ஶ்ரீ:
ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம:
துயரரு சுடரடி
திருவாய்மொழி வ்யாக்யானம்
(முக்கூர் ஶ்ரீநிவாஸன்)
திருவாய்மொழி
முதல் பத்து – முதல் திருவாய்மொழி
முதல் பாசுரம்
மூல பாடம்:
உயர்வறவுயர்நல முடையவன் யவனவன்
மயற்வற மதிநல மருளினன் யவனவன்
அயர்வறு மமரர்களதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே !
பத பாடம்:
என் மனனே !
உயர்வு அற | உயர் நலம் | உடையவன் | யவன் அவன் |
மயர்வு அற | மதி நலம் | அருளினன் யவன் | அவன் |
அயர்வு அறும் | அமரர்கள் | அதிபதியவன் | அவன் |
துயர் அறு | சுடர் அடி | தொழுது | எழு !
விளக்கவுரை:
திருவாய்மொழி முதல் பத்து, முதல் திருவாய்மொழி முதல் பாசுரமான இதில் நம்மாழ்வார் தன் மனதிற்கு உபதேசம் செய்கிறார். என்னவென்று..? தொழுது என்று..! தொழுது என்றால் வணங்கு என்று அர்த்தம். மனதிற்கு வணங்களில் அரக்கன் என்கிற பெயர் உண்டு. அதாவது மனதானது ஒரு விஷயத்தில் ஒன்றாது அலைபாய்ந்துக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட மனதை வணங்கு என்கிறார். உடனே மனம் கேட்கிறது ‘எதற்காக வணங்க வேண்டும்..? என்று. அதற்கு ஆழ்வார் ‘எழு’ என்று பதில் சொல்கிறார். ‘நீ கடைத்தேறுவதற்காக – மேன்மை பெருவதற்காக’ வணங்கு என்கிறார். அதனால் ‘தொழுது எழு என் மனனே’ என்பதன் மூலம் ‘எனது மனமே நீ மேன்மை பெருவதற்காக வணங்கு’ என்கிறார்.
உடனே மனம் கேட்கிறது யாரை வணங்க வேண்டும் என்று..? அதற்கு ஆழ்வார் ‘உயர்வு அற‘ – உயர்ந்த வஸ்துக்கள் எல்லாவற்றிலும் உயர்ந்தவன், தன்னிகரற்றவன், அவனை விட உயர்த்தி இல்லாதவன், யாவனொருவனோ, ‘உயர்நலம்‘ – உயர்ந்த கல்யாண குணங்களை ஸ்வாபாவிகமாக அதாவது இயற்கையாகவே ‘உடையவன்‘ யாவனொருவனோ அவன்’ என்றார்.
அதற்கு மேல் ‘மயர்வற மதிநலம் அருளினவன்‘ என்கிறார். அதாவது ‘அஜ்ஞானத்தை போக்கி ஞானத்தையும், பக்தியையும் கொடுத்தவன் யாவனொருவனோ அவன்’
அதுமட்டுமல்ல ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி‘ என்பதன் மூலம் ‘மறப்பு இல்லாத நித்யஸூரிகளுக்கு அதிபதி – ஸ்வாமியானவன் யாவனொருவனோ’ அவன்,
‘துயரறு சுடரடியை வணங்கு‘ என்கிறார். அவன் திருவடிகள் எல்லா துக்கங்களையும் போக்குவிக்ககூடியது. அப்படிப்பட்ட ஒளிமயமான மிகச்சிறந்த காந்தி பொருந்திய அவன் திருவடிகளை வணங்கி ஏ மனமே நீ மேன்மை பெருவாயாக என்கிறார்.
ஏன் மனதைப் பார்த்துச் சொல்கிறார் என்றால், மனதுதான் இந்த ஜீவாத்மா பகவானுடன் சேர்வதற்கு இன்றியமையாத சாதனம். மனதை வஸப்படுத்தினால்தான் பகவானை அடையலாம். அதனால் ஆழ்வார் தன் திருவாய்மொழி ஆரம்பத்திலேயே ‘எனது மனமே‘ என்று மனதிற்கு உபதேசம் செய்கிறார்.
விசேஷ அர்த்தங்கள்
இந்த பாசுரத்தில் பல விசேஷ அர்த்தங்கள் பொதிந்துள்ளன. முக்கியமாக பல உபநிஷத் வாக்கியங்களுக்கு இதிலே ஆழ்வார் எளிய முறையில் விளக்கம் கூறுகிறார்.
(1) பகவானுக்கு குணங்கள் உண்டு
இந்த கலியுகத்திலே வேதத்திற்கு ஒரு பெரிய கலக்கம் ஏற்பட்டதாம். என்ன கலக்கம்..? வேதத்தை சொல்பவர்கள் குறைந்து கொண்டே போகிறார்களே என்பதால் கலக்கமா…? அல்லது வேதத்தை ஒப்புக் கொள்பவர்கள் குறைந்து போகிறார்களே என்பதால் கலக்கமா ..? என்றால்… இரண்டும் இல்லை. பின் எதனால் வேதத்திற்கு கலக்கம்…?
வேதத்திற்கு தவறாக அர்த்தம் சொல்கிறவர்களைப் பார்த்து வேதமே பயப்படுகிறதாம். அவ்வாறு தவறாக அர்த்தம் சொல்கிறவர்களை ‘குத்ருஷ்டிகள்” என்கிறது சாஸ்திரம். நம்மாழ்வார் இந்த முதல் பாசுரத்திலேயே ‘குத்ருஷ்டிகளின்’ வாதங்களை முறியடிக்கிறார்.
உதாரணத்திற்கு.. வேதம் உபநிஷத்தில் சொல்லும்பொழுது பகவானை ‘நிர்குணன்’ என்கிறது. அதற்கு சிலர் தவறாக அர்த்தம் கற்பித்து ‘பகவான் குணங்களற்றவன்’ என்று பொருள் சொன்னார்கள். அந்த தவறான வாதத்தை ‘உயர் நலம் உடையவன்’ என்று சொல்வதன் மூலம் பகவான் உயர்ந்த கல்யாண குணங்கள் உடையவன் என்கிறார்.
உயர் நலம் உடையவன் என்பது மூலம் பகவான் குணங்களுடையவன் என்பது நிரூபணமாகிறது. பின் வேதம் ‘நிர்குணன்’ என்று சொல்கிறதே என்று கேட்டால்…., அவனிடம் ஹேய குணங்கள் அதாவது கெ ட்ட குணங்கள் என்பது கிடையாது என்பது பதிலே ஒழிய குணங்களே அற்றவன் என்பது தவறு.
அதனால்தான் தைத்திரீய உபநிஷத்தானது அவனுடைய குணங்களை அளவிடமுடியாது என்று சொல்கிறது. ஆனந்தம் என்கிற குணத்தை அளவிட முடியாமல் இன்றளவும் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது அந்த உபநிஷத்.
அதனால் இங்கு விசேஷ அர்த்தமானது ‘எல்லாவற்றிலும் உயர்த்தியுடைய பகவான் சிறந்த கல்யாண குணங்களுடையவன்’ என்பது…!
2) மதி நலம் ~ நலம் மதி
மயர்வு அற மதி நலம் என்பதில் ‘மயர்வு’ என்பது அஜ்ஞானம், இதற்கு மூன்று படியாக பொருள்கள் உரைத்தார்கள் பெரியோர்கள்,
முதலாவது, அடியோடு ஞானமே இல்லாதிருத்தல். உதாரணத்திற்கு இந்த சரீரமே ஆத்மா என்று நினைப்பது இவ்வகை.
இரண்டாவது, ஒன்றை வேறொன்றாக அறிவது. இதற்கு விபரீத ஞானம் என்று பெயர். உதாரணத்திற்கு இந்த ஆத்மா ஸ்வதந்திரன் பரமாத்மாவுக்கு அதீனன் கட்டுப்பட்டவன் அல்ல என்று நினைப்பது விபரீத ஞானம்.
மூன்றாவது சில விஷயங்களை மட்டும் வேறாக அறிதல். இதற்கு அந்யதாஜ்ஞானம் என்று பெயர். அதாவது நாராயணன் ஒருவனே பலன் அளிக்கிறான் என்பதில் சந்தேகம் ஏற்பட்டு மற்ற தேவதைகளும் தனித்து பலன் அளிக்கக் கூடியவர்கள் என்று நினைப்பது அந்யதாஜ்ஞானம்.
மயர்வற மதிநலம் அருளினன் என்பதன் மூலம் ‘பகவான் என்னுடைய மயர்வை அறுத்து ஞானம் பக்தி இரண்டையும் அனுக்ரஹித்தான்’ என்கிறார் ஆழ்வார்.
மதி நலம் என்பதை நலம் மதி என்று எடுத்து கொண்டால் ‘கொடுக்கும்போதே வெறும் ஞானத்தை மட்டும் கொடுக்காமல் பக்தியுடன் சேர்ந்த உயர்ந்த ஞானத்தைக் கொடுத்தான்’ என்கிறார் ஆழ்வார். எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ பாஷ்ய மங்கள ச்லோகத்தில் ‘சேமுஷீ பக்திரூபா’ என்று பக்தியினால் மோக்ஷம் என்கிறார். அதனால் பக்தியில்லாமல் வெறும் ஞானம் மட்டும் இருந்து ப்ரயோஜனமில்லை என்பதால் ‘நலம் மதி’ என்று சொல்லும்பொழுது ‘பக்தியுடன் சேர்ந்த சிறந்த ஞானம்’ என்பது தேரிய பொருள்..
இங்கு அருளினன் என்பதன் மூலம் சிறந்த ஞானத்தை பகவான் அனுக்ரஹித்தான். அர்ஜுனன், உத்தவர், நாரதர் போன்றவர்களுக்கு பகவான் நேரடியாகவே உபதேசம் செய்தான். ஆனால் ஆழ்வாருக்கு அப்படி அல்ல. அவருக்கு சிறந்த ஞானத்தை அனுக்ரஹம் செய்தான். அதனால்தான் மனதை பார்த்து ஆழ்வார் ‘ஏ மனதே உனக்கு இந்த விஷயம் தெரியும்..!’ என்று பொருள்படும்படி மனதுடன் பேசுகிறார்.
இங்கு முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது மஹரிஷிகளுடைய ஞானத்திற்கு அவர்களது பூர்வாசார்யர்களான ரிஷிகளின் அனுக்ரஹம் ப்ரதானமாக இருந்தது. உதாரணத்திற்கு வ்யாஸர், வால்மீகி, பராசரர் போன்ற மகரிஷிகளின் தெளிவிற்கு ப்ரம்மா, நாரதர், வசிஷ்டர், புலத்ஸ்யர் போன்றவர்களுடைய அனுக்ரஹம் முக்கியமாக இருந்தது. ஆனால் ஆழ்வார்களின் தெளிவிற்கு ஞானத்திற்கு ஸ்ரீமந் நாராயணனது திருவருளே மூலம். அதனால்தான் ஆழ்வார்கள் ‘மயற்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள்’ என்று கொண்டாடப்படுகிறார்கள். மற்றைய ஆழ்வார்களெல்லாம் நம்மாழ்வாரின் அவயவங்கள் என்று கூறப்படுவதால் அவரின் பெருமை மிகவும் உயர்ந்தது.
(3) துயரறு சுடரடி என்பதற்கு ‘துயரறுக்குஞ் சுடரடி’ என்றும் ‘துயரறும் சுடரடி’ என்றும் விளக்கங்கள் உண்டு..!
துயரறுக்குஞ் சுடரடி என்றால், அவனை ஆஸ்ரயித்தவர்கள் அதாவது பகவானுடைய திருவடியைப் பற்றினவர்களுடைய துக்கங்களை போக்கி அதனால் ஒளிபெற்று விளங்குகின்ற திருவடி என்பது வியாக்கியானம்.
எம்பெருமானார் பாஷ்யகாரர் ‘துயரரும் சுடரடி’ என்றும் பொருளுரைப்பாராம். ஏனென்றால் பகவானுடைய துயரானது அடியார்களுடைய துயர் தீர்ப்பதன் மூலம் தீருகிறதாம். அதனால் துயரரும் சுடரடி..!
துயரறு சுடரடி என்று சொன்னதன் மூலம் ப்ரம்மா செய்த யஜ்ஞத்தில் வந்த ‘ஸ்ரீஹஸ்திசைல (காஞ்சி) பேரருளாளன்’ தேவபெருமாளையே இந்த பாசுரத்தில் சொல்கிறார் என்று பெரியோர்கள் சொல்வார்கள். ஸ்வாமி தேசிகனும் ‘த்ரமிடோபநிஷத்ஸாரம்’ என்கிற திருவாய்மொழி வ்யாக்யானத்தில் ‘ ப்ரதமசதகே வீக்ஷய வரதம்’ என்று காஞ்சி வரதனையே சொல்கிறார்.
(4) யவனவன் என்பதை ஒரே சொல்லாகவும் அல்லது ‘யவன் அவன்’ என்று இரண்டு சொற்களாகவும் பிரித்து பொருள் உரைப்பதுண்டு…!
யவனவன் என்பதை
எவனோ அவனுடைய ‘திருவடி தொழுதெழன் மனனே’ என்று பொருள் கூறும் வழக்கம் உண்டு.
அதாவது
உயர்வற உயர்நலம் உடையவன் எவனோ, அவன் திருவடி தொழுதெழு மனனே!
மயர்வற மதிநலம் அருளினன் எவனோ, அவன் திருவடி தொழுதெழு மனனே!
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவனோ, அவன் திருவடி தொழுதெழு மனனே!
இங்கு மனனே என்பதை மனமே என்று எடுத்துக்கொள்ளவேண்டும். இதற்கு மகர நகரப்போலி என்பார்கள்
இரண்டாவதாக .
‘வாக்யைக வாக்யம்” என்கிற முறையில் அதாவது வாக்கியத்தினுள்ளே வாக்கியமாக முதல் அடியுடன் பின் அடியை சேர்த்து பொருள் கொள்வதும் உண்டு.
அதாவது
உயர்வற உயர்நலம் உடையவன் யாவனொருவனோ அவன் மயர்வற மதிநலம் அருளினவன்
மயர்வற மதிநலம் அருளினவன் யாவனொருவனோ அவன் அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியானவன்
அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியானவன் யாவனொருவனோ அவன் துயரரு சுடரடி தொழுது எழு என் மனனே!!
(5) ஒவ்வொரு அடிக்கும் ஒரு தனி விசேஷம் அர்த்தம் காட்டித்தரப்படுகிறது..!
‘உயர்வற உயர்நலம்’ என்கிற முதல் அடியில் பகவான் கல்யாண குணங்களையுடையவன் என்கிறார். பகவான் ஆனந்தமயமானவன் என்கிற உபநிஷத் ஸாரம் இங்கு காட்டித்தரப்படுகிறது. அதுமட்டுமல்ல ‘நற்பூவைப் பூவீன்றவண்ணன் புகழ்’ என்று ஆரம்பிக்கும் பெரிய திருவந்தாதியை இங்கு முதலடியில் சொல்கிறார் என்பார்கள். சிறந்த கல்யாண குணங்களினால் புகழ் பெற்றவன் பகவான் என்பதால் அவ்வாறு சொல்லப்படுகிறது.
‘மயர்வற மதிநலம்’ என்கிற இரண்டாம் அடியிலே அவனுடைய கல்யாண குணங்களிலே முக்கியமான காருண்யம் என்கிற குணத்தை எடுத்துக்காட்டுகிறார். அதுமட்டுமல்ல பரஜ்ஞானத்தின் அனுபவமாய் பிறந்த திருவாசிரியத்தையே ‘மயற்வற மதிநலம் அருளினன்’ என்கிற இரண்டாமடி காட்டுகிறதென்பர்.
‘அயர்வறும் அமரர்கள்’ என்கிற மூன்றாம் அடியில் அவனுடைய நித்ய விபூதியான (ஸ்ரீ வைகுண்டம்) ஆட்சியை எடுத்துக்காட்டுகிறார். அதுமட்டுமல்ல ‘இமையோர் தலைவா’ என்று திருவிருத்தம் முதல் பாட்டில் குறிப்பிட்டபடி இங்கு ‘அமரர்கள் அதிபதி’ என்று மூன்றாம் அடியில் திருவிருத்தம் சொல்லப்பட்டது என்பர்.
‘துயரரு சுடரடி’ என்கிற நான்காம் அடியில் பகவானுக்கு திருமேனி உண்டு என்பதை எடுத்துக்காட்டுகிறார். அந்த திருமேனியானது பக்தர்களின் துயர் களைவதற்காக ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில் சேவை சாதிக்கும் தேவாதிராஜனை ‘அமரர்கள் அதிபதி’ என்று கூறி அவனுடைய ‘சுடர் மிகுந்த திருவடி’ இப்பிறவி எனும் பெரும் துயரை அறுக்கும் என்கிறார். அதனால் இதில் அர்ச்சாவதார மேன்மை அதாவது கோவிலிலே அர்ச்சிக்கத் தகுந்த ரூபத்துடன் விளங்கும் பகவானுடைய திருவடியானது நம் அனைத்து துயர்களையும் தீர்க்கவல்லது என்பதை கலியுக ஆரம்பத்திலேயே அவதரித்த ஆழ்வார் சொல்கிறார்.
இன்றும் நாம் காஞ்சிபுரம் சென்று தேவாதிராஜன் முன்னிலையில் இந்த பாசுரத்தை அர்த்ததுடன் அனுசந்தித்தால், அதாவது ‘துயர்களையறுக்கும் ஒளிமயமான திருவடி‘ என்கிற நினைவுடன் சேவித்தால் அவனுடைய திருவடியின் ப்ரகாசமான ஓளியை காணலாம்..!
இங்கு நான்கு அடிகளில் சொல்லப்பட்ட நான்கு விசேஷ அர்த்தங்களும் உபநிஷத்தில் கூறப்பட்ட விஷயங்கள். அவற்றிற்கு குத்ருஷ்டிகள் தவறான அர்த்தங்கள் சொன்னார்கள். அவற்றை ஆழ்வார் இந்த பாசுரத்தில் நிரசிக்கிறார்.
(6) ப்ரணவம் மறைத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. ஸாம வேத ஸாரம் என்பதும் காட்டித்தரப்படுகிறது..!
இந்த பாசுரத்தில் அ,வு, ம என்கிற ப்ரணவத்தில் உள்ள அக்ஷரங்கள் மறைத்து கூறப்பட்டுள்ளன. முதல் அடியின் ஆரம்பத்தில் ‘உ’ என்கிற அக்ஷரமும், இரண்டாம் அடியின் ஆரம்பத்தில் ‘ம’ என்கிற அக்ஷரமும், மூன்றாம் அடியின் ஆரம்பத்தில் ‘அ’ என்கிற அக்ஷரமும் அமைந்திருப்பது அழகு.
திருவாய்மொழியினை ஸாம வேத சாரம் என்பர். ஸாமவேதத்திற்கு ‘உத் கீதம்’ என்று பெயர். திருவாய்மொழியினை ‘உ’ என்கிற அக்ஷரத்தில் ஆரம்பித்து, திருவாய்மொழி கடைசி பாசுரத்தில் ‘த்’ என்கிற அக்ஷரத்தில் முடிப்பதனால் சாம வேத சாரம் என்பது தெளிவு..!
(7) முதல் பதம் கடைசி பதம் சேர்த்தால் ‘உயர் மனம்’ என்று பொருள்படும்
வேதத்திலே முதல் அனுவாகமும் கடைசி அனுவாகமும் மட்டும் சொல்லுதல் என்கிற வழக்கம் உண்டு. ப்ரபந்த பாரயணத்திலேயும் முதல் பதங்களை மட்டும் சொல்லுதல் என்கிற வழக்கம் உண்டு. அதுபோன்று ஆழ்வாரின் ஒவ்வொரு பாசுரத்திலேயும் முதல் பதம் கடைசி பதம் மட்டும் எடுத்து அவற்றை சேர்த்து அனுபவிக்கலாம்.
இந்த பாசுரத்தில் முதல் பதம் உயர் என்பது. கடைசி பதம் மனம். இரண்டையும் சேர்த்து உயர் மனம் என்று அனுபவிக்களாம். உயர் மனம் என்பதை ‘உயர்ந்த மனம்‘ என்றும் ‘மனமே உயர்வாயாக‘ என்றும் பொருள் கொள்ளளாம். மேல்பாக்கம் என்று சொன்னால் கீழ்பாக்கம் என்று ஒன்று உண்டு என்பது போல உயர்ந்த மனம் என்று சொன்னால் தாழ்ந்த மனம் என்று ஒன்று உண்டு என்பது தெளிவாகிறது. மனமே உயர்வாயக என்று சொல்வதன் மூலம் ‘ஏ தாழ்ந்த மனமே ! நீ உயர்ந்த மனமாகத் திகழ்வாயக !!’ என்று ஆழ்வார் உபதேசிக்கிறார் என்று கொள்ளலாம்.
