ஶ்ரீ:
ஶ்ரீமதே ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம:
குறையொன்றுமின்றி நிறைவுடன் வாழ மறை உரைக்கும் முறை
( 1 ) உம்
(ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மிநரஸிம்ஹாசாரியாரின் உபன்யாஸங்களிலிருந்து தொகுக்கப்பட்ட வேத மணித்துளிகள்)
(தொகுப்பு: ஶ்ரீ உ.வே முக்கூர் ஶ்ரீநிவாஸன்)

1. உரைக்கவல்லார்க்கும் நினைக்கவல்லார்க்கும் வைகுண்டம் ஆகும் தம்மூரெல்லாம்!
2. விஷ்ணு என்று சொன்னால் அது திருநாமம். “ௐ விஷ்ணவே நம:” என்றால் அதுவே மந்த்ரமாகிவிடுகிறது. ஆறு அக்ஷரங்களுடன் கூடிய உயர்ந்த மந்த்ரம் இது. ஒரு புஷ்பத்தை அல்லது துளஸி தளத்தை எடுத்து “ௐ விஷ்ணவே நம:” என்று அர்ச்சனை செய்தோமானால் அந்த எம்பெருமான் பரமானந்தத்தை அடைகிறான்.
3. துளசியை ஜாக்கிரதையாக நகம் படாமல் க்ரஹிக்க வேண்டும். அவ்வாறு க்ரஹிக்கும்போது ‘துளசி! அமிர்த ஜன்மாஸி! சதாத்வம் கேஸவப்ரியே‘ என்று சொல்லி க்ரஹிக்க வேண்டும்
4. புஷ்பத்தையோ, துளசியையோ எடுத்து ஹ்ருதயத்துக்கு நேரே வைத்து, இந்த என் ஹ்ருதயம் அமிர்தமயமானது, இந்த ஹ்ருதயத்தை உனக்கு சமர்ப்பிக்கிறேன், என்னையே உனக்கு சமர்ப்பிக்கிறேன் என்று அவன் திருவடியில் அர்ப்பணம் பண்ண வேண்டும்
5. அவ்வாறு அர்ப்பணம் செய்யும் பொழுது கீழ் வரும் ஸ்லோகத்தின் பொருளை நினைவுகூர்ந்து புஷ்பத்தை சேர்க்க வேண்டும்
அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம்
புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ:
ஸர்வ பூத தயா புஷ்பம்
க்ஷமா புஷ்பம் விசேஷத:
சாந்தி: புஷ்பம் தப: புஷ்பம்
ஞானம் புஷ்பம் ததைவச
சத்யம் அஷ்டவிதம் புஷ்பம்
விஷ்ணோ: ப்ரீதி கரம்பவேத்
6. சத்யம் பகவானுக்கு மிக உகந்த புஷ்பம். மனுஸ்ம்ருதி “சத்யமே பேசு. சத்தியத்தையும் ப்ரியமாக பேசு. உண்மையை புண்படும்படி சொல்லாதே, அதே சமயத்தில் ப்ரியத்தினால் கூடப் பொய்யைச் சொல்லாதே. இதுவே உன் தர்மமாக இருக்கட்டும்” என்று சொல்கிறது.
7. ‘விஷ்ணவே நம:‘ என்று சொல்லி அர்ச்சிக்கும்போது மேலே சொன்ன எட்டும் நம்மிடம் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உணர்ந்து அர்ச்சனை செய்தால் இந்த எட்டு விதமான புஷ்பங்களும் – அதாவது குணங்களும் நமக்கு வந்துவிடும்.
8. நாம் ஒரு புஷ்பத்தை கொடுக்கிறோம். ஒரு நாமாவை சொல்கிறோம். அவன் எட்டு மடங்காக திருப்பித் தருகிறான். அவ்வளவு காருண்யம் அவனுக்கு. இவ்வாறு பலன் என்னவென்று தெரிந்து கொண்டு அர்ச்சனை செய்கிறோம். பலன் கிடைக்கவில்லை என்றால் நிஷ்டை போறவில்லை என்று அர்த்தம். மீண்டும், மீண்டும் பலன் சித்திக்கும்வரை நிஷ்டையுடன் முயற்சி செய்ய வேண்டும்.
9. வியாஸ மஹரிஷி கொடியதென்று சொல்லக்கூடிய கலியுகத்தை ‘சாது’ என்கிறார். ஏனென்றால், சுத்தமான மந்தரோச்சாரணத்தை மனம் லயித்துக் கேட்டால், ஒரு அசுவமேத யஜ்ஞம் செய்தால் பெறக்கூடிய பலனை இந்த கலியுகத்தில் பெற்றுவிடலாம். இவ்வளவு சுலபமான முறையில் ஒரு நிபந்தனை இருக்கிறது. அது ‘மனம் லயித்து’ என்பது!
10. மனம் லயிக்க வேண்டுமென்றால் ப்ராணாயாம பலம் இருக்க வேண்டும். ப்ராணாயாமம் என்பது மூச்சை இழுத்து வெளியிடும் பயிற்சி என்று எளிமையாக சொல்லலாம். ஆனால், இழுத்த மூச்சை உள்ளே தேக்கி வைக்கிற காலம் (நேரம்) மிகவும் முக்கியம். அந்த நேரம் அதிகமாகிக்கொண்டே வரவேண்டும். அப்பொழுது மனம் கட்டுப்படும்.
11. மல்லிக்கொடி மாதிரி ஆடுகிற மனத்தை ப்ராணாயாமத்தில் நிறுத்தி, எம்பெருமான் என்கிற அந்த கொம்பில் அதாவது அவன் திருவடியில் கொண்டு சுற்றி விட்டு விட்டால் அது பற்றிக்கொண்டு படரும்.
12. ஸ்த்ரீகளும் ப்ராணாயாமம் செய்யலாம். மந்திரம் கூறி செய்யாமல், ஸ்லோகம் மூலம் பயிற்சி செய்யலாம். ராம மாதா கௌஸல்யா தேவி ப்ராணாயாமம் செய்திருக்கிறாள். அவள் பெற்ற பலன் உயர்ந்தது.
13. அவ்வாறு ப்ராணாயாம பலத்துடன் மனம் லயித்து அவனைப் பெற எட்டினால் எல்லாமே கிட்டி நிற்கும். எட்டினால் எட்டாததே கிடையாது.
14. எட்டு என்பது பகவான் நாமாவான “ௐ நமோ நாராயணாய” என்பதைக் குறிக்கிறது. எதையெல்லாம் அது தருகிறது என்று கேட்டால்,
குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயராயினவெல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வளம் தரும் மற்றும் தந்திடும்
பெற்றதாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம் ||
(பெரிய திருமொழி 1.1.9)
15. நாராயணா என்னும் நாமம் மோக்ஷத்தையே வாங்கிக்கொடுக்கும்
16. இந்த சரீரத்தில் நாம் மோகம் வைக்ககூடாது. ஆதிசங்கரர் சொன்னதை நாம் அப்படியே மனதிலே எழுதிக்கொள்ள வேண்டும்.
அதாவது ” யார் மோக்ஷத்திற்கு அதிகாரி?”
“எவனொருவன் உயிரோடு இருக்கும்பொழுதே தன் சரீரத்தை பிணமாக நினைக்கிறானோ, அவனே மோக்ஷத்திற்கு அதிகாரி!” என்று சொன்னார்.
17. நம் உள்ளுக்குள்ளே பரமாத்மா எழுந்தருளியிருக்கிறான். எங்கும் ப்ரவேசிக்ககூடியவன் நமக்குள்ளேயும் இருக்கிறான், அசேதனங்களுக்கு உள்ளேயும் இருக்கிறான் என்கிற உயர்ந்த சாஸ்த்திரத்தை உணர வேண்டும்
18. நமக்குள்ளே இருப்பவனை ஆசார்யர்களால் கொடுக்கப்பட்ட மந்திரத்தின் மூலமாக பார்க்கலாம்.
19. ஒரு மந்திரத்தை நாமாக எடுத்து புத்தகத்தில் படித்து மனப்பாடம் பண்ணக்கூடாது. அதை அவ்வாறு மனப்பாடம் செய்து ஜபம் பண்ணிணால் ஒருநாளும் பலனைக் கொடுக்காது. ஆசார்யனிடத்தில் சென்று அடிபணிந்து அவர் உபதேசம் பண்ணிய பிற்பாடுதான் அந்த மந்த்ரத்தை நாம் அனுஷ்டானத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.
20. மந்திரத்தினிடத்திலும், மந்திரத்தின் உள்ளீடான தேவதையின் இடத்திலும், அம்மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனிடத்திலும் சமமான பக்தி நமக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் அது சித்தியை கொடுக்கும். அதாவது பூர்ண பலனைக் கொடுக்கும்.
21. காயத்ரீ மந்திரத்தை யார் நன்றாக கானம் பண்ணுகிறார்களோ, அவர்களை அம்மந்திரம் ரக்ஷிக்கிறது. அஷ்டாக்ஷரமும் அவ்வாறே ரக்ஷிக்கும். புருஷர்கள் காயத்ரியை சொன்னபின் அஷ்டாக்ஷரம் சொல்ல வேண்டும்.
22. ப்ரணவத்தை க்ருஹஸ்தர்கள் தனியாக உச்சரிக்ககூடாது. மந்திரத்துடன் சேர்த்து உச்சரிக்கும்பொழுது மூன்று மாத்திரையிலே உச்சரிக்க வேண்டும். ஸ்த்ரீகள் ப்ரணவத்தை ‘அம்’ என்று உச்சரிக்க வேண்டும்.
23. சாஸ்திரத்தை மீறி, தனக்கு தோன்றியபடி ஒருவன் காரியம் செய்வானேயானால் அவனுக்கு சித்தி ஏற்ப்படாது. இது பகவானுடைய வாக்கு.
24. பகவானுக்கு கோபத்தை வரவழைக்காமல் நாம் சாஸ்த்திர வழியோடு வாழ வேண்டும்.
25. ஆயிரம் தாய் தந்தையரின் அன்பைக் காட்டிலும் மேலானது சாஸ்த்திரம் நம்மீது காட்டும் அன்பு.
26. சாஸ்த்திரம் தவறாமல் வாழ்கிறவனை நோக்கி எல்லா நலன்களும் பலன்களும் ஓடி வருகின்றன. அவன் செல்கின்ற இடமெல்லாம் சிறப்பு ஏற்படும்.
27. நமது ஸம்பிரதாயத்தில் ஞானத்தைக் காட்டிலும் ஆசாரத்திற்கும் அனுஷ்டானத்திற்கும் விசேஷ கௌரவம் தரப்படுகிறது.
28. ஒருவர் ஆசாரமாக இருந்து அனுஷ்டித்தால்தான் மற்றவர்கள் அனுஷ்டிப்பார்கள். இல்லையென்றால் ‘அவரே அனுஷ்டிக்கவில்லை, நான் எதற்கு அனுஷ்டிக்க வேண்டும் ..?’ என்று கேட்பார்கள்.
29. அனுஷ்டானத்தில் ஸூரியனை பார்ப்பது மிகவும் முக்கியம். ஸூரியனை யார் முதலில் பார்க்கிறார்களோ அவர்கள் உயர்ந்தவர்கள். ஆகையால், நாம் ஸூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து அவன் வருவதை எதிர் நோக்கி வணங்க வேண்டும்.
30. பகவான் ராமாவதாரத்திலே ஸூரிய குலத்திலே உதித்தான். க்ருஷ்ணாவதாரத்திலே ஸூரியனை முதலில் பார்க்கும் குலத்திலே வளர்ந்தான்.
31. அப்படிப்பட்ட ஸூரியனை தனது வலது நேத்ரமாக உடையவன் லக்ஷ்மீந்ருஸிம்ஹன்!
32. ஓம்காரத்தில் முதலாவதாக வரும் அகார ரூபமாய் விளங்குபவன், ஸூரியனை நேத்ரமாக உடையவன், உம் என்கிற அக்ஷரத்திலே உறைபவன், அடிபணிந்தவர்களுக்கு அபய வரதனாய் இருப்பவன் நம் மட்டபல்லி ஸ்ரீ யோகாநந்த லக்ஷ்மிந்ருஸிம்ஹன். அவனே “ஸகலம் பத்ரமச்நுதே” என்று சர்வ மங்களங்களையும் வழங்கக்கூடியவன். அவனை இவ்வுயர்ந்த நன்னாளில் போற்றி வழிபட்டு ஸகல ஸம்பத்துக்களையும் பெறுவோம் ..!
|| ஸகலம் பத்ரமச்நுதே! ||
ஶ்ரீ:
ஶ்ரீமதே ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம:
குறையொன்றுமின்றி நிறைவுடன் வாழ மறை உரைக்கும் முறை
( 2 ) க்ரம்
(ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மிநரஸிம்ஹாசாரியாரின் உபன்யாஸங்களிலிருந்து தொகுக்கப்பட்ட வேத மணித்துளிகள்)
(தொகுப்பு: ஶ்ரீ உ.வே முக்கூர் ஶ்ரீநிவாஸன்)

1. ‘அ’ என்கிற அக்ஷரத்திலும் ‘க்ரம்‘ என்கிற அக்ஷரத்திலும் பரமாத்மா உறைகிறான் என்பதை நன்கு உணர வேண்டும். உலகில் எல்லாவற்றிற்கும் காரணமும் – அகாரணமும் அவனே. காரியமும் – அகாரியமும் அவனே. அகாரணம் என்றால் காரணமில்லை என்று அர்த்தம் அல்ல. ‘அ‘ என்கிற அக்ஷரத்திற்கு காரணமானவன், உரியவன் என்று பொருள்.
2. ஒரு பானை உருவாக்க மண், மனித சக்தி மற்றும் தண்டம் (கொம்பு) – சக்ரம் முதலியவை தேவை. மண் என்பது பானைக்கு மூலம். அதனால் பானை உருவாக்குவதில் மண் உபாதான காரணம் எனப்படும். மனித சக்தி பானையை உருவாக்குகிறது. அதற்கு நிமித்த காரணம் என்று பெயர். அவ்வாறு பானை உருவாக்க பயன்படுத்தப்படும் கருவிகளான தண்டம் சக்கரம் முதலானவை ஸஹகாரி காரணங்களாகும். நமக்கு எந்த காரியத்தை எடுத்தாலும் காரணங்கள் வேறு வேறாக இருக்கும்.
