மறை உரைத்த இறை
[ஸ்ரீ. உப. வித்வான் முக்கூர் லக்ஷ்மீநரஸிம்ஹாசார்ய ஸ்வாமி, விஜயவாடா]
(1971 மாசி ஶ்ரீ ந்ருஸிம்ஹப்ரியா பத்திரிக்கையில் வெளியான கட்டுரை)





வேதம் என்ற வடமொழிச் சொல்லுக்கு அகஸ்திய மொழியில் மறை என்பது பொருள். இந்தப் பெயர் வரக் காரணம் அது தன்னுள் தத்துவ ஹித புருஷார்த்தங்களை மறைத்து வைத்திருப்பதே.
ஸ்ரீவிஷ்ணு தேவதாத்மகமான இஷ்டியில் இஷ்டகா உபதானம் (செங்கல்வைப்பு ஹோமகுண்டம் தயாரிப்பதற்காக) செய்யும்போது, கீழ்வரும் மந்த்ரம் படிக்கப்படுகிறது—
ய: பூர்வ்யாய வேதஸே நவீயஸே
ஸுமஜ்ஜாநயே விஷ்ணவே ததாஸதி |
யோ ஜாதமஸ்ய மஹதோ மஹி ப்ருவத்
ஸேது ஸ்ரவோபிர் யுஜ்யம் சிதப்யஸத் ||

இந்த மந்த்ரத்தில் முதல் வாக்கியத்தில், ஸ்ரீய:பதியான ஸ்ரீமந்நாராயணனை இரண்டு விதமாகப் பாகுபடுத்திப் பேசி யிருக்கிறது; அதாவது பூர்விகமான பரமாத்மா ஒருவன், நவீனமான பரமாத்மா மற்றொருவன் என்று. ‘பூர்விகமான பரமாத்மா யார்? நவீனன் யார்?‘ என்று விசாரித்தோமே யானால், ‘வைகுண்டேது பரே லோகே‘ என்று கூறப்பெற்ற உத்தம பதத்தில் வீற்றிருப்பவன் பூர்விகமான பரமாத்மா. நவீனமான பரமாத்மா எவன் எனில், வேத பாஷ்யகாரர் ஸ்ரீவித்யாரண்ய ஸ்வாமிகள் வ்யாக்யானமிடும்போது,
ஸ்ரீராமக்ருஷ்ணாத் யவதாரேண பகவாந் அத்யந்தம் நூதந: |
என்று குறிப்பிட்டுள்ளபடி, பகவானின் விபவாவதார தசைகளினால் பகவான் நவீனன் ஆகிறான். இவற்றைத் திருவுள்ளத்தில் கொண்டுதான் நம் செந்தமிழ்த் தூப்புல் குலமணி தம் பிரபந்தசாரம் என்ற நூலில் “அருள் மிகுத்ததொரு வடிவாய்” என்றார்.
இந்த வேதவாக்கியத்தைப் பதச்சேதம் பண்ணி இவ்வாறு அந்வயித்தோமேயானால் நமக்கு வேதத்தின் சுவையான பொருள் கிடைக்கும். அதாவது, (1) அருள் வடிவு, (2) அருள் மிகுந்த வடிவு, (3) அருள் மிகுந்ததொரு வடிவு. அருள் வடிவு என்பது பர ரூபத்தைக் குறிக்கும். அருள் மிகுந்த வடிவு என்பது விபவாவதாரத்தைக் குறிக்கும். அருள் மிகுந்ததொரு வடிவு என்பது, அபிநவ தசாவதாரங்களான ஆழ்வார் எம்பெருமானார் ஆகியரைக் குறிக்கும். ‘நவீயஸே‘ என்ற வேத பதத்துக்கு ஸ்ரீவித்யாரண்யரைக் காட்டிலும் ஒரு படி மேலாக, ஆசார்யர்களின் அவதார வைபவங்களையும் குறிப்பிட்டார் நம் பரமாசார்ய வள்ளல்.