பகவான் க்ருஷ்ணன் பகவத் கீதையில் சொல்லும்பொழுது மனம் உயர்வதற்கு நான்கு படிகளை சொல்கிறான். அவற்றிற்கு ஞான நிஷ்டைகள் என்று பெயர். அதில் முதலாவதாகச் சொல்லப்படுவது ‘யதமான ஸம்ஜ்ஞை’ என்பது.
யதா4 ஸம்ஹரதே சாயம் கூர்மோங்கா3நீவ ஸர்வஸ3:
இந்த்3ரியாணி இந்த்3ரியார்த்தேப்4ய தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா ||
யதமான ஸம்ஜ்ஞை என்பது ஆமை ஒரு ஆபத்து என்று வரும்பொழுது எவ்வாறு தன் அவயவங்களை அதாவது கால்களையும் தலையையும் உள்ளே இழுத்துக்கொள்ளுமோ, அதுபோன்று கண், காது, நாக்கு போன்ற இந்த்ரியங்களை அநாவசியமான விஷயங்களை அனுபவிப்பதற்கு முன்பாகவே அவற்றிலிருந்து விலக்கி ஆத்ம விஷயத்தில் செலுத்துவது என்பது. அவ்வாறு விலக்க முடியாத மனம் தாழ்ந்த மனம்.
அவ்வாறு படிப்படியாக மனதை அடக்கி பகவானின் திவ்ய மங்கள விக்ரஹத்தை அதாவது பகவானின் திருமேனியில் மனதைச் செலுத்துவது என்பது உயர்ந்த மனம். அதனால் சர்வ பாபங்களும் விலகும் என்கிறான் பகவான்.
அந்த உயர்ந்த பாபங்களை போக்கும் நிலையை நீ அடைவாயாக என்று பொருள்படும்படி ‘உயர் மனமே..!’ என்கிறார் ஆழ்வார்.
இன்னும் எத்தனையோ விசேஷார்த்தங்கள் இப்பாசுரத்திற்கு உண்டு. அவற்றை காலக்ஷேப முறையில் ஆசார்யன் பக்கலில் அமர்ந்து கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆக பாபங்களைப் போக்கி மனதை உயர்விக்கும் பகவானின் திருவடிகளைப் பற்றினோற்கு குறையொன்றுமில்லையே.!
ஆழ்வார் எம்பெருமானார் தேஶிகன் அழகியஶிங்கர் திருவடிகளே ஶரணம்
நம்ஸ்வாமி திருவடிகளே ஶரணம்
ஶ்ரீ:
ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம:
துயரரு சுடரடி
திருவாய்மொழி வ்யாக்யானம்
(முக்கூர் ஶ்ரீநிவாஸன்)
திருவாய்மொழி
முதல் பத்து – முதல் திருவாய்மொழி
இரண்டாம் பாசுரம்
மூல பாடம்:
மனனக மலமற மலர்மிசை யெழுதரும் *
மனனுணர் வளவிலன் பொறியுணர் வவையிலன் *
இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும் *
இனனிலனெனனுயிர் மிகுநரை யிலனே.
பத பாடம்:
இனன் | மனன் அகம் | மலம் | அற மலர் | மிசை எழு தரும் |
மனன் உணர்வு | அளவு இலன் | பொறி உணர்வு அவை இலன் |
எதிர் நிகழ் கழிவின் உம் | இவன் இலன் | மிகுநர் இலன் |
எனன் உயிர் | முழு உணர் | முழு நலம் ||
விளக்க உரை:
ஞானமானது நன்கு விகசிக்க அதாவது நன்கு மலர, மனதிலே ஏற்படக்கூடிய காமம், குரோதம் போன்ற தீய குணங்கள் கழிய வேண்டும். மலம் எனப்படும் தீய குணங்கள் அழிவதினால் மனமானது நிர்மலமாக ப்ரகாசிக்கும். அப்படிப்பட்ட நிர்மலமான மனதினால்கூட அளவிடப்படாதவன் பகவான் என்கிறார்.
அதுமட்டுமல்ல ஐந்து உணர்வுகளான மெய், வாய், கண், காது, மூக்கு போன்றவை வெளியே இருக்கக்கூடிய வஸ்துக்களை அறிவதற்கும், அதனால் அவை பற்றிய ஞானமும் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட வெளி இந்திரியங்களாலேயும் அளவிடப்படாதவன் பகவான்.
அப்படி நிர்மலமான மனதினாலும், வெளிப்புற இந்திரியங்களினாலும் அளவிடப்படாதவனும், பரிபூரண ஞானாநந்த ஸ்வரூபியும், முக்காலங்களிலும் அதாவது எதிர்காலம், நிகழ்காலம் மற்றும் கடந்த காலங்களில் தனக்கு நிகராகவும் உயர்வாகவும் எவரும் இல்லாத அவன்…அந்த பகவான் எனக்கு தாரகன், என் ஆத்மா என்கிறார் ஆழ்வார் இந்த பாசுரத்திலே..!.
விசேஷ அர்த்தங்கள்:
(1) மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவன் பகவான்
முதலாவது விசேஷ அர்த்தமானது, பகவான் மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவன் என்பது. ‘மனனக மலமற மலர்மிசை யெழுதரும் மனனுணர் வளவிலன்‘ என்கிறார் ஆழ்வார் இங்கே.
இதை தைத்திரீய உபநிஷத்தானது, “யதோ வாசோ நிவர்தந்தே அப்ராப்ய மனஸா ச:” என்று சொல்லி அழகான ஒரு கதை சொல்கிறது.
ஒரு சமயம் மனதிற்கும் வாக்கிற்கும் விவாதம் ஏற்பட்டது, சர்ச்சை ஏற்பட்டது, இருவரில் யார் பெரியவன் என்று. அந்த சர்ச்சையின் போது வாக்கானது சொன்னது, “மனதே உன்னை வெளிக்கொணர்வது நான், அதனால் நான் தான் பெரியவன்” என்றது.
மனதானது, “உனக்கு விஷயதானம் செய்யக்கூடியவன் நான், அதனால் நான் தான் பெரியவன்” என்றது.
இவ்வாறு இரண்டும் சண்டை போட்டுக்கொண்டு, அதற்கப்புறம் அவை இரண்டும் சாத்வீக தேவதைகள் ஆனதனால், “நாம் எதற்காக சண்டை போட வேண்டும்? நம்மைப் படைத்த பிரம்மாவிடமே சென்று நம் இருவரில் யார் பெரியவன் என்று தெரிந்துகொள்ளலாம்” என்று இரண்டும் நேராக பிரம்மலோகத்திற்குச் சென்றன.
அங்கு சென்று பிரம்மாவிடம் நேரடியாக “எங்கள் இருவரில் யார் பெரியவன் என்பதை நீங்கள் சொல்ல வேண்டும்” என்று கேட்டது.
அதற்கு பிரம்மா, “நான் சிருஷ்டி கிரமத்தைச் சொல்கிறேன், அதைப் பொறுத்து நீங்கள் உங்களில் யார் பெரியவன் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்” என்றார். “நான் சிருஷ்டி கிரமத்தில் முதலில் மனதை சிருஷ்டித்தேன், பிறகு வாக்கை சிருஷ்டித்தேன். மனஸ்பூர்வ: என்று மனதை முதலில் சிருஷ்டித்தேன், பிறகு வாக் உத்தர: வாக்கை சிருஷ்டித்தேன்” என்றார்.
இதை இந்த இடத்திலே குறிப்பிடும்பொழுது நம்ஸ்வாமி மிகவும் அழகாக, பிரம்மாவிற்கு லௌகீகமே தெரியவில்லை (என்பார்). இரண்டு பேர் சண்டை போட்டுக்கொண்டு வரும்பொழுது ஒருவரைத் தனியாகக் கூப்பிட்டு சமாதானப்படுத்த வேண்டுமே ஒழிய, இரண்டு பேர் இருக்கும்பொழுதே ஒருவரை மட்டம் தட்டி மற்றவரை உயர்த்தியாகப் பேசினால், அதனால் அந்த மட்டம் தட்டப்பட்டவருக்கு இன்னும் கோபம் அதிகமாகும் என்கிற லௌகீகம் தெரியாமல் இந்த இடத்தில் பிரம்மா தீர்ப்பு சொன்னார் என்று ஹாஸ்யமாகச் சொல்வார்.
இந்த இடத்தில் பிரம்மா நேரடியாக அவ்வாறு சொல்லிவிட்டார். இதைக் கேட்டவுடனே வாக்கிற்கு மகா கோபம் வந்துவிட்டது. அது பிரம்மாவைப் பார்த்து, “என்னையும் படைத்து, மனதையும் படைத்து, எனக்கு முன்னதாக மனதைப் படைத்து, அவன் எதிரிலேயே என்னை மட்டம் தட்டினீர். அதனால் உமக்கு என்னால் உபயோகம் இல்லாமல் போகக்கடவது” என்று வாக்கானது பிரம்மாவிற்குச் சாபம் கொடுத்தது. அதனால்தான் இன்றளவும் யஜ்ஞங்களிலே பிரம்மாவிற்கு சமர்ப்பிக்கக்கூடிய ஹவிஸ்ஸை மனது தான் இன்றளவும் சென்று கொடுத்துக்கொண்டிருக்கிறதே ஒழிய வாக்கு சென்று கொடுக்கவே கொடுக்காது.
அதனால் பிரம்மாவிற்கான மந்திரங்களைச் சொல்லும்பொழுது மனதினால் தியானம் பண்ண வேண்டுமே ஒழிய வாக்கினால் உரத்த வாக்கினால் சொல்லக்கூடாது, அவ்வாறு சொன்னால் அந்த ஹவிஸ்ஸானது பிரம்மாவிடம் சென்று சேராது.
பிரம்மா சொன்ன இந்த தீர்ப்பினாலே வாக்கிற்கு மிகவும் கஷ்டம் ஏற்பட்டு ஒரு இடத்திலே சென்று தனியாக கன்னத்திலே கை வைத்துக்கொண்டு உட்கார்ந்துக் கொண்டுவிட்டது. அப்பொழுது மனசானது அதன் அருகில் நெருங்கி வந்தது. வந்து “ஏ வாக்கே, பிரம்மா சொன்ன தீர்ப்பு இருக்கட்டும், இப்பொழுது நான் பரப்பிரம்மத்தைக் காண ஓடுகிறேன். நீயும் பரப்பிரம்மத்தைக் காணுவதற்காக ஓடி வா. இருவரில் யார் முதலில் பரப்பிரம்மத்தைக் காண்கிறார்களோ அவரே பெரியவர், உயர்ந்தவர் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்” என்று ஒரு போட்டியைச் சொன்னது.
வாக்கும் உடனே அதற்கு சம்மதித்து இரண்டும் பரப்பிரம்மத்தைத் தேடி ஓடின..!
மனது அதனுடைய வேகத்திலே மகா வேகமாக ஓடிற்று. அதைப் பின்தொடர்ந்து வாக்கு தன்னுடைய வேகத்திலே ஓடிக்கொண்டே வந்தது. மனது ஓடி ஓடி ஓடி ஓடி….. பரப்பிரம்மத்தைக் காணமாட்டாமல் நின்றுவிட்டது. இனிமேல் ஓட முடியாது என்கிற நிலை வந்த பிறகு அங்கிருந்து திரும்பி வருகிறது.
வாக்கு தன்னுடைய வேகத்திலே ஓடி வந்து கொண்டிருக்கிறது. அது தூரத்திலே வரக்கூடிய மனதைப் பார்த்தது. பார்த்தவுடன் அது இங்கேயே நின்றுவிட்டது. மனது கிட்டக்க வந்தவுடன் வாக்கானது அதனிடம் கேட்டது, “கடுக ஓடினாயே மனதே, அந்த பரப்பிரம்மத்தைக் கண்டாயா?” என்று.
அதற்கு மனதானது, “காணவில்லையே” என்று தன் இரு கைகளையும் விரித்துச் சொன்னது.
உடனே வாக்குக்கு பரம சந்தோஷம் ஏற்பட்டது. “நீயும் நானும் கூட்டாளிதான்” என்று எகிறி அதனுடைய தோளிலே தன் கையைப் போட்டுக்கொண்டு மிகவும் சந்தோஷமாகச் சென்றது.
ஏனென்றால், மனது வேகமாக ஓடி இருக்கலாம், வாக்கை விட அதிக தூரம் ஓடி இருக்கலாம், ஆனால் அதற்கான பலனானது பரப்பிரம்மத்தைக் காணவில்லை என்பது. வாக்கானது குறைவான தூரம் ஓடி இருக்கலாம், குறைவான வேகத்தில் ஓடி இருக்கலாம், ஆனால் பலனானது அதுவும் பரப்பிரம்மத்தைக் காணவில்லை என்பது.
பரப்ரம்மத்தைக் காணவில்லை என்பதில் இரண்டும் சமம்தானே!
ஒருவர் ‘நானும் சதுர்முகப் ப்ரம்மாவும் ஒன்று’ என்றார். அப்போது மற்றொருவர் கேட்டார், ‘அது எப்படி ஒன்றாக முடியும், அவரோ லோக ச்ருஷ்டி பண்ணுகிறார். நீரோ சமஸ்த கோடி ஜீவராசிகளுள் ஒருவராக இருக்கிறீர். நீங்கள் இருவரும் எப்படி சமமாக முடியும்?’ என்றார்.
அதற்கு முதலாமவர் ‘நானும் அவரும் ஒருவிதத்திலே சமம். அதாவது, அவருக்கும் பரப்ரம்மத்தைப் பற்றி முழுமையாகத் தெரியாது. அடியேனுக்கும் முழுமையாகத் தெரியாது. அவர் என்னைவிட கொஞ்சம் அதிகமாகத் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் முழுமையாகத் தெரியாது என்பதில் நாங்கள் இருவரும் சமம்தானே?’ என்றார்.
அதனால் மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவன் பகவான். அப்படிப்பட்ட பகவானை, “யதோ வாசோ நிவர்தந்தே” என்று இந்த இடத்தில் “அப்ராப்ய மனஸா சஹ” என்று மனதும் வாக்கும் தேடி தோற்றுப்போனது என்று உபநிஷத்தானது மிகவும் அழகாக விவரிக்கிறது.
அதை இங்கு ஆழ்வார் மிகவும் விசேஷமாக ‘மனனக மலமற மலர்மிசை யெழுதரும் மனனுணர் வளவிலன்‘ என்று இந்த முதல் விசேஷ அர்த்தத்தில் குறிப்பிடுகிறார்.
(2) சித்து, அசித்து என்கிற இரு தத்துவங்களைக் காட்டிலும் வேறானவன் பகவான்
அடுத்தது இரண்டாவது விசேஷ அர்த்தம் இந்தப் பாசுரத்திலே: பகவான் சித்து, அசித்து என்கிற இரு தத்துவங்களைக் காட்டிலும் வேறானவன் என்கிறார். ‘பொறியுணர் வவையிலன்’ என்கிறார்.
பொறி என்றால் நம் இந்திரியங்கள். இந்திரியத்தினால் காணக்கூடியது என்று ஒன்று. இப்பொழுது நாம் ஒரு விஷயத்தைப் பார்க்கிறோம், ஒரு பொருளைப் பார்க்கிறோம். அந்தப் பொருளைப் பார்ப்பதற்கு திருஷ்டி – கண் என்கிற இந்திரியமானது, சக்ஷுர் இந்திரியமானது தேவைப்படுகிறது.
இந்தப் பார்க்கக்கூடிய பொருள்கள், வெளியிலே பார்க்கக்கூடிய பொருள்கள் என்று சிலது. நம் உள்ளே இருக்கக்கூடிய வஸ்து என்று ஒன்று. அவ்வாறு நம் உள்ளே இருக்கக்கூடிய வஸ்துவான ஆத்மாவைப் பார்ப்பது என்பது ஒன்று.
அந்த ஆத்மாவிற்கு சித் என்று பெயர். அதனால் இந்த சித்தை உடையவன் சேதனன் என்கிற நாம்.
அசித்து என்பது உயிரற்ற வஸ்து. அவற்றை வெளியே இருக்கக்கூடிய புலன்களினாலே, வெளியே பார்க்கக்கூடிய புலன்களினாலே நாம் அறிகிறோம்.
பகவான் இந்த இரு தத்துவங்களுக்கும் விலக்ஷணமானவன். இவை இரண்டுக்கும் வேறுபட்டவன். அதனால்தான் “விசிஷ்டஞ்ச அத்வைதம் விசிஷ்டாத்வைதம்“. “சிதசிதீஸ்வர தத்துவம் – பிரதான ப்ரதி தந்த்ரம்” என்று நம் பாஷ்யகாரர் ஸ்ரீ ராமானுஜரால் மிகவும் விசேஷமாக விளக்கப்பட்ட ஸ்ரீ விசிஷ்டாத்வைத தத்துவம்.
சித்து என்று சொல்லப்படக்கூடிய ஆத்மா, அசித்து என்று சொல்லப்படக்கூடிய அசேதனமான பதார்த்தங்கள் என்கிற இரு தத்துவங்களையும் காட்டிலும் வேறானவன் பகவான் என்பதை ‘பொறியுணர் வவையிலன்‘ என்று சொல்கிறார் ஆழ்வார்.
அதனால் மனதினால் உள்ளே பார்க்கக்கூடிய அந்த ஆத்மாவையும், வெளியிலே பார்க்கக்கூடிய இந்திரியங்களையும் கொண்டு பகவானை நாம் காண முடியாது என்று சொல்வது இங்கே இரண்டாவது விசேஷ அர்த்தம்.
(3) முக்காலங்களிலும் ஈடு இணையற்றவன் பகவான்
மூன்றாவது விசேஷ அர்த்தமானது, முக்காலங்களிலும் ஈடு இணையற்றவன் பகவான் என்கிறார். ‘எதிர்நிகழ் கழிவினும்‘ என்பதன் மூலம் பகவானுக்குச் சமமானவர்களும் கிடையாது, அவனுக்கு அதிகமானவர்களும் கிடையாது என்கிறார்.
ஒருவர் பகவானுக்கு விசேஷமாக புஷ்பத்தினால் அர்ச்சனை பண்ணிக்கொண்டே இருந்தார். “நவநீத சோராய நம:, கோபாலாய நம:…” என்று விசேஷமாக பகவானுக்கு அர்ச்சனை பண்ணிக்கொண்டே இருந்தவர், நடுவிலே திடீரென்று “ஓம் தரித்ராய நம:” என்று அர்ச்சனை செய்தார்.
பகவான் பார்த்தான், அவரிடமிருந்து அந்தப் புஷ்பத் தட்டைக் கையில் பிடுங்கிக் கொண்டான். அவரைப் பார்த்து பகவான் பேசுகிறான், “தரித்ராய நம: என்று அர்ச்சனை பண்ணுகிறீரே, எனக்கு தரித்திரம் ஏது?”
உடனே அவர் சொன்னார், “உமக்கு தரித்திரம் உண்டு, அதனால்தான் அர்ச்சனை பண்ணுகிறேன்” என்றார். “எனக்கு தரித்திரம் கிடையாதே, எல்லா ஐஸ்வர்யமும் உடையவன் என்று தானே ஆழ்வார் சொல்கிறார், எல்லோரும் அதையே தானே சொல்கிறார்கள்” என்றான் பகவான். “இல்லை, உமக்கு தரித்திரம் உண்டு, நான் நிரூபிப்பேன்” என்றார் பக்தர். “நிரூபித்தால் ஒப்புக்கொள்வாயா?” என்று பகவானைப் பார்த்துக் கேட்டார். அவன், “நிரூபித்தால் ஒப்புக்கொள்கிறேன்” என்றார் அவர்.
உடனே அவர், “உமக்கு சமமானவனைக் காட்டு” என்றார். பகவான் பார்த்தான், யாரைக் காட்டுவான்? அவனுக்குச் சமமானவன் என்பது யாரும் கிடையாது. “அதுல தரித்திரம் உண்டல்லவா? இல்லாதது என்பது தானே தரித்திரம்.?” என்று கேட்டார். பகவான் அதை ஒத்துக்கொண்டான்.
அதற்கு மேல், ‘உன்னை விட உயர்ந்தவன் ஒருவனைக் காட்டு” என்றார். அதிலேயும் பகவானால் யாரையும் காட்ட முடியவில்லை. அதிலேயும் தரித்திரத்தை ஒத்துக்கொண்டான்.