3. பகவானுடைய விஷயத்தில் எல்லாம் ஒரே காரணமாக இருக்கும். இந்த உலகமானது பானை செய்யும் செயல் போன்று என்று எடுத்துக்கொண்டால் உபாதான காரணம், நிமித்த காரணம், ஸஹகாரி காரணம் எல்லாமே பரமாத்மாதான். அவனைத் தவிர வேறொன்றும் காரணமில்லை.
4. அதனால் ‘வ்யாப்ய, வ்யாபக ரூபேன‘ என்று ‘ஸர்வத்திற்கும் காரணமான பரமாத்மாவை உணர வேண்டும். அந்த பரமாத்ம ஞானம் ஏற்படவேண்டும்‘. இந்த உலகம் என்கிற காரியம் அவனே. இந்த உலகத்தை உருவாக்குபவனும் அவனே. இந்த உலகத்தில் நிறைந்திருப்பவனும் அவனே. ஒன்றாக இருக்கும் அவன் பலவாகக்கடவேன் என்று ஸங்கல்பிக்கிறான். எங்கும் நிறைகிறான்! நரஸிம்மாவதாரம் இதற்கு நிதர்ஸனம்.
5. ஆகையால் கிடைத்ததற்கரிய ஆறு அறிவுடன் கூடிய இம்மனித ஜன்மா நமக்கு அமைந்திருக்கும்பொழுது, அதை வீணாக்காமல் ‘பரப்ரும்ம விசாரம்‘ பண்ண வேண்டும். அதாவது பரமாத்ம ஸ்வரூபத்தை த்யானம் பண்ணவேண்டும். இந்த உலகமெல்லாம் எதனிடமிருந்து உண்டாயிற்றோ, எதனால் இது நிலை பெறுகிறதோ, எதில் சென்று முடிகிறதோ அதை உணர வேண்டும்.
6. அவ்வாறு உணர்வதற்கு தவம் செய்ய வேண்டும். பகவானுடைய திவ்ய குணங்களை காட்டும் திருநாமங்களை ‘மனம் லயித்து‘ த்யானம் செய்வது, அல்லது அவனுடைய திருநாமங்களை ஜபம் செய்வது, அல்லது கூடியிருந்து நாம ஸங்கீர்த்தனம் செய்வது போன்றவை தவம் ஆகும். இவை எல்லாவற்றிலும் ‘மனம் லயித்து’ என்பது முக்கியம்.
7. மனம் லயிக்காமல் செய்யக்கூடிய தவத்தினால் பகவானை உணரமுடியாது. அலைபாய்ந்துக் கொண்டிருக்கிற மனதை நிலை நிறுத்தி அவனை உணர நமது சரீரத்தில் உள்ள ‘ஐந்து கோசங்களில் சுத்தி‘ ஏற்படவேண்டும்.
8. நமது சரீரத்தில் அன்னமய கோசம், ப்ராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்று ஐந்து கோசங்கள் உள்ளன. இவையனைத்திலும் சுத்தி ஏற்பட்டால்தான் பரப்ரும்ம விஷயம் புலப்படும். இல்லையென்றால் சாமான்ய விஷயங்கள்தான் புலப்படும்.
9. அன்னமய கோசத்தில் சுத்தி ஏற்பட நாம் உபவாசாதிகள் மற்றும் விரதங்கள் இருந்து நாம் தினமும் உட்கொள்ளும் சாமான்ய அன்னத்தை குறைக்க வேண்டும். பரப்ரும்மம் என்கிற உயர்ந்த அன்னத்தை இட்டு வளர்க்கவேண்டும்.
10. ப்ராணமய கோசத்தில் சுத்தி ஏற்பட ப்ராணாயாமம் செய்ய வேண்டும். சந்தியாவந்தன காலத்தில் பத்து ப்ராணாயாமங்களாவது செய்யவேண்டுமென்று நியமிக்கப்பட்டிருக்கிறது. ப்ராணமய கோசத்தில் சுத்தி ஏற்பட்டால் நம் சரீரத்தில் உள்ள ஐந்து வாயுக்களும் சீராக இருக்கும். இவை சீராக இருந்தால் கை, கால்கள் எல்லாம் சீராக இயங்கும், நடை அழகும் பார்வை தீட்சண்யமும் உண்டாகும், வாக்கு பலம் ஏற்படும்.
11. மனோமய கோசத்தில் சுத்தி ஏற்பட நம் மனதை உயர்ந்த அவன் திருவடிகளில் நிலை நிறுத்த வேண்டும். இவ்வுலகில் உள்ள எந்த ஒரு விஷயத்திற்கும் ஒரு படி மேலே அவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து ஒவ்வொரு விஷயத்திலேயும் செயல்பட வேண்டும். மனோமய கோசத்தில் சுத்தி ஏற்பட ஸ்வாமி தேசிகன் அருளிய ‘பரமார்த்த ஸ்துதி‘ என்கிற உயர்ந்த ஸ்தோத்ரங்களை தினமும் பதினோரு முறை சொல்லவேண்டும்.
12. விஞ்ஞானமய கோசத்தில் சுத்தி ஏற்பட, நல்லது எது தீயது எது என்பதை பகுத்தறியும்படியான ஞானத்தை வளர்க்க வேண்டும். தீயதை விட்டு நல்லதை பற்ற வேண்டும்.
13. ஆனந்தமய கோசத்தில் சுத்தி ஏற்பட்டால் பகவான் தெரிவான். அவ்வாறு சுத்தி ஏற்பட அவன் குணங்ளை உணர வேண்டும். அவனுடைய எண்ணற்ற கல்யாண குணங்களில் முக்கியமாக மேல் வரும் ப்ரதானமான ஒன்பது குணங்களை நன்கு உணர வேண்டும். அவ்வாறு உணர்ந்தால் அனைத்தும் சித்திக்கும்.
14. முதல் குணம் ‘ஸர்வேஸ்வரத்வம்‘. எங்கும் வ்யாபித்து, சர்வ பதார்த்தங்களிலேயும் நிறைந்து, சர்வத்தையும் நியமிப்பதினால் பகவான்தான் ஸர்வேஸ்வரன். இந்த குணத்தினால் அவன் ‘நிலை தந்த தாரகனாய், நியமிக்கும் இறைவனுமாய்’ திகழ்கிறான்.
15. இரண்டாவது குணம் ‘ஶ்ரீயப்பதித்வம்‘. மஹாலக்ஷ்மிக்கு அவன் பதி. அவனுடன் சேர்ந்து மஹாலக்ஷ்மியும் ஸர்வ பதார்த்தங்களிலேயும் நிறைந்திருக்கிறாள். அதனால் ஸர்வேஸ்வரனான நாராயணன் வந்தான் என்று சொன்னால் லக்ஷ்மியோடு வந்தான் என்று அர்த்தம்.
16. மூன்றாவது குணம் ‘அபஹதபாப்மத்வம்‘. பாபமே கலப்பில்லாதவன் பரமாத்மா.
17. நான்காவது குணம் ‘விம்ருத்யத்வம்‘. ம்ருத்யு பயம் இல்லாதவன். ம்ருத்யுவிற்கு ம்ருத்யுவாக இருக்கக்கூடியவன் பரமாத்மா.
18. ஐந்தாவது குணம் ‘விஜ்வரத்வம்‘. ஜுரம், ரோகம் போன்ற குணங்கள் இல்லாதவன் பரமாத்மா.
19. ஆறாவது குணம் ‘ஸத்யகாமத்வம்‘. காமம் என்றால் எண்ணம். ஒருநாளும் பழுதுபடாத எண்ணம் என்கிற நிலைதான் ஸத்யகாமத்வம். பகவான் மனதில் ஒன்றை நினைத்தால் அதை அப்படியே நடத்தி காட்டுவான். அவன் எண்ணம் ஒருநாளும் அழிவதில்லை, பழுது படுவதில்லை.
20. ஏழாவது குணம் ‘ஸத்யஸங்கல்பத்வம்‘. பகவானுடைய ஸங்கல்பம் ஸத்யம். அவனுடைய அவதாரங்கள் ஸத்யம். அவனுடைய ஸங்கல்பத்தினால் எல்லாவற்றையும் நிர்வஹிக்கிறான். ராம க்ருஷ்ணாதி அவதாரங்களாக வருகிறான். கோயிலில் அர்ச்சாரூபியாக எழுந்தருளியிருக்கிறான். அவனுடைய பகுபவன ஸங்கல்பத்தினால் எல்லா சராசரங்களிலேயும் அவனே இருக்கிறான்.
21. எட்டாவது குணம் ‘ஸர்வாந்தர்யாமித்வம்‘. பரமாத்மா எல்லாவற்றினுள்ளேயும் இருந்து செயல்படுத்தக்கூடியவனாய் இருக்கிறான். எல்லாவற்றையும் அனுபவிப்பவனாக (போக்தாவாக) இருக்கிறான். அவனே அனுபவிக்கப்படும் பொருளாகவும் (போக்யமாக) இருக்கிறான். அவனே எல்லாவற்றையும் (ப்ரேரகனாக) செயல்படுத்துகிறான்.
22. ஒன்பதாவது குணம் ‘ஸர்வஜ்ஞத்வம்‘. எல்லாவற்றையும் உள்ளபடி பரமாத்மா உணர்கிறான். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவனுக்கு தெரியாமல் எந்த காரியத்தையும் நம்மால் செய்யமுடியாது.
23. ஈஸ்வர ஸம்ஹிதையில் பரமசிவன் ஒன்பது பதங்களால் ஶ்ரீந்ருஸிம்ஹனை போற்றுகிறார். முமுக்ஷு (மோக்ஷ) உபாஸ்ய தேவதையான லக்ஷ்மிந்ருஸிம்ஹனிடம் மந்த்ரராஜ பத ஸ்தோத்ரம் மூலம் ஆத்ம ஸமர்பணம் பண்ணுகிறார். மூன்று மத ஆசார்யர்களாலும் ப்ரமாணமாக எடுத்து கையாளப்பட்ட பவித்ரமான ஸ்தோத்ரம் இது.
24. மந்த்ரராஜ பத ஸ்தோத்ரத்தில் கூறப்படும் ஒன்பது பதங்களும் கீழே சொன்ன பகவானுடைய ஒன்பது குணங்களை காட்டும். ஒவ்வொரு பதமும் ஒன்பது குணங்களை காட்டும்.
25. அஹோபில மஹாக்ஷேத்ரத்தில் உள்ள நவ நாரஸிம்மர்கள் இந்த ஒன்பது குணங்களை ஒன்றாகவும் பலவாகவும் வெளிப்படுத்துகிறார்கள்.
26. ஜ்வாலா, அஹோபில, மாலோல, க்ரோட, காரஞ்ச, பார்கவ, யோகாநந்த, சத்ரவட, பாவன என்கிற நவ நாரஸிம்மர்களை இந்த ஒன்பது குணங்களால் போற்றலாம்.
27. அஹோபில க்ஷேத்ரத்தில் எழுந்தருளியிருக்கும் க்ரோட நரஸிம்மன்தான் ஸிம்மாசல மஹாக்ஷேத்ரத்தில் வராஹ ந்ருஸிம்மனாக எழுந்தருளியிருக்கிறான்.
28. ‘க்ரம்‘ என்கிற அக்ஷரத்தில் உறைபவன் அஹோபில ந்ருஸிம்மன். இவன் ‘அக்ரம்‘ என்று நம்மை முன்னுக்கு அழைத்துச்செல்வான்.
29. அஹோபிலத்தில் உறையும் ‘யோகாநந்த ந்ருஸிம்மன்தான்‘ மட்டபல்லி மஹாக்ஷேத்திரத்தில் ‘ராஜ்யலக்ஷ்மி செஞ்சுலக்ஷ்மி நாயிகா ஸமேத பக்தப்ரஹ்லாத யோகாநந்த லக்ஷ்மிந்ருஸிம்மனாக ஆதிசேஷனுடன் வேதகுஹையில் உறைகிறான்‘.
30. மட்டபல்லிநாதனுடைய ‘யோகம்‘ சரணாகத ரக்ஷணம். அவன் திருவடியை பற்றினவர்களை ரக்ஷித்தே தீருவான். இவன் சத்யகாமன் சத்யஸங்கல்பன்.
31. மட்டபல்லிநாதன் ‘ஆனந்தமயனாக‘ இருக்கிறான். இவனை மேலே சொன்ன ஸர்வேஸ்வரத்வம், ஶ்ரீயப்பதித்வம், அபஹதபாப்மத்வம், விம்ருத்யத்வம், விஜ்வரத்வம், ஸத்யகாமத்வம், ஸத்யஸங்கல்பத்வம், ஸர்வாந்தர்யாமித்வம், ஸர்வஜ்ஞத்வம் என்கிற ஒன்பது குணங்களும் பரிபூர்ணமாக நிரம்பியவன் என்பதை உணர்ந்து ஸேவித்தால் நமக்கு ஆனந்தமய கோசத்தில் சுத்தி ஏற்படும்!
