவே எப்போதும் நித்யமாய் இருந்து கொண்டிருக்கிறது என்கிற ஒரு உயர்ந்த குணம்.
அது மாத்திரமில்லை வடிவத்துடன் நித்யமா இருக்கா..?
‘நமஸ்தே தே நமோ நமஸ்தே ருத்ர ருத்ர தே நமோ நமஸ்தே ருத்ர தே ருத்ர ருத்ர தே தே ருத்ர மன்யவே மன்யவே ருத்ர தே தே ருத்ர மன்யவே’ இப்ப இந்த மந்திரத்தைச் சொன்னா இது யஜுர்வேதம்னு எல்லாருக்கும் தெரியறது.
‘தே அஸ்மின் விவிதே விவிதே’ அப்படின்னா இது ரிக்வேத ஸ்வரம்னு தெரியறது .
‘யதாதித்யேன வை ஸகஸ்தாபயதி’ அப்படின்னா இது அதர்வண வேதம்னு கேட்கச்சேவே தெரியறது.
‘ஹயா ஹயா ஹா ஓ ஹா ஓ ஹா’ அப்படின்னா இது ஸாமவேதம்னு தெரியறது .
ஸ்வரத்தைக் கேட்கச்சேவே இது ஸாமவேதம், இது யஜுர்வேதம், இது ரிக்வேதம், இது அதர்வண வேதம்னு கேட்டு கேட்டு நமக்கு பழக்கம் இருக்கிறதனால அந்த அந்த வேதத்தினுடைய வடிவம் நமக்கு தெரிகிறது. இந்த ஸ்வரத்துல அது இருக்கிறது. ஆக வடிவத்துடன் வேதம் ஸ்வரத்திலே நித்யமா இருந்து கொண்டிருக்கிறது. அந்த பகவானுடைய மூச்சுக்காற்றாய் அவனோட கூடவே எப்போதும் நித்யமாய் இருந்து கொண்டிருக்கின்றது.
அது தவிர உபதேச பரம்பரையிலே ஒருவர் பின் ஒருவரால் உபதேசிக்கப்பட்டு இன்றளவில் வந்து கொண்டிருக்கிறது. இப்படி எல்லா விதத்திலேயும் ஸ்வரூபத்திலும் சரி, ஸ்வாபாவிகமாகவும் இயற்கையிலே அது தவிர கால வெள்ளோட்டத்திலே எப்போதும் நித்யமாய் வேதம் இருப்பதனாலே அந்த வேத சப்தம் அழியாமல் இருந்து கொண்டிருக்கிறது. சாஸ்திரம் என்ன சொல்லித்து.. பிரளய காலத்துல எல்லா சப்தமும் அழிஞ்சு போடுறது. உலகத்துல என்னென்ன சப்தங்கள் உண்டோ இது மொத்தம் மஹா பிரளயத்துல அழிஞ்சு போடும். ஆனா பாருங்கோ வேத சப்தம் மாத்திரம் அழிவதில்லை.
அதைத்தான் எல்லா ஆச்சாரியர்களும் அந்த வேதத்தினுடைய உயர்ந்த தன்மையை வெளியிட்டிருக்கிறார்கள்.
பகவான்
ஆலாமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலமேழு முண்டான் அரங்கத்தரவினையான்
கோலாமாமணியாரமும் முத்துத்தாமமும் முடிவில்லதோரெழில் நீலமேனி ஐயோ நிறைகொண்டதென்னெஞ்சினையே
என்றார் திருப்பாணாழ்வார். அந்த ரங்கநாதனை பார்த்து ‘ஐயோ’ன்னுட்டார்..! ‘ஐயோ’ன்னா மேல சப்தம் வரல. அந்த அனுபவம். அந்த ‘அனுபவ பரிவாஹம்’னு சொல்லுவா. என்ன பாட்டு எழுதி பரிசு பெற வேண்டும்னு எழுதினாரா அவர்? இல்லையே? அதை நேரா பார்க்கிறார், பார்க்கச்சே அந்த அனுபவத்துல அவர் வாக்குல வரது. மேல வார்த்தை எழும்பல ‘ஐயோ’ன்னுட்டார். அந்த திருமேனி நிழல் அப்படியே என் ஹிருதயத்தை இழுத்துண்டே போச்சே நான் என்ன பண்ணுவேன்றார்..!!
அப்படி அவன் எப்பேர்ப்பட்டவன் ஆலாமா மரத்தின் இலைமேல் படுத்துண்டிருக்கானே அந்த வடபத்ர சாயி.
‘பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி
கரார விந்தேன பதார விந்தம்
முகார விந்தே வினிவேஷயந்தம்
வடஸ்ய பத்ரஸ்ய புடேஷயானம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி’
முஞ்சகுஞ்ச ததாதிதி முகுந்த: ‘மு’ன்னா மோக்ஷம். ‘கு’ன்னா இந்த லோகத்துல நமக்கு கிடைக்க வேண்டிய ஐஸ்வர்யம். இது ரெண்டுத்தையும் கொடுக்கிறவன் அவன். அந்த பாலனான முகுந்தன் வடபத்ர சாயியா அந்த ஆலிலையின் மேல் படுத்துண்டிருக்கான்.
அப்படியேப்பட்ட எம்பெருமான் பிரளய காலத்திலேயும் வேதத்தை தன்னுள்ளே காத்துக் கொண்டிருக்கிறான். மறுபடியும் சிருஷ்டி கிரமத்துல அந்த வேதத்தை பிரம்மாவுக்கு உபதேசம் பண்றான். இதுலிருந்து நாம ஒன்னு தெரிஞ்சுக்கணும்
– வேதத்தை நாம் ரக்ஷிக்கிறோமா பகவான் ரக்ஷிக்கிறானா..? நம்மை காட்டிலும் பகவான் தான் ரொம்ப ஜாக்கிரதையா ரக்ஷிக்கிறான். பிரளயத்துல அந்த வேதத்தை அழியாமல் தன்னுள்ளே காக்கிறான். தன்னிடத்திலே வைத்து மறுபடியும் வெளியில விடறான். ஆகையினால இப்ப பரமாத்மா அதுக்கு ரக்ஷகன்.
வேதம் பிரளய காலத்திலேயும் அழிவதில்லை. ஆகையினால நித்யமாய் இருந்து கொண்டிருக்கிறது என்கிற நித்யத்வம் என்கிற குணம் வேதத்திற்கு இருக்கிறதுன்றத நாம உணரணும்.
மற்றைய பிரமாணங்கள் உலகத்துல எத்தனையோ வாங்மயங்கள் எத்தனையோ சப்தங்கள் இருக்கின்றன. அதெல்லாம் அழியக் கூடியவைகள். அழியாதது வேதம் ஒன்றுதான் என்பதை நாம உணரணும்.