அதனால் அவர் அர்ச்சனைத் தட்டை பகவானிடமிருந்து திரும்பி வாங்கிக்கொண்டு, “இப்பொழுது நான் அர்ச்சனை பண்ணுகிறேன், கேள்” என்று சொல்லி “சமாப்யதிக தரித்ராய நம: என்று அர்ச்சனை செய்தார். ‘சமமானவர்களும், அதிகமானவர்களும் இல்லாதவனே, அந்த விஷயத்திலே தாரித்ரியம் கொண்டவனே” என்று விசேஷித்துச் சொல்கிறார்.
அதனால் பகவான், ஈடு இணையற்றவன். அவ்வாறு ஈடு இணையற்றவனாக இருப்பது ‘சில காலங்களில் மட்டுமா’ என்கிற நமக்கு சந்தேகம் வரக்கூடாது. ஆழ்வாருடைய ஒவ்வொரு பாசுரத்திலும் விசேஷ அர்த்தம் பதிந்திருக்கும் எல்லா விஷயங்களையும் சேர்த்துச் சொல்வார். எந்த இடத்தில சந்தேகம் வந்தாலும் உடனே அதற்கு நிவர்த்தியும் சொல்லியிருப்பார்.
இப்ப ஈடு இணையற்றவன் பகவான் என்று சொன்னால், உடனே நமக்கு ஒரு சந்தேகம் வரும். இந்தக் காலத்தில் மட்டுமா? இல்ல அவதார காலத்தில் மட்டும் ஈடு இணையற்றவனா? எல்லா சமயத்திலும் ஈடு இணையற்றவனா? என்று.
சில சமயத்தில் அவனுக்குச் சமமானவர்கள் என்று உண்டா? சில சமயத்தில் அவனுக்கு அவனை விட அதிக சக்தி உடையவர்கள் உண்டா? போன்ற பல சந்தேகங்கள் வரக்கூடாது என்பதற்காகவே ‘எதிர்நிகழ் கழிவினும்‘ என்கிறார் — முக்காலங்களிலும், எந்தக் காலத்திலும் (எதிர்காலமாக இருக்கட்டும், இப்பொழுது நடந்து கொண்டிருக்கக்கூடிய காலமாக இருக்கட்டும், அல்லது முடிந்து போன காலங்களாக இருக்கட்டும், கடந்த காலங்களாக இருக்கட்டும்), எந்தக் காலத்திலும் முக்காலங்களிலும் ஈடு இணையற்றவன் பகவான் என்பதை அழுத்திச் சொல்கிறார். இந்த இடத்துல ஸ்தாபிக்கிறார்.
அதனால் முக்காலங்களிலும் ஈடு இணையற்றவன் பகவான் என்பது இந்த இடத்துல மூன்றாவது விசேஷ அர்த்தம்.
(4) ஞானமும் ஆனந்தமும் வடிவெடுத்தவன் பகவான்
அதற்குமேல், ‘இனனுணர்‘ என்பதன் மூலம் ஞானமும் ஆனந்தமும் வடிவெடுத்தவன் பகவான் என்கிறார்.
ஸ்வாமி தேசிகன் விசேஷமாக “ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்” என்று ஶ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்திர ஆரம்பத்திலேயே ஞானம், ஆனந்தமயம் (மயம் என்றால் அவ்வாறே என்று கொள்ளலாம்).
இதை நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். பகவானை நாம் எவ்வாறு அனுபவிப்பது? பகவானை அளக்க முடியாது, மனதினால் அளக்க முடியாது, மற்ற வெளி இந்திரியங்களாலேயும் பகவானை அளக்க முடியாது, பகவானைத் தெரிந்துகொள்ள முடியாது. அப்படியென்றால் பகவான் யார், எப்படி இருக்கிறான்? என்று கேட்டால், அவன் ஞானமயமாக இருக்கிறான், ஆனந்தமயமாக இருக்கிறான். இது இரண்டும் அவனுடைய வடிவு என்பதை நாம் நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்துகொண்டால் பகவான் நமக்கு இன்னும் கிட்ட நெருங்கி வருகிறான் என்பதற்காக ‘ஞானமும் ஆனந்தமும் வடிவெடுத்தவன் பகவான்’ என்கிற நான்காவது விசேஷ அர்த்தமானது ‘இனனுணர்’ என்று சொல்வதன்மூலம் காட்டித்தரப்படுகிறது.
(5) பகவான் சர்வாந்தராத்மாவாக இருக்கிறான்
அதற்குமேல் ‘எனனுயிர்‘ என்பதன் மூலம் பகவான் எல்லாவற்றிற்கும் அந்தராத்மாவாக இருக்கிறான். பகவான் நித்ய விபூதி எனப்படும் ஶ்ரீ வைகுண்டத்தில் இருக்கக்கூடியவன், அவனே இங்கு இருக்கக்கூடிய எல்லா வஸ்துக்களிலேயும் நிறைந்து இருக்கிறான்.!
அதனால்தான் பீஷ்மாச்சாரியர் விஷ்ணு சஹஸ்ரநாம ஆரம்பத்திலேயே “விஶ்வம் விஷ்ணு:” என்று சொல்கிறார். விச்வம் என்றால் எல்லாவுமுமாக இருக்கிறான் என்று அர்த்தம். விஷ்ணு என்றால் எல்லாவற்றின் உள்ளேயும் இருக்கிறான் என்று பொருள்.
‘எல்லாவுமுமாக இருக்கக்கூடிய பகவான் எல்லாவற்றின் உள்ளேயும் இருக்கிறான்’ என்ற ஸ்ரீமந் நாராயண தத்துவத்தை இந்த இடத்திலே முதல் இரண்டு திருநாமங்களே காட்டிக்கொடுக்கின்றன.
எனனுயிர் என்பதன் மூலம், பகவான் எல்லாவற்றிற்கும் அந்தராத்மாவாக இருக்கிறான் என்பது இந்தப் பாசுரத்திலே காட்டிக்கொடுக்கப்படக்கூடிய ஐந்தாவது விசேஷ அர்த்தம்.
(6) பரமாத்மாவை அவன் குணங்களைக் கொண்டு உணர்வது சிறந்தது
பகவானை நாம் எவ்வாறு தெரிந்துகொள்வது என்றால், அவனுடைய குணங்களைக் கொண்டு உணர்வது சிறந்தது. அதனால்தான் ‘மிகுநலன்‘ என்கிறார்.
முதல் பாசுரத்திலே ‘உயர்நலம்‘ என்றார். நலம் என்றால் குணங்கள் என்று பார்த்தோம். அதனால் மிகுநலன் — சிறந்த குணங்களை உடையவன் பகவான்.
சஹஸ்ரநாமத்திலே இருக்கக்கூடிய ஒவ்வொரு திருநாமமும் பகவானுடைய குணத்தை, ஒவ்வொரு குணத்தைக் காட்டுகின்றன. சில திருநாமங்கள் பல குணங்களைச் சேர்த்துக் காட்டும். அவ்வாறு சிறந்த குணங்களை உடைய பகவானை, அவனுடைய குணங்களைக் கொண்டே தெரிந்துகொள்வது தான் மிகவும் சிறந்ததே ஒழிய, அவனுடைய ஐஸ்வர்யம் எவ்வளவு, அவனுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள் எவ்வளவு என்று இதையெல்லாம் அளக்கக்கூடாது.
அவனை எவ்வாறு அளக்க வேண்டும் என்றால் அவனுடைய குணங்களைக் கொண்டு அவனை அளக்க வேண்டும் என்பதை ‘மிகுநலன்‘ என்று விசேஷமான அர்த்தத்துடன் இந்த இடத்திலே ஆழ்வார் காட்டி அருள்கிறார்.
(7) முதல் கடைசி பதம் சேர்த்து மனம் இலன் ~ இலன் மனம் என்று பொருள் அனுபவிக்கலாம்
ஏழாவது விசேஷ அர்த்தம், முதல் பதம் ‘மனம்‘, கடைசி பதமானது ‘இலன்‘. இவை இரண்டையும் நாம் சேர்த்து அனுபவிக்க வேண்டும். அவ்வாறு அனுபவிக்கும் பொழுது ‘மனன் இலன்‘, மற்றும் ‘இலன் மனம்‘ என்றும் சேர்த்துப் பொருள் அனுபவிக்கலாம்.
‘மனம் இலன்‘ — ஒருவர் தன் வீட்டினுள்ளே அமர்ந்திருந்தார். பகவான் திருவீதியிலே விசேஷமாக சிம்ம வாகனத்திலே வந்து கொண்டிருக்கிறான். அவரிடம் எதுவுமே இல்லை, பழமோ இல்லை மற்ற உபகாரங்களோ பகவானுக்கு சமர்ப்பிப்பதற்கு எதுவுமே இல்லை. பகவான் அவருடைய வீட்டின் வாசலிலே வந்து நிற்கிறான். அவர் வெளியே வந்தவர் நேராக வாகனத்திற்கு முன் நின்றுகொண்டு பகவானைப் பார்த்து, “பகவானே உன்னிடம் இருப்பதையே கொடுப்பதனாலே என்ன பிரயோஜனம்? இப்பொழுது ஒரு பழமோ இல்ல தேங்காயோ இவற்றையெல்லாம் உனக்குக் கிடையாதா, எல்லாம் உடையவன் ஆயிற்றே நீ. உன்னிடம் இருப்பதையே கொடுப்பதனாலே என்ன பிரயோஜனம்?. அதனால் உன்னிடம் இல்லாததை நான் கொடுக்கிறேன், நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.
உடனே பகவான் கேட்டான், “என்னிடம் இல்லாததா? அது என்னது?” என்றான். அவர் சொல்கிறார், “நீ கிருஷ்ணாவதாரத்தின் பொழுது கோப ஸ்திரீகளிடம் உன் மனதைப் பறிகொடுத்தாய். உன்னுடைய மனம் இப்பொழுது உன்னிடத்தில் இல்லை. அது அந்த கோப ஸ்திரீகளிடம் உள்ளது. அதனால் என்னுடைய மனதை நான் உனக்குச் சமர்ப்பிக்கிறேன்” என்றார்!.
அதனால் ‘மனம் இலன்‘ என்று எடுத்துக்கொண்டால், பகவானுடைய மனமானது அவனிடத்தில் இல்லை, அவனுடைய பக்தர்களிடத்திலே இருக்கிறது என்று பொருள்படும்படி இந்த இடத்தில ‘மனம் இலன்’ என்று அனுபவிக்கலாம்.
அடுத்து ‘இலன் மனம்‘ என்பதை எடுத்துக்கொண்டால் நம்முடைய அறியாமையை போக்கி அருள்கிறான் பகவான் என்று சொல்வதாக அனுபவிக்கலாம்.
முதல் பாசுரத்திலே நாம் விசேஷ அர்த்தத்தைப் பார்க்கும்பொழுது, மனதை அடக்குவதிலே, ஞான நிஷ்டையிலே பகவத் கீதையில் பகவான் நான்கு நிலைகளை, படிகளைச் சொன்னான் என்று பார்த்தோம்.
யதா4 ஸம்ஹரதே சாயம் கூர்மோங்கா3நீவ ஸர்வஸ3:
இந்த்3ரியாணி இந்த்3ரியார்த்தேப்4ய தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா ||
என்று சொல்கிறான் பகவான்.
இதிலே யதமாந சம்ஜ்ஞை என்கிற முதல் நிலையை முதல் பாசுரத்திலே அனுபவித்தோம். அதிலே தொடர்ந்து இரண்டாவது நிலை வியதிரேக சம்ஜ்ஞை என்பது, மூன்றாவது ஏகேந்திரிய சம்ஜ்ஞை என்பது, நான்காவது முக்கியமாக வசீகார சம்ஜ்ஞை என்பது.
இந்த வசீகார சம்ஜ்ஞை என்கிற நான்காவது நிலையை அடைந்த ஒருவன் எல்லாவற்றையுமே ஆத்மாவாகப் பார்க்கக்கூடிய நிலையிலே இருக்கிறான். அதாவது தன் சரீரத்தைப் பார்க்காமல், சரீரத்தினுள்ளே இருக்கக்கூடிய ஆத்மாவைக் காண்கிறான். அதுபோன்று மற்றவர்களைக் காணும்பொழுதும் அவர்களுக்குள்ளே இருக்கக்கூடிய ஆத்மாவை இட்டு ஆத்ம ஸ்வரூபமாகக் காண்கிறானே ஒழிய சரீரமானது தெரியவில்லை. அது நான்காவது நிலை. சுகப்ரம்ம மகரிஷி இதற்கு மிகவும் சிறந்த உதாரணம். எல்லாவற்றையுமே ‘நிற்கின்றதெல்லாம் நெடுமால்’ என்று அதற்கும் மேற்பட்ட நிலையாக எல்லாவற்றிலும் பகவானைப் பார்த்தவர் அவர்.
அவ்வாறு வசீகார சம்ஜ்ஞை என்கிற நிலையை அடைந்தவன் பகவான் ஆனந்தமயமானவன் என்பதை உணர்கிறான். அவ்வாறு உணர்பவனுக்கு அறியாமை என்கிற பயம் நீங்குகிறது.
அறியாமை என்பது பயமா? என்று ஏற்படும் ந்யாயமான சந்தேகத்திற்கு, உபநிஷத்தும் அதனை அடியோற்றி நம்ஸ்வாமியும் அழகாக பதில் சொல்லியிருக்கிறார்கள்.
தைத்தரீய உபநிஷத் பிரம்மானந்த வல்லி ஆரம்பத்திலேயே “சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மா” என்கிறது. அதற்கு மேலே சொல்லும்பொழுது “யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன்” என்கிறது. ஞானமயமானவன் பகவான், அனந்தம் (அளவிட முடியாதவன்). அதற்குமேல், ‘குஹாயாம்‘ என்று விசேஷமாகச் சொல்கிறது. நம்ஸ்வாமி மட்டபல்லி மங்களாஷ்டகத்திலே சொல்லும்பொழுது, “மதுரானந்த ரூபிணே” என்கிறார். பகவானுடைய ரூபமானது ஆனந்த ரூபம். அதுமட்டுமல்ல, “குஹாசயாய குஹ்யாய குஹ்யவித்யா ஸ்வரூபிணே” என்று பகவானை இந்த இடத்தில இந்த உபநிஷத் வாக்கியத்தை இட்டு எடுத்துக் காண்பிக்கிறார் மட்டபல்லி மங்களாஷ்டகத்திலே. குஹ்யவித்யா ஸ்வரூபிணே மிகவும் ரகசியமான வித்தை, அது அந்த குகையிலே இருக்கிறது — குஹாசயாய குஹ்யாய என்கிறார்.
அதற்குமேல் நாலாவது அனுவாகத்தில் தைத்தரீய உபநிஷத்தானது, “யதோ வாசோ நிவர்தந்தே அப்ராப்ய மனஸா சஹ, ஆனந்தம் பிரம்மணோ வித்வான் ந பிபேதி கதாசனேதி“. என்கிறது.
“கதாசன:” இதை உணர்ந்தவன் வித்வான் என்கிறது. எதை உணர்ந்தவன் வித்வான்.? ‘பகவான் ஆனந்தமயம் என்பதை உணர்ந்தவன் வித்வான். அவன் எப்பொழுதும் பயப்படுவதில்லை‘ என்கிறது. பயம் என்றால் இந்த இடத்திலே அறியாமை என்று அர்த்தம்.
அதனால் ஆனந்தம் – பிரம்மம் என்பது நிரூபனம். ஆனந்தம் என்பதை உணர்ந்தவனுக்கு எப்பொழுதும் அறியாமையில்லை என்கிறது, அதனால் இந்த இடத்தில ‘இலன் மனம்‘ என்று சொல்லலாம். இலன் மனம் என்றால் எப்பொழுதும் அறியாமை என்கிற பயம் இல்லாத மனம் என்று அர்த்தம்.
அப்பொழுது நமக்கு ஒரு சந்தேகம் வரும். எப்பொழும் என்று சொன்னால், எல்லா காலத்திலும் என்பது தெளிவாகிறது. அது எதனாலும் என்பதற்கும் பொருந்துமா? என்ற கேள்வி. ஏனென்றால் புதுசா ஒரு விஷயத்தைப் பார்க்கும்பொழுது அது உயர்த்தியாகத் தெரியலாம்.
அதே உபநிஷத்தானது ஒன்பதாவது அனுவாகத்திலே இந்த சந்தேகத்திற்கு பதில் சொல்கிறது. மறுபடியும், அதே மந்திரத்தைச் சொல்கிறது. “யதோ வாசோ நிவர்தந்தே அப்ராப்ய மனஸா சஹ, ஆனந்தம் பிரம்மணோ வித்வான் ந பிபேதி குதச்சனேதி” என்று.
அங்கு முதலில் சொல்லும்பொழுது ‘கதாசனேதி‘ என்று சொல்லக்கூடிய உபநிஷத்தானது இந்த இடத்துல ஒன்பதாவது அனுவாகத்திலே ‘குதச்சனேதி‘ என்கிறது. குதச்சனேதி என்றால் ‘எதனாலும்‘. முதலில் சொல்லும்பொழுது எப்பொழுதும் பயமில்லை, எப்பொழுதும் அறியாமை என்பது இல்லை. இப்பொழுது இரண்டாவது தடவை சொல்லும்பொழுது பகவான் ஆனந்தமயமானவன், அதை உணர்ந்தவன் வித்வான் அவனுக்கு எதனாலும் பயமில்லை, எதனாலும் அறியாமை என்பது ஏற்படாது, எல்லாவற்றிலேயும் நன்கு உணர்வான் என்பதை எடுத்துக் காட்டுகிறது. அதனால் எப்பொழுதும், எதனாலும் பகவத் விஷயத்தில் கலக்கம் இல்லை இம் மனதிற்கு என்பதை , ‘இலன் மனம்’ என்பது காட்டுகிறது.!
இதற்கு மேல் எத்தனையோ விசேஷ அர்த்தங்கள் இந்தப் பாசுரத்திற்கு உண்டு. அவற்றை காலக்ஷேப முறையில் ஆச்சாரியனுடைய பக்கத்தில் பக்கலில் அமர்ந்து தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆக, பகவான் தன் மனதை பக்தர்களிடம் பறிகொடுத்தவன், அவன் ஆனந்தமயமானவன் என்று மனத்தினால் சிந்திப்பவர்களுக்கு குறையொன்றுமில்லையே..!!
ஆழ்வார் எம்பெருமானார் தேஶிகன் அழகியஶிங்கர் திருவடிகளே ஶரணம்
நம்ஸ்வாமி திருவடிகளே ஶரணம்
ஸ்ரீ:
திருவாய்மொழி
முதல் பத்து – முதல் திருவாய்மொழி
மூன்றாம் பாசுரம்
மூல பாடம்:
இலனது உடையனிதென நினைவரியவன் *
நிலனிடை விசும்பிடை யுருவின னருவினன் *
புலனொடு புலனலனொழிவிலன் பரந்த அந் *
நலனுடை யொருவனை நணுகினம் நாமே.
பத பாடம்:
அது இலன் | இது உடையன் | என நினைவு அரியவன் *
நிலன் இடை | விசும்பு இடை | உருவினன் | அருவினன் *
புலனொடு | புலன் அலன் | ஒழிவு இலன் |
பரந்த அந் நலன் உடை ஒருவனை | நாம் | நணுகினம் |
விளக்க உரை:
பகவான் லீலாவிபூதி என்று சொல்லப்படும் இந்த ஈரேழு பதினான்கு லோகங்களையும் உடையவன் என்பதை இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் அருளிச்செய்கிறார்.
பகவானுக்கு இதெல்லாம் உண்டு என்றோ, இதெல்லாம் இல்லை என்றோ நினைக்கமுடியாது. பின் பகவானுடைய ஐஸ்வர்யத்தை எப்படிப் பேசுவது? என்று சொன்னால், வேதத்தில் சொல்லியபடி ‘பதிம் விச்வ:‘ என்பதைத் தமிழ்ப்படுத்தி ஆழ்வார் ‘நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்‘ என்கிறார். அதாவது பகவான் ‘ஸர்வ ஸ்வாமி‘ – எல்லாவற்றையும் உடையவன் என்கிறார்.