இதற்கு மேல் நமக்கு ஒரு சங்கை ஏற்படுகிறது, ‘பகவான் ஏன் நவீனன் ஆகவேண்டும்?‘ என்று. இதற்குக் காரணம், தான் ஸமஸ்த கல்யாணகுணோபேதன், தயையுடன் கூடிய ஸௌலப்ய ஸௌசீல்யாதி குணங்களின் ஸாகரம் என்பதைக் காண்பிப்பதேயாம். இப்படி அவன் செய்வதற்கு அவனிடத்தில் உள்ள காருண்யம் என்ற உத்தம குணமே காரணம். இதைத்தான் ஸ்வாமி தேசிகன் தயாசதகத்தில், ‘தோஷா பவேயுரேதே, யதி நாம தயே த்வயா விநாபூதா:|‘ என்றார். காருண்யம் (தயை) என்ற குணம் பகவானிடத்தில் இல்லை என்றால், மற்ற ஸமஸ்த குணங்களும் பகவானுக்குத் தோஷங்களாகவே ஆகிவிடுகின்றன. ஆகையால் காருண்யம் என்ற குணம் பதி ஸ்தானத்திலும், மீதி எல்லாக் குணங்களும் பத்தினி ஸ்தானத்திலும் இருக்கின்றன. பதி இல்லையேல் பத்தினிக்கு எவ்வாறு சமூகத்தில் கௌரவம் இல்லையோ, அதே போலப் பகவானிடத்தில் தயை இல்லையேல் மீதிக் குணங்கள் பெருமையை இழக்கும்.
இப்படிப் பகவானிடத்தில் தயை என்ற குணம் அநிதர ஸாதாரணமாக இருப்பதற்குக் காரணம், நிரபாய தர்ம பத்தினியான கமலை எப்பொழுதும் பகவானை விட்டு அகலாமல் இருப்பதுதான். இதைத்தான் இந்த மந்த்ரத்தின் இரண்டாவது வாக்கியம் அறுதியிடுகிறது, ‘ஸுமஜ்ஜாநயே விஷ்ணவே ததாஸதி‘ என்று. இங்கு வித்யாரண்யர்,
சோபநயா லக்ஷ்ம்யா ஸஹ விராஜமாந: |
என்றார். ‘கமலையுடன் கரிகிரிமேல் நின்றனைத்தும் காக்கின்றானே‘ என்றார் நம் ஆசார்ய வள்ளல்.
இதைப் பராங்குச நாயகி, ‘அகலகில்லேன் இறையுமென்று‘ என்றும், ‘நின்திருமகள் சேர்மார்வன்‘ என்றும், பெரியாழ்வார், ‘வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு‘ என்றும், அமுதனார், ‘பூமன்னுமாது பொருந்திய மார்பன்‘ என்றும், நயினார், ‘மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்துறை மார்பன்‘ என்றும் கூறினார்கள்.
ஆகவே, இந்தச் சேஷி தம்பதிகள்தாம் நம்மை ரக்ஷிக்க வல்லவர்கள். குலால ம்ருதாதிகள் கடத்துக்குக் காரணம் ஆவது போல, இந்தப் பிரபஞ்சமாகிற கடம் தயாராவதற்கு இந்தத் தம்பதிகள் காரணம். இதில் ஒன்றை விட்டு ஒன்றுக்குக் கௌரவமில்லை என்பதை ஸ்ரீகம்பநாட்டாழ்வான் வாலியின் வாயிலாக உபதேசிக்கிறான். அதாவது—
”கோவியல் தருமம் உங்கள்
குலத்துதித் தோர்கட்கெல்லாம்
ஓவியத் தெழுத வொண்ணா
உருவத்தாய் உடைமை யன்றோ
ஆவியைச் சனகன் பெற்ற
அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னை
திகைத்தனை போலும் செய்கை.”
முதலில் வாலி பகவானின் அவயவ ஸௌந்தரியத்தில் ஈடுபட்டு அவனுடைய திருமேனி அழகை வர்ணிக்கிறான். உடனே வாலி பரம தர்மத்தை உணர்ந்தான். அதாவது, ‘ஸீர்யத இதி ஸரீரம். க்ஷீணத்தை அடையக்கூடியது சரீரம்.’ அவன் பகவானின் திருமேனியிலிருந்து ஆத்மாவைக் காணப்புக்க அளவிலே, அவனுக்கு வெறும் சரீரம் தென்பட்டதே தவிர, ஆத்மா புலப்படவில்லை. காரணத்தை மனத்தில் ஆராய்ந்தான்; புரிந்தது. உணர்கிறான்; ‘ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை.’ பிராண ஸமானமாம் லக்ஷ்மி.