32. பிலம் என்றால் குஹை. வேத குஹையில் உறையும் மட்டபல்லிநாதன் யோகாநந்த லக்ஷ்மிந்ருஸிம்மன் இந்த நன்னாளில் நம் ஹ்ருதய குகையில் அமர்ந்து ‘ப்ரும்மானந்தத்தை‘ அளிக்க அவன் திருவடித்தாள் போற்றுகிறேன்.
|| ஸகலம் பத்ரமச்நுதே! ||
ஶ்ரீ:
ஶ்ரீமதே ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம:
குறையொன்றுமின்றி நிறைவுடன் வாழ மறை உரைக்கும் முறை
( 3 ) வீம்
(ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மிநரஸிம்ஹாசாரியாரின் உபன்யாஸங்களிலிருந்து தொகுக்கப்பட்ட வேத மணித்துளிகள்)
(தொகுப்பு: ஶ்ரீ உ.வே முக்கூர் ஶ்ரீநிவாஸன்)

1. ஸ்ரீயஃ பதியான பகவான் கிருஷ்ணாவதார காலத்தில் தனது கால் கட்டை விரலை அதர பல்லவத்தில் சுவைத்துப் பரிக்ஷித்துப் பார்க்கிறான். ஏன் ..? வேதம் சொல்வதை தானே பரிக்ஷித்துப் பார்க்கிறான். வேதம் “தேன் போன்று எங்கும் இனிமையாக இருக்க வேண்டும். பசுக்களெல்லாம் தேன் போன்று இனிமையான பாலைக் கறக்க வேண்டும். இந்த தாவர வர்க்கமெல்லாம் தேன் போன்ற காய்கனிகளைக் கொடுக்க வேண்டும். உலகமெல்லாம் மதுவாக….. இனிமையாக விளங்க வேண்டும். இதெல்லாம் நடப்பதற்கு பகவானுடைய திருவடியிலிருந்து வடிகிற அந்த மதுவை நினை” என்று சொல்கிறது. அதுமட்டுமல்ல “என் நாவில் எப்பொழுதும் தேன் ப்ரவஹிக்கட்டும், இனிமையான பேச்சு வல்லமை அமையட்டும்” என்று தன் திருவடி பலத்தை – பலனை வேதம் சொல்வதை தானே பரிக்ஷித்துப் பார்க்கிறான்.
2. பகவானுக்கு கிருஷ்ணனுக்கு வாஸுதேவன் என்கிற திருநாமம் உண்டு. அந்த வாஸுதேவா என்று சொல்லும்படியான திருநாமத்தில் பகவான் உறைகிறான். “ஸர்வத்ர வஸதி – வாஸுதேவ:“. சர்வ பூதங்களிலேயும் சர்வ சராசரங்களிலேயும் அவன் இருப்பதனால் அவனுக்கு வாஸுதேவன் என்று பெயர்.
3. அந்த பகவானை வாஸுதேவனை, வேதம் ஒன்றாகவும், பலவாகவும் இருக்கிறான் என்கிறது. ஒற்றைப்படை எண்களாலேயும், இரட்டைப்படை எண்களாலேயும் அவனை எண்ணி அழைக்கிறது. “ஒன்றிலேயும், மூன்றிலேயும், ஐந்திலேயும், ஏழிலேயும், ஒன்பதிலேயும்…. இருப்பவனே” என்கிறது. “நாலிலேயும், எட்டிலேயும், பன்னிரெண்டிலேயும்…. உறைபவனே” என்கிறது. ஒன்றாய் இருப்பவன் மூன்றாய் இருக்கிறான் என்றால் “அவன் ப்ரம்ம, விஷ்ணு, மஹேஸ்வரனாய் ஆனான். அவர்களுக்கு அந்தராத்மாவாய் உள்ளான்” என்கிறது. ஐந்தானான் என்றால் “அவனே பஞ்சபூதங்களானான்‘ என்கிறது.
4. பகவான் அவ்வாறு ஒன்றாகவும், பலவாகவும் உள்ளான் என்பதை உணர பக்தி என்பது முக்கியம். ஞான, பக்தி வைராக்கியம் என மூன்று சொல்வார்கள். ஞானம் முன்னேயும், வைராக்கியம் பின்னேயும் குறிப்பிடப்படுகிறது. பக்தி நடுவிலே இருக்கிறது. இது எதைக் காட்டுகிறது என்றால், பக்தி நமக்கு வந்துவிட்டது எனில், ஞானமும், வைராக்கியமும் தானாகவே வந்து சேர்ந்து கொள்ளும் என்பதை. பக்தி வராமல் ஞானம் சம்பாதிக்க முடியாது. பக்தி இல்லாமல் வைராக்கியம் வராது.
5. ஆண்டாள் திருப்பாவையில் அந்த வாஸுதேவனை த்யானித்து “மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்” என்கிறாள். பெரியோர்கள் செய்ததை நாம் செய்ய வேண்டும் என்கிறாள். பெரியோர்கள் பண்ணியது முழுக்க முழுக்க நம்மால் பண்ண முடியாது. ஆனால், நம்மால் என்ன பண்ண முடியுமோ, அதைக் கட்டாயம் பண்ண வேண்டும்.
6. பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையில் “உன்னால் செய்ய முடியாத காரியங்களை விட்டு விடு..” என்று சொன்னான். அவ்வாறு சொன்னவன் உடனே “விட்ட இடத்தில் என் திருவடியைப் பிடித்துக்கொள்” என்றான். எவ்வளவு சுலபமான வழியைக் காட்டுகிறான் பாருங்கள் ..!
7. அதனால் லௌகிக விஷயத்தில் நாம் ஈடுபடுவதை குறைத்து பகவத் விஷயத்தில் ஈடுபட வேண்டும். லௌகிக விஷயத்தில் நாம் ஈடுபட்டோமானால், பகவத் விஷயம் நம்மை விட்டுப் போய்விடும். பகவத் விஷயத்தில் நாம் ஈடுபட்டோமானால் இதெல்லாம் நம்மை விட்டுப் போய்விடும். “அவனே கிடைப்பான்” என்பது அவன் திருவடி பற்றுதலினால் கிடைக்கக்கூடிய பலன்.
8. அதனால் எல்லாவற்றிலும் நிறைந்த அந்த வாஸுதேவன் கோவிந்தன் நம் ஹ்ருதயத்தினுள்ளேயும் நிறைந்துள்ளான் என்பதை உணர்ந்து, பக்தியுடன் ஹ்ருதயத்திலேயே உள்ள பகவானுக்கு நாம் அன்னத்தை நிவேதனம் செய்ய வேண்டும், தன் ஆத்மாவையும் நிவேதனம் செய்ய வேண்டும். இந்த அந்தர்யாமி நிவேதனத்தைத்தான் உபநிஷத் “யஜ்ஞம்” என்கிற பெயரில் நமக்குச் சொல்கிறது. யஜ்ஞத்திலே, வெளியில் ஹோம குண்டத்தில் ஹவிஸ்ஸை எடுத்து ஹோமம் பண்ணுகிறோம். அது வெளியிலே பண்ணக்கூடிய யஜ்ஞம். இது – உள்ளுக்குள்ளே அந்தராத்மாவுக்குப் பண்ணக்கூடிய யஜ்ஞம்.
9. பகவானிடம் சிறந்த பக்தி ஏற்படுவதற்கு அவனிடம் நாம் பூரண நம்பிக்கை வைக்க வேண்டும். பரமாத்மாதான் எல்லாவற்றையும் செயல்படுத்துகிறான். அவன்தான் அனைத்துக்கும் காரணம். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை நாம் தெரிந்து கொண்டால் நம் மனதில் வியசனம் கவலை ஏற்படாது. மனம் கண்டவாறு எகிறி எகிறி துள்ளுவதற்கு அவகாசம் கிடைக்காது. அதனால், அவன் பேரிலே பூரண நம்பிக்கை கொள்ள வேண்டும் – மற்ற விஷயங்களைப் பற்றக்கூடாது.
10. அவ்வாறு பூரண நம்பிக்கை வருவதற்கு பகவத் சரித்திரங்களில் ஈடுபட வேண்டும். விஷ்ணு புராணத்திலே பராசர மஹரிஷியைப் பார்த்து மைத்ரேயர் கேள்வி கேட்கிறார் “இந்த உலகம் எதிலிருந்து வந்தது .? எதனால் ரக்ஷிக்கப்படுகிறது..? இதற்கெல்லாம் காரணம் யார் …? ” என்று. இதற்கு ஒரே ஸ்லோகத்தில் பராசர மஹரிஷி பதில் சொல்கிறார் “ஹே மைத்ரேயா! ஒவ்வொன்றாகச் சொல்லி இதற்கெல்லாம் காரணம் யார் என்று கேட்டாயே… அத்தனையும் விஷ்ணுவிடமிருந்து தோன்றின. வேறெங்கிருந்தோ கொண்டு வந்து இவற்றையெல்லாம் அவன் உண்டாக்கவில்லை. அவனுக்குள்ளிருந்தே தான் யாவும் தோன்றின. ஜகத் மொத்தமும் அவனிடத்திலேயேதான் இருக்கிறது. ஜகத்துக்கே காரணமானவன் விஷ்ணுதான் ..!!”. இந்த உண்மையான நிலையை உணர்ந்தால் பயம் போய்விடும், பக்தி ஏற்படும்.
11. பகவானிடம் பூரண நம்பிக்கையுடன் சரணாகதி பண்ண வேண்டும். அப்பொழுது பகவான் தான் செய்யும் யஜ்ஞத்தில் நமக்கு தக்ஷிணை கொடுக்கிறான். பகவான் பண்ணக்கூடிய யஜ்ஞத்திற்கு என்ன பெயர் என்றால் ‘சரணாகத ரக்ஷணம் என்பது‘. சரணாகத ரக்ஷணம் என்கிற யஜ்ஞத்தை அவனைத் தவிர வேறு யாராலும் பண்ணமுடியாது. யாரை ரக்ஷிக்கிறான் பகவான் ..? சகலரையும் – சரணாகதி என்று வந்த சகலரையும் ரக்ஷிக்கிறான். மஹா வித்வான்களும் மேதாவிகளும் கூட அவன் ரக்ஷணை இல்லாவிட்டால் வீணாய்ப் போவார்கள்.
12. நமக்கு ஆந்தரிகமான (அந்தரங்கமான) சத்ரு இந்த்ரியங்கள். அந்த இந்த்ரியங்களை அடக்கி ஆள வேண்டுமென்றால், அதற்கு உபாயமாக இருக்கக் கூடியவன் விஷ்ணுதான். அவனே தூரத்தில், நமக்கு வெளியில் இருக்கும் படியான பாவங்களையும் போக்கக்கூடியவன். ஆந்தரிக சத்ருக்களான இந்த்ரியங்களையும் போக்கக்கூடியவன். அல்ப விஷத்திலே நம் மனம் போக விடாமல் தடுக்கிறான். அதற்காக பகவான் என்ன பண்ணுகிறான் .. எப்போதுமே நம்முடன் இருந்து ரக்ஷிக்கிறான் – அவன் திருவடியைப் பற்றின அத்தனை பேரையும் ரக்ஷிக்கிறான். எங்கேயிருந்தோ வரவேண்டுமானால் காலம் ஆகும் என்பதானாலே, அருகேயே இருந்து ரக்ஷிக்கிறான்.
13. வேதம் சொல்லும்பொழுது பகவானுக்கு ம்ருத்யு இல்லை, ஜுரம் ரோகம் போன்றவை இல்லை என்று சொல்கிறது. “ப்ரதமோ தைவ்யோ பிஷக்” என்கிறது வேதம். முதல் வைத்யன் யார்..? என்றால், பகவான் என்கிறது வேதம். ஸஹஸ்ரநாமத்தில் அவன் “பேஷஜம் பிஷக்” என்று கொண்டாடப்படுகிறான். பேஷஜம் என்றால் மருந்து; பிஷக் என்றால் மருத்துவன். பிஷக் யாரென்றால் பகவான். பேஷஜமும் அவனே. மருத்துவனாய் நிற்கிறான். மருந்தாகவும் ஆகி நிற்கிறான்.
14. பகவான் தான் மருந்தாகி நின்றதை ப்ரஹ்லாத சரித்திரத்தில் காட்டினான். ஹிரண்யகசிபு கார்கோடக சர்ப்பத்தின் விஷத்தை ப்ரஹ்லாதனுக்குக் கொடுக்கச் சொன்னான். கார்கோடக சர்ப்பத்தின் விஷத்தில் காற்றுபட்டு, அந்தக் காற்று நம்மீது பட்டாலே போதும். பாம்பு கடிக்கவே வேண்டாம். ப்ராணன் போய் விடும். அவ்வளவு கொடிய விஷம் அது! ஆனால் நாமக்கல் என்கிற க்ஷேத்திரத்திலே பகவான் சயனித்துக் கொண்டிருப்பதே இந்த கார்கோடக சர்ப்பத்தின் மேல்தான்!. கார்கோடக சயனம் அங்கே. அந்த கார்கோடக சர்ப்பத்தின் விஷத்தை ப்ரஹ்லாதன் பருகினான். “விஷமே எனக்கு பத்தியமாகாதோ ..?” என்று அதை வாங்கி “நாராயணா” என்று சொல்லி கிடு கிடுவென்று பருகிவிட்டது அந்த குழந்தை. நாமாம்ருதத்தினாலேயே அந்த குழந்தையை பரிபாலனம் பண்ணினான் பரமாத்மா. அந்த குழந்தை திடமாக நின்றது. விஷத்தையே வெல்லும் பகவானின் நாமாம்ருதம். அதனால் மருந்தும் அவனே! மருத்துவனும் அவனே!!
15. நம்மை ரக்ஷிப்பதற்காக பகவான் “நல்லது இது. தீயது இது” என்று காட்டிக் கொடுக்கிறான். ஒரு க்ஷணம் இந்த ஆத்மாவுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கிறான். அவனன்றி ஓர் அணுவும் அசையாததனாலே அவனேதான் இதற்கும் காரணம். இது அவனுடைய லீலை. நல்லதை பிடித்துக் கொண்டால், நல்ல வழியிலே அழைத்துச் சென்று ரக்ஷிக்கிறான். தீயதை பிடித்துக் கொண்டால் அந்த வழியிலேயே செல்லவிட்டு கடைசியில் உயர்ந்த கதியை கொடுக்கிறான்.
16. இந்த ஜீவாத்மாவுக்கு பரமாத்மாதான் உயர்ந்த கதி. பரமாத்மா உண்டாகவில்லை. ஆகவே… அவனுக்கு அழிவு கிடையாது. அதுபோன்று ஜீவாத்மாவும் உண்டாகவில்லை. அதனால் அதற்கும் அழிவு கிடையாது. ஆனால் எது எது உண்டாயிற்றோ அதற்கெல்லாம் அழிவு உண்டு. “ஒருவன் பிறந்தான்” என்று சொன்னால் “அவன் இறப்பான்” என்பது நிச்சயமாகி விடுகிறது. இங்கு பிறத்தல், இறத்தல் என்பது சரீரத்திற்கு மட்டுமே, ஆத்மாவுக்கு அல்ல.