அப்படிப்பட்ட ஸர்வேச்வரனான பகவான் இந்த லீலாவிபூதியின் ரக்ஷணத்தில் (காப்பதில்) உறுதியுடையவனாய் இருக்கிறான் என்கிறார். அதனால், நமக்குப் புலப்படும் ஸர்வ பதார்த்தங்களினுள்ளேயும் அந்தர்யாமியாக நிறைந்துள்ளான். அவ்வாறு ஸர்வ பதார்த்தங்களிலும் நிறைந்திருந்தாலும் அவ்வஸ்துக்களின் தோஷங்கள் அவனிடம் ஒட்டுவதில்லை.
அதுமட்டுமல்ல, சில காலங்களில் இருக்கிறான் சில காலங்களில் இல்லை என்பதல்லாமல், ஸர்வ காலங்களிலும் அவ்வாறே நிறைந்து இருக்கிறான் என்று பகவானுடைய ‘ஸர்வ வ்யாப்தித்வம்‘ (எங்கும் நிறைந்திருத்தல்) என்கிற குணத்தைச் சொல்லி, அப்படிப்பட்ட பகவானைத் தான் அனுபவிக்கப் பெற்றோம் என்று நினைத்து ஆழ்வார் இங்கு ஆனந்தப்படுகிறார்.
விசேஷ அர்த்தங்கள்:
(1) லீலாவிபூதி எனப்படும் ஐஸ்வர்யத்தை உடையவன் பகவான்
பிரம்மா உட்கார்ந்திருக்கும் ஸத்ய லோகத்தில் இருந்து பதினான்கு லோகங்களை உள்ளடக்கியது லீலாவிபூதி. இதில் நாம் இருக்கக்கூடிய பூ லோகம், அதற்கு மேல் புவர் லோகம், ஸுவர் லோகம், மஹர் லோகம், ஜனோ லோகம், தபோ லோகம், ஸத்ய லோகம் ஆகிய ஏழும், மேல் லோகங்கள் எனப்படும். அதுபோல் அதல, விதல, ஸுதல, தலாதல, மஹாதல, ரஸாதல, பாதாள என்கிற ஏழு லோகங்கள் கீழ் லோகங்கள் எனப்படும். இவையெல்லாம் ப்ரக்ருதி என்கிற தத்துவத்திலிருந்து தோன்றியபடியால் ‘ப்ரக்ருதி மண்டலம்’ எனப்படும். இவையெல்லாம் பகவானுடையது என்பது இப்பாசுரத்தின் முதல் விசேஷார்த்தம்.
முதல் பாசுரத்தில் இந்த லீலாவிபூதிக்கு அப்பால் விரஜா நதியைத் தாண்டியிருக்கும் நித்ய விபூதியான ஸ்ரீ வைகுண்டத்தை உடையவன் பகவான் என்றார், இந்த மூன்றாம் பாசுரத்தில் இந்த லீலாவிபூதியும் பகவான் நாராயணனுடையதே என்கிறார்..!
ஈரேழு பதினான்கு லோகங்களும் பகவானுடையதே என்பது மூன்றாம் பாசுரத்தில் காட்டித்தரப்படும் முதல் விசேஷார்த்தம்.
(2) பகவானுக்கு அது உண்டு என்றோ அல்லது அது இல்லை என்றோ… நினைக்க இயலாது..!
நம்முடைய மனதினால் இப்பிரபஞ்சத்தை முழுமையாக நினைக்க முடியாது, அளக்க முடியாது. அதனால் மனதின் நினைவுக்கு தோஷங்கள் ஏற்படும். அத்தோஷங்களுக்கு அப்பாற்பட்டவன் பகவான் என்பதனால் ‘நினைவு அரியவன்‘ என்கிறார்..! என்ன தோஷம்? இப்பொழுது பகவான் அது உடையவன் என்று ஒன்றைப் பார்த்துச் சொன்னால் மற்றொன்றைப் பார்க்கும்போது அது இல்லாதவனா என நினைக்கத்தோன்றும். உதாரணத்திற்கு ‘ரகுவிற்கு தமிழ் தெரியும் என்று சொன்னால், தெலுங்கு தெரியாதா?’ என்கிற சந்தேகம் எழும்.
அதனால் பகவானுக்கு அது உண்டு என்றோ அல்லது அது இல்லை என்றோ நாம் நினைக்க இயலாது..! எல்லாம் அவனுடையது என்பது இங்கு இரண்டாம் விசேஷார்த்தம்.!
(3) பகவானுடைய ஐஸ்வர்யத்தை அளக்க இயலாது
வேதமானது ‘பதிம் விச்வ:‘ என்பதையும், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ஆரம்பத்திலேயே சொல்லப்படும் ‘விச்வம்‘ என்கிற திருநாமத்தின் தேர்ந்த அர்த்தங்களையும் ஆழ்வார் இங்கு ‘நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்‘ என்கிறார். உரு என்றால் ரூபமுடைய வடிவுடைய ஒன்று. நம்மால் காணக்கூடிய வஸ்துக்கள், பொருள்கள் எல்லாம் உரு.
அரு என்றால் ரூபமற்ற ஜீவாத்மா. அதாவது மாறுபட்ட ரூபமற்றது, ஆத்மாக்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கும். அவற்றைக் கண்கள் போன்ற இந்திரியங்களால் காண இயலாது. ஆகையால் நிலனிடை – பூமி முதல்கொண்டு கீழ் உலகங்களிலோ அல்லது விசும்பிடை – ஆகாசம் முதலான மேல் உலகங்களிலோ உள்ள அனைத்து வஸ்துக்களையும் உடையவன், அவை அனைத்திற்கும் ஸ்வாமியானவன் பகவான் என்கிறார்.
ரூபி, அரூபி என்கிற ஸமஸ்க்ருத பதங்களை உரு, அரு என்று ஆழ்வார் இங்கு தமிழ்ப்படுத்தும் அழகை நாம் கவனிக்க வேண்டும்..!
பகவானுடைய ஐஸ்வர்யத்தை அளக்க இயலாது என்பது இப்பாசுரத்தில் காட்டித்தரப்படும் மூன்றாவது விசேஷார்த்தம்.!
(4) பகவான் சிறந்த ஸௌலப்யம் மற்றும் ஸௌசீல்யம் என்கிற குணங்களை உடையவன்.
பகவான் ஸௌலப்யம் என்கிற உயர்ந்த குணத்தை உடையவன், சுலபமானவன் என்கிறார். அதாவது அவன் இவை அனைத்திற்கும் எஜமான் என்று உணர்ந்தவர்களுக்குத் தன்னைத் தாழ இட்டுக்கொண்டு சுலபமாய்த் தான் அடைகிறான், தன்னை அடைவிக்கிறான்.
அடுத்து தன் உயர்த்தியைப் பாராட்டாது, மற்றவர்களுடைய தாழ்த்தியைப் பாராது இரண்டறக் கலந்து நிற்பது ஸௌசீல்யம் என்கிற குணம். பாலிலே நீரைக் கலந்தால் பாலானது தன் உயர்ந்த வெண்மை நிறத்தையும், மணத்தையும் நீருக்கு அளித்துத் தன்னைப் போலவே ஆக்குகிறது. பகவானுடைய ஸௌசீல்யமானது அளவிடமுடியாதது. இந்த லீலாவிபூதியில் தன் உயர்ந்த ஸௌசீல்ய குணத்தைப் பல அவதாரங்களில் வெளிப்படுத்தினான் பகவான்.
உதாரணமாக, அசுரக்குழந்தையான ப்ரஹ்லாதனுடைய வாக்கைக் காப்பதற்காக ந்ருஸிம்ஹாவதாரம் செய்து, இரணியனை முடித்து, ப்ரஹ்லாதனைத் தன் மடியில் அமர்த்தி தான் அணுகுவதற்குச் சுலபன் என்பதைத் தன்னுடைய உயர்நலம் – ஸௌலப்யம் என்கிற குணத்தின் மூலம் காட்டினான்.
குகனுடன் சேர்ந்து ‘ஐவரானோம்’ என்றான் ராமாவதாரத்திலே. அர்ஜுனனுடன் தோழமை பூண்டு அவனுக்கே சாரதியாய் நின்றான் கிருஷ்ணாவதாரத்திலே. தன்னுடைய மேன்மையைப் பாராட்டாது, மற்றவர்களின் கீழ்மையைப் பாராது கலந்து நின்றான். அதனால் அவனுடைய ஸௌசீல்யம் எனும் குணமானது நன்கு அனைவருக்கும் புலப்பட்டது.
ஆழ்வார் பகவானின் இவ்வுயர்ந்த கல்யாண குணங்களைக் கருத்தில் கொண்டு ‘பரந்த அந்நலனுடை‘ என்று சொல்லி இந்த விசேஷ அர்த்தத்தைக் குறிப்பிடுகிறார்.
முதல் பாசுரத்தில் ‘உயர் நலம்‘ என்ற ஆழ்வார், இரண்டாம் பாசுரத்தில் ‘மிகுநலம்‘ என்றார். இங்கு மூன்றாம் பாசுரத்தில் ‘பரந்த அந்நலன்‘ என்கிறார்..!இந்நலன்களைக் கருத்தில் கொண்டால் நாம் நலமாக இருக்கலாம்..!
பகவான் சிறந்த ஸௌலப்யம் மற்றும் ஸௌசீல்யம் என்கிற குணங்களை உடையவன் என்பது இங்கு நான்காவது விசேஷார்த்தம்.!
(5) பகவானை நாம் எளிதாக அணுகலாம்
பகவானை நாம் எளிதில் அணுகலாம் என்பதை ‘நணுகினம்‘ என்று விசேஷமாகக் குறிப்பிடுகிறார். பசுவாக இருந்தாலும், பக்ஷியாக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும் அவனைச் சரணடையலாம். ப்ரஹ்லாதன், சுக்ரீவன், ஜடாயு, விபீஷணன், கோபஸ்த்ரீகள் என்று நீண்ட பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அதனால் முதலில் அவனுடைய ஸௌலப்யாதி குணங்களைச் சொல்லி நாம் எல்லோரும் அவனை அணுகவேண்டிய நிலையில் சுலபனானவன் என்கிறார்.
அதனால் அணுகுவதற்குச் சுலபன் பகவான் என்பது இங்கு ஐந்தாவது விசேஷார்த்தம்.!
(6) ஆழ்வாரின் மகிழ்ச்சியை இந்தப் பாசுரத்தில் காணலாம்
முதல் பாசுரத்தில் பகவானின் நித்ய விபூதியான ஸ்ரீவைகுண்டத்தின் ஆட்சியைச் சொன்னார். இரண்டாவது பாசுரத்தில் பகவான் அளவிடமுடியாதவன், அவனைப் பூர்த்தியாக அறிய இயலாது என்று சொன்னார். இந்தப் பாசுரத்தில் அவனுடைய ஆட்சியானது லீலா விபூதி என்று சொல்லப்படும் இங்கும் பரவியுள்ளது என்பதைச் சொன்ன பின் அவனுடைய அவதார விசேஷங்களை நினைவு கூர்ந்து ஆனந்தம் அடைகிறார் ஆழ்வார். பிறவிக்கடலிலே நெடுங்காலமாக அழுந்தி பகவானுடைய உயர்ந்த குணங்களாகிய வாசனையே அறியாமலிருந்த நாம் இப்படி அவனைப் பூரணமாக அனுபவிக்கப்பெற்றோமே என்று ‘நணுகினம் நாமே‘ என்று மகிழ்ச்சி ஆழ்வாருக்கு…!
அதனால் இப்பிறவிப் பெருங்கடலில் தத்தளிக்கும் நமக்கு அவனுடைய குணங்களைப் பற்றி நினைப்பதுதான் உண்மையான மகிழ்ச்சி – ஆனந்தம் என்பது இந்தப் பாசுரத்தில் காட்டித்தரப்படும் ஆறாவது விசேஷார்த்தம்.
(7) முதல் பதம் கடைசி பதம் சேர்த்து இலன் நாம் ~ நாம் இலன் என்று பொருள் கொள்ளலாம்.
இப்பாசுரத்தின் முதல் பதம் ‘இலன்‘, கடைசி பதம் ‘நாம்‘. இவை இரண்டையும் சேர்த்து ‘இலன் நாம்‘ மற்றும் ‘நாம் இலன்‘ என இரு வாக்கியங்களாகப் பொருள் காணலாம்.
‘இலன் நாம்‘ எனும்பொழுது பகவானுடைய சம்பந்தம் இன்றி நாம் எப்பொழுதும் இல்லை என்று பொருள்படும். அதாவது இந்தப் ப்ரக்ருதி மண்டலத்தில் நம்மைத் தொலைத்தவன் பகவான். நம்மை அவனிடம் சேர்த்துக்கொள்வதே அவனுடைய சங்கல்பம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாமும் அவன் இல்லாமல் அதாவது அவனுடைய பந்தம் இல்லாமல் தனித்து இருக்க முடியாது. அறுக்க முடியாத பந்தம் இது. அதனால் ‘நாம் இலன்‘.!
இதனை மேலும் இனிமையாகப் புரிந்துகொள்ள, பகவத் கீதையில் ஸ்ரீக்ருஷ்ணன் அருளிய ஒரு அற்புதமான ஸ்லோகத்தை உதாரணமாகக் காணலாம்:
மத்த: பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய |
மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ || (கீதை 7.7)
பொருள்: “தனஞ்சயனே! என்னைக் காட்டிலும் மேலான காரணம் அல்லது பொருள் வேறொன்றும் இல்லை. ஒரு நூலில் கோர்க்கப்பட்ட பல மணிகளைப் போல, இவை அனைத்தும் (சகல பிரபஞ்சமும், ஜீவராசிகளும்) என்னிடத்திலேயே கோர்க்கப்பட்டுள்ளன.”
விளக்கம்: ஒரு அழகிய மாலையில் உள்ள மணிகள் (முத்துக்கள்) சிதறிப்போகாமல் இருக்க வேண்டுமானால், அவற்றின் உள்ளே ஊடுருவி நிற்கும் ஒரு ‘நூல்’ மிகவும் அவசியம். அந்த நூல் வெளியே தெரிவதில்லை; ஆனால் அந்த நூல் இல்லாவிடில் மணிகளுக்குத் தனித்து ஓர் இருப்போ, அழகோ, மதிப்போ கிடையாது; அவை சிதறி வீழ்ந்துவிடும்.
அதுபோலவே, ஜீவாத்மாக்களாகிய நாமும் அந்த நூலாகிய பரமாத்மாவுடன் எக்காலத்தும் பிரிக்க முடியாத பந்தத்தைக் கொண்டுள்ளோம். பகவானே அந்த நூல்; நாமே அந்த மணிகள். ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தமான ஸ்ரீவிசிஷ்டாத்வைதம் இதனையே ‘சரீர-சரீரி பாவம்’ (உடல்-உயிர் சம்பந்தம்) என்றும் ‘அப்ருதக்-ஸித்தி’ (பிரியா நிலை) என்றும் மிக அழகாகக் கொண்டாடுகிறது.
நூல் இல்லாமல் மணிகள் தனித்து இருக்க முடியாதது போல், பகவானுடைய திருவருளும் அவனுடனான பந்தமும் இல்லாமல் ஜீவாத்மாவாகிய ‘நாம்’ தனித்து இயங்கவோ, இருக்கவோ முடியாது. அவனன்றி ஓர் அணுவும் அசையாது. அந்த அறுக்க முடியாத பந்தத்தின் ஆழத்தையே, அவனை விட்டால் நமக்கு வேறு புகலில்லை (அநந்ய கதித்வம்) என்கிற உயர்ந்த தத்துவத்தையே ஆழ்வார் இங்கு ‘நாம் இலன்’ (அவனன்றி நாம் இல்லை) என்று கொண்டாடுகிறார்..!
இந்த லோகத்தில் நாம் சொல்வதெல்லாம் நிரந்தரமான உறவுகள் அல்ல. பகவான் ஒருவனே நமக்கு ஸர்வ விதத்திலேயும் ஸர்வ காலத்திலேயும் பந்துவானதால் அவனை நாம் பயமில்லாமல் அணுகி அவன் துயரறு சுடரடியை வணங்கி மேன்மையுறலாம்..! என்பதுதான் இந்தப் பாசுரம் காட்டும் விசேஷ அர்த்தம்.
ஆக, பகவான் சுலபன், எளிமையானவன் என்பதை உணர்ந்து அவன் துயரறு சுடரடியை நினைப்போர்க்குக் குறையொன்றுமில்லையே..!!
ஆழ்வார் எம்பெருமானார் தேஶிகன் அழகியஶிங்கர் திருவடிகளே ஶரணம்
நம்ஸ்வாமி திருவடிகளே ஶரணம்
ஸ்ரீ:
திருவாய்மொழி
முதல் பத்து – முதல் திருவாய்மொழி
நான்காம் பாசுரம்
மூல பாடம்:
நாமவனிவனுவன் அவளிவளுவளெவள் தாமவரிவருவர் அதுவிதுவுதுவெது வீமவையிவையுவை அவைநலம் தீங்கவை ஆமவை ஆயவை ஆய்நின்ற அவரே.
பத பாடம்:
ஆய்நின்ற | அவரே | நாம் | அவன் | இவன் | உவன்| எவன் | அவள் இவள் உவள் | எவள் | தாம் | அவர் இவர் உவர் | எவர் | அது இது உது | எது | நலம் அவை தீங்கு அவை | வீம் அவை இவை உவை | ஆம் அவை | ஆய் அவை |
விளக்க உரை:
நம்மாழ்வாருக்கு எதிரே மதுரகவி ஆழ்வார் கைகட்டி நின்றுகொண்டு திருவாய்மொழி உபதேசங்களைக் கேட்டுக்கொண்டு இருக்கிறார். இந்த பாசுரத்தின் விளக்கங்களை நம்மாழ்வாருக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும் நடக்கும் ஸம்பாஷணையாக (सम्भाषण) அதாவது கேள்வி-பதில் முறையாக நாம் அனுபவிக்கலாம்..!
நம்மாழ்வார் ‘ஆய் நின்ற அவரே..!‘ என்றார்.
உடனே மதுரகவி ஆழ்வார் ‘எவரே..?’ என்று கேட்டார்.
அதற்கு ஆழ்வார் ‘மூன்றாம் பாட்டில் தேறிய பொருளாகச் சொல்லப்பட்டவன், முதல் இரண்டு பாடல்களில் சொல்லப்பட்ட அவரே, அந்த நாராயணனே ..!’ என்றார்.
அதற்கு மேல் ‘நாம்‘ என்கிற நானும், நீங்களும்; ‘அவன்‘ – அதோ தூரத்தில் ஒருவன் தெரிகிறான் பாரும் அவன்; இங்கு பக்கத்தில் ஒருவன் இருக்கிறான் பாரும் ‘இவன்‘ என்றார்.
அப்பொழுது தூரத்தில் இருப்பவனுக்கும், அருகில் இருப்பவனுக்கும் இடையே ஒருவன் நின்று கொண்டிருந்தான். அந்த இடையில் இருப்பவனைப் பார்த்து மதுரகவி ஆழ்வாருக்கு ஒரு சந்தேகம் வந்தது. அதை குறிப்பால் உணர்ந்த ஆழ்வார் ‘உவன்‘ என்றார். உவன் என்றால் இடையில் இருப்பவன்.
அதற்கு மேல் ஆழ்வார் ‘எவன்‘ என்றார். எவன் என்றால் எங்கு இருப்பவர்களும். அதாவது இங்கு இருப்பவர்கள் மட்டும் அல்ல இந்த ப்ரக்ருதியில் (प्रकृति – Prakriti) இருக்கக்கூடிய அனைத்து புருஷர்களும் என்றார்.
சரி… ஆண்களை மட்டும் சொல்கிறார் என்று அர்த்தம் செய்துக்கொள்ளக்கூடாதென்று ‘அவள் இவள் உவள் எவள்‘ என்று ஸ்திரீகளையும் சொன்னார்.
அப்பொழுது அங்கு ஒரு பெரிய வித்வான் மகான் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை கௌரவமில்லாமல் ‘அவன்’ என்று சொன்னார் என்ற சந்தேகத்திற்கு இடம் கொடுக்காமல் ‘அவர் இவர் உவர் எவர்‘ என்றார்.
அதற்கு மேல் அசேதனங்களை (अचेतन) – உயிரற்ற பொருள்களை ‘அது இது உது எது‘ என்று சொன்னார்.
அப்பொழுது மதுரகவி கேட்டார் ‘ஆத்மா (आत्मा) என்பது ஒரே மாதிரி உருவம் கொண்டிருக்கும், அவற்றில் மாறுபாடு இல்லை என்பது புரிகிறது. ஆனால் உயிரற்ற பொருள்கள் இருக்கின்றனவே, அவற்றின் ரூபமானது மாறிக்கொண்டே இருக்கின்றதே?’ என்று கேட்டார். இவ்வுலகமானது மாறிக்கொண்டே இருக்கிறதல்லவா.!