இதையே வால்மீகியும் சிறிய திருவடி அசோகவனிகையில் சீதா பிராட்டியைத் திருவடி தொழுது நின்ற அளவிலே சீதாபிராட்டியின் மூலமாக இவ்வாறு வெளியிட்டார்—
கச்சிந் ந தத் ஹேமஸமாநவர்ணம்
தஸ்யாநநம் பத்ம ஸமாநகந்தி |
மயா விநா ஸுஷ்யதி சோகதீநம்
ஜலக்ஷயே பத்மமிவாதபேந ||
”ஜலம் வற்றிவிட்டால் தாமரைப் புஷ்பங்கள் எப்படி வாடிவிடுமோ அவ்வாறு பகவான் வாடிவிட்டானா?” என்று சொல்வதிலிருந்து, பகவானுக்கு உயிர் லக்ஷ்மி என்று ஏற்படுகிறது. இவற்றை நம் ஸ்ரீபாஷ்யகாரர் தமது சரணாகதி கத்யத்தில் முதல் சூர்ணிகையில் குறிப்பிட்டிருக்கிறார்.
வேதம் லக்ஷ்மியை, ‘விஷ்ணுமநோநுகூலே‘ என்று விளிக்கிறது. சரணாகதியில் பிரதம அங்கமான ‘ஆநுகூல்யஸ்ய ஸங்கல்ப:‘ முதலான ஐந்து அங்கங்களுடன் கூடிய ஆத்ம நிக்ஷேபத்தைப் பகவானிடம் செய்திருக்கிறான். ஸ்வாமி தேசிகன் ஆசார்ய பரம்பராபுரஸ்ஸரமாகப் பகவானது திருவடியைப் பற்ற வேண்டும் என்பதை ‘என்னுயிர் தந்தளித்த வரை‘ என்ற பாசுரத்தில், ‘இன்னமுதத் திருமகள் என்று இவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே‘ என்றார்.
பகவான் மகாலக்ஷ்மியைத் தன் வலமார்பினில் வீற்றிருக்கச் செய்து எவ்வாறு மகிழ்கிறானோ அதே போல ஸமஸ்த ஜீவாத்மாக்களையும் தன் மார்பில் வகிக்கிறான் என்பதை ஸ்வாமி தேசிகன் கூறியிருக்கிறார்.
நிலை தந்த தாரகனாகவும், நியமிக்கும் இறைவனாகவும் இருக்கும் பரமாத்மா, தனக்குச் சிஷ்யன் என்றும், ப்ரேஷ்யன் என்றும், தாஸபூதன் என்றும், சேஷபூதன் என்றும் சாஸ்திரத்தில் ப்ரதிபன்னனாக இருக்கும் ஜீவாத்மாவை ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தையிலும் தன் ஹ்ருதயத்தில் கொண்டு ரக்ஷிக்கிறான். அந்த ஆதி தம்பதிகளை ஒவ்வொரு ஜீவாத்மாவும் மனப்பூர்வமான பக்தியுடன் அர்ச்சித்து வந்தால் உயர்ந்த பதத்தை அடைந்து உயரலாம்.
இங்கு மறுபடியும் ஒரு சந்தேகம் எழுகிறது: ‘நாம் பண்ணும் இந்தச் சிறிய பக்தி உயர்ந்த பகவானுக்குப் போதுமோ போதாதோ?’ என்று. இந்த ஸந்தேகத்தை மறை போக்குகிறது—
யாவதேகா தேவதா காமயதே
யாவதேகா தாவதாஹுதி:
ப்ரததே நஹி ததஸ்தி |
என்று. அதாவது, இந்திரனைக் குறித்து ஒரு உத்தரணி நெய்யை எடுத்து, ‘இந்த்ராய ஸ்வாஹா‘ என்று ஹோமம் செய்தால், அந்த உத்தரணி அளவான கொஞ்ச நெய் இந்திரனுக்குப் போதுமானதா என்றால், நாம் பக்தியுடன் ஹோமம் செய்தவுடன் அந்தத் துளி நெய்யே இந்திரனுக்கு எவ்வளவு இருந்தால் போதுமானதோ அவ்வளவாக அவனிடம் போய்ச் சேருகிறது. அதுபோலத்தான் ஜீவாத்மாக்களின் உபசாரம் பரமாத்மாவுக்குப் பிரீதியை அளிக்கிறது.
இவ்வளவு உயர்ந்த பொருள்களை ஒரே அநுஷ்டுப் ச்லோகத்தில் முக்கோலேந்தி மூவுலகையும் காத்து முக்கூரில் வீற்றிருந்து அரசாளும் நம் ஆசார்ய வள்ளல் உபதேசித்தருளினார்—
ஏகோ நாராயண: ஸ்ரீமாந்
பரம் தத்த்வமிதி ச்ருதௌ |
ஜீவாசேதந ஸம்யுக்தஸ்
தயோராத்மேதி நிஸ்சித: ||
என்று. அந்த ஆசார்யனின் அடிபோற்றி இறையருள் தேடுவோமாக.