17. பகவான் நம்மை ரக்ஷிப்பதற்காக சிறந்த வேதாந்த விஷயங்களை தானும் சொல்கிறான், பல மஹான்களை இட்டு சொல்லவைக்கிறான். எந்த சமயத்திலே, எந்த இடத்திலே, எந்த காலத்திலே, யார் சொன்னால் நடக்குமோ அப்படிப்பட்ட மஹான்களை அவனே தேர்ந்தெடுக்கிறான்.
18. பகவானை மஹான்கள் சத்யகாமன் என்று போற்றுகிறார்கள். நம் மனதில் ஒரு கோரிக்கையை வைத்துக் கொண்டு “விஷ்ணு: சத்யகாமன்” என்று நாம் சொல்வோமானால் அந்த விஷ்ணு நம் எண்ணத்தை சத்யகாமத்தை நிறைவேற்றி வைப்பான். இதை வேண்டுமானால் பரிட்சை பண்ணி பார்க்கலாம். “ஹே ப்ரபோ! உன்னிடத்திலே காமியமாகத்தான் கேட்கிறேன். இந்த கோரிக்கை இல்லாமல் என்னால் இப்போது வாழ முடியாது. குடும்பத்தை ரக்ஷிக்கிற பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதையும் நீயே ரக்ஷிப்பவன்தான்…. ஆனால் என் அஞ்ஞானத்தினால் நான்தான் ரக்ஷிப்பதாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆகையினாலே இப்போது நான் நினைப்பதை நீ நடத்தி வைக்க வேண்டும் …” என்று ப்ரார்த்தனை பண்ண வேண்டும். “ஓம் விஷ்ணவே நம: ஓம் சத்யகாமாய நம:” என்ற இரண்டு நாமாவை திரும்பத் திரும்ப 1008 தடவை சொல்ல வேண்டும்…. அப்படிச் சொல்லிவிட்டு ஒன்றை மனதில் நினைத்தால் அது கட்டாயம் நடக்கும்.
19. பகவான் சத்யகாமன் என்பதனால் நமக்கு மட்டுமல்ல ப்ரம்மாதி தேவர்களுக்கும் அவர்களது கோரிக்கைகளை பூர்த்தி பண்ணி வைக்கிறான். ப்ரும்மா யஜ்ஞம் பண்ணினார் பூர்வத்திலே… உத்தமான யஜ்ஞம்! உலகத்தவர் அத்தனை பேருக்கும் அன்னம் கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பண்ணினார். யாரும் ப்ரசாதத்திற்கு (உணவிற்கு) கஷ்டப்படக்கூடாது என்ற காரணத்தில் பண்ணியது. அதற்காக அச்வமேத மஹாயஜ்ஞத்தைச் செய்தார். அந்த அச்வமேதத்திலே தோன்றினவன்தான் சத்யவ்ரத க்ஷேத்ரமாகிய காஞ்சிபுரத்திலே எழுந்தருளியிருக்கிறான் அந்த தேவாதிராஜன். ப்ரம்மாவின் கோரிக்கையை நிறைவேற்றினான். இன்றும் சத்யகாமனாய் நின்று நம் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறான்.
20. அவ்வாறு பல க்ஷேத்திரங்களில் பகவான் அர்ச்சாரூபியாக உள்ளான். உபநிஷத் சொல்கிறது, தனி ஒருவனாக பரமாத்மாவுக்கு ஆனந்தமே கிடையாது என்று. பரமாத்மா எப்பொழுது ஆனந்திக்கிறான் என்றால், பக்தர்களும் பாகவதோத்தமர்களும் அவன் புகழ் பாடி திளைக்கிறபோது! பக்தர்கள் கண்ணீர் பெருக்கி அதனால் அவன் திருமுற்றத்தை சேறு செய்யுமளவு ஆனந்தக் கண்ணீர் பெருக்கும்போது அவனும் ஆனந்திக்கிறான்.
21. அப்படிப்பட்ட பக்தர்களை பகவான் அனுபவிக்கிறான். போக்தா யார்..? போக்யம் எது..? பிரேரகன் யார்..? என்பதைத் தெரிந்துகொள் என்கிறது உபநிஷத். போக்தா என்றால் அனுபவிப்பவன். போக்யம் என்றால் அனுபவிக்கும்படியான பதார்த்தம் – பொருள். ப்ரேரகன் என்றால் அதை அனுபவிக்கும்படியாக பண்ணுகிறவன். நம்முடைய விஷயத்தில் இவை மூன்றும் வேறு வேறாக இருக்கும். பகவத் விஷயத்தில் இவை மூன்றுமே, போக்தா, போக்யம், பிரேரகன் என்கிற மூன்றுமே பகவான்தான்.
22. பகவான் தனக்கு ப்ரியமானவர்களை தானும் அடைகிறான் தன்னிடம் அடைவிக்கிறான். அவன் ப்ரீதிக்குப் பாத்திரமாய், அவன் வகுக்கும்படியான கர்மாவை நாம் பண்ணிக்கொண்டு, அவன் ஏற்கும்படியான விதத்தில் இந்த ஆத்மாவை அவனுடையது என்று ஸமர்ப்பிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஏற்றமுடைய ஆத்ம சமர்ப்பணத்துக்காகவே சர்வாந்தர்யாமியாக இருக்கிறான் அவன்.
23. பகவானை அமலன், விமலன், நிர்மலன் என்று பலவிதமாகச் சொல்கிறார்கள் ஆழ்வார்கள். மலம் என்றால் அழுக்கு. அதற்கு எதிர்தட்டானவன் பரமாத்மா. அவனிடத்தில் குணங்கள் நிறைய இருக்கின்றன. “நிர்குண: நிரஞ்சன:” என்று பகவானுக்கு குணமில்லை என்று ஒர் இடத்தில் சொல்கிறது வேதம். ஆசார்யர்கள் அதற்கு “குணமற்றவன் என்றால் குணங்களே அற்றவன் என்று அர்த்தமில்லை. கெட்ட குணங்கள் பகவானிடத்திலே கிடையாது. எல்லாம் சுகுணங்கள்தான்” என்று வியாக்கியானம் செய்திருக்கிறார்கள்.
24. சுகுணங்களே நிரம்பிய பகவான் பல திவ்ய தேசங்களில் விதவிதமாகக் காட்சியளிக்கிறான். அப்படி திவ்ய தேசங்களிலெல்லாம் காட்சியளித்து நம்மை ஆட்கொள்கிறான். வைகுண்டத்திலேயும் இருக்கிறான்… திவ்ய தேசங்களிலேயும் இருக்கிறான்… ராம, கிருஷ்ண அவதாரங்களெல்லாமும் பண்ணுகிறான்… அதற்குமேலே திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கிறான். இதற்கும் மேலே, அந்தர்யாமியாக அவன் எல்லாவற்றிலும் இருப்பதையும் உபநிஷத் சொல்கிறது.
25. பகவான் ஆகமரீதியாக ப்ரதிஷ்டை செய்யப்பட்ட பிம்பங்களில் விக்ரஹங்களில் எழுந்தருளி இருக்கிறான். மகான்களெல்லாம் ஆராதனம் செய்யும்போது பவ்யமாக, ஜாக்கிரதையாக பூஜை செய்வார்கள். ஏனென்றால் பகவான் அந்த பிம்பத்திலே பூரணமாக இருக்கிறேன் என்று சங்கல்பம் பண்ணிக் கொண்டு வந்து தங்கி விடுகிறான். பகவான்… தெய்வம், மானுஷம், ஆர்ஷம், அதற்கு மேலே ஸ்வயம் வ்யக்தம் என்று நான்கு விதமாக பிம்பத்திலே வந்து அமர்கிறான். தெய்வம் என்பது தேவர்களால் ப்ரார்த்திக்கப்பட்டு ப்ரதிஷ்டை செய்யப்பட்டது. ஆர்ஷம் என்பது மஹரிஷிகளுக்கு ப்ரத்யக்ஷமாகி அவர்களால் ப்ரார்த்திக்கப்பட்டு அந்த க்ஷேத்திரங்களில் அவ்வாறே இருக்கிறான். மனிதர்களால் ஆகம ரீதியாக ப்ரதிஷ்டை செய்யப்பட்டவன் மானுஷம். ஸ்வயம் வ்யக்தம் என்றால் தானே விரும்பி சில இடங்களில் தோன்றுவது.
26. பகவானை ஆராதிப்பதில் சிறந்தது யஜ்ஞம் என்கிறது வேதம். “யஜ்ஞோஹி ச்ரேஷ்டதமம் கர்மா” என்கிறது. ரோஹிணி நக்ஷத்திரத்தன்று பண்ணக்கூடிய ஒரு யஜ்ஞத்தை வேதம் சொல்கிறது. ஓதனஸவம் எனப்படும் அந்த யஜ்ஞமானது உலகத்திலே எல்லா ஜீவராசிகளுக்கும் அன்னம் கிடைக்க வேண்டும் என்ற ப்ரார்த்தனையுடன் செய்யப்படுவது. அந்த யஜ்ஞத்தை சூரியன் உதிக்கும்பொழுதே ஆரம்பிக்க வேண்டும்.
27. அவ்வாறு யஜ்ஞம் செய்யக்கூடிய யஜமானர்களுக்கு “சுமதிம் பஜாமஹே” என்று நல்ல புத்தியை, அழுக்கில்லாத புத்தியை அமலனான பகவான் கொடுக்கிறான். நமது புத்தியானது தூய்மையாய் இருக்க வேண்டும். அந்யதா ஞானம், விபரீத ஞானம், சம்சயம் போன்ற தோஷங்கள் புத்திக்கு உண்டு. ஒன்றை வேறொன்றாகப் புரிந்துகொள்வது அந்யதா ஞானம். சொன்ன விஷயத்திற்கு எதிர்மறையாக கொள்வது விபரீத ஞானம். எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுவது, இதுவா அதுவா என்று குழம்புவது சம்சயம். இம்மலங்களையெல்லாம் போக்கடித்து யஜ்ஞபலனை கொடுப்பவன் அமலனான பகவான்.
28. யஜ்ஞத்திற்கு பலனை கொடுக்கும் அந்த பகவான் ஆச்ரித வத்ஸலன். நாம் கூப்பிட்டபோதெல்லாம் ஓடி வரவேண்டும் என்று அருகிலேயே இருக்கிறான். எப்படி கன்றானது பசுவின் பின்னால் ஓடுமோ, கன்றை முன்னால் அழைத்துப் போனால் பசு எப்படி பின் தொடருமோ, அப்படியே பரமாத்மா நம்மை விட்டு அகலாமல் இருக்கிறான். அதுதான் அவனுடைய வாத்ஸல்யம் என்கிற குணம். ஒரு கணமும் அவன் நம்மை விட்டு பிரிவதில்லை… நாம் என்ன ஆகிவிடுவோமோ என்கிற பயம் அவனுக்கு !
29. நம்மிடத்திலே உள்ளன்போடு விசேஷமான அன்புடன் கூடிய ஆச்ரித வத்ஸலனாக பரமாத்மா இருக்கும்போது அவனை நெருங்கி ” ஹே ப்ரபோ! நீ என்னிடத்திலே வைத்திருக்கிற அன்பு அதிகம்! நான் உன்னிடத்தில் வைத்துள்ளதோ குறைவு“. என்று சொல்ல வேண்டும். அதை அவனே பகவத் கீதையில் சொல்லியிருக்கிறான். அதனால் “பகவான் நம்மிடத்தில் அன்பு வைப்பது நல்லதா ? நாம் அவனிடத்தில் அன்பு வைப்பது நல்லதா ..?” என்று கேள்வி கேட்கக்கூடாது. அந்த கேள்வியை மாற்றி “நீ பகவானிடத்திலே வைத்திருக்கிற அன்பு அதிகமா ? அந்த பகவான் உன்னிடத்திலே வைத்திருக்கிற அன்பு அதிகமா ..?” என்று கேட்க வேண்டும்.
30. அதே சமயத்தில் யஜ்ஞம் போன்ற கர்மாக்களை கியாதிக்காக – புகழுக்காகவோ, அல்லது லாபத்திற்காகவோ, அல்லது பூஜைக்காக – மற்றவர்கள் கொண்டாடுவார்கள் என்பதற்காக அந்த கர்மாவை – காரியத்தைச் செய்தால் அதை பகவான் ஒப்புக்கொள்ள மாட்டான்.
31. அதனால் பகவான் அர்ஜுனனுக்கு கூடவே இருந்து உணர்த்தியதை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். “நமது இந்த சரீரமே ஒரு ரதம். இந்திரியங்கள் எல்லாம் குதிரைகள்; மனமானது கடிவாளம்; புத்தியானது சாரதி; நம் புத்தியிலே ப்ரவேசித்து பரமாத்மா செயல் படுத்துகிறான். நம் அருகிலேயே இருந்து நம்மை ரக்ஷிக்கிறான்“.
32. அப்படி எல்லா இடத்திலேயும், எல்லா காலங்களிலேயும் ரக்ஷிக்கும் பகவான் அஹோபில க்ஷேத்திரத்தில் “பார்க்கவ ந்ருஸிம்ஹனாக” பரசுராமருக்கு சேவை தந்த பெரிய பெரிய பெருமாளாய் வீற்றிருக்கிறான். அவனே மட்டபல்லி மஹாக்ஷேத்திரத்தில் யஜ்ஞவாடிகையில் மூன்றாவது அக்ஷரமான “வீம்” அக்ஷர ஸ்தம்பத்தில் வீற்றிருக்கிறான். அவனை இந்த நன்னாளில் த்யானிப்போர்க்கு சரீர ரோகங்களைப் போக்கி, ரஜோகுண, தமோகுணங்களை தொலைத்து ஸத்வ குணத்தை அனுக்ரஹித்து ரக்ஷிப்பான். குறையொன்றுமில்லை !
|| ஸகலம் பத்ரமச்நுதே! ||
ஶ்ரீ:
ஶ்ரீமதே ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம:
குறையொன்றுமின்றி நிறைவுடன் வாழ மறை உரைக்கும் முறை
( 4 ) ரம்
(ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மிநரஸிம்ஹாசாரியாரின் உபன்யாஸங்களிலிருந்து தொகுக்கப்பட்ட வேத மணித்துளிகள்)
(தொகுப்பு: ஶ்ரீ உ.வே முக்கூர் ஶ்ரீநிவாஸன்)

1. பகவான் ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹன் ‘ரம்’ என்கிற நான்காம் அக்ஷரத்திலே வீற்றிருக்கிறான்
2. ‘ரம்‘ என்றால் ரமிக்கப்பண்ணுகிறவன் – நம்மை ஆகர்ஷிக்கக்கூடியவன் என்று ஒரு பொருள்.