ஆழ்வார் அந்த மாறுதல்களையும் அதாவது, மற்ற வஸ்துக்களின் பரிமாணங்களை ‘வீம் அவை இவை உவை எவை‘ என்று அழகாக குறிப்பிட்டார்.
அதற்கு மேல் ‘நலம் அவை தீங்கு அவை‘ என்பதனால் அவற்றில் நல்ல குணங்களுள்ளவை, தோஷமுள்ளவை என்பதையும் குறிப்பிடுகிறார்.
அதற்கு மேல் ‘ஆம் அவை ஆயவை‘ என்று சொல்லி, அதன் மூலம் எதிர் காலம், கடந்த காலம் முதலியவற்றிலும் இவையெல்லாம் அவரே..! என்றார்.
ஆக நிகழ்காலத்தைக் குறிப்பிட்டார். கடந்த காலம், எதிர் காலம் என்பதையும் சொல்கிறார்.
மதுரகவி கேட்டார் ‘ஸ்வாமி, இவையெல்லாம் அவரே.! என்று சொன்னால் இவையும் அவரும் ஒன்றா..? என்று கேட்டார்.
ஆழ்வார் அதற்கு அழகாக பதில் சொல்கிறார். ‘இவையெல்லாம் அவரே என்றால் இப்பொழுது சொல்லப்பட்டது எல்லாம் பகவானுடையது, அவனுடைய அதீனமானது, அவனுக்கு சொந்தமானது என்பதுதான் இந்த பாசுரத்தின் தேரிய பொருள்’ என்றார்.
ஆகையினால் ‘இவை எல்லாம் அவனுடையது என்பதன் மூலம் இந்த ஆத்மா, மற்றைய வஸ்த்துக்கள் எல்லாம் வேறு, பகவான் வேறு ‘விசிஷ்டம்‘ (विशिष्टम्) என்பதை இப்பாசுரத்தில் தெளிவுப்படுத்துகிறார்..!!
விசேஷ அர்த்தங்கள்:
(1) காரணம் ஒன்று அதன் காரியம் பலவானது
முந்தைய பாசுரத்தில் ‘ப்ரக்ருதி மண்டலம்’ (प्रकृति मण्डलम्) என்றால் என்ன என்பதை பார்த்தோம். இது உண்டாவதற்கு காரணமானவன் யார்..? இவையனைத்திற்கும் காரணம் பரப்ரும்மமாகிய (परब्रह्म) அந்த பகவான் ஒருவனே..! இந்த ப்ரக்ருதி மண்டலத்தில் விவிதமான லோகங்கள், பல விதமான வஸ்துக்கள் எல்லாம் நிறைந்துள்ளன. இவையெல்லாம் என்ன..? என்று கேட்டால், இவையெல்லாம் அந்த பரப்ரும்மத்தின் காரியம் எனப்படும்.
அதனால்தான் காரணமான பரப்ரும்மத்திடமிருந்து காரியமான இவ்வுலகம் தோன்றிற்று என்கிறது வேதம் தைத்தரீய உபநிஷத்திலே!.
यतो वा इमानि भूतानि जायन्ते । येन जातानि जीवन्ति । यत्प्रयन्त्यभिसंविशन्ति । तद्विजिज्ञासस्व । तद्ब्रह्मेति ॥ யதோ வா இமானி பூதானி ஜாயந்தே | யேன ஜாதானி ஜீவந்தி | யத்ப்ரயந்த்யபிஸம்விஶந்தி | தத்விஜிஜ்ஞாஸஸ்வ | தத்ப்ரஹ்மேதி ||
என்கிறது. அதாவது “எதிலிருந்து இந்த உயிர்கள் அனைத்தும் பிறக்கின்றனவோ; பிறந்த அவை எதனால் வாழ்கின்றனவோ; முடிவில் அவை எதைச் சென்றடைந்து அதனுள் ஒடுங்குகின்றனவோ—அதை அறிய முற்படுவாயாக (தத்விஜிஜ்ஞாஸஸ்வ). அதுவே பிரம்மம்” என்கிறது.
வேதாந்திகள் இதனை தடஸ்த லக்ஷணம் (तटस्थ लक्षणम्) என்று சொல்வார்கள் —அதாவது, பிரம்மத்தை அதன் சார்புப் பண்புகளின் (பிரபஞ்சத்தின் படைப்பு, காத்தல் மற்றும் ஒடுக்கம்) வாயிலாக மறைமுகமாக வரையறுப்பது – ஒன்றைக் கொண்டு மற்றதை அறிவது.
அதுமட்டுமல்ல காரியமான இப் ப்ரபஞ்சத்தை கொண்டு காரணமாகிய ப்ரப்ரம்மத்தை தெரிந்து கொள் என்கிறது சாந்தோக்ய உபநிஷத்.
यथा सोम्यैकेन मृत्पिण्डेन सर्वं मृन्मयं विज्ञातं
स्याद्वाचारम्भणं विकारो नामधेयं मृत्तिकेत्येव सत्यम् ॥
யதா ஸோம்யைகேன ம்ருத்பிண்டேன ஸர்வம் ம்ருன்மயம் விஜ்ஞாதம்
ஸ்யாத்வாசாரம்பணம் விகாரோ நாமதேயம் ம்ருத்திகேத்யேவ ஸத்யம் ||
“எப்படி ஒரு களிமண் உருண்டையை அறிந்துகொள்வதன் மூலம் களிமண்ணால் செய்யப்பட்ட அனைத்தையும் அறிந்துகொள்ள முடிகிறதோ—அதன் மாற்றங்கள் (பானை போன்ற வடிவங்கள்) யாவும் வெறும் பேச்சளவிலான பெயர்களே தவிர வேறில்லை, உண்மையில் அது களிமண் (காரணம்) என்பதே சத்தியமாகும்.” என்று அழகாக இவை அனைத்திற்கும் காரணம் பரப்ரம்மாகிய பகவான் ஒருவனே என்கிறது.
அதனால் பகவானே காரணமாகவும், காரியமாகவும் இருக்கிறான். இந்த தத்துவத்தை ஆழ்வார் ‘ஆய் நின்ற அவரே‘ என்று சொல்கிறார். ‘காரணமும் அவனே, இந்த காரியமும் அவனே; வாரணந்தனை காக்க வந்த நாரணனும் அவனே..!’ என்கிற ப்ரபலமான பாடல் வரிகள் நம்ஸ்வாமிக்கு மிகவும் பிடித்தது, இந்த தத்துவத்தை அழகாக விளக்குகிறது..
அதனால், நாம் காணக்கூடிய இந்த லோகமானது, ப்ரக்ருதியானது பகவானுடய காரியம்; இவையனைத்திற்கும் காரணமாய் இருப்பவன் அந்த பகவான் ஒருவனே என்பது இந்த பாசுரத்தின் முதல் விசேஷார்த்தம்.
(2) அசேதனங்கள் அதாவது உயிரற்ற பொருள்களெல்லாம் ஸ்வருபத்தில் மாறுபாடு அடையும்.
நாம் தினமும் நடைமுறையில் பார்க்கும் விஷயம் இது. இந்த உலகமானது மாறிக்கொண்டே இருக்கிறது. பஞ்சு அழிகிறது. அது நூலாக மாறுகிறது. நூல் அழிகிறது மாறுகிறது. அது வஸ்த்ரமாகிறது அதாவது துணியாகிறது.
களிமண் அழிகிறது. பானையாக மாறுகிறது. அங்கு ஒரு குழந்தை வருகிறது. அந்த பானையை ஓங்கி ஒரு கொம்பால் அடிக்கிறது. இப்பொழுது அது பானையாக இல்லை, சுக்கு நூறாக உடைந்து ஒட்டான்சல்லியாக மாறி நிற்கிறது.
நம் சரீரத்திலேயும் மாறுபாடு ஏற்படுகிறது. குழந்தையிலிருந்து ஆரம்பித்து முதிய வயது வரை மாறுதல் அடைந்துகொண்டே வருகிறது. பால்யம், யௌவனம், கிழட்டுத் தன்மை என்று பல மாறுதல்கள்.
ஒருநாள் இதனுள்ளே இருக்கும் ஆத்மா வெளிக்கிளம்பியவுடன் கீழே விழுந்து விடுகிறது. பஞ்ச பூதங்களில் கலந்துவிடுகிறது.
அதனால் அசேதனம் என்று சொல்லப்படும் உயிறற்ற வஸ்த்துக்கள் எல்லாம் ஸ்வருபத்தில் – உருவத்தில் மாறுதல் அடைந்துக்கொண்டே இருக்கின்றன.
அப்படிப்பட்ட மாறுதல் அடையும் இந்த அசேதன வஸ்துக்களையெல்லாம் ஆழ்வார் இந்த பாசுரத்திலே ‘அது இது உது எது‘ என்று குறிப்பிடுகிறார்..
அதனால் அசேதனங்கள் அதாவது உயிரற்ற பொருள்களெல்லாம் ஸ்வருபத்தில் மாறுபாடு அடையும் என்பது இப்பாசுரத்தில் காட்டித்தரப்படும் இரண்டாவது விசேஷார்த்தம்.
(3) ஆத்மாவிற்கு ஸ்வரூபத்தில் பரிமாணம் – வித்தியாஸம் கிடையாது.
ஆத்மா எல்லாம் ஒரே மாதிரி இருக்கும். அதாவது அரிசி என்பதின் உருவத்தை நாம் உதாரணமாக எடுத்துக்கொண்டால், அதன் உருவம் ஒரே மாதிரி இருக்கிறதல்லவா. அது போன்று ஆத்மாவின் உருவம் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும்.
முக்காலமும் உணர்ந்த ஞானி ஒருவர் தன் ஆஸ்ரமத்தின் வாசலில் அமர்ந்து இருந்தார். அங்கு அந்த தேசத்து ராஜா தன் மகனுடன் வேட்டைக்கு வந்திருந்தான். அவன் தன் மகனுடன் அந்த ஞானியை வணங்கி தன் மகனை அவருக்கு அறிமுகப்படுத்தினான். அந்த ஞானி அந்த இளவரசனை மேலும் கீழும் பார்த்து ‘பன்றி’ என்றார்.! உடனே ராஜாவிற்கு மஹா கோபம் வந்துவிட்டது. அதற்குள் அவனுடன் வந்த சேனாதிபதி உடைவாளை கையில் எடுத்துவிட்டார் அந்த ஞானியின் தலையை சீவுவதற்காக.
ராஜா தன் சேனாதிபதியை சமாதனப்படுத்தி, பின் ஞானியை பார்த்து ‘ஏன் ஸ்வாமி என் மகனை பன்றி என்று வைதீர்கள் ?’ என்றான்.
அதற்கு அந்த ஞானி ‘இவன் இப்பொழுது வேண்டுமானால் உன் மகன். ஆனால் முன் ஜன்மத்தில் இவன் இந்த ஆஸ்ரமத்திற்கு அருகில் பன்றியாக இருந்தவன். அதன் நினைவிலே அவ்வாறு அழைத்துவிட்டேன்’ என்றார்.
உண்மையில் அந்த பன்றியின் உள்ளே இருந்த ஆத்மாவிற்கு இப்பொழுது மனித சரீரம் கிடைத்திருக்கிறது. ஆத்மாவில் வித்தியாஸம் இல்லை சரீரத்தில்தான் வித்தியாஸம்.
இதை ஆழ்வார் ‘அவன் இவன் உவன் எவன், அவள் இவள் உவள் யெவள்‘ என்று சரீரத்தை சொல்கிறார். ஆத்மாவில் ஆணான ஆத்மா, பெண்ணான ஆத்மா என்று கிடையாது.
அதனால், ஆத்மாவிற்கு ஸ்வரூபத்தில் பரிமாணம் – வித்தியாஸம் கிடையாது என்பது இப்பாசுரத்தில் காட்டித்தரப்படும் மூன்றாம் விசேஷார்த்தம்.
(4) ஆத்மாவிற்கு ஞானத்திலே வித்தியாஸம் உண்டு
ஆத்மாக்கள் எல்லாம் காண ஒரே மாதிரி இருந்தாலும் அவற்றின் கர்ம வினைகளுக்கு ஏற்ப ஞானத்தில் வித்தியாஸம் இருக்கும், ஞானம் விரிவடையும், குறுகும்.
ஒருவரை மஹான் என்கிறோம். அவரா அவர் பிறவியிலேயே பெரிய இசை மேதை என்கிறோம். இன்னொருவரைப் பார்த்து ‘அவரா… அவர் பத்து வருஷமா சங்கீதம் கத்துக்கொண்டு இருக்கிறார், இன்னும் ஸ ரி க ம தாண்டவில்லை’. என்கிறோம்.
இது ஞானத்தில் ஏற்படும் வித்தியாசம். அந்த ஞானமுள்ள ஆத்மா உள்ள சரீரங்களை ‘அவர் இவர் உவர் எவர்‘ என்கிறார் ஆழ்வார்.
பகவத் கீதையில் பகவான் க்ருஷ்ணன்
लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मयानघ । லோகேஸ்மிந் த்4விவிதா3 நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக3 |
என்கிறான். அதாவது இவ்வுலகத்திலுள்ளவர்கள் அனைவரும் எல்லா விதத்திலும் ஒரே ரீதியில் இருப்பவர்களல்ல. ஒருவனுக்கு உள்ள தகுதி மற்றவனுக்கு இருக்காது. ஒருவன் விரும்புவதை மற்றொருவன் விரும்பமாட்டான் என்கிறான். இதற்கான காரணங்களில் முக்கியமானது கர்ம வாசனையினால் ஆத்மாவிற்கு ஏற்படும் ஞான வித்தியாசங்கள்.
அதனால், ஆத்மாவிற்கு ஞானத்திலே வித்தியாஸம் உண்டு என்பது இப்பாசுரத்திலே காட்டித்தரப்படும் நான்காம் விசேஷார்த்தம்
(5) நல்லவை, தீயவை, கடந்தவை, வருபவை எல்லாம் பகவானுடைய அதீனங்களே
இந்த உலகத்திலே சில பொருள்களை நல்ல வஸ்துக்கள் என்கிறோம். சிலவற்றை தோஷமுள்ளவை என்கிறோம். அவையெல்லாமும் பகவத் அதீனங்களே. அவற்றில் உள்ள நிறை குறைகள் பகவானிடம் ஒட்டாது.
ஸூரியனுடைய ஓளியானது ஒரு கோபுரத்தின் மேல் விழுகிறது. ஒரு குப்பை மேட்டிலும் விழுகிறது. அதனால் ஸூரியனுக்கு தோஷம் ஏற்படுகிறதா.? என்றால்.. இல்லையே. அதுபோன்று, இந்த ப்ரக்ருதி மண்டலத்தில் உள்ள பொருள்கள், உயர்ந்தவை, தாழ்ந்தவை எல்லாம் பகவானுடையதேயானாலும், அவற்றின் பெருமைகள், தோஷங்கள் அவனிடம் ஒட்டாது. அதை இங்கு ஆழ்வார் ‘நலம் அவை தீங்கு அவை‘ என்கிறார்.
அது போன்று, ஒருவர் ‘இந்த புதிய வீடு வாங்கி இருக்கிறேன்’ என்றார். ஏற்கனேவே இருந்ந்த வீட்டை விற்றுவிட்டேன் என்கிறார். அதனால் அந்த வீடு என்னுடையதில்லை என்கிறார்.
இப்பொழுது என்ன ஆயிற்று. அந்த பழைய வீடு இப்பொழுது அவருடையதில்லை என்று ஆகிறது. இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்திருக்கிறேன், அடுத்த மாதம் புதிய வீடு வாங்கப்போகிறேன் என்கிறார். அடுத்த மாதம் முதல் அந்த புதிய வீடு அவருடையது என்கிறார். இவ்வாறு மாறுதல் அடைகிறது நம் சொந்தம் என்று சொல்லப்படக்கூடிய பொருள்கள் எல்லாம்.
ஆனால், பகவானுக்கு அதீனத்தில் மாறுபாடு காலத்தினால் கிடையாது என்பதை ‘ஆமவை, ஆயவை‘ என்கிறார் ஆழ்வார். அது போன்று ‘வீமவை இவை உவை எவை‘ என்பதன் மூலம் ஒரு பொருள் இன்றொன்றாக மாறுவதனால் இன்னொருவருடையதாகாது என்கிறார். எப்பொழுதும் எந்த நிலையிலும் பகவானுடையதே என்கிறார்.
அதனால், நல்லவை, தீயவை, கடந்தவை, வருபவை எல்லாம் பகவானுடைய அதீனங்களே என்பது இப்பாசுரத்திலே காட்டித்தரப்படும் ஐந்தாவது விசேஷார்த்தம்.
(6) எல்லாமும் அவனே எல்லாவற்றினுள்ளேயும் அவனே
விஷ்ணு ஸஹஸ்ரநாம ஆரம்பத்திலேயே பீஷ்மாச்சார்யார், ‘விஶ்வம் (विश्वं), விஷ்ணு: (विष्णुः)” என்ற முதல் இரண்டு திருநாமங்கள் மூலம் ‘பகவான் எல்லாவுமாகவும் இருக்கிறான், எல்லாவற்றினுள்ளேயும் இருக்கிறான்” என்கிற உயர்ந்த தத்துவத்தை தெரியப்படுத்துகிறார்.
இதற்கு உயர்ந்த ‘நாராயண தத்வம்‘ (नारायण तत्त्वम्) என்று பெயர். ‘எவனொருவன் இப்ப்ரபஞ்சமாகவும், இதன் பொருள்கள் அனைத்திற்கும் உள்ளேயும் இருக்கிறானோ அவன்தான் நாராயணன்” என்கிற தத்வமானது ‘விஶ்வம், விஷ்ணு:’ என்கிற திருநாமங்கள் மூலம் காட்டித்தரப்படுகின்றன.
இந்த விசேஷ தத்வத்தை நமக்கு நன்கு உணர்த்துவதற்காக ‘ஆத்ம சரீர பாவத்தை‘ (आत्म शरीर भाव) பல படியாக சொல்கிறார் ஆழ்வார் இந்த பாசுரத்திலே. ஏனென்றால் பகவானை உணர்வதற்கு அதாவது பகவான் அந்தர்யாமியாக இருக்கிறான் என்பதை உணர்ந்துகொள்வதற்கு ஆத்ம ஞானம் என்பது மிகவும் முக்கியம்.
ஒருவர் விலை உயர்ந்த ரத்தினத்தை ஒரு பட்டுத்துணியில் மூடி பத்திரமாக வைத்து இருந்தார். ஒரு நாள் அந்த வைரம் காணவில்லை. அவர் எதை தேடுவார் முதலில்..? அந்த பட்டுத்துணியைத்தான் தேடுவார். ஏனென்றால் வைரமானது அந்த பட்டுத்துணியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதினால். அது போன்று இந்த ஆத்மாவுக்கு அந்தராத்மாவாக பகவான் இருக்கிறான். அவனை அறிய முதலில் இந்த ஆத்ம ஞானம் கைவர வேண்டும்.
அதனால், ‘எல்லாமும் அவனே எல்லாவற்றினுள்ளேயும் அவனே’ என்கிற மிக உயர்ந்த நாராயண தத்வம் இப்பாசுரத்தில் காட்டித்தரப்படும் ஆறாவது விசேஷார்த்தம்.
(7) முதல் பதம் நாம் கடைசி பதம் அவர். நாம் அவர் ~ அவர் நாம் என்று சேர்த்து அனுபவிக்கலாம்
இந்த நான்காம் பாசுரத்தின் முதல் பதம் நாம். கடைசி பதம் அவர். இவை இரண்டையும் சேர்த்து ‘நாம் அவர்‘ மற்றும் ‘அவர் நாம்‘ என இரண்டு வாக்கியங்களாக அமைத்து பொருள் காணலாம்.
முதல் வாக்கியமான, நாம் அவர் என்று சொல்லும் பொழுது ‘நாமும் நம்மைச் சேர்ந்த வஸ்துக்களும் அவனுடையது’ என்கிறார். இதை ஸ்வாமி தேஶிகன் ந்யாஸ தசகத்திலே ‘மாம் மதீயம் ச நிகிலம் சேதநா சேதநாத்மகம்‘ என்கிறார் அதாவது ‘யான் என்னுடையது எல்லாம் உன்னுடையது’ என்பது தேரிய பொருள்
அவரே நாம் என்று சொல்லும்பொழுது இவையெல்லாம் அவனுடைய சரீரங்கள் என்று சொல்கிறார். இங்கு நாம் என்கிற ஆத்மாவும் என்னுடையது என்று சொல்கிற சரீரமும் பகவானுக்கு சரீரம் அவன் அதீனம் என்று உணர்ந்தும்படியாக அமைந்திருக்கும் அழகை நாம் கவனிக்க வேண்டும்.
