வேதம் பரமப் பிரமாணம்
(முக்கூர் ஶ்ரீ லக்ஷ்மீ நரஸிம்ஹாச்சாரியார்)

– பாகம் 2-

வேதம் என்பது சம்ஸ்கிருதச் சொல். ‘ வேத: ‘ என்ற சொல் என்னத்த காட்டுறதுன்னா, ‘ வேதயதி இதி வேத: ‘, உணர்த்துவதனால் அதற்கு வேதம்னு பெயர். பரப்ரஹ்மத்தை உணர்த்துகிறது, காட்டுகிறது.

தமிழிலே அதற்கு என்ன பெயர்? ‘ மறை ‘ என்று பெயர். மறை.. மறைப்பதனால் அதற்கு மறைன்னு பெயர்.

யாருக்கு உணர்த்துகிறது..? யாருக்கு மறைக்கிறது..?

இப்போ பாருங்கோ… பகவத் பாகவத ஆச்சாரிய கடாக்ஷம் அற்றவர்களுக்கு மறைக்கிறது. பகவத் பாகவத ஆச்சாரிய கடாக்ஷம் பெற்றவர்களுக்கு, பளிங்கு கற்களினால் தயார் பண்ணப்பட்ட திவ்யமான திருமாளிகையிலே, நான்கு பக்கத்திலேயும் விளக்கை ஏற்றி வைத்து, நவநிதிகளை கொண்டு வந்து இடையிலே கொட்டினால் அது எப்படி தகதகாயமானஸ் என ஜொலிக்குமோ, அந்த மாதிரி உள்ளுக்குள்ளே பதிந்து கிடக்கக்கூடிய அர்த்த விசேஷங்கள் அனைத்தும் சாமான்யர்களுக்கும் புரிகிறது. மஹா ஞானிகளுக்கு புரிகிறது. சாமான்யர்களுக்கும் புரியும்படியா அந்த ஆச்சாரிய கடாக்ஷம் பெற்றவர்களுக்கு கிடைக்கிறது.

நாமா புஸ்தகத்த பார்த்தா புரியாது. புஸ்தகத்த பார்த்து தெரிந்து கொள்ளவும் கூடாது. மகான்களை அடிபணிந்து அவர்களிடத்தில் விஷயம் கேட்கணும். தானே புஸ்தகத்த பார்த்து ஒருத்தன் படிச்சு தெரிஞ்சுண்டான்னா, அவனுடைய பாண்டித்யம் எப்படி இருக்குன்னா, ‘ ஜார கர்ப்ப இவ ஸ்த்ரியஹ ‘ ன்னார். ஒரு விபச்சார ஸ்த்ரீக்கு பிறந்த பையனானவன் எப்படி சபையிலே கௌரவிக்கப்பட மாட்டானோ, அந்த மாதிரி தானாக புஸ்தகத்தை படித்து பாண்டித்யம் பெற்றவருக்கு, பல பண்டிதர்கள் குழுமியிருக்கும்படியான சதஸ்ஸிலே பெருமை ஏற்படாது. அவன் கம்பீரமாய் பேச முடியாது.

ஸ்வயம் தர்து மக்ஷமஹ கிமபரான் ஸந்தாரயேத்? (स्वयं तर्तुमक्षमः किमपरान् संतारयेत्? )’ன்னார் ஶ்வாமி தேசிகன். அதாவது ‘ களவு கொண்டு ஆபரணம் பூண்டா போலே ‘ ன்னார். இப்போ பாருங்கோ, ஒரு இடத்துல பெரிய கல்யாணம் நடந்துண்டு இருக்குது. அந்த கல்யாணத்துல எல்லாரும் ஏகமா வந்து அவா அவா காரியத்துல ஈடுபட்டுண்டு இருக்கா. அப்போ அந்த குளியலறையிலே ஒருவள் அங்கே ஸ்நானத்துக்காக போனா. போனா… அங்க ஒரு நெக்லஸ் மாட்டப்பட்டிருக்கிறது. யாரோ இதுக்கு மின்ன குளிச்சுட்டு போனவா, அதை அங்கேயே மாட்டிட்டு பர்ட்டு போயிட்டா, மறந்து போயிட்டா. பார்த்த உடனே அந்த கண்டஹ நெக்லஸ்ஸானது இருக்கிறது. உடனே அத எடுத்துண்டுட்டா. எடுத்துண்டா… எல்லாரும் அங்க முகூர்த்த சமயம்.

இவள் என்ன பண்ணா, நேர அந்த நெக்லஸ்ஸ எடுத்துண்டு தன்னுடைய கிரகத்துக்கு பர்ட்டு போயிட்டா.