3. விசேஷமான திவ்யமங்கள ஸ்வரூபத்தை – வடிவழகை உடைய எம்பெருமான் பின் வரும் 9 குணங்களால் அனைவரையும் ஆகர்ஷிக்கிறான் – கவர்கிறான். அவை அமலத்வம், ஆச்ரித வாத்ஸல்யத்வம், உபாயத்வம், உபேயத்வம், போக்யத்வம், போக்த்ருத்வம், நியந்த்ருத்வம், சுபாச்ரயத்வம் மற்றும் சர்வதோமுகத்வம்.
4. முதலாவது ‘அமலத்வம்’ என்கிற குணம். மலம் என்றால் அழுக்கு என்று அர்த்தம். அமலம் என்றால் அழுக்கற்றது. அழுக்கற்றவன் பரமாத்மா என்று பொருள்.
5. பகவான் அப்பழுக்கற்றவன் என்பதை ஸ்வாமி தேஸிகன் ‘அமலன், அவியாத சுடர், அளவில்லா ஆரமுதம்‘ என்கிறார். திருப்பாணாழ்வார் ‘அமலனாதிப் பிரான்; அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்’ என்கிறார்.
6. பகவான் எப்படி அப்பழுக்கற்ற திருமேனியை உடையவனோ, அவ்வாறே அப்பழுக்கற்ற குணங்களை உடையவன். அவனிடம் உள்ளது எல்லாம் சுகுணங்களே!
7. ஆதிசங்கர பகவத் பாதாள், சகுணோபாசனையைச் சொல்லி, அதற்கும் மேலே நிர்குணோபாசனையைச் சொல்கிறார். சகுணோபாசனை என்பது எல்லோரையும் ஆகர்ஷிக்கக்கூடியது. எப்படிப்பட்டவர்களுடைய இதயத்தையும் அப்படியே இழுக்கவல்லது.
8. அவர் ‘ஜீவன் முக்தோபி லீலையா, விக்ரஹம் க்ருத்வா பஜந்தே’ என்கிறார். அனைத்தையும் துறந்த ஜீவன் முக்தர்கள்கூட விக்ரஹ ஆராதனை, பகவானுடைய வடிவழகு – இந்த திவ்யமான ரூபம், வடிவழகு இவற்றைப் பார்க்கும் பொழுது, தாங்கள் கூட ஆராதனம் பண்ணவேண்டும் என்று தோன்றுமாம்..!
9. அதனால், அவன் திருவடிவத்தில் லயித்து, அவன் திருவடியில் சேர்ந்து கைங்கர்யம் பண்ணுபவர்கள்தான் வாழ்ந்தவர்கள் ஆகிறார்கள்.
10. நாமெல்லாம் ரொம்ப அழகாக வாழ்கிறதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உபநிஷத் நமக்கு ‘வாழாவெட்டி’ என்று பெயர் வைத்திருக்கிறது. சர்வலோகத்துக்கும் பதி அவன். கணவன் அவன்… அவனை விட்டு பிரிந்து நின்றால் வாழாவெட்டிதானே..! அதனால், பகவானோடு ஒன்றி நின்றால்தான் நாம் வாழ்ந்தவர்கள் ஆவோம்.
11. வைகுண்டம் போகிறவரும், அங்கே பகவான் எனும் போகத்தை அனுபவிப்பவரும்கூட திருவேங்கடத்தைப் பார்க்கும்பொழுது, ‘மறுபடியும் பூலோகத்தில் வந்து பிறக்கமாட்டோமா..? ‘கோவிந்தா, கோவிந்தா’ என்று சொல்லிக்கொண்டு திருவேங்கட யாத்திரை போகமாட்டோமா..? என்று ஏங்குகிறார்களாம். அப்படிபட்ட அமலனான திருவேங்கடமுடையானின் தோற்றம் நம்மை ஆகர்ஷிக்கிறது..!
12. திருநீர்மலையில் பகவான் நடந்தான், கிடந்தான், நின்றான், அமர்ந்தான் என்று நான்கு நிலையிலெ இருந்து நம்மை ரமிக்கப் பண்ணுகிறான்.
13. பகவான் மஹாலக்ஷ்மியுடைய திருமுகக் குறிப்பைக் கொண்டுதான் வேலை செய்கிறான். அவள் புருவத்தை அசைத்தால் நமக்கு எல்லாவற்றையும் கொடுப்பான்.
14. எம்பெருமானிடத்திலே மஹாலக்ஷ்மிக்கு வாலப்யம் – செல்வாக்கு உண்டு. அதைக்கொண்டு நம்மீது உள்ள வாத்ஸல்யத்தினால் – அன்பினால் நமக்கு அவன் அனுக்ரஹத்தைப் பெற்றுத் தருகிறாள்.
15. பகவான் ஶ்ரீ வைகுண்டத்திலே இருந்தாலும், விக்ரஹங்களிலே இருந்தாலும், நம்முள் அந்தர்யாமியாக இருந்தாலும், எத்தனை வடிவில் வந்தாலும், எத்தனை உருவங்கள் கொண்டாலும் அமலனாகவே – அப்பழுக்கற்றவனாகவே இருக்கிறான்.
16. அதிலே ஶ்ரீ வைகுண்டமானது, ஒரு விசாரமுமில்லாமல் பகவானை அனுபவிக்கும் உயர்ந்த நிலை. அனுபவ போக்யம் என்பார்கள்.
17. இங்கிருந்து போகும் ‘முக்த புருஷர்கள் (மோக்ஷம் அடைந்தவர்கள்) பகவானை அனுபவிக்கிறார்கள். அவனும் இவனை அனுபவிக்கிறான்’. இந்த சாயுஜ்யம் எனப்படும் பதவியை வேதம் விவரிக்கிறது.
18. அந்த வைகுண்ட போக்யத்தை இங்கேயே எப்படி அனுபவிப்பது..? கோயில்களிலே அர்ச்சை எனப்படும் பரமாத்மாவை அனுபவிப்பது, இங்கேயே நமக்கு மோக்ஷானுபவத்தைக் கொடுக்கும்.!
19. பகவான் நான்கு விதமாக அர்ச்சை எனப்படும் பிம்பத்திலே வந்து அமர்கிறான். அவை தெய்வம் – தேவதைகளால் ப்ரதிஷ்டை செய்யப்பட்டவன்; ஆர்ஷம் – மஹரிஷிகளுக்கு ப்ரத்யக்ஷமாகி அவர்களால் ப்ரார்த்திக்கப்பட்டு சில க்ஷேத்திரங்களில் அங்கேயே இருக்கிறான்; ஸ்வயம் வ்யக்தம் – தானே விரும்பிச் சில இடங்களில் தோன்றுவது; மானுஷம் – மனிதர்களால் ஆகம ரீதியாக ப்ரதிஷ்டை செய்யப்பட்டவன்.
20. மட்டபல்லி மஹாக்ஷேத்திரத்தில் கொலுவீற்றிருக்கும் ஶ்ரீ யோகாநந்த லக்ஷ்மீந்ருஸிம்ஹன் ஸ்வயம் வ்யக்தன்.
21. சந்தியா காலங்களில் – சூரிய உதயத்தின் பொழுதும், அஸ்தமிக்கும் பொழுதும், தூங்காமல் விழித்திருந்து பகவத் த்யானத்தில் ஈடுபட வேண்டும்
22. சந்தியா காலங்களில் தூங்குபவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் கொடிய பாபங்களும் வந்து சேரும். பரதப்ரதிக்யையில் இது காட்டித்தரப்படுகிறது.
23. சந்தியாவந்தனத்தின் பொழுது ப்ரத்யக்ஷ தேவதையாகத் தோன்றி நம்மை அனுக்ரஹிக்கும்படியான சூரியனை நாம் வரவேற்க வேண்டும். அவன் உதயமாவதற்கு முன்னாலும், அஸ்தமனம் ஆகிறதற்கு முன்னாலும் அர்க்கியத்தை விடவேண்டும்.
24. அந்த சூரியன் நமக்கு கண்ணே போன்றவன் என்பதை வேதம் சொல்கிறது. அதற்குமேல் ‘ப்ரும்மவாதினோ வதந்தி – நான் மட்டும் சொல்லவில்லை. ப்ரும்மவித்துக்களும் வேதவித்துக்களுமான ஞானிகளும் அதையே கொண்டாடுகிறார்கள்’ என்கிறது.
25. சூரியன் எப்படி அமலனோ, அவனிடத்தில் எப்படி குணதோஷங்கள் எப்படி ஒட்டிக்கொள்வதில்லையோ, அது போன்று எம்பெருமான் விஷ்ணு அக்னி மண்டல அந்தர்வர்த்தியாய் இருந்து சூர்யநாராயணனாய் பிரகாசிக்கிறான்.
26. ப்ரும்மசூத்திரத்திலே ஜோதிர் அதிகரணத்தில் ‘ஜோதி ஸ்வரூபனாய் சர்வத்திலேயும் பரவியிருக்கக்கூடியவன் பரமாத்மா… அந்த ஜோதியை உபாஸனை பண்ணுகிறேன்’ என்கிறது.
27. வாடபல்லி க்ஷேத்திரத்திலே அகஸ்தியருக்கு ‘ஜ்வலதே! ஜ்வலதே! ஜ்வலதே! என்று நரசிம்ம மந்திரத்தில் கொண்டாடப்படும்படியானவன் ப்ரத்யக்ஷமானான்.
28. ஜ்வலதே என்றால் ‘ஸ்வயம் ப்ரகாஸம்’ – தானே தனிச்சுடராய் ஒளிரக்கூடியவன்‘ பகவான்.
29. ஜ்வலதே என்று சூரியநாரயணனாய் ப்ரகாசிக்ககூடிய அவனைத்தான் காயத்ரி மந்திரத்தினால் ஆராதிக்கிறோம். காயத்ரி, ஸாவித்ரி, ஸரஸ்வதி என்று அந்த தேவதைகளின் ஸ்வரூபமாய் இருந்து ரக்ஷிக்ககூடியவன் பரமாத்மா விஷ்ணு என்று தேர்வதனாலே அவன் அமலன்.!
30. நம்மிடத்திலே உள்ள அழுக்கைப் போக்குவதால் அமலன்; அழுக்கே இல்லாததால் அமலன்..!
31. நமக்கு அமலத்வம் எப்படி சித்திக்கிறது..? இந்த துர்கந்தமான சரீரத்திற்கு தோல் போத்தியிருக்கிறது. அந்த தோலே இல்லையென்றால் ஈக்கள் மொய்க்கும். இந்த மலமான உடம்பு எம்பெருமானின் சம்பந்தத்தினாலே அழுக்கு அற்றுப் போகிறது. அவனைப் போன்ற ஒளி பொருந்திய திருமேனியை அவன் நமக்குக் கொடுக்கிறான்
32. ‘ரம்‘ அக்ஷரத்திலே ரம்மியமாய் அமலனாய் விளங்கும் பகவான், மட்டபல்லி மஹாக்ஷேத்திரத்தில் நான்காவது ஸ்தம்பத்தில் ‘வேதாத்ரி க்ஷேத்திரத்தில் உறையும் கட்க நரஸிம்ஹனாய் – கையில் கத்தியுடன்’ காட்சியளிக்கிறான். அந்த கட்கத்தினால் நம்முடைய மலங்களை போக்கி நம்மையும் அமலனாக்க இவ்வுயர்ந்த நன்நாளில் ப்ரார்த்திப்போம். குறையொன்றுமில்லையே!!
|| ஸகலம் பத்ரமச்நுதே! ||
ஶ்ரீ:
ஶ்ரீமதே ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம:
குறையொன்றுமின்றி நிறைவுடன் வாழ மறை உரைக்கும் முறை
( 5 ) மம்
(ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மிநரஸிம்ஹாசாரியாரின் உபன்யாஸங்களிலிருந்து தொகுக்கப்பட்ட வேத மணித்துளிகள்)
(தொகுப்பு: ஶ்ரீ உ.வே முக்கூர் ஶ்ரீநிவாஸன்)

1. பகவான் ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹன் ‘மம்’ என்கிற ஐந்தாம் அக்ஷரத்திலே உறைகிறான். அவன் சகல ஜீவராசிகளுக்கும் பொதுவானவன், அவைகளிடம் பேரன்பு கொண்டவன் என்பதைக் காட்டிக்கொடுக்கிறான்.
2. ‘மம்‘ என்பதில் ம என்பவன் ஜீவாத்மா. அந்த ஜீவாத்மாவை உடையவன் ‘மம்‘ எனும் பீஜாக்ஷரத்தில் உறையும் பரமாத்மா.!
3. மம் என்கிற அக்ஷரமானது ஜீவாத்மாக்களிடம் பரம அன்பை வைத்திருக்கும் பகவானின் ‘ஆஸ்ரித வாத்ஸல்யத்வம்‘ என்கிற குணத்தைக் காட்டும்.
4. அமலத்வம் என்கிற குணத்தினால் அப்பழுக்கற்றவனான பகவான் ஆஸ்ரித வாத்ஸல்யனாய் எப்பொழுதும் இருக்கின்றான்.