பகவான் பகவத் கீதை 13ம் அத்தியாயத்தில் இந்த ஆத்ம-சரீர பாவத்தை விசேஷமாகச் சொல்கிறான்
क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत । क्षेत्रक्षेत्रज्ञयोर्ज्ञानं यत्तज्ज्ञानं मतं मम ॥ க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வக்ஷேத்ரேஷு பாரத | க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோர் ஜ்ஞாநம் யத்தத்ஜ்ஞாநம் மதம் மம || (கீதை 13.3)
பொருள்: “பரதகுலத்தில் உதித்த அர்ஜுனா! எல்லா உடல்களிலும் (க்ஷேத்திரங்களிலும்) உள்ள ஜீவாத்மாவிற்கு (க்ஷேத்திரக்ஞனுக்கு) உள்ளுயிராக, அந்தர்யாமியாக இருப்பவன் நானே என்பதை அறிவாயாக. உடலையும் (க்ஷேத்திரம்), உடலை அறிந்த ஜீவாத்மாவையும் (க்ஷேத்திரக்ஞனையும்), அவற்றுக்குள் உறையும் பரமாத்மாவான என்னையும் பற்றிய இந்தத் தெளிவான அறிவே உண்மையான ஞானம் என்பது என் உறுதியான முடிவாகும்.”
விளக்கம்: அர்ஜுன, எல்லாச் சரீரங்களிலும் அறிபவனாக விளங்கும் ஜீவாத்மாவும் நானே என்பதை நீ தெரிந்துகொள். சரீரத்தையும் ஆத்மாவையும் உள்ளது உள்ளவாறு அறிவதே அறிவாகும் என்பது என் கருத்து என்கிறான் கண்ணன்.
- சரீரம் வேறு, ஆத்மா வேறு என்பதில் வைதிகர்களுக்கு எவ்வித கருத்து வேற்றுமையும் இருக்காது.
- நம் சரீரம் நம்மால் தாங்கப்பெற்றும், நம்மால் நியமிக்கப்பெற்றும், நமக்கு சேஷமாகவும் இருக்கிறபடியால் அது நமக்குச் சரீரமாக இருக்கிறது.
- அதே போல் பகவானால் தரிக்கப்பெற்றும், நியமிக்கப்பெற்றும், அவனுக்கே சேஷமாகவும் இருக்கிறபடியால் அந்தப் பகவானுக்கு நாமும் சரீரங்களே.
- நமக்கும் அவன் ஆத்மா; நம் சரீரத்துக்கும் அவன்தான் ஆத்மா.
- ‘ய: ப்ருதிவ்யாம் திஷ்டந்….ய ஆத்மதி திஷ்டந்‘ என்கிற உபநிஷத் வாக்கியம் கூறுவது போல், பூமி முதலிய அசேதன வஸ்துக்களில் உள்ளும் புறமும் பகவான் வியாபித்து அவற்றுக்கு ஆத்மாவாக இருப்பது போல், ஜீவதத்துவத்திலும் வ்யாபித்துச் சேதனர்களுக்கும் ஆத்மாவாக இருக்கிறான்.
- ஆகையால் இந்த ஸ்லோகத்தில் பகவான் ஆத்மா, ஜகத் சரீரம் என்ற ஸம்பந்தமே (ஸரீராத்ம பாவமே) கூறப்பட்டுள்ளது.
இந்த உயர்ந்த தத்துவத்தை உணர்ந்துவிட்டால், “நான் செய்கிறேன்”, “இது என்னுடையது” என்ற அகங்காரமும், மமகாரமும் நம்மை விட்டு அடியோடு அகன்றுவிடும். நாமும் அவனுடைய உடைமை, நம் உடலும் அவனுடைய உடைமை என்கிற பரம ரகசியத்தை உணர்ந்து, அந்தப் பரமாத்மாவே நமக்கு உற்ற துணை என்று அவன் துயரரு சுடரடிகளில் பூரணமாகச் சரணடைவதே (प्रपत्ति – ப்ரபத்தி) உண்மையான ஞானம்..! என்பதுதான் இந்த பாசுரத்தில் ‘அவரே நாம்‘ என்கிற வாக்கியத்தின் மூலம் காட்டித்தரப்படும் விசேஷ அர்த்தம்.
ஆக, நாமும் நம்மைச் சேர்ந்த வஸ்துக்களும் அவனுடையது என்று உணர்ந்து அந்தப் பரமாத்மாவே நமக்கு உற்ற துணை என்று அவன் துயரரு சுடரடிகளில் பூரணமாகச் சரணடைந்தோற்கு குறையொன்றுமில்லையே..!!
ஆழ்வார் எம்பெருமானார் தேஶிகன் அழகியஶிங்கர் திருவடிகளே ஶரணம்
நம்ஸ்வாமி திருவடிகளே ஶரணம்
ஸ்ரீ:
திருவாய்மொழி
முதல் பத்து – முதல் திருவாய்மொழி
ஐந்தாம் பாசுரம்
மூல பாடம்:
அவரவர் தமதமது அறிவறி வகைவகை அவரவ ரிறையவர் எனவடி யடைவர்கள் அவரவ ரிறையவர் குறைவில ரிறையவர் அவரவர் விதிவழி அடைய நின்றனரே
பத பாடம்:
அவர் அவர் | தமதமது | அறிவு | அறி | வகைவகை | அவரவர் | இறையவர் என | அடி அடைவர்கள் | அவரவர் இறையவர் | குறைவு இலர் | இறையவர் | அவரவர் | விதிவழி | அடைய | நின்றனர் |
விளக்க உரை:
நான்காம் பாசுரத்திலே ஆழ்வார் எல்லா பொருள்களும் அவற்றின் ஸ்வரூபமும் பகவானுடையது, எல்லாம் அவனுடைய அதீனம் என்றார். இங்கு ஐந்தாம் பாசுரத்தில் அவற்றின் ஸ்திதியும் அதாவது அவற்றின் ரக்ஷணம் (रक्षण) என்கிற காத்தலும் பகவானுடையதே என்கிறார்.
இவ்வுலகத்தில் அவரவர் தங்கள் தங்கள் குணங்களைப் பொருத்து பலவிதமான கோரிக்கைகளுடன் அதை அளிக்கக்கூடிய பல விதமான தெய்வங்களை வேண்டுவர். ஆரோக்கியம், ஐஸ்வர்யம், பணம், குழந்தை பேறு என்று பல கோரிக்கைகள் எல்லொருக்கும் உண்டு. அவற்றை அளிக்கக்கூடிய சக்தி படைத்த தெய்வங்களும் எத்தனையோ உண்டு. அந்த அந்த தெய்வங்களை வேண்டுவதற்கு வகை வகையான முறைகளும் உள்ளன. அதனால் சிலர் த்யானத்தினாலும், சிலர் யஜ்ஞங்களினாலும், சிலர் அர்ச்சனையினாலும், மற்றும் சிலர் நாம சங்கீர்த்தத்தினாலேயும் தங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்வர்.
இங்கு ஆழ்வார் இதர தெய்வங்கள் அனைத்திற்கும் அந்தர்யாமியாக (अन्तर्यामि) அதாவது உள்ளீடாக இருந்து, அந்த தெய்வங்களுக்கு பலன் அளிக்கும் சக்தியைக் கொடுத்து அதன் மூலம் கோருகிறவர்களுக்கு பலன் அளிப்பவன் பகவான் நாராயணன் ஒருவனே என்கிறார். அதனால் பகவான் ஒருவனே ரக்ஷகன் ஆகிறான், காக்கும் கடவுள் என்பது இந்த ஐந்தாம் பாசுரத்தின் தேரிய பொருள்.
விசேஷ அர்த்தங்கள்:
(1) எல்லாவற்றிற்கும் அந்தராத்மாவாக இருந்து அவற்றை ரக்ஷிப்பவன் பகவான் ஒருவனே
நம்மை இவ்வுலகத்தில் ரக்ஷிப்பவன் பகவான் ஒருவனே. உதாரணத்திற்கு சூரியனுடைய சக்தியினால்தான் நமக்கு உயிர் வாழ்வதற்கு ப்ராண வாயுவும், ஆரோக்கியத்திற்கும், நன்கு செயல்படுவதற்கும் உணவுப் பொருட்கள் கிடைக்கிறது. சூரியன் இல்லாமல் நாம் இல்லை. அதுபோன்று சந்திரன் இல்லாமல் ருதுக்கள் இல்லை. அதனால் காய், கனிகள் மற்றும் கிழங்குகள் எல்லாம் சந்திரனுடைய சக்தியினால் கிடைக்கின்றன.
ஆனால் வேதமானது சூரியனுக்கும், சந்திரனுக்கும், நட்சத்திரங்களும் சொந்தமாக சக்தி கிடையாது. சொந்தமாக ஒளி கிடையாது என்கிறது. அவையெல்லாம் பகவானிடத்திலிருந்துதான் ஒளியையும், அதனால் சக்தியையும் பெறுகின்றன என்பதை உபநிஷத்
न तत्र सूर्यो भाति न चन्द्रतारकम् नेमा विद्युतो भान्ति कुतोऽयमग्निः । तमेव भान्तमनुभाति सर्वम् तस्य भासा सर्वमिदं विभाति ॥ ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ரதாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோऽயமக்னி: | தமேவ பாந்தமனுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி ||
என்கிறது.
“அங்கு சூரியன் ஒளிர்வதில்லை; சந்திரனும் நட்சத்திரங்களும் ஒளிர்வதில்லை; இந்த மின்னல்களும் அங்கு பிரகாசிப்பதில்லை; அப்படியிருக்க, இந்த சாதாரண நெருப்பு எப்படி ஒளிரும்? அவன் (பகவான்) ஒளிர்வதாலேயே மற்ற அனைத்தும் அவனைப் பின்தொடர்ந்து ஒளிர்கின்றன; அவனுடைய ஒளியாலேயே இவ்வுலகம் முழுவதும் பிரகாசிக்கிறது” என்கிறது உபநிஷத்.
அதனால் எல்லாவற்றிற்கும் சக்தியைக் கொடுப்பவன் பகவான்தான். எல்லாவற்றிற்கும் அந்தராத்மாவாக (अन्तरात्मा) இருந்து அவற்றை ரக்ஷிப்பவன் பகவான் ஒருவனே என்பது இப்பாசுரத்திலே காட்டித்தரப்படும் முதல் விசேஷார்த்தம்
(2) ஸர்வ பதார்த்தங்களின் ரக்ஷகனாய் இருப்பதால் பகவான் ஸர்வேச்வரன் என போற்றப்படுகிறான்
சாஸ்திரம் சொல்கிறது
न सम्पदां समाहारे विपदां विनिवर्तने । समर्थो दृश्यते कश्चित् तं विना पुरुषोत्तमम् ॥ नहि पालनसामर्थ्यम् ऋते सर्वेश्वरं हरिम् । ந ஸம்பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே | ஸமர்த்தோ த்ருஶ்யதே கஶ்சித் தம் விநா புருஷோத்தமம் || நஹி பாலநஸாமர்த்யம் ருதே ஸர்வேஶ்வரம் ஹரிம் |
என்று. “ எல்லா நன்மைகளையும் தரக்கூடியவன், விரோதிகளை போக்கவல்லவன் புருஷோத்தமனான (पुरुषोत्तम – Purushottama) ஹரி ஒருவனே. மற்றவர்களுக்கு இந்த ரக்ஷகத்வம் கிடையாது” என்கிறது.
வேதம் அவனே ஸர்வேஸ்வரன் (सर्वेश्वर) என்கிறது நாராயண ஸூக்தத்திலே
यद्वेदादौ स्वरः प्रोक्तो वेदान्ते च प्रतिष्ठितः । तस्य प्रकृतिलीनस्य यः परः स महेश्वरः ॥ யத்வேதாதௌ ஸ்வர: ப்ரோக்தோ வேதாந்தே ச ப்ரதிஷ்டித: | தஸ்ய ப்ரக்ருதிலீநஸ்ய ய: பர: ஸ மஹேஶ்வர: ||
என்கிறது.
“வேதங்களின் தொடக்கத்தில் எந்த ஓர் அக்ஷரம் (ஓம் எனும் பிரணவம்) உச்சரிக்கப்படுகிறதோ, வேதங்களின் முடிவான உபநிஷத்துகளில் எந்த அக்ஷரம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதோ, பிரபஞ்சத்தின் மூலமான பிரகிருதியில் ஒடுங்கும் அந்தப் பிரணவத்திற்கும் அப்பாற்பட்டவன் எவனோ அவனே ஸர்வேஸ்வரன்” என்கிறது.
அதனால், சர்வ பதார்த்தங்களின் ரக்ஷகனாய் இருப்பதால் பகவானே ஸர்வேச்வரன் என போற்றப்படுகிறான் என்பது இப்பாசுரத்தில் காட்டித்தரப்படும் இரண்டாம் விசேஷார்த்தம்
(3) ஒவ்வொருவரும் இவ்வுலகத்தில் குணம், ருசி, ஞானம், எதிர் பார்க்கும் பலன் இவற்றால் வேறுபட்டிருப்பர்
ப்ரக்ருதி (प्रकृति) என்கிற தத்துவத்திலிருந்து தோன்றியது இந்த ப்ரபஞ்சம். இதில் மூன்று குணங்கள் கலந்து இருக்கும். அவற்றிற்கு ஸத்வம், ரஜஸ், தமஸ் (सत्त्व, रजस्, तमस्) என்று பெயர். ஒவ்வொரு வஸ்த்துக்களும் இவ்வுலகத்தில் இம்மூன்று குணங்ளையும் கொண்டிருக்கும். அவற்றின் விகிதம் – அளவு ஒவ்வொரு பொருட்களிலும் வேறு வேறாக இருக்கும். நாம் ஸத்வ குணம் அதிகமாக உள்ள உணவு பதார்த்தங்களை உட் கொண்டால் ஸத்வ குணம் வளரும். அது போன்று மற்றைய குணங்கள்.
நாம் பகவத் கீதையில் பகவான் கண்ணன் சொன்ன ‘ஞான நிஷ்டையில்’ (ज्ञान निष्ठा) யதமான ஸம்ஜ்யை என்பதை பார்த்தோம். அதிலே இரண்டாவது நிலை வ்யதிரேக ஸம்ஜ்ஞை என்பது. பகவான் சொல்கிறான்
यः सर्वत्रानभिस्नेहस्तत्तत्प्राप्य शुभाशुभम् । नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता ॥ ய: ஸர்வத்ராநபிஸ்நேஹ: தத் தத் ப்ராப்ய ஶுபாஶுபம் | நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா ||
இதிலே தகாத விஷயங்களிலே ஆசையை விலக்குவது, அதற்கான முயற்சிகளை செய்வது என்பது ஞான நிஷ்டையின் இரண்டாவது நிலை என்கிறான் கண்ணன். கண்ட கண்ட இடங்களில் கண்ட கண்ட உணவை உட்கொண்டால் ரஜோ குண, தமோ குணங்கள் அதிகமாகும். அதனால் அதிகமாக மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை போன்றவை ஏற்படும். அதனால் பல பல தவறுகளை செய்து மறுபடியும் பல பிறவிகளை அடைந்து இவ்வுலகில் துன்புறுவர். அதனால் வ்யதிரேக ஸம்ஜ்ஞை என்பதில் ஆகார நியமத்துடன் இருத்தல் என்கிற நிஷ்டையும் சொல்லப்பட்டுள்ளது.
இங்கு ஆழ்வார் ‘அவரவர் விதிவகை‘ என்கிறார்.
இவ்வுலகில் ஒவ்வொருவரும் குணம், ருசி, ஞானம், எதிர் பார்க்கும் பலன் இவற்றால் வேறுபட்டிருப்பர் என்று காட்டித்தரப்படுவது இப்பாசுரத்தின் மூன்றாம் விசேஷார்த்தம்
(4) இப்ருக்ருதியிலே பல விதமான தெய்வங்கள் உண்டு. அவற்றிற்கு அவற்றின் பதவியின் படி ப்ரத்யேக சக்தியும் உண்டு.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் சில ப்ரத்யேக சக்திகள் உண்டு. வருணனுக்கு மழையை கொடுக்கும் சக்தி உண்டு. ஆனால் அக்னிக்கு உண்டான தகிக்கும் சக்தி வருணனுக்கு கிடையாது. அது போன்று ஒவ்வொரு தெய்வமும். அதை ஆழ்வார் ‘அவரவர் இறையவர் குறைவு இலர்‘ என்கிறார்
அதனால் இப்ருக்ருதியிலே பல விதமான தெய்வங்கள் உண்டு. அவற்றிற்கு அவற்றின் பதவியின் படி ப்ரத்யேக சக்தியும் உண்டு என்பது இப்பாசுரத்திலே காட்டித்தரப்படும் நான்காம் விசேஷார்த்தம்.
(5) இதர தெய்வங்களுக்கு உள்ளிடாக இருந்து பலனை கொடுப்பவன் பகவான் நாராயணன் ஒருவனே
எல்லா சக்திகளையும் உடையவன் நாராயணன் ஒருவனே என்கிறார். அவன் ஒருவனே மற்றைய எல்லா தெய்வங்களுக்கும் சக்தியை அளித்து இந்த லோகத்தின் ஸ்திக்கு காரணமாய் இருக்கிறான் என்பதை ‘இறையவர் அவர் அவர் விதி வழி அடைய‘ என்கிறார்.
பகவான் ஒருவனே இதர தெய்வங்களுக்கும் உள்ளிடாக இருந்து பலனை கொடுப்பவன் என்பது இப்பாசுரத்திலே காட்டித்தரப்படும் ஐந்தாம் விசேஷார்த்தம்
(6) மற்ற கோரிக்கைகள் எதுவும் இல்லாமல் பகவானுடைய ப்ரீதியை மட்டும் கோருபவர்கள் சுத்த ஸாத்விகர்கள் எனப்படுவர்
மோக்ஷத்தை (मोक्ष) அளிக்கக்கூடிய எம்பெருமானை ஆச்ரயித்து எதையும் கோராதவரையும், அவ்வெம்பெருமானிடம் ப்ரதி ப்ரயோஜனம் எதிர் பாராதவர்கள் சுத்த ஸாத்விகர்கள் (शुद्ध सात्त्विक). ரஜோ குணத்தால் தமோ குணத்தால் வரும் தோஷங்கள் அவர்களை அண்டாது. மறந்தும் புறம் தொழா மாந்தர் என்கிறார் ஆழ்வார்.
அதனால் பகவானுடைய ப்ரீதியை மட்டுமே கோர வேண்டும் என்பது இப்பாசுரத்திலே காட்டித்தரப்படும் ஆறாம் விசேஷார்த்தம்.
(7) முதல் பதம் கடைசி பதம் சேர்த்து அவர் நின்றனர் ~ நின்றனர் அவர் என பொருள் காணலாம்
அவர் நின்றனர் என்பதன் மூலம் ஜீவர்கள் தங்கள் பூர்வ ஜன்ம கர்ம வசத்தினால் அல்பமான பலன்களை விரும்புகின்றனர் என்கிறார்.
பகவான் க்ருஷ்ணன் பகவத் கீதை நான்காவது அத்தியாயத்தில்
काङ्क्षन्तः कर्मणां सिद्धिं यजन्त इह देवताः । क्षिप्रं हि मानुषे लोके सिद्धिर्भवति कर्मजा ॥ காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா: | க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா ||
எல்லோருமே பயனில் விருப்பம் உள்ளவர்களாகத்தான் இருக்கின்றனர். “நாளை கிடைக்கும் மயிலைவிட (மோக்ஷம்), இன்று கிடைக்கும் காகமே (அற்ப பலன்கள்) சிறந்தது” என்கிறார்கள். அதனால் பலன் சீக்கிரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக விவேகமற்று இந்திராதி தேவதைகளை ஆராதிக்கிறார்கள். இதர பலன்களில் ஆசையை விட்டு என்னையே விரும்பி, இந்திரன் முதலானோற்கு அந்தராத்மாவான என்னை ஆராதிப்பதில்லை என்கிறான் பகவான்.
அதனால் அவர் நின்றனர் என்பதன் மூலம் ஜீவர்கள் தங்கள் பூர்வ ஜன்ம கர்ம வசத்தினால் அல்பமான பலன்களை விரும்புகின்றனர் என்பது காட்டித்தரப்படுகிறது.
