ஆசார்யனை அல்லது அவர் க்ரந்தங்களைப் புகழ்ந்து கூறுபவையாயும் க்ரந்தங்களுக்கு வெளியில் நிற்பவைகளுமான ச்லோகங்கள் (பாசுரங்கள்) தனியன்கள் எனப்படும். அம்மாதிரியான தனியன்கள் அநேக ஆசார்யர்களுக்கு ஒவ்வொரு ப்ரகாரமாக அவதரித்திருக்கின்றன. அம்மாதிரி ஆசார்ய ரத்நமான நமது ஆதிவண்ஶடகோப யதீந்த்ர மஹாதேஶிகனுக்கும் ஒரு தனியன் அவதரித்திருக்கிறது.

இம்மஹாதேஶிகன் விஷயமாக ஏழு பதங்களுடன் கூடியும் அநுஷ்டுப் ரூபமாயும் அவதரித்திருக்கிற தனியனை ப்ராஜ்ஞர்கள் நன்றாக ஆராய்ந்து பார்த்தால்

மா நிஷாத! ப்ரதிஷ்டாம் த்வகமச் சாச்வதீ: ஸமா: யத் க்ரௌஞ்சமிதுநாதெகம் அவதீ: காமமோஹிதம்” 

என்று வால்மீகி பகவான் தன் திருவாக்கில் அநுஷ்டுப் ரூபமாக அவதரித்த ச்லோகத்தை வைத்துக்கொண்டு சந்த்ர ஸூர்யர்களிருக்கும் வரையில் புகழுடன் கூடிய ஆதிகாவ்யம் என்று ப்ரஸித்தி பெற்ற ஸ்ரீமத் ராமாயணம் என்கிற க்ரந்தத்தை எப்படியருளிச் செய்தாரோ அம்மாதிரி ஒரு பெரிய க்ரந்தத்தைச் செய்யவும் கூடுமென்று தோன்றுகிறது.

ப்ரபத்யே நிரவத்யாணாம் நிஷத்யாம் குணஸம்பதாம்
சரணம் பவபீதானாம் ஶடகோபமுநீஸ்வரம் ||

என்ற ஸ்லோகம்தான் அம்மஹானின் தனியன். இத்தனியனை அந்த ஸ்வாமியினுடைய ஸம்ப்ரதாயஸ்தரான ஸ்ரீவைஷ்ணவர்கள் இதுகாரும் ஸேவித்துக்கொண்டு வருகிறார்கள்.

அதற்குக் காரணம் பார்ப்பவர்களுடைய பரவ்ருத்திக்குக் காரண பூதங்களான விஷயம், ப்ரயோஜனம், ஸம்பந்தம், அதிகாரி என்கிற இந்நான்கும் இத்தனியனில் பூர்ணமாயிருப்பதே. அதாவது, இம்மஹாதேஶிகன்தான் விஷயபூதர்; இம்மஹானை ஆச்ரயிப்பதின் மூலம் வருகிற பகவத் கைங்கர்யம் ப்ரயோஜனம்; ஆசார்ய சிஷ்ய பாவம் ஸம்பந்தம்; ஜநந மரண ரூப ஸம்ஸாரத்தில் பயந்தவர்கள் அதிகாரிகள்.

ஒருவித தோஷமுமில்லா குணங்களாகிய ஐச்வர்யங்களுக்கு பெரிய கடை வீதியாயும், ஜநந மரண ரூபமான இஸ்ஸம்சாரத்தில் பயந்தவர்களுக்கு ரக்ஷகனுமான ஶடகோப யதீந்த்ர மஹாதேஶிகனை மஹா விச்வாஸத்துடன் த்யானிக்கிறேன் என்பது இதன் கருத்து.

இக்கருத்துகள் இம்மஹான் விஷயத்தில் மிகையாகாது. ‘சடகோபமுநீஸ்வரத்வம்’ இம்மஹானுக்கு அஸாதாரணம் என்பதை இங்கு கூற வேண்டியதில்லை. கூறினால் அது பிஷ்டபேஷமாகும்.

எந்த கடைத்தெருவிலும் “கபாலஸ்தம் யதா தோயம்” என்கிறபடியே தோஷமில்லாத சுத்தமான வஸ்துக்களிருப்பது மிகவும் அரிதே. ஆனால் இந்த மஹானாகிற கடைவீதியில் அம்மாதிரியான ஒரு வஸ்துவை பார்க்க முடியாது என்பதைத் தெரியப்படுத்துகிறது நிரவத்யானாம் என்னும் பதம்.