5. வத்ஸலன் என்று பகவானுக்குப் பெயர். சமாச்ரிதாள் யாராகயிருந்தாலும் ரக்ஷிக்கிறேன் என்கிறான். ‘ஆஸ்ரிதாள் என்றால் பகவானை ஆஸ்ரயித்தவர்கள் – அடிபணிந்தவர்கள்’ என்று அர்த்தம். அடி பணிந்தவர்களுக்கு மிகவும் சுலபன் அவன். அடிபணியாதவர்களால் அவனை கிரஹிக்க முடியாது.
6. பாதுகா ஸஹஸ்ரத்தில் ஸ்வாமி தேசிகன் ‘பரதனுடைய ஆராதனைக்குரிய ராம பாதுகை உயர்ந்தவர்களுக்குத் தாழ்வைக் கொடுக்கிறது; தாழ்ந்தவர்களுக்கு உய்ர்வைக் கொடுக்கிறது’ என்கிறார். அது எப்படி.?
7. இந்த கொடும் கலியிலே பகவான் திருமலையிலே ஶ்ரீநிவாஸனாய் நிற்கிறான். தேவதைகளுடைய ப்ரார்த்தனையின் பேரில் அங்கே நிற்கிறான். மேலே இருக்கும் தேவதைகளையெல்லாம் கீழே இறங்கி வரும்படிப் பண்ணுகிறான். நம்மை மேலே ஏறச் சொல்கிறான். அவர்களை இறக்கி.. நம்மை ஏற்றி.. இரண்டு பேரையும் ஏக கோஷ்டியிலே நிற்கவைத்து அனுக்கிரஹம் பண்ணுகிறான்.
8. உயர்ந்தவர்கள் அவனை வணங்காது போனால் தாழ்கிறார்கள். தாழ்ந்தவர்கள் வணங்கினால் உயர்கிறார்கள்.! பகவான் நம்மிடத்தில் விரும்புவது என்ன..? வணக்கம்தான்.! வணங்கினால் அனுக்கிரஹம் பண்ணுகிறான். ஆச்ரயிப்பவர்களுக்கு அவன் வத்ஸலன்.!
9. கன்றுக்குட்டியிடம் பசு காட்டும் அன்புக்கு வாத்ஸல்யம் என்று பெயர். பசுவானது தனக்கு வேண்டிய ஆகாரத்திலே துர்கந்தம் வீசினால் தொடாது. ஆனால், அதன் கன்று சேற்றிலே பிறண்டு துர்கந்தத்துடன் வந்தால், அதனை நக்கிக் கொடுத்து அதற்கு பாலை வர்ஷிக்கிறது. என்னது இது..? வாத்ஸல்யம்..!
10. இதே வாத்ஸல்யத்தைத்தான் பகவான் தன்னை அடிபணிந்தவர்களிடம் வைக்கிறான். ஒரு பசு இருக்கிறது. அதற்கு ஒரு கன்று இருக்கிறது.. அந்த கன்றுக் குட்டி பெரிதாகிவிடுகிறது. பசு இன்னொறு கன்றை ஈனுகிறது. இந்த இரண்டாவது கன்றுக்குட்டி துள்ளி ஓடிவந்து, பசுவினடத்திலே பாலைச் சாப்பிட வருகிறது. அப்போது அந்த முதல் கன்றுக்குட்டி, இரண்டாவது பால் சாப்பிடத் தடையாக இருந்தால், தன் குட்டியே ஆனபோதிலும், முதல் கன்றை கொம்பால் முட்டி, தூரத்தள்ளிவிட்டு சின்னக் கன்றுக்கு இடம் கொடுக்கும். அதே போல்தான் பகவானும்… எத்தனை பேர் ஆச்ரயிக்க வந்தாலும் ரக்ஷிக்கிறேன் என்கிறான். ஒருத்தரைத்தான் அவன் ரக்ஷிப்பான் என்பது இல்லை..!
11. சுக்ரீவன் விபீஷணனைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று சொன்னபோது, ராமன் ‘ கிஷ்கிந்தையில் அந்த ரிஷ்யமுகபர்வத தாழ்வரையில் நீ எனக்குக் கிடைத்தாய்.. சரணாகதி பண்ணினாய். உன்னை நான் ரக்ஷித்தேன். நீ எனக்குக் கிடைத்த முதல் கன்று. சமுத்திர தீரத்திலே இவன் விபீஷணன் வந்து அடிபணிகிறான். இவனையும் ரக்ஷிப்பேன். இந்த இரண்டாம் கன்றை ரக்ஷிப்பதற்கு நீ தடையாக நின்றால், உன்னை முட்டித் தள்ளுவேன்’ என்றான்..!
12. பரத்வாஜ சம்ஹிதையிலே ‘பகவானை மாதிரி கல்யாண குணம் படைத்தவர்கள் யார் இருக்கிறார்கள்! அவன் திருவடியைப் பிடித்துக் கொண்டு விட்டால், அது ராக்ஷஸ வர்க்கமாயிருந்தாலும், தாவரமாயிருந்தாலும், பக்ஷி விலங்காயிருந்தாலும், எதுவாக இருந்தாலும் சமநோக்கு கொண்டு அனுக்கிரஹம் பண்ணுகிறான்’ என்று பரத்வாஜ மஹரிஷி அழகாக எடுத்துக் காட்டுகிறார்.
13. பகவான் ஆஸ்ரித வத்ஸலன் என்பது எப்படி தெரிகிறது என்று கேட்டால், எல்லா பதார்த்தங்களிலேயும் நிறைந்திருந்து, கூப்பிடுகிறபோதெல்லாம் அவன் ஓடோடி வருவதாலே தெரிகிறது.!
14. கன்று எப்படி பசுவின் பின்னால் ஓடுமோ, கன்றை முன்னால் அழைத்துப் போனால் எப்படிப் பின் தொடருமோ, அப்படியே பரமாத்மா நம்மை விட்டு அகலாமல் இருக்கிறான்.
15. பகவான் நம்மை இந்த பிரக்ருதி மண்டலத்திலே தொலைத்தவன். நம்மை தன்னிடம் சேர்த்துக்கொள்வதற்காக அவன் எப்பொழுதும் பரிச்ரமப்படுகிறான்.
16. நாம் சந்தததாரையைப் போல, அக்னியில் நிறுத்தாமல் நெய்யை தாரை விடுவது போல, அவன் நினைவு அறுபடாமல் இருக்க வேண்டும். ஒரு கணம், அந்த நினைவு அகன்றாலும் எதுவுமே செய்யத் தோன்றாமல் போய் விடுகின்ற நிலையை நாம் அடைய வேண்டும்.
17. அப்படி பகவத் ஸ்மரணையோடு – நினைவோடு நாம் வாழும் காலம்தான் இருந்த காலம் ஆகின்றது. அவன் எப்பொழுதும் நம்முடைய ஸ்மரணையோடு இருக்கின்றான்… நாமும் அவனை ஸ்மரித்துக்கொண்டே இருக்க வேண்டும்.!
18. கடைசி பிரயாணம் என்று ஒன்று இருக்கிறதல்லவா நமக்கு… திரும்பியே வராத பிரயாணம்.! அந்த பிரயாணம் வரையில் அவனை நினைக்க வேண்டும். அப்படி எம்பெருமான் ஸ்மரணையுடன் கடைசி வரை வாழ்ந்தவர்கள்தான் வாழ்ந்தவர்கள் ஆகிறார்கள்.
19. ஒருவன் எவ்வளவு நாள் வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல. பகவத் ஸ்மரணையுடன் அவன் வாழ்ந்தானா என்பதுதான் முக்கியம். மீதி நாட்களையெல்லாம் அரிசியை களையும் போது தூசி முதலானவற்றைத் தள்ளிவிடுவது போல தள்ளிவிடவேண்டும். அது வாழ்ந்த நாளாகவே ஆகாது.
20. மார்க்கண்டேய மகரிஷி பராசரரைப் பார்த்து ‘ஏழு ஜன்மங்கள் நான் வாழ்ந்திருந்தாலும், நான் வாழ்ந்த காலம் ஐந்து வருடம்தான்.. ஏழு வயதே வாழ்ந்த நீ – இந்த ஏழு வயதும் பகவத் ஸ்மரணையோடு இருந்துக் கொண்டிருப்பதினாலே, என்னைக் காட்டிலும் இரண்டு வயது பெரியவனாகிறாய். அதனால் உன்னை வணங்குகிறேன்’ என்றார்.
21. வயது நிர்ணயம் என்பது பகவத் ஸ்மரணையை வைத்து ஏற்படுகிறதேயொழிய, பெரியவராயிருப்பதனால் அல்ல. மகானாயிருந்தால், அவரை வயதில் சிறுவனானாலும் வணங்க வேண்டியவரே யாவார்.!
22. இரண்டு பாகவதோத்தமர்கள் ஒருத்தரை ஒருத்தர் சேவிக்கும்பொழுது அந்த சேவை, இடையிலே நின்றுக் கொண்டிருக்கும்படியான பகவான் விஷ்ணுவிற்குப் போகிறது. அந்த வணக்கத்தை அவன் ஏற்றுக்கொள்வதினாலே தோஷம் சம்பவிக்காது. அந்த பாகவதோத்தமர்களுக்கு ஏற்றம்தான் அதிகரிக்கும்.
23. அர்ச்சை என்று கோயில்களில் பகவான் இருப்பதே இந்த ஆஸ்ரித வாத்ஸல்யம் என்கிற குணத்தினாலேதான். அவன் அர்ச்சாவதாரத்திலேயே பலமுறை நமக்குப் புலப்படும்படி அந்த குணத்தை விசேஷமாக காட்டி அருளியிருக்கிறான்.
24. ஶ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் ரங்கநாதன், ஜீயர்புரத்தில் ஒரு தாயார் தன் பிள்ளையை ‘ரங்கா! ரங்கா!‘ என்று அழைத்ததற்கு, தான் அந்த பிள்ளையைப் போல் வேஷம் போட்டுக்கொண்டு வந்து அவள் ஊட்டிய கீரை சாதத்தை சாப்பிட்டான். இந்த சம்பவத்தை ஞாபகப்படுத்த, இன்றைக்கும் ரங்கநாதன் ஜீயபுரத்திலே எழுந்தருள்கிறான். சுண்டிய கீரையை நைவேத்தியம் கொள்கிறான். எல்லோருக்கும் அது வினியோகமும் ஆகிறது. அவனுக்கு நம்மிடத்திலே எவ்வளவு காருண்யம்? எவ்வளவு வாத்ஸல்யம்!
25. யக்ஷப்ரஸ்னத்தில் யக்ஷன் தர்மபுத்திரரைப் பார்த்து ‘இந்த லோகத்தில் யார் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறார்கள்.?‘ என்று கேட்டான். அதற்கு தர்மபுத்திரர் ‘எவனொருவன் தன் சொந்த கிராமத்தில், சொந்த வீட்டில், கடன் எதுவும் இல்லாமல், கீரையை சுண்டி சாப்பிடுகிறானோ, அவனே சந்தோஷமானவன்’ என்று பதிலளித்திருக்கிறார். அதை பகவான் இன்றளவும் ஶ்ரீரங்கத்திலே நடத்திக் காட்டிக்கொண்டிருக்கிறான்..! இது அர்ச்சாரூபியான ரங்கநாதனுடைய வாத்ஸல்யம்.
26. முக்குறும்பறுத்த நம்பி என்று பெயர் திருவேங்கடமுடையானுக்கு. கியாதி, லாப, பூஜையை அறுப்பவன். கியாதி – புகழுக்காக – ஒரு காரியத்தைப் பன்ணுவதோ, பூஜைக்காக – மற்றவர்கள் கொண்டாடுவார்கள் – என்பதற்காகவோ, அதனால் தனக்கு லாபம் என்பதற்காகவோ காரியத்தைப் பண்ணால் அதை அவன் ஒப்புக்கொள்ளமாட்டான்.
27. தொண்டைமான் சக்ரவர்த்தி நித்தியம் ஆயிரம் சுவர்ண புஷங்களைக் கொண்டு அந்த திருவேங்கடமுடையான் ஶ்ரீநிவாஸனுக்கு அர்ச்சனை செய்தார். ஆனால், அவன் அவற்றை எல்லாம் தூர தள்ளிவிட்டு, ஒரு ஏழைக் குயவன் பக்தியுடன் மண்ணினால் செய்த புஷ்பத்தை சமர்ப்பித்ததை ஏற்றான். இது என்னது..? அதுதான் ஆஸ்ரித வாத்ஸல்யம்.
28. அதனால் உத்தமமான பக்தி உடையவர்களுக்கே அவன் வத்ஸலனாய் இருக்கிறான்.
29. மட்டபல்லி மஹாக்ஷேத்திரத்திலே உறையும் ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹன் ‘ஆஸ்ரித வத்ஸலன்’. அவன் நேரகவே சென்று எத்தனையோ ஏழைகளின் இன்னல்களைப் போக்கியவன்.
30. ‘ஆஸ்ரித வத்ஸலனாய்‘ உறையும் அவன் ‘ம‘ எனப்படும் ஜீவாத்மாக்களை அனுக்ரஹிப்பதற்காகவே, துயர் துடைப்பதற்காகவே சுலபமாக எல்லோரும் அனுஷ்டிக்ககூடிய ஒரு கர்மாவைச் சொல்லியிருக்கிறான். அது என்னது..? அந்த மட்டபல்லி க்ஷேத்திரத்தில் பதினோறு நாட்கள் தங்கியிருந்து தன்னை பிரதக்ஷிணம் – வலம் வரச்சொல்கிறான். அவ்வாறு செய்பவர்களின் சர்வ பாபங்களையும் தொலைக்கிறேன், அவர்களை மேன்மைப் படுத்துகிறேன் என்கிறான்..! எவ்வளவு வாத்ஸல்யம் பாருங்கள்..! யஜ்ஞ யாகாதிகள் எல்லாம் எல்லாராலும் செய்ய முடியுமா..? ஆனால் அந்த யஜ்ஞ யாகாதிகள் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அதை சுலபமாக அவனை வலம் வந்தே பெற்றுவிடலாமே..! அதுதான் ‘ஆஸ்ரித வாத்ஸல்யத்வம்’
31. அப்படி 11 நாட்கள் அங்கு மட்டபல்லி மஹாக்ஷேத்திரத்திலே தங்கி பிரதக்ஷிணம் செய்வதற்கு அனுகூலமாய், அவனே ‘ஶ்ரீ முக்கூர் ந்ருஹரி நிவாஸம்‘ என்று அடியேனுடைய பெயரிலேயே 32 அறைகள் கொண்ட சத்திரத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறான். நம் தாபத்ரயம் எனப்படும் பாப (தாக) சாந்திக்காக, கிணற்றையும் வெட்டி, வாளியையும் கட்டி, நீரையும் இறைத்து நம் கையில் வார்க்கிறான். அந்த நீரைப் பருகுவது ஒன்றுதான் நம் செயல்..!