அடுத்து நின்றனர் அவர் என்பதன் மூலம், பகவானே அந்த தேவதைகள் மூலம் பலன் அளிக்கிறான், அதில் உறுதியாக உள்ளான் என்பதும் காட்டித்தரப்படுகிறது.
ஆக, பகவான்தான் அனைத்து தேவதைகளுக்கும் அந்தராத்மாவாக இருந்து அனைத்து பலன்களையும் அளிக்கிறான் என்பதை உணர்ந்து அவன் துயரறு சுடரடி பற்றுவோற்கு குறையொன்றுமில்லையே!!
ஆழ்வார் எம்பெருமானார் தேஶிகன் அழகியஶிங்கர் திருவடிகளே ஶரணம்
நம்ஸ்வாமி திருவடிகளே ஶரணம்
ஸ்ரீ:
திருவாய்மொழி
முதல் பத்து – முதல் திருவாய்மொழி
ஆறாம் பாசுரம்
மூல பாடம்:
நின்றனரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் நின்றிலரிருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் என்றுமொரியல்வினர் எனநினைவரியவர் என்றுமொரியல்வொடு நின்றவெந்திடரே
பத பாடம்:
நின்றனர் | இருந்தனர் | கிடந்தனர் | திரிந்தனர் | நின்றிலர் | இருந்திலர் | கிடந்திலர் | திரிந்திலர் | என்றும் | ஒர் இயல்வினர் | என நினைவு அரியவர் | என்றும் | ஓர் இயல்வொடு நின்ற | எம் திடர் |
விளக்க உரை:
பகவான் இந்த உலகின் (लीलाविभूति – லீலா விபூதி) காரணமாகவும், காரியமாகவும் இருக்கிறான் என்பதை நான்காம் பாசுரத்தில் ஆழ்வார் ‘ஆமவை ஆயவை ஆய்நின்ற அவரே’ என்றார். அதனால் காரியமாகிய இப்பிரபஞ்சத்தின் ஸ்வரூபம் பகவத் அதீனம் என்பது தேர்ந்த பொருள்.
இந்த உலகின் ஸ்திதி – அதனை காத்தலும் பகவானுடைய அதீனமே என்பதை ஆழ்வார் ‘அவரவர் விதிவழி அடைய நின்றனரே’ என்று ஐந்தாம் பாசுரத்தில் எடுத்துரைத்தார்.
இங்கு ஆறாம் பாசுரத்தில் இந்த உலகத்தினுடைய ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் (प्रवृत्ति निवृत्ति ), அதாவது இப்ப்ரபஞ்சத்தின் செயல்பாடுகளும், செயலற்ற நிலைகளும் பகவானுடைய அதீனமே என்கிறார்.
விசேஷ அர்த்தங்கள்:
(1) நம் செயல்பாடுகள் அனைத்தும் பகவானுடைய அதீனம்
ஆழ்வார் இதற்கு முன் பாசுரத்தில் ‘நாம், அவன், இவன், உவன்’ என்று இவ்வுலகத்தில் இருப்பவர்களின் ஸ்வரூபத்தை சொல்லி அவையெல்லாம் பகவானின் அதீனமே என்றார்.
இந்த பாசுரத்தில் “நின்றனர், இருந்தனர், கிடந்தனர், திரிந்தனர்” என்பதன் மூலம் நம்முடைய ப்ரவ்ருத்தி (प्रवृत्ति), அதாவது அனைத்து செயல்பாடுகளும் பகவானுடைய அதீனமே என்கிறார்..
அதீனம் என்றால்… ?
அதீனம் (अधीन:) என்றால் தன்னிச்சையாக இயங்கும் திறன் இல்லாமல், முற்றிலுமாக ஒருவரின் கட்டுப்பாட்டில், அவரின் விருப்பத்தின்படியே இயங்குவது என்று பொருள்.
‘பகவத் அதீனம்’ (भगवदधीनम्) என்றால் ஜீவாத்மாக்களாகிய நாமும், நம் செயல்களும் முழுமையாகப் பகவானின் திருவுள்ளத்தில் (சங்கல்பத்தில்) அடங்கியுள்ளன என்பதை உணர்த்துகிறது.
நிற்பது, நடப்பது, இருப்பது, கிடப்பது எல்லாம் சேதனர்கள் (चेतन) அதாவது உயிருள்ளவை செய்யக்கூடிய செயல்கள். ஆனால், அந்தச் செயல்கள் அனைத்தும் கூட பகவத் சங்கல்பத்தினால் மட்டுமே செயல்பாடு அடைகின்றன என்பது இப்பாசுரத்தின் முதல் விசேஷார்த்தம்.
இந்த அதீன தத்துவத்தை ஸ்வாமி தேசிகன் தயாசதகம் முடிவில் விசேஷமாக சொல்கிறார்
वेदान्तदेशिकपदे विनिवेश्य बालं
देवो दयाशतकमेतदवादयन्माम् ।
वैहारिकेन विधिना समये गृहीतं
वीणाविशेषमिव वेङ्कटशैलनाथः ॥
வேதாந்ததேசிகபதே விநிவேச்ய பாலம்
தேவோ தயாசதகமேததவாதயந்மாம் |
வைஹாரிகேண விதிநா ஸமயே க்ருஹீதம்
வீணாவிசேஷமிவ வேங்கடசைலநாத: ||
(தயாசதகம் 104)
“எதுவும் அறியாத சிறுவனான என்னை ‘வேதாந்த தேஶிகன்‘ என்கிற உயர்ந்த பீடத்தில் அமர்த்தி, திருவேங்கடமுடையான் (ஸ்ரீனிவாசன்) தன் திருவுள்ள உகப்பிற்காக, தகுந்த நேரத்தில் ஒரு சிறந்த வீணையைத் தன் கைகளில் எடுத்து வாசிப்பதைப் போல, என்னை ஒரு கருவியாகக் கொண்டு இந்த ‘தயாசதகம்’ என்னும் பிரபந்தத்தை வாசித்தருளினான்.” என்கிறார்.
இந்த ஸ்லோகத்தின் கருத்தையும், ‘நின்றனர், இருந்தனர்…’ என்ற வரிகளின் ஆழத்தையும் கீழ்க்கண்ட நடைமுறை உதாரணங்கள் மூலம் நாம் அனுபவிக்கலாம்:
- வீணை என்னும் கருவி (வீணா விசேஷம்): ஒரு மிகச் சிறந்த வீணையாக இருந்தாலும், அது சுயமாக இசையை எழுப்ப முடியாது. அதற்கு எவ்வித சுதந்தரமும் (स्वातन्त्र्यम्) கிடையாது. அந்த வீணையின் இருப்பும் இசையும் முற்றிலுமாக கலைஞனின் அதீனம். ஸ்வாமி தேசிகன் தன்னை ஒரு வீணையாகவும், திருவேங்கடமுடையானை அந்த வீணையை மீட்டும் பரம கலைஞனாகவும் உருவகப்படுத்துகிறார். அதேபோலவே, உலகியல் வாழ்வில் நம்முடைய “நின்றனர், இருந்தனர், கிடந்தனர், திரிந்தனர்” போன்ற அனைத்துச் செயல்பாடுகளும் அந்தப் பரமாத்மாவாகிய கலைஞனின் அதீனமேயன்றி நம்முடையவை அல்ல.
- அகங்காரம் ஒழிதல் (கர்த்ருத்வமின்மை): “நான் செய்கிறேன்”, “என் திறமையால் இயற்றினேன்” என்கிற கர்த்ருத்வம் (कर्तृत्वम्) விலகுவதே அதீன நிலையை உணர்தலின் உச்சம். ஸ்வாமி தேசிகன் “நான் எழுதினேன்” என்று கூறாமல், “என் மூலம் அவன் வாசித்தான்” (अवादयन् माम् – அவாதயந் மாம்) என்கிறார்.
- பச்சிளங்குழந்தையும் தாயும் (மாத்ரு அதீனம்): தன்னைக் காத்துக்கொள்ளத் தெரியாத ஒரு பச்சிளங்குழந்தை எப்படி முழுமையாகத் தாயின் அரவணைப்பில், மாத்ரு அதீனமாக இருக்கிறதோ, அப்படியே நாமும் பகவானின் பாதுகாப்பில் அவனது அதீனமாக இருக்கிறோம். குழந்தை நடப்பதும், இருப்பதும், கிடப்பதும் தாயின் கண்காணிப்பிலேயே நடப்பது போல, நம் ப்ரவ்ருத்திகளும் அவன் சங்கல்பப்படியே நடக்கின்றன.
விமானத்தில் ஏறிய பிறகு, பயணத்தின் முழுப் பொறுப்பையும் எப்படி பைலட்டிடம் (Pilot) கொடுத்துவிட்டு நாம் நிம்மதியாக இருக்கிறோமோ, அதுபோலவே சரணாகதி அடைந்த ஜீவாத்மா, தன் வாழ்க்கைப் பயணத்தையும் அதன் விளைவுகளையும் அந்தப் பரமாத்மாவிடமே விட்டுவிட வேண்டும்.
ஆக, “நின்றனர், இருந்தனர், கிடந்தனர், திரிந்தனர்” என்று நாம் நினைக்கும் நம் சுய செயல்கள் யாவும், ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற ரீதியில் முற்றிலும் பகவானுடைய அதீனமே. அவன் கருவியாக நம்மை இயக்குகிறான்; அவன் சங்கல்பத்தினால் நாம் வீணையைப் போல இசைந்து கொடுக்கிறோம் என்பதே இவ்வரிகளின் ஆழ்ந்த உட்பொருள்.
ஆக, நிற்பது, நடப்பது எல்லாம் சேதனர்கள் எனப்படும் உயிருள்ளவை செய்யக்கூடிய செயல்கள். அவை பகவத் சங்கல்பத்தினால் செயல்பாடு அடைகின்றன என்பது இப்பாசுரத்திலே காட்டித்தரப்படும் முதல் விசேஷார்த்தம்.
(2) செயல்பாடுகள் அற்றவை கூட பகவத் அதீனமே..!
அடுத்து ஆழ்வார் செயல்பாடுகள் அற்றவை கூட பகவத் அதீனமே என்பதை ‘நின்றிலர், இருந்திலர், கிடந்திலர், திரிந்திலர்’ என்கிறார்.
நிவ்ருத்தியும் அசேதனப் பொருள்களின் ப்ரவ்ருத்தியும்:
ஆழ்வார் தனது பாசுரத்தில் “நின்றிலர், இருந்திலர், கிடந்திலர், திரிந்திலர்” என்று சொல்லும்போது, எந்தவொரு செயலுமே இல்லாத நிலையைக் குறிப்பிடுகிறார். செயல்பாடற்ற இந்த நிலையை வேதாந்தத்தில் நிவ்ருத்தி (निवृत्ति) என்று அழைப்பார்கள்.
உயிருள்ள சேதனர்கள் (चेतनम्) செய்யும் செயல்களான நடப்பது, நிற்பது ஆகியவை பகவான் அதீனம் என்பதை முன்பு பார்த்தோம். ஆனால், அசேதனம் (अचेतनम्) எனப்படும் உயிரற்ற, அறிவற்ற பொருள்களுக்கு எந்தச் செயல்பாடும் (ப்ரவ்ருத்தி) இல்லையா? அவை வெறும் நிவ்ருத்தி நிலையில் மட்டுமே உள்ளனவா?
நிச்சயமாக இல்லை. வெளியிலிருந்து பார்க்க எந்தச் செயலும் இல்லாதது போலத் தோன்றும் அசேதனப் பொருள்களுக்கும் பகவானால் அமைக்கப்பட்ட ஒரு ப்ரவ்ருத்தி (प्रवृत्ति – செயல்பாடு/இயல்பு) உண்டு.
இதை நிஜ வாழ்க்கையின் சில எளிய உதாரணங்கள் மூலம் நாம் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்:
களிமண் பானையும் குளிர்ச்சியும்: ஒரு களிமண் பானை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது ஓர் அசேதனம் (உயிரற்ற பொருள்). அதை ஓர் இடத்தில் வைத்தால், அது அங்கேயே அமைதியாக இருக்கும். நாம் அதைப் பார்த்து “எழுந்து நில்” அல்லது “நடந்து வா” என்றால் அது நிற்கவோ, நடக்கவோ செய்யாது. இது அதன் செயல்பாடற்ற நிலை (நிவ்ருத்தி).
ஆனால், அந்தப் பானைக்கும் ஒரு செயல்பாடு (ப்ரவ்ருத்தி) உண்டு..! என்னது அது? அந்தப் பானையில் நாம் தீர்த்தத்தை (நீரை) கொட்டி வைக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எந்தச் சலனமுமின்றி இருக்கும் அந்தப் பானை, சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தத் தீர்த்தத்தைக் குளிர்ச்சியாக மாற்றுகிறது. அந்தத் தண்ணீரைத் தன் நுண்துளைகள் மூலம் சுவாசித்துக் குளிர்விப்பது அந்தப் பானையின் செயல்பாடு (ப்ரவ்ருத்தி).
சந்தனக் கட்டையும் நறுமணமும்: ஒரு சந்தனக் கட்டை நிலத்தில் கிடக்கிறது. அதற்குத் தானாக நகரும் தன்மையோ, சிந்திக்கும் ஆற்றலோ கிடையாது (நிவ்ருத்தி நிலை). ஆனால், அதை ஒரு கல்லில் உரைத்து நம் உடலில் பூசிக்கொண்டால், அது உடலுக்குக் குளுமையையும், மனதிற்கு இதமான நறுமணத்தையும் தருகிறது. அசையாமல் கிடந்தாலும், தன்னிடம் வருபவர்களுக்குக் குளிர்ச்சியைத் தருவது அதன் உள்-செயல்பாடு (ப்ரவ்ருத்தி).
நெருப்பும் அதன் வெப்பமும்: நெருப்பு என்பது உயிரற்ற அசேதனப் பொருள். அதற்கென்று எந்தச் சுதந்தரமும் இல்லை. ஆனால், விளக்கில் பற்றவைக்கப்படும் நெருப்பு, இருளை அகற்றி ஒளியைத் தருகிறது; விறகில் பற்றவைத்தால் குளிரைப் போக்கி வெப்பத்தைத் தருகிறது. இது அதன் இயற்கைச் செயல்பாடு.
இந்த உதாரணங்கள் நமக்கு உணர்த்தும் ஆழமான வேதாந்த உண்மை என்னவென்றால்:
உயிருள்ள மனிதர்கள் செய்யும் செயல்களான “நின்றனர், இருந்தனர்” எப்படிப் பகவானின் சங்கல்பத்தால் (திருவுள்ளத்தால்) நடக்கிறதோ, அதேபோல எந்தச் செயலும் அற்றதாகக் கருதப்படும் அசேதனப் பொருட்களின் (பானை, சந்தனம், நெருப்பு) நுட்பமான இயல்புகளும், செயல்பாடுகளும் (ப்ரவ்ருத்தி) பகவானின் சங்கல்பத்தாலேயே நடைபெறுகின்றன.
பானையில் உள்ள குளிர்மையும் அவனே; நெருப்பில் உள்ள வெப்பமும் அவனே. எல்லாப் பொருள்களுக்குள்ளும் அவன் அந்தர்யாமியாக (अन्तर्यामी – உள்ளுறைபவனாக) இருந்து அவற்றை இயக்குகிறான்.
ஆக, உயிருள்ள சேதனங்களின் ப்ரவ்ருத்தியும் (செயல்பாடும்), உயிரற்ற அசேதனங்களின் நிவ்ருத்தியும் (செயல்பாடற்ற நிலையும்) எல்லாமே முழுமையாக அந்தப் பரமாத்மாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகவத் அதீனமே (भगवदधीनम्) என்பதே இந்த வரிகளின் விசேஷமான தத்துவார்த்தமாகும்.
ஆக, செயல்பாடுகள் அற்றவை கூட பகவத் அதீனமே என்பதை ‘நின்றிலர், இருந்திலர், கிடந்திலர், திரிந்திலர்’ என்று ஆழ்வார் கூறுவது இப்பாசுரத்தின் இரண்டாம் விசேஷார்த்தம்.
(3) பகவானுக்கு இல்லை என்பதும் உண்டு என்பதின் ஒரு நிலையே..!
இலர் எனும் சொல் இல்லை என்கிற அர்த்தத்தைக் கொடுக்கும். இல்லை என்பதை அபாவம் (अभाव) என்பார்கள்.
பாவம் (भाव) என்றால் உண்டு. அபாவம் என்றால் இல்லை. நம் ஸம்ப்ரதாயத்தில் அபாவம் என்பதும் பாவத்தில் ஒரு வகை தான்..! அதாவது உண்டு என்பதை சொல்லி பிறகு இல்லை என்று சொல்ல வேண்டுமே ஒழிய அடியோடு இல்லை என்பது சொல்லமுடியாது.
பகவானை இல்லை என்று சொல்பவர்கள் கூட முதலில் உண்டு என்று சொல்லிதான், பிறகு இல்லை என்பதை சொல்லமுடியும்.
அது எப்படி..?
தர்க்க சாஸ்த்ரத்தில் (तर्क शास्त्र), இந்த அபாவம் முக்கியமாக மூன்று வகையாக (ஸம்ஸர்க்க அபாவத்தின் பிரிவுகளாக) விளக்கப்படுகிறது:
முதலாவது ப்ராகபாவம் (प्रागभाव ) – முன்னில்லாமை: ஒரு பொருள் உருவாவதற்கு முன் அது இல்லாத நிலை. உதாரணமாக, ஒரு குயவன் களிமண்ணைக் கொண்டு பானை செய்வதற்கு முன்பு, அங்கு பானை இருந்ததா..? அந்தக் களிமண்ணில் பானை இல்லை. இந்த ‘பானை இல்லாமை’ என்பது பானை உருவாகும் வரை மட்டுமே இருக்கும். களிமண் பானையாக உருவானவுடன் இந்த அபாவம் அழிந்துவிடும்.
அதனால் களிமண்ணாக இருக்கும் வரை பானை தெரிவதில்லை. பானையாக மாறிய பின் களிமண் தெரிவதில்லை.
திருமூலர் என்கிற ஆசார்யர் தன் திருமந்திரம் எனும் நூலில் இதை மிக அழகாக விவரிக்கிறார்
மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தன பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தன பார்முதல் பூதம்
என்கிறார்.
ஒரு மரமானது வெட்டி சாய்க்கப்பட்டு கிடந்தது. அதைப் பார்த்தவர்கள் எல்லாம் ‘தேக்கு மரம்’, நன்றாக இருக்கிறது என்றார்கள். அங்கு ஒரு சிற்பி வந்தான். அந்த மரத்தை அழகான ஒரு யானையாக செதுக்கினான். இப்பொழுது அதைப் பார்த்தவர்கள் எல்லாம் ‘யானை எவ்வளவு அழகாக இருக்கிறது” என்றார்கள். மரமாக இருந்தபொழுது யானை தெரியவில்லை. யானையாக செதுக்கியபின் மரம் தெரியவில்லை. அதனால் மரமாய் இருந்தபொழுது யானை இல்லை, யானையாக செதுக்கியபின் மரம் இல்லை..!
அதுபோன்று, இந்த ப்ரபஞ்சத்தைப் பார்த்தால் பகவான் தெரிவதில்லை. பகவானைப் பார்த்தால் ப்ரபஞ்சம் தெரிவதில்லை.
ஹிரண்யகசிபு பகவானே ‘இல்லை’ என்று சொல்லவில்லை; “இல்லை செய்வேன்’ என்றான்.
அடுத்தது ப்ரத்வம்ஸாபாவம் (प्रध्वंसाभाव ) – அழிந்தபின் இல்லாமை: ஒரு பொருள் உருவான பின், அது ஏதோ ஒரு காரணத்தால் அழிந்துவிட்டால் ஏற்படும் ‘இல்லாத’ நிலை.
உதாரணமாக, ஒரு குழத்தை வருகிறது. ஓங்கி ஒரு கொம்பால் அந்த செய்து முடிக்கப்பட்ட பானையை அடிக்கிறது. இப்பொழுது அந்த பானை ஓட்டான்சல்லியாக சிதறிக் கிடக்கிறது.
பானை கீழே விழுந்து உடைந்த பின், அங்கு பானை இல்லை. இந்த இல்லை ப்ரத்வம்ஸாபாவம்
மூன்றாவது அத்யந்தாபாவம் (अत्यन्ताभाव) – முற்றின்மை (முக்காலத்திலும் இல்லாமை):ஒரு பொருள் ஒரு இடத்தில் எக்காலத்திலும் (இறந்த, நிகழ், எதிர்காலங்களில்) இல்லாத நிலை. உதாரணமாக, “காற்றில் உருவமோ அல்லது நிறமோ இல்லை” (வாயுவில் ரூபமில்லை). காற்றுக்கு எப்போதுமே நிறம் கிடையாது. இது நிரந்தரமான அபாவம்.