வீட்டுல போய் அழகா அலங்காரம் பண்ணிண்டா ஹாரத்தை. கண்ணாடிக்கு எதிர்ல பாத்துண்டா ரொம்ப நன்னா இருக்குது அது. அத அப்படியே ரெண்டு நாள் தன்னுடைய கிரகத்திலேயே போட்டுண்டு போட்டுண்டு அலங்காரம் பண்ணிண்டா பாத்துண்டு இருந்தா.

ஒரு நாலு நாள் கழிச்சு இன்னொரு கல்யாணத்துக்கு போக வேண்டியதா இருந்தது. அந்த கல்யாணத்துக்கு இதை போட்டுண்டு போனா. இந்த கல்யாணத்துக்கு வந்தவா மொத்த பேரும் அந்த கல்யாணத்துக்கு வந்திருக்கா. இதை போட்டுண்டு போன உடனே, இதை வெளியில காட்ட முடியல. அதனால அத இழுத்து இழுத்து மறைத்துக் கொள்கிறாள், வெளியில காட்ட முடியல.

அது மாத்திரமில்ல, யாரை பார்த்தாலும் பயமா இருக்குது. ஏன்னா, யாராவது கையை பிடிச்சுன்ற போறாளேன்னு ஒரு பயம். எதிர்ல இருக்கறவா யாரை பார்த்தாலும் பயம். யாரோடும் பேச முடியல. இதை போட்டுண்டு இருக்கற சந்த்ருப்தியும் இல்ல. இதை வெளியில காட்டவும் முடியல.

இது யாருடைய நிலைன்னார்..? புஸ்தகத்த பார்த்து படித்தவனுடைய நிலை. ஆச்சாரிய கடாக்ஷம் இல்லாம வெறும் புஸ்தகத்த பார்த்து மனப்பாடம் பண்ணிட்டான்னா, அவன் ஏறி உட்காந்துட்டான்னா, எதிர்ல இருக்கறவா யாரை பார்த்தாலும் பயமா இருக்குமாம். அவர் என்ன கேட்டுடுவாரோ? இவர் என்ன கேட்டுடுவாரோ? அவர் கேட்டா நமக்கு பதில் சொல்ல தெரியுமா? இப்ப நாம சொல்ற விஷயம் சரிதானா? இப்படி சந்தேகம் இவருக்கே இருந்துடுத்துன்னா, இவர் இதராளுக்கு என்னத்த விஷயத்த சொல்றது? அவரை எப்படி விஷயங்களை சொல்லி, தான் அந்த விஷயத்துனால அவரை திருப்திபடுத்தறது?

ஆகையினால, அது பிரகாசிக்காது. களவு கொண்டு ஆபரணம் பூண்டா போலேன்னார்.

அந்த மாதிரி மகான்களை அடிபணிந்து, அவர்களிடத்தில் விசேஷ விஷயங்களை பல காலம் கேட்க வேண்டும். ‘பகுதா ஸ்ரோதவ்யம், பகுப்யஹ ஸ்ரோதவ்யம்’. பல படியாக கேட்கணும், பல பேரிடத்தில கேட்க வேண்டும். அந்த மாதிரி கேட்டு கேட்டு விஷயங்களை தரிக்க வேண்டும். ஆகையினால, அந்த எம்பெருமானுடைய விஷயங்களை சொல்வதிலே வேதம் பரம பிரமாணமாய் இருக்கிறதுனால, அந்த வேதத்தை கசடற ஆச்சாரியர்கள் பக்கத்திலே அமர்ந்து சிரமப்பட்டு அத்தியயனம் பண்ணனும்.

‘வேதாத்யயனம் நாம கிம்’னு கேட்டுண்டார் பிரம்ம சூத்திர பாஷ்யத்துல. வேதாத்யயனம் என்றால் என்னன்னா, ‘அக்ஷர ராசி கிரஹணம்’. அக்ஷர கூட்டங்களை கிரகித்தல். ஓரக்ஷரமா, ரெண்டு அக்ஷரமா? வேதம் எத்தனை அக்ஷரங்கள்..?! எத்தனை ஸ்வரங்கள் அதுல? ஆகையினால அக்ஷரம் கூட்டம்.

அக்ஷரத்துக்கு ஸ்வரம். ‘ப்ரத்யங் ஷடகோபவதி’, அப்படின்ன அந்த ஏக மாத்ரிக விராம. ஒரு மாத்ர விராமத்துல அந்த இடத்துல சொல்லணும். இந்த மாதிரி ஒவ்வொரு இடத்துல நாம பார்த்தோமானா, கடினமாய் எத்தனையோ இடம். ‘அனுபோகம் போகம் அன்வனு போகம் மானடா’ அப்படின்ன அது கடினமாய் வரக்கூடிய பதங்கள்.

‘ப்ராகபாக் அபாக் ப்ராக் ப்ராக் அபாகு தகுதகபாக்’ ‘ப்ராக் ப்ராக் அபாகு தகு’ ‘அபாகு தகு தகு பாக பாகு தகு த ராக த ராகு த கபாக பாகு த கத ராகு’ என்ன பதம் இருக்குதுன்றது யாராவது கண்டுபிடிக்க முடியறதோ இதுல..?