32. ‘மம்‘ அக்ஷரத்திலே ஆஸ்ரித வத்ஸலனாய் விளங்கும் பகவான், மட்டபல்லி மஹாக்ஷேத்திரத்தில் யஜ்ஞவாடிகையில் ஐந்தாவது ஸ்தம்பத்தில் ‘யானக நரஸிம்மனாய் – யக்ஞ வாஹன திருக்கோலம். சங்க சக்ரபாணியாய் அபய முத்திரையுடன் நான்கு திருக்கரங்கள். வேதமயனான கருடன் வாகனமாக, ஆதிசேஷன் குடையாக, விரோதிகளையும் சேர்த்து அனுபவிக்கும் மங்கள மூர்த்தியாய் காட்சியளிக்கிறான்’.. அந்த க்ஷேத்திரத்திற்கு வரும் பக்தர்களுக்கெல்லாம் அபயம் – பயத்தைப் போக்குவித்து பகவத் ஸ்மரணை என்கிற சிறந்த ஞானம் அளிக்கக் காத்துக்கொண்டிருக்கிறான். இவ்வுயர்ந்த நன்நாளில் அவனை ப்ரார்த்தித்து அவனுடைய வாத்ஸல்யம் என்கிற குணத்தினால் வளம் பெறுவோமாக..!. குறையொன்றுமில்லையே!!
|| ஸகலம் பத்ரமச்நுதே! ||
ஶ்ரீ:
ஶ்ரீமதே ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம:
குறையொன்றுமின்றி நிறைவுடன் வாழ மறை உரைக்கும் முறை
( 6 ) ஹாம்
(ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மிநரஸிம்ஹாசாரியாரின் உபன்யாஸங்களிலிருந்து தொகுக்கப்பட்ட வேத மணித்துளிகள்)
(தொகுப்பு: ஶ்ரீ உ.வே முக்கூர் ஶ்ரீநிவாஸன்)

1. பகவான் ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹன் ‘ஹாம்’ என்கிற ஆறாம் அக்ஷரத்திலே உறைகிறான். அவன் வழியாகவும், அந்த வழியில் சென்றால் அடையக்கூடிய பயனாகவும் இருக்கிறான்.
2. ‘ஹாம்’ என்பதில் ‘ஹா‘ என்கிற அக்ஷரம் ‘ஹாவு, ஹாவு‘ என்று சாமகானம் ஒலிக்கும் ஶ்ரீ வைகுண்டத்தில் முக்தர்கள் அடையும் பலனைக் காட்டும்.
3. ஹாம் என்கிற அக்ஷரமானது பகவானை அடைவதற்கு அவனே உபாயமாகவும், அடைந்தபின்னால் அனுபவிக்கும் உபேயமாகவும் இருக்கிறான் என்பதைக் காட்டும்.
4. அமலத்வம், ஆஸ்ரித வாத்ஸல்யத்வம் என்கிற குணங்களை உடைய பகவான், உபாயம் மற்றும் உபேயம் என்கிற குணங்களை உடையவனாக இருக்கிறான்..
5. உபாயம், உபேயம் என்றால்..? உபேயம் என்றால் அடையவேண்டிய பொருள்; உபாயம் என்றால் அதை அடைவிக்கும் கருவி.
6. உலகத்திலே நாம் பார்க்கிறபோது உபாயம் என்பது ஒரு விஷயமாக இருக்கும். உபேயம் என்பது வேறு ஒரு விஷயமாக இருக்கும்.
7. பகவத் விஷயத்திலே எடுத்துக் கொண்டோமானால், அடைவிப்பவனும் அவனே, அடையப்படுபவனும் அவனே – உபாயம், உபேயம். சாதனமும் பயனும் அவனே. அவனை அடைவிக்கிற வழி அவனே.!
8. அவனுக்கு நய: என்று ஒரு திருநாமம். ‘நயதி‘ என்றால் அழைத்துப் போதல். நம்மை அழைத்துக்கொண்டு போகிறான் அவன்..
9. வராஹ சரம ஸ்லோகத்திலே பகவான் பூமாதேவியிடம் தான் யாரை ரக்ஷிக்கிறான், தான் யாரைக் கூப்பிட்டுக்கொண்டு செல்கிறான் என்பதை சொல்லியிருக்கிறான். சரமம் என்றால் கடைசி.
10. ‘மனதெல்லாம் நல்ல முறையிலே இருக்கிறபோது – மனது அலைபாயக்கூடாது – உடம்பிலே புஷ்டி, பலம், தேஜஸ் இதெல்லாம் இருக்கிற போதே, நாடித் துடிப்பெல்லாம் நல்ல முறையிலே இருக்கிறபோதே, புத்தி சலிக்காமல் இருக்கிறபோதே, நரம்புகள் முறுக்கேறி மிடுக்குடன் இருக்கிறபோதே எவன் என்னுடைய திருநாமத்தை உரக்கச் சொல்கிறானோ, அவன் என்னால் உடனே ரக்ஷிக்கப்படுவான்..!” என்று பகவான் சரம ஸ்லோகத்திலே பேசியிருக்கிறான்.
11. சிறு வயதிலேயே பகவன் திருநாமாக்களைச் சொல்லவேண்டும். பகவானுடைய திருவடியிலே புஷ்பங்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும். இளமையிலேயே ஆத்ம சமர்ப்பணம் பண்ண வேண்டும். இவையெல்லாம் அவனை அடைவதற்கு உபாயம்.
12. அந்திம காலத்திலே – வயதானபின் இவையெல்லாம் செய்வதற்கு இயலாமல் போகலாம். அதனால் இளமையிலேயே செய் என்கிறான் பகவான்.
13. அந்திம காலம் என்பது கொடியது. தன் பெற்றோர்களுக்கு பிள்ளையானவன் அவர்களுடைய அந்திம காலத்திலே சிச்ரூஷை – பணிவிடை செய்தால், அந்த மாத்ரு ஹ்ருதயமும் பித்ரு ஹ்ருதயமும் அவனை வாழ்த்துமாம். அவன் வழித்தோன்றல்களையெல்லாம் ஆசீர்வாதம் பண்ணுமாம். அத்தகையவன் சீரும் சிறப்புமாக இருப்பான். தாய் தந்தையருக்கு சிச்ரூஷை பண்ணாத வாழ்வு ஒர் வாழ்வா.. என்று மனுஸ்ம்ருதி பேசுகிறது.
14. தன் திருவடி பற்றினவர்களுக்கு அவர்களுடைய அந்திம காலத்திலே தானே நேரில் வந்து தன்னிடம் அழைத்துக் செல்கிறேன் என்கிறான் பகவான்.
15. பீஷ்மாச்சார்யாருக்கு அந்திம காலத்திலே பரமாத்மா நேரில் வந்தானா இல்லையா.? அவர் எதிர்பார்த்தாரா.? தானாகவேதான் அவன் வந்தான். வந்து, நேரில் காட்சி கொடுத்தான். பீஷ்ம ஸ்துதி பிறந்தது. ஸ்தோத்திரம் பண்ணார். பகவானுடைய திருவடியை அடைந்தார்.
16. பக்தியோகம் பண்ணுகிறவர்கள் தாங்களே சுயப் பிரயத்தனத்தினாலே அந்திம காலத்தில் பகவானின் ஸ்ம்ருதியை – நினைவை வரவழைத்துக்கொள்ள வேண்டும். சரணாகதி பண்ணுகிறவர்களுக்கு அந்திம ஸ்ம்ருதியை பகவானே கொடுத்து அழைத்துச் செல்கிறான்.
17. பாபாத்மாக்களுக்கு இரண்டு யம கிங்கரர்கள் வருவார்கள். புண்யாத்மாக்களுக்கு யமனே வருவான்.! திரும்பிப் போதல் இல்லாத மோக்ஷத்தை அடைகிறவர்களுக்கு பகவானே வருவான்..!!
18. உபேயம் – பயன் அவன்தான். அடைவிக்கும் சாதனமாகவும் (உபாயம்) அவனே இருக்கிறான். சாதனமும் பயனுமாக அவனே இருப்பது எப்படி தெரிகிறது என்றால் நம்மிடத்திலே இருக்கும்படியான இடுக்கண்களையெல்லாம் அவன் போக்குவதால்.
19. பகவான் தூரத்தில் இருக்கிற விரோதிகளைப் போக்குகிறான். கிட்டே இருக்கும்படியான விரோதிகளையும் போக்குகிறான்.
20. தூரத்தில் இருக்கும்படியான விரோதிகள் யார்..? நமக்குத் தெரியாமல் ஜன்மாந்திரங்களில் நாம் செய்த பாவம்.! அது நமக்கு விரோதியாக இருந்துகொண்டேயிருக்கிறது. நம்மைச் செயல்பட விடாமல், நல்ல விஷயத்திலே ஈடுபடவிடாமல் தடுக்கிறது. பெரிய தடையாக இருக்கிறது. பகவானுடைய திருவடியைப் பற்றினால் நமக்குத் தெரியாமலிருக்கும் பாவங்களையும் நம் கிட்டே நெருங்கவிடாமல் பண்ணுகிறான்..!
21. பாபமே பண்ணிக் கொண்டிருக்கும் ஒருவர் சௌக்கியமாக இருக்கிறார்…. விடாமல் புண்யகர்மா பண்ணுகிறவர்கள் கஷ்டத்தையே அனுபவிப்பதைப் பார்க்கிறோம். அதனால் புண்ய கர்மாவினால் என்ன பயன்? என்று தோன்றும். ஆனால் இது நமக்கு முதல் பிறவி இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். அனேக ஜன்மங்கள் நமக்கு ஏற்கனவே ஏற்பட்டு விட்டன..
22. பாவத்தைப் பண்ணுகிறவர் சௌக்கியமாக இருக்கிறார் என்றால், பின்னால் அவருக்கு அந்த பாவத்துக்கான பலன் வரத்தான் செய்யும். இப்போது அவர் சௌக்கியமாக இருக்கிறார் என்றால், ஏற்கனவே செய்த புண்ணியத்தின் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
23. இப்போது பண்ணுகிற புண்யத்துக்கு கஷ்டத்தை அனுபவிக்கிறேனே… என்று நினக்கலாகாது. மைசூர் ரசத்தை நன்றாக உறிஞ்சி சாப்பிட்டுவிட்டு, கையலம்பியபின், அரை மணி நேரத்திற்கு பிறகும் கையை மூக்கின் அருகில் கொண்டு சென்றால், அந்த ரசத்தின் வாசனை வருகிறதே. அதுபோன்று ஜன்ம ஜன்மமாக இந்த ஆத்மா பாபமே பண்ணிக்கொண்டிருக்கிறதே! அந்த வாசனை உடனே போகாது.
24. அருகே இருக்கும் விரோதிகள் யார்..? நம் இந்த்ரியங்கள்தான்.! கொடுமைமிக்க அந்த இந்த்ரியங்களை – புலன்களை – நமக்குள்ளேயே இருக்கும் விரோதிகளை – ஜெயிக்கவும் அவன்தான் அருள் புரிகிறான்..!!
25. பாபங்களுக்கு பிராயச்சித்தங்கள் செய்யலாமே என்று கேட்கலாம்.? யானையை நன்றாகப் பளபளவென்று தேய்த்துக் குளிப்பாட்டி, மரத்தடியிலே கட்டி வைத்தால்… அந்த யானை என்ன பண்ணுகிறது..? கீழே இருக்கிற சத்தை, குப்பையெல்லாம் எடுத்து, தலை மேலே போட்டு அழுக்கு பண்ணிக்கொள்கிறது. அது போன்றுதான் நாம் பண்ணும் பாபங்களும். பிராயச்சித்தத்தினால் பிரயோஜனம் இல்லை..!
25. ஒரு மூங்கில் காடு திடீரென்று தீப்பிடித்து எரிந்து பஸ்மமாகி போனது. என்ன ஆச்சர்யம்..! ஆறு மாதங்கள் கழித்துப் பார்த்தால் எங்கே கரிக்கட்டையாக இருந்ததோ, அந்த இடம் துளிர்த்து, பச்சைப் பசேல் என்று இருக்கிறது. அந்த அக்னியானது, பூமிக்கு மேலே இருக்கக்கூடிய பகுதியை எரித்ததே ஒழிய, பூமிக்கு உள்ளே ஊடுருவி, அதன் வேரை அழிக்ககூடிய சக்தி அக்னிக்கு இல்லை. அது போன்றுதான் பிராயச்சித்த கர்மாக்களும். பாபத்தைத் தூண்டக்கூடிய கெட்ட வாசனையைப் போக்கக்கூடிய சக்தி அந்த கர்மாக்களுக்குக் கிடையாது.
26. நாம் பாபம் செய்யாமலிருக்க பகவானின் திருவடிகளைத்தான் பற்ற வேண்டும். பாபத்தை தூண்டக்கூடிய கெட்ட வசனையைப் போக்கடிக்கக்கூடியவன் அவன் ஒருவனே..!
27. பாபமே நாம் பண்ணுவதனாலே, அது ஜன்மாந்தரத்திலே தொடர்ந்து வரக்கூடியதனாலே, அதனால் வரக்கூடிய கஷ்டங்களெல்லாம் அவன்தான் போக்கடிக்கிறான். பாபமே துளிக்கூட இல்லாமல் போக்கடித்து விடுகிறான்.