இம்மாஹாதேஶிகனாகிய கடை வீதியில் “ஸித்தம் ஸத்ஸம்ப்ரதாயே” இத்யாதிகளால் ப்ரதிபாதிக்கப்பட்ட ஆசார்ய குணங்களாகிற ஸம்பத்துகள்தான் இருக்கின்றன. இக்குணங்கள் இன்னும் சிலரிடத்தில் இருக்கக்கூடும். ஆனால் துர்குணலேசமுமில்லாத அக்குணங்கள் மட்டும்தான் இங்கு இருக்கின்றன என்பதையும் ப்ரகாசப்படுத்துகிறது நிரவத்யானாம் என்னும் பதம்.

இக்கல்யாண குணங்களும் சில மஹான்களால் அநேக வாரம் பகுப்ரகாரமாக நிரூபிக்கப்பட்டவைகளே. மறுபடியும் கூறினால் புனருக்தமேயாம். அஸ்மதாதிகளுக்குத் தெரியாத இம்மஹாதேஶிகன் குணங்கள் எவ்வளவு உண்டோ அவை யாவும் குணஸம்பதாம் என்கிற பதத்தினால் விவக்ஷிக்கக் குறைவில்லை.

க்ருஹ ரக்ஷக வாசக சரண” ஶப்தத்தை இங்கு உபாய பரமாக்கி உபாயத்வேன இம்மஹானை அத்யவஸிக்கிறேன் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

பாபிஷ்ட: க்ஷத்ரபந்துஸ்ய புண்டரீகஸ்ய புண்யக்ருத்
ஆசார்யவத்தயா முக்தௌ தஸ்மாதாசார்யவாந் பவேத் ||

என்கிறதனால் எல்லோரும் ஆசார்ய ஸம்பந்தத்தால்தான் மோக்ஷத்தை அடையலாம் என்று ஏற்படுகிறபடியால் நமக்கு பரமாசார்யனான இம்மஹாதேஶிகன் விஷயமாக அவதரித்த இத்தனியனை மாத்திரம் கீழ்க்கூறிய அர்த்தத்துடன் அநுஸந்தித்தால் இப்பிறவிக்கடலை தாண்டி பரிபூர்ண ப்ரஹ்மாநந்தத்தை அடைவோம் என்பதில் ஐயமில்லை.

~~~~~~~ சுபம் ~~~~~~~

குறிப்பு: மேற்கண்ட மஹோன்னதமான விஷயம் அடியேனுடைய திருத்தகப்பனாரால் அருளிச்செய்யப்பட்டது. இது விஜய வருஷம் ஐப்பசி திங்கள் ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரியாவில் 324, 325ம் பக்கங்களில் ப்ரசுரிக்கப்பட்டுள்ளது.

அதே வருஷம் கார்த்திகை மீ ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியாவில் “சிறையிருந்தவள் ஏற்றம்” என்கிற அற்புதமான விஷயம் படிப்பவர் மனம் குளிர அருளியுள்ளார். அதை அடுத்த மார்கழி மீ திருநாட்டை அலங்கரித்துவிட்டார்.

இஞ்சிமேட்டு ஸ்ரீமதழகியசிங்கரின் திவ்ய திருவடிவாரங்களில் அசஞ்சல ஸுத்ருட பக்தி கொண்டவரான இம்மஹான் ஸ்ரீமதழகியசிங்கரது வருஷாராதனத்திற்குள்ளாகவே நலமந்தமில்லதோர் நாட்டிலே பணிவிடை கொள்ள எழுந்தருளிவிட்டார்.

இம்மஹானுக்கு புத்ரர்களாக பிறக்கும் பாக்கியம் அடியேனது ஜ்யேஷ்ட ப்ராதாவிற்கும் அடியேனுக்கும் ஏற்பட்டதை நினைத்து நினைத்து பெருமிதம் அடைகின்றோம். ஸ்ரீமதழகியசிங்கரது அனுக்ரஹம் பரம்பரயாகுலதனமே கிடைக்கப்பெற்றதனால் அடியோங்களுக்கு குறை ஏதுமில்லை.

இம்மஹானுக்கு சுச்ரூஷை செய்யபாக்கியமற்ற அடியோங்களுக்கு, அடியோங்களது தாயாருக்கு சுச்ரூஷை செய்யும்படியான பாக்கியமாவது கிடைத்ததே என்று பரமானந்தமடைகிறோம்.

முக்கூர் லக்ஷ்மிந்ருஸிம்ஹ தாஸன்

Scroll to Top