ஆகையினால அந்த சந்தியில சேரச்சே, ப்ராக், அபாக், உதக், அதராக். ப்ராக்னா கிழக்கு திக்கு. அபாக்னா மேற்கு. உதக்னா வடக்கு. அதராக்னா தெற்கு திக்கு. இந்த நாலு திக்க சொல்லச்சே வேதம், இந்த கனம் சொல்லச்சே, ‘ப்ராக் அபாக் அபாக் ப்ராக் ப்ராக் அபாக் அபாக் ப்ராக் ப்ராக் அபாக் அபாகு தகு தகு பாக பாகு தகு த ராக தரா உதக பாக பாகு த கத ராகு’ அப்படின்னச்சே, அது சேர்ந்து இழையறது. இப்படி இழையும் படியான அந்த சப்தம், சஸ்வரமாக ஆச்சாரியர்களுக்கு எதிர்ல உட்காந்து அவர் சொல்லச்சே, சொன்னா தான் நமக்கு வரும்.

“அவருந் தேர்ருந் தே……. ஏர்க்கே… ஓர்க்கோ… ஓர்க்கோ ஏர்க்கே எர்க்க கச்சீயதே தீயதே தேர்க்கே… ஏர்க்கோ ஓர்க்கோர் கச்சீயதே…”
இப்ப என்னத்த எழுதுறது இத? ஏர்க்கே… எத்தன எழுத முடியும்? ஓர்க்கோ… எழுத தான் எழுதிட்டா, சொல்லிட முடியுமா? அப்ப ஒருத்தர் உச்சரித்தால் அவர் சொன்னா, அவர் எப்படி சொல்றாரோ அதை கேட்டு இவர் சொல்லிடுவார். அன்ன மாதிரி பல நாள்…!

இந்த சந்தி, இந்த கம்பம் பிடிபடனும்னா பதினஞ்சு நாள் உதபடனும். ஆகையினால…’தேர்க்கே… ஏர்க்கோ…’ அப்படின்னு அடிச்சு அவர் சொல்லச்சே, அவர் ஆசார்யர் ‘ஏர்க்கே… ஓர்க்கோ…’ன்னா இங்க கன்னத்துகிட்ட பிடிச்சுண்டுருவார். அப்படி தூக்கி அது விடுவார்.

இவருக்கு இப்ப வித்யார்த்தியா பிரம்மச்சாரியா அத்தியயனம் பண்ணாரே பதினஞ்சு வயசுல, இவருக்கு இப்ப தொன்னூறு வயசு ஆயிடுத்து. இங்க பஜன மடத்துக்கு வந்தார் வேத பாராயணத்துக்கு. இந்த இடம் சொல்லச்சே அவர் தலை இப்படி இப்படி ஆடுறது. ஒருத்தர் எதிர்ல உட்காந்து, ஏன் அவர் தலை ஆடுறதுன்னார்? பதினஞ்சு வயசுல அவர் உபாத்தியாயர் அப்படி தூக்கி விட்டது. அவர் தூக்கி அப்படி விட்டது, இன்னைக்கும் தலை ஆடிண்ருக்குது. ஏன்னா அந்த ஸ்வரத்துக்கு ஏத்த மாதிரி தலை ஆடுறதே. அந்த வேத வித்தையில தான் அருகில் உட்கார வைத்து, அவரை கிட்டக்க உட்கார வச்சு சரியா சொல்றானா… என்பதை பார்கறது.

ஆசார்யர் ‘எதுர்கு ருதயச்சது’ அப்படின்னார். அந்த பையன் எங்கேயோ பார்த்துண்டுருந்தான். சரியா சொல்லலேன்னா உதைப்பார் அவர். ‘எதுர்க ருதயச்சது’ன்னா அவன் பாட்டுக்கு ‘எருது குதிரைய ஒச்சது’..!ன்னான். ரெண்டும் கேட்கிறது ஒரே மாதிரி இருக்குது. ஆனா அவனுக்கு வேதம் வருமா? உன்னிப்பா கேட்டா தான் வேதம் வரும். ஆகையினால செவிப்புலன் நன்னா இருக்கணும். காது… அவர் என்ன சொல்றார்ன்றத சாவதானமா உன்னிப்பா கேட்கணும். அப்ப தான் வேத சப்தமானது பிடிபடும். ஆகையினால அமங்கலமா சொல்லக்கூடாது. அபஸ்வரமா சொல்லக்கூடாது. சஸ்வரமா சொல்ல வேண்டிய நியமம் இருக்கிறது. ஆகையினால ரொம்ப சிரமப்பட்டு சம்பாதிக்க வேண்டிய ஒரு வித்யை வேதம்..!

Scroll to Top