ஒருவர் ஒரு பெரிய தனிகர் க்ரஹத்தின் வாயிலில் வெகு நேரம் நின்றுக்கொண்டிருந்தார். அந்த பக்கமாக சென்ற மற்றோருவர் இவரிடம் ‘ஸ்வாமி, ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள்..?” என்று கேட்டார்.
அதற்கு அவர் “என் பெண்ணுக்கு கல்யாணம். இவர் பெரிய தனவான் என்று சொன்னார்கள். இவரிடம் யாசிக்கலாம் என்று வந்தேன்” என்றார்.
அதற்கு அந்த மற்றொருவர் “இவர் வீட்டிலா..? இங்கு கொடை – கொடுப்பது என்பது அத்யந்தாபாவம் ஆயிற்றே என்றார்..!
என்ன அர்த்தம் ..? அங்கு தானம் செய்வது என்பது எப்பொழுதும் இல்லை என்பது.
ஆழ்வார் இந்த தத்துவத்தை நின்றிலர், இருந்திலர், கிடந்திலர், திரிந்திலர் என்கிறார். அதாவது, எம்பெருமானுக்கு நம்மைப் போல கர்மாவினால் வரும் லௌகீகமான நிற்பது, இருப்பது, கிடப்பது போன்ற செயல்கள் முக்காலத்திலும் இல்லை (अत्यन्ताभाव – அத்யந்தாபாவம்). ஆனால், அவனுக்கு திவ்யமான, कल्याण गुण – கல்யாண குணங்களோடு கூடிய அருளப்பாடு (भाव – பாவம்) எப்போதுமே உண்டு. ஆக, லௌகீகச் செயல்களின் அபாவத்தைச் சொல்லி, அவனது திவ்யமான இருப்பை (பாவம்) நிலைநிறுத்துகிறார் ஆழ்வார் இங்கு.
அதனால், பகவத் விஷயத்தில் இல்லை என்பதும் உண்டு என்பதின் ஒரு நிலையே என்பது இந்த பாசுரத்திலே காட்டித்தரப்படும் மூன்றாம் விசேஷார்த்தம்.
(4) ஸ்தாவரங்களின் செயல்பாடுகளும் பகவத் அதீனமே..!
பகவான் ராமனை ஸ்வாமி தேஶிகன் ‘ஜங்கம பாரிஜாதன்’ என்கிறார். அதாவது பாரிஜாத மரமானது ஒரே இடத்தில் இருக்கும். நாம் அதன் அருகில் சென்றால் அதன் உயர்ந்த பாரிஜாத மலரின் வாசனை நமக்கு கிடைக்கும். பகவான் ராமனோ ரிஷிகள் இருக்கும் இடத்திற்கு தான் நேரே சென்று அவர்களுக்கு அனுக்ரஹம் செய்தான். அதனால் நடமாடும் பாரிஜாதம் என்று பொருள்படும்படி ஜங்கம பாரிஜாதன் என்கிறார்.
அதனால் தாவர வர்கங்கள் (स्थावर – ஸ்தாவரங்களின்) உயிருள்ளவை. அவை ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும். அவற்றால் உட்கார முடியாது, நடக்க முடியாது, கிடக்க முடியாது. அவைகளும் பகவத் அதீனமே என்பதை இருந்திலர், கிடந்திலர், திரிந்திலர் என்பதன் மூலம் சொல்கிறார்.
ஸ்தாவரங்களின் செயல்பாடுகளும் பகவத் அதீனமே என்பது இப்பாசுரத்திலே காட்டித்தரப்படும் நான்காம் விசேஷார்த்தம்
(5) ப்ரவ்ருத்தியை சொன்ன விடத்தில் நிவ்ருத்தியையும் சொல்ல வேண்டும்
எம்பார் என்கிற ஆசார்யரிடம் ஒருவர் கேட்டார் ‘ ஸ்வாமி ப்ரவ்ருத்தி அதாவது செயல்பாடுகள் பகவத் அதீனம், அதன் எதிர் மறையான நிவ்ருத்தியை தனியாக சொல்ல வேண்டுமா..? ஒரு கல்லை தூக்கி மேலே எறிகிறோம் அது கீழே விழுந்தது என்பதை சொல்ல வேண்டுமா..? அல்லது அந்த கல் கீழே விழா விட்டால் அது பகவத் சங்கல்பம் என்று கொள்ள வேண்டுமா..? என்றார்.
அதற்கு எம்பார் ‘ ஸ்வர்கத்தில் நின்றும் விழுகிற த்ரிசங்குவை ஶக்திமாந் நிற்கச்சொல்ல நிற்க வேண்டிற்று கண்டாயே; அப்படியே நிவ்ருத்திகும் அவன் வேணுங்கான்‘ என்று சமாதானம் சொன்னார்.
அதாவது த்ரிசங்கு என்று ஒருவன் இருந்தான்…
த்ரிசங்கு இக்ஷ்வாகு குலத்தைச் சேர்ந்த ஒரு அரசன். அவன் தன் பூத உடலோடு (சரீரத்தோடு) ஸ்வர்க்கம் செல்ல விரும்பினான். வஸிஷ்டர் முதலான முனிவர்கள் மறுக்கவே, விச்வாமித்ரரைச் சரணடைந்தான்.
விச்வாமித்ரர் தனது அளப்பரிய தபோபலத்தினால் அவனை உடலோடு ஸ்வர்க்கத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால், இந்திரனும் தேவர்களும், “மானிட உடலோடு இங்கு வர யாருக்கும் அனுமதி இல்லை” என்று கூறி அவனைத் தலைகீழாகப் பூமியை நோக்கித் தள்ளிவிட்டார்கள். மேலே இருந்து அவன் கீழே வேகமாக விழும் அந்தச் செயல்பாடுதான் இயற்கை விதியின்படியான ப்ரவ்ருத்தி (प्रवृत्ति).
தலைகீழாகக் கீழே விழுந்துகொண்டிருந்த த்ரிசங்கு அபயக்குரல் எழுப்ப, விச்வாமித்ரர் தன் தபோ பலத்தால் அவனை “நில்! நில்!” என்று கட்டளையிட்டு, விழும் வேகத்தைத் தடுத்து அந்தரத்திலேயே அப்படியே நிற்கச் செய்தார். கீழே விழுந்துகொண்டிருந்தவன் அந்தரத்தில் எந்தச் செயலுமின்றி ஸ்தம்பித்து நின்றதுதான் நிவ்ருத்தி (निवृत्ति).
இதிலிருந்து எம்பார் ஸ்வாமி விளக்கும் தத்துவம் என்னவென்றால்: ஒரு கல் மேலே வீசப்பட்டு அது இயல்பாகக் கீழே விழுவது (ப்ரவ்ருத்தி) எப்படி இயற்கையோ, அதேபோல விழவேண்டிய கல் அந்தரத்திலேயே நிற்கிறது என்றால் (நிவ்ருத்தி), அந்தச் செயல்பாடற்ற நிலையை நிலைநிறுத்தவும் ஒரு சக்தி வாய்ந்தவரின் கட்டளை தேவைப்படுகிறது.
த்ரிசங்குவின் நிவ்ருத்திக்கு விச்வாமித்ரரின் சக்தி எப்படித் தேவைப்பட்டதோ, அதுபோலவே அகிலாண்ட கோடி பிரம்மாண்டங்களில் உள்ள அனைத்து அசேதனப் பொருள்களின் நிவ்ருத்திக்கும் (செயல்பாடற்ற நிலைக்கும்) எம்பெருமானின் திருவுள்ளம் (सङ्कल्पम् – ஸங்கல்பம்) மிகவும் அவசியம்.
ஆக, உலகப் பொருட்களின் செயல்பாடுகளும் (ப்ரவ்ருத்தி), செயல்பாடற்ற நிலையும் (நிவ்ருத்தி) ஆகிய இரண்டுமே முழுமையாக எம்பெருமானின் கட்டுப்பாட்டில்தான் (भगवदधीनम् – பகவத் அதீனம்) உள்ளன என்பதே இந்த உரையாடலின் ஆழமான கருத்தாகும்.
அதனால், ப்ரவ்ருத்தியை சொன்ன விடத்தில் நிவ்ருத்தியையும் சொல்ல வேண்டும் என்பது இப்பாசுரத்திலே காட்டித்தரப்படும் ஐந்தாம் விசேஷார்த்தம்
(6) பகவானுக்கும் நமக்கும் பாலமாக இருப்பது வேதம்.
பகவான் செய்யும் செயல்கள் எல்லாம் வேதத்தை அடியொற்றியே இருக்கும். நாமும் பகவானை தெரிந்நுகொள்ள வேதத்தை அடியொற்றியே செல்ல வேண்டும் என்பதை ‘எம் திடர்‘ என்கிறார் ஆழ்வார். ஸமஸ்க்ருதத்தில் ‘த்ருடம்‘ என்கிற சொல்லை ஆழ்வார் திடர் என்று தமிழ் படுத்துகிறார். அதனால் எம் திடர் என்றால் ‘த்ருடமான வேதப் ப்ரமாணத்தினால் சித்திப்பவன் – அறியப்படவேண்டியவன் பகவான்‘ என்கிறார்.
ஸ்ரீ பராசர பட்டர் , ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் எனும் உயர்ந்த ஸ்லோகங்களில் ஆழ்வாரின் ‘எம் திடர் – வேதத்தைக் கொண்டு அறியப்படவேண்டியவன் பகவான்” என்பதை விசேஷமாகச் சொல்கிறார்
आदौ वेदाः प्रमाणं स्मृतिरुपकुरुते सेतिहासैः पुराणैः न्यायैस्सार्धं त्वदर्चाविधिमुपरि परीक्षीयते पूर्वभागः ऊर्ध्वो भागस्त्वदीहागुणविभवपरिज्ञापने त्वत्पदाब्जौ वेद्यो वेदैश्च सर्वैरहमिति भगवन् सेन शौ याच कर्ता ஆதெள வேதா: ப்ரமாணம் ஸ்ம்ருதிர் உப குருதே ஸேதிஹாஸை: புராணை: ந்யாயைஸ் ஸார்த்தம் த்வதர்ச்சா விதி முபரி பரீக்ஷீயதே பூர்வ பாக: ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரி ஞாபநே த்வத் பதாப்தெள வேத்யோ வேதைஸ் ச ஸர்வை: அஹமிதி பகவந் ஸே ந சௌ யாச கர்தா
நம்முடைய ஸம்ப்ரதாயத்திற்கு, மதத்திற்கு ஆணி வேர் மூலமானது வேதம்.
ஆதெள வேதா : ப்ரமாணம் ..!
முதல் ப்ரமாணம் எது? அப்படின்னா வேதம் தான். அதாவது மாணம், ப்ரமாணம், பரம ப்ரமாணம், மேயம், ப்ரமேயம், பரம ப்ரமேயம் என்று சொல்வார்கள் பெரியோர்கள்.
இப்பொழுது பாருங்கள் ! …..” மாணம் ” என்றால் எதை நாம் உணர வேண்டுமோ, அதை உணர்த்தும்படியான ஸாதனத்திற்கு ” மாணம்” என்று பெயர். இதைக் கொண்டு தான் அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஸாதனமாக, கருவியாக இருக்கின்றதே, அதற்கு ” மாணம்” என்று பெயர். அதில் உயர்ந்தது ” ப்ரமாணம் “. தந்நிகரற்றது. பரம ப்ரமாணம்,
மேயம், நாம் அறிய வேண்டிவற்றுள்ளே சிறந்தது. ப்ரமேயம் என்றால் மிகவும் சிறந்தது. பரம ப்ரமேயம் என்றால் அதற்கு நிகரில்லாதது, உயர்ந்தது என்று அர்த்தம். பரம ப்ரமாணம் எது? என்றால் வேதம்.
வேதமாகிற பரம ப்ரமாணத்தைக் கொண்டு பரம ப்ரமேயமாகிற பரப்ரஹ்மத்தைக் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பரம ப்ரமாணமாகிற வேதத்தைக் கொண்டு தான் பரம ப்ரமேயம், நாம் அடைய வேண்டிய அந்த பரப்ரஹ்மத்தினுடைய தன்மையை, உணர வேண்டும் என்று மஹான்களான ஆசார்யர்கள் விவரிக்கிறார்கள். ஆகையால் அவனை உணர அந்த வேதத்தைத் தான் நாம் பார்க்க வேண்டும்.
ஆகையினால மேம்பட்டவன் இல்லாத அந்த சர்வேஸ்வரனுடைய பிரபாவத்த நாம் தெரிந்து கொள்ளணும்னா, அவனை விளக்குவதிலே, அவனை காட்டுவதிலே, உயர்ந்ததாய் அதை காட்டிலும் மேம்பட்டது இல்லாததாய் இருக்கும்படியான வேதத்த தான் பார்க்கணும்..!!
அதனால் எம் திடர் என்பதன் மூலம் பகவானுக்கும் நமக்கும் பாலமாக இருப்பது வேதம் என்று ஆழ்வார் சொல்வது இப்பாசுரத்தில் ஆறாவது விசேஷார்த்தம்.
(7) முதல் பதம் கடைசி பதம் சேர்த்து நின்ற திடர் ~ திடர் நின்ற என்று பொருள் காணலாம்.
நின்ற திடர் எனும் பொழுது பகவான் நமக்கு பலனளிப்பதில் த்ருடமாக உறுதியாக இருக்கின்றான் என்று பொருள் கிடைக்கும்.
பகவான் கீதை எதற்குச் சொன்னான்..? அர்ஜுனன் மேம்படுவதற்காகவா ..? அர்ஜுனனைப் போன்று மனம் கலங்கி நிற்கும் நம்மை மேம்படுத்தி, சிறந்த பலனாகிய மோக்ஷத்தை நமக்கும் கொடுப்பதற்காக..! அதனால் பகவான் நமக்கு பலனளிப்பதில் த்ருடமாக உறுதியாக இருக்கின்றான் என்பதை நின்ற திடர் என்கிற வாக்கியம் காட்டுகிறது
திடர் நின்ற என்று எடுத்துக்கொண்டால் பகவான் நம்மை ரக்ஷிப்பான் என்பதில் நாம் மஹா விஸ்வாசத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் காட்டும்.
அதனால் பகவத் அனுக்ரஹம் கிடக்க மஹா விஸ்வாஸம் வேண்டும், மஹா விஸ்வாசம் வர வேண்டும் என்றால் பகவத் அனுக்ரஹம் வேண்டும்.
பகவத் கீதையில் ஞான நிஷ்டையில் நான்கு வகை என்று பார்த்தோம்.
இதிலே யதமாந சம்ஜ்ஞை என்கிற முதல் நிலையை முதல் பாசுரத்திலே அனுபவித்தோம். அதிலே தொடர்ந்து இரண்டாவது நிலை வியதிரேக சம்ஜ்ஞை என்பது, மூன்றாவது ஏகேந்திரிய சம்ஜ்ஞை என்பது, நான்காவது வசீகார சம்ஜ்ஞை என்பது.
பகவான் அர்ஜுனனிடம் சொல்லும்போது இந்த நான்கு நிலையும் எளிதில் கிடைக்காது என்கிறான்.
विषया विनिवर्तन्ते निराहारस्य देहिनः । रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते ॥ விஷயா விநிவர்தந்த நிராஹாரஸ்ய தே₃ஹிந: ரஸவர்ஜம் ரஸோಽப்யஸ்ய பரம் த்₃ரு’ஷ்ட்வா நிவர்ததே (பகவத் கீதை 2.59)
பொருள்: “புலனின்பப் பொருட்களை அனுபவிக்காமல் தடுத்து நிறுத்தும் உடலுடையவனுக்கு (ஜீவாத்மாவுக்கு), அப்பொருட்கள் விலகிப் போகின்றன; ஆனால், அவற்றின் மீதான ஆசை விலகுவதில்லை. அந்த ஆசையும் கூட, பரம்பொருளான எம்பெருமானைத் தரிசித்தவுடனேயே முற்றிலுமாக நீங்கிவிடுகிறது” என்கிறான் கீதாசார்யன்.
ஸ்ரீபகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயத்தில் (ஸாங்க்ய யோகம்), ஒரு ஸ்திதப்ரக்ஞனின் – உறுதியான அறிவுடையவனின் தன்மைகளை ஸ்ரீகிருஷ்ணன் படிப்படியாக விளக்குகிறான்.
நாம் நம்முடைய – இந்த்ரிய (इन्द्रिय – புலன்கள்) களை அடக்க வேண்டும் என்று நினைத்து, கட்டாயப்படுத்தி விரதம் (நிராஹாரம்) போன்ற கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இதனால் வெளியில் உடல் அளவிலான செயல்பாடுகள் நின்றுவிடும். அதாவது விஷய (विषय – புலனின்பப் பொருள்கள்) நம்மை விட்டு விலகியது போலத் தோன்றும்.
ஆனால், மனதின் ஆழத்தில் அவற்றின் மீதான ரஸம் (रस – சுவை அல்லது ஆசை) அப்படியே மறைந்திருக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும்போது அது மீண்டும் வீரியத்துடன் மேலெழுந்து வரும்.
அப்படியானால் இந்த உள்ளுறையும் ஆசையை எப்படி வேரறுப்பது..?
அதற்கான வழியைத்தான் “பரம் த்ருஷ்ட்வா” என்று கீதாசார்யன் காட்டுகிறான்.
பரமாத்மா (परमात्मा) வாகிய எம்பெருமானின் எல்லையற்ற – கல்யாண குணங்களை (कल्याण गुण) அனுபவித்து, அவனது திவ்ய மங்கள விக்ரஹத்தைத் தரிசிக்கும்போது, இந்த அற்பமான உலக இன்பங்களின் மீதான சுவை தானாகவே அழிந்துவிடும்.
அதாவது, உயர்ந்த ஒரு சுவையை (பகவத் அனுபவத்தை) அடையும்போது, தாழ்ந்த சுவைகள் (லௌகீக ஆசைகள்) தாமே உதிர்ந்துவிடும். இதுவே உண்மையான வைராக்யம் (वैराग्य – பற்றின்மை) ஆகும்
உதாரணத்திற்கு, ஓர் அறையில் இருள் சூழ்ந்திருக்கிறது. நாம் ஒரு துடைப்பத்தை எடுத்து அந்த இருளை அடித்து விரட்ட முடியுமா? அல்லது இருளைக் கையால் அள்ளி வெளியே வீச முடியுமா? முடியாது. ஆனால், அந்த அறையில் ஒரு சிறிய தீபத்தை (दीपम् – விளக்கை) ஏற்றினால் போதும்; இருள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.
அதுபோலவே, மனதிற்குள் இருக்கும் ஆசைகளை வெறும் கட்டுப்பாடுகளால் மட்டும் விரட்ட முடியாது. எம்பெருமானின் திருவருள் என்கிற ஞான தீபத்தை ஏற்றினால், அஞ்ஞான இருளும் உலக ஆசைகளும் அடியோடு அகன்றுவிடும்.
ஆக, வெறும் புலனடக்கத்தால் மட்டும் ஆசைகளை வெல்ல முடியாது, எம்பெருமானின் – ஸ்ரீபாதங்களை (श्रीपाद – திருவடிகளை) உறுதியாகப் பற்றிக்கொள்வதன் மூலமே உலக விஷயங்களில் உள்ள சுவையை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்பதே இச்சுலோகம் காட்டும் மிக உயர்ந்த தத்துவமாகும்.
அதனால் பகவத் அனுக்ரஹம் கிடக்க மஹா விஸ்வாஸம் வேண்டும், மஹா விஸ்வாசம் வர வேண்டும் என்றால் பகவத் அனுக்ரஹம் வேண்டும்.
அதனால் திடர் நின்ற என்பதன் மூலம் பகவான் நம்மை ரக்ஷிப்பான் என்பதில் நாம் மஹா விஸ்வாசத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் காட்டும்.
ஆக, பகவான்தான் நம்மை ரக்ஷிக்கிறான் என்பதில் உறுதியாக நின்று மஹாவிஶ்வாஸத்துடன் அவன் துயரரு சுடரடி பற்றுவோற்கு குறையொன்றுமில்லையே!!
ஆழ்வார் எம்பெருமானார் தேஶிகன் அழகியஶிங்கர் திருவடிகளே ஶரணம்
நம்ஸ்வாமி திருவடிகளே ஶரணம்