28. மட்டபல்லி மஹாக்ஷேத்திரத்து எம்பெருமான் தன் திருவடி பற்றினவர்களின் ‘ராக-த்வேஷ விநாசிநே‘ என்று பாபங்களை செய்யத் தூண்டக்கூடிய ஆசை மற்றும் கோபத்தை போக்கடிக்கிறேன் என்கிறான்..!
29. அவன் ‘ஸர்வாரிஷ்ட விநாசிநே’ என்று அரிஷ்டங்கள் – எல்லா கெடுதிகளையும் போக்குவிக்கிறேன் என்றான்.
30. அதற்கு மேல், ‘ஸர்வாபீஷ்டப் பிரதாயிநே‘ என்று அபீஷ்டங்கள் – எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றுகிறேன் என்கிறான்.
31. மட்டபல்லி மஹாக்ஷேத்திரத்திலே உறையும் ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹன்தான் நமக்கு ‘உபாயம் – உபேயம்’. அவனே வழி. அவனே பயன்.!
32. நமக்கு உபாயமாகவும் – உபேயமாகவும் விளங்கும் எம்பெருமான், மட்டபல்லி மஹாக்ஷேத்திரத்தில் யஜ்ஞவாடிகையில் ஆறாவது ஸ்தம்பத்தில் ‘ஹாம்’ என்கிற அக்ஷரத்தில் ‘ஶ்ரீ காரஞ்ச ந்ருஸிம்ஹனாய்‘ எழுந்தருளி இருக்கிறான். அஹோபில மஹாக்ஷேத்திரத்தில் காரஞ்ச மரத்தின் (புங்க மரம்) கீழ் அமர்ந்துள்ளதால் ஏற்பட்ட திருநாமம். பத்மாஸனத்தில், ஆதிசேஷன் குடையாக நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த திருக்கோலம். வலது திருக்கரத்தில் சக்கரமும், இடது திருக்கரத்தில் வில்லும் ஏந்தியபடி அனுமனுக்கு ராமனாக ஸேவை ஸாதித்த மூர்த்தி. அவனே உபாயம், அவனே உபேயம் என்று உணர்ந்து அவன் திருவடி பற்றுவோற்கு குறையொன்றுமில்லையே..!
|| ஸகலம் பத்ரமச்நுதே! ||
ஶ்ரீ:
ஶ்ரீமதே ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம:
குறையொன்றுமின்றி நிறைவுடன் வாழ மறை உரைக்கும் முறை
( 7 ) விம்
(ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மிநரஸிம்ஹாசாரியாரின் உபன்யாஸங்களிலிருந்து தொகுக்கப்பட்ட வேத மணித்துளிகள்)
(தொகுப்பு: ஶ்ரீ உ.வே முக்கூர் ஶ்ரீநிவாஸன்)

1. பகவான் ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹன் ‘விம்’ என்கிற ஏழாம் அக்ஷரத்திலே உறைகிறான். அவன் அனுபவிப்பவனாகவும், அனுபவிக்கப்படும் பொருளாகவும், நியமிக்கக்கூடியவனாகவும் இருக்கிறான்.
2. ‘விம்’ என்பதில் ‘வி‘ என்கிற அக்ஷரம் பகவான் விஷ்ணுவைக் குறிக்கிறது. விஷ்ணு என்கிற திருநாமத்திற்கு எல்லாவற்றின் உள்ளேயும் இருப்பவன் என்று பொருள்.
3. விம் என்கிற அக்ஷரமானது, பகவான் விஷ்ணு ‘அனுபவிக்கபடும் பொருள்களை உண்டாக்கி அதை அனுபவிக்கும்படியாக நம்மை நியமித்து, தான் அனுபவிக்கிறான்’ என்கிற உயர்ந்த தத்துவத்தை காட்டுகிறது.
4. அமலத்வம், ஆஸ்ரித வாத்ஸல்யத்வம் என்கிற குணங்களை உடைய பகவான், உபாயமாகவும், உபேயமாகவும் இருக்கிறான். அவனே போக்யத்வம், போக்த்ருத்வம், நியந்த்ருத்வம் என்கிற குணங்களை உடையவனாக இருக்கிறான்..
5. போக்யத்வம், போக்த்ருத்வம், நியந்த்ருத்வம் என்றால்..? போக்தா என்றால் அனுபவிப்பவன்; போக்யம் – அனுபவிக்கப்படும் பொருள்; நியந்த்ருத்வம் அல்லது பிரேரிதா என்றால் அதை அனுபவிக்கும்படியாகப் பண்ணக்கூடியவன்.
6. பகவானுக்கு நியாமகன் என்கிற பெயர் உண்டு. விஷ்ணு ஏவக்கூடியவன், செயல்படுத்தக்கூடியவன், உள்ளிருந்து செயல்படுத்தக்கூடியவன்.
7. போக்தா யார் என்றால் ஜீவாத்மா.! வெளியிலே கண்ணுக்கு, காதுக்கு, சுவைக்கு என்று எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. இவற்றை அனுபவிப்பவன் ஜீவாத்மாவாகிய போக்தா.
8. ஜீவாத்மா அறிவுள்ளவன். சேதனன் என்று பெயர். அனுபவிப்பவன்.!
9. அனுபவிக்கும்படியான பொருள்களுக்கெல்லாம் போக்யம் என்று பெயர். இன்று தளிகை – சமையல் எப்படி இருந்தது .? என்றால், போக்யமாய் இருந்தது என்கிறோம். நன்கு அனுபவிக்கும்படியாக இருந்தது என்று அர்த்தம்.
10. போக்யமான வஸ்துக்களெல்லாம் அசேதனமானது. அறிவற்றது. அது அனுபவிக்காது. ஆனால், அனுபவிக்கப்படும் பொருளாக இருக்கும்.
11. அதனால், போக்தாவாக இருக்கும் ஜீவாத்மா அனுபவிப்பதற்காக போக்யமாய் இவையெல்லாம் இருக்கிறது. அவ்வாறு அனுபவிக்கும்படியாகப் பண்ணுகிறவன் யார்..? ப்ரேரிதா – நியாமகன் – ஈச்வரனாகிய பகவான்.
12. அப்போது என்ன தத்வம் இங்கே..? சித்து, அசித்து, ஈச்வரன் என்று தத்துவத்தை சாஸ்த்திரம் சொல்லுகிறது. சித்து என்றால் சேதனம் – அறிவை உடையவன். அசித்து என்றால் அசேதனம் – அறிவில்லாத, சாமானியமான இந்த லோகத்திலே காணப்படக்கூடிய பொருள்கள். இவை இரண்டையும் செயல்படுத்தக்கூடியவன் பரமாத்மா. இந்த இரண்டையும் அந்தர்யாமியாக இருந்து செயல்படுத்துகிறான்..!
13. இந்த தத்துவத்தை அர்ஜுனனுடைய தேர்த்தட்டிலே காணலாம். அர்ஜுனன் உட்கார்ந்திருக்கிறான். ‘சித்’ அவன். குதிரைகளுக்கெல்லாம் அறிவு உண்டு. அவையும் சேதன கோஷ்டிதான். ரதம் – தேர் இருக்கிறதே.. அது ‘அசித்’. இந்த இரண்டையும் செயல்படுத்துகிறவன் யார்..? தேரை ஓட்டும் கிருஷ்ணன் – ஈஸ்வரன்.!
14. நரஸிம்ம அவதாரத்தை எடுத்துக் கொண்டோமானால், சித் ப்ரஹ்லாதன்; அசித் – ஸ்தம்பம். இந்த இரண்டையும் நிர்வகித்தவன் யார்.? ஸ்தம்பத்திலிருந்து தோன்றிய ந்ருஸிம்ஹன்தான்..!
15. ஆளவந்தார் என்கிற ஆசார்யரை நாம் ‘நமோ நமோ யாமுனாய, யாமுனாய நமோ நம:’ என்று எப்பொழுதும் தியானம் பண்ணவேண்டும். அவர் ஸ்தோத்திர ரத்னம் என்று ஸ்லோகங்கள் சொல்லியிருக்கிறார். அதனுடைய அர்த்தத்தைத் தெரிந்து கொண்டுவிட்டால் அது நமக்கு வைராக்கியத்தை உண்டு பண்ணும். பகவானிடத்திலே பக்தியையும் உண்டு பண்ணும். பகவத் விஷயமான ஞானத்தையும் நமக்குக் கொடுக்கும்.
16. ஆதி சங்கர பகவத் பாதாள் ராம நாமத்தை ‘பஜேஹம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம்‘ என்று நான்கு முறை சொல்லச் சொல்கிறார். ஏனெனில் ராம நாமா என்பது அத்தனை ஆதரவு.! காத்யாயனி காமுகனான ஈஸ்வரன் – பரமசிவன், காசிமா நகரத்தில் ஒவ்வொரு ஜீவனுடைய வலது செவியிலும், பிராண வியோக சமயத்திலே ஓடிவந்து, ராமா ராமா ராமா என்று மூன்று தடவை சொல்கிறாராம்.!
17. அதனால்தான் பகவத் பாதாள் ‘அந்த ப்ரும்ம ரூபமானவனை, நம்மையெல்லாம் தரிக்கப் பண்ணக்கூடிய ஏகமானவனை, அவனுடைய ஒப்பற்ற திருநாமத்தால் நான் பஜிக்கிறேன்..!’ என்று நான்கு தடவை சொல்கிறார்.!
18. அதே போல்தான் ‘நமோ நமோ யாமுனாய…‘. சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்வதனால் பக்தி மேலீடாகி உயர்ந்து நிற்கிறது.!
19. யாமுனன் என்கிற திருநாமம் கொண்ட ஆளவந்தார், ஆக்கி ஆழ்வான் என்கிற கர்வம் கொண்ட அரசு ஆஸ்தான வித்வானை தன் சிறு வயதிலேயே வாதத்தில் வென்றவர்.
20. அந்த வாதத்தின்பொழுது அவர் அந்த கர்வம் கொண்ட வித்வானைப் பார்த்து ‘நான் எதையெல்லாம் இருக்கிறது என்று சொல்கிறேனோ அதையெல்லாம் நீர் இல்லை என்று நிரூபிக்கவேண்டும்.! நான் எதை எதை இல்லை என்று சொல்கிறேனோ அதையதை நீர் இருக்கிறது என்று ஸ்தாபனம் பண்ண வேண்டும். அவ்வாறு நிரூபிக்க முடியாது போனால் தோற்றுவிட்டதாக அர்த்தம்’ என்று சொல்லி அதை அவர் ஒப்புக்கொண்டபின் வாதம் நடந்தது.
21. அப்பொழுது மூன்று வாதங்களை அவர்முன் வைத்தார் சிறுவனான யாமுனர். ஒன்று ‘உங்கள் அம்மா மலடி அல்ல..’ என்றார். அந்த வித்வான் தன்னுடைய அம்மா மலடி என்று சொல்ல வேண்டும். எப்படி சொல்வார் ..? இரண்டாவது ‘இந்த ராஜா சார்வபௌமன்..’ என்றது குழந்தை. சார்வபௌமன் என்றால் எல்லா திக்குகளிலும் பரந்த ராஜ்யத்தை உடையவன் என்று அர்த்தம். அந்த வித்வான் ராஜா சார்வபௌமன் அல்ல என்று சொல்லவேண்டும். சொன்னால் என்ன ஆகும். உடனே ராஜா அவரைச் நாடு கடத்திவிடுவான். அதனால், அதற்கும் வாயடைத்து நின்றார் அவர். மூன்றாவதாக ‘இந்த ராஜ பத்னி மஹாபதிவ்ரதை’ என்றார். மிகவும் விபரீதமான வாதம் இது. ஏனென்றால் அந்த வித்வான் இப்பொழுது ‘ராஜ பத்னி பதிவ்ரதை அல்ல’ என்று சொல்ல வேண்டும். சொன்னால் என்னவாகும்.? உடனே சிரச்சேதம்தான். தன் தோல்வியை ஒப்புக்கொண்டார்..!
22. அந்த கேள்விகளுக்கு யாமுனரே சாஸ்த்திர ரீதியாக பதில் சொன்னார். ‘காக்கை ஒரு முட்டைதான் இடும். வாழை ஒரு குலைதான் தள்ளும். ஒரே மரம் தோப்பாகிவிடாது. உங்கள் அம்மாவிற்கு நீர் ஒரே பிள்ளை. எப்படி காகத்தையும், வாழையையும் மலடி என்கிறோமோ, அதுபோன்று தங்கள் தாயாரும் மலடிதான்’ என்றார்.
23. அடுத்தது சார்வபௌமன். சாஸ்த்திரரீயாக சார்வபௌமன் என்றால் ஏழு த்வீபங்களிலும் அவன் பரிபாலனம் இருக்கவேண்டும். அவனுடைய ராஜ்ஜியத்தில் சூரியன் மறையவே கூடாது, அதாவது இந்த பூமி முழுவதும் அவன் ராஜ்ஜியமாக இருக்க வேண்டும். அவை இந்த ராஜாவிற்கு இல்லாததனால் அவன் சார்வபௌமன் ஆகமாட்டான் என்றார்.
24. அடுத்து, ஒரு பெண் உலகத்திலே பிறக்கிறாள் என்றால் அவள் ஆத்மா முதலில் சந்திரனிடத்தில் இருக்கும். அதன் பிறகு கந்தர்வனிடத்திலே வரும்.. கந்தர்வர்கள் அக்னியினிடத்திலே ஒப்படைப்பார்கள். பூலோகத்திலிருக்கிற மனிதனான வரனுக்கு இந்த பெண்ணைக் (மூன்று பேரிடமிருந்தவளை) கொடுக்கிறேன் என்கிறது விவாஹ மந்திரம். இது எல்லா ஸ்த்ரீகளுக்கும் பொது என்பதால் இதிலே தோஷம் ஏதும் கிடையாது. அந்த சாஸ்த்திரக் கண்கொண்டு பார்த்தால் ராணி பதிவ்ரதை ஆகமாட்டாள் என்றது குழந்தை. இதை கேட்டதும் ‘எம்மை ஆளவந்தீரோ..!‘ என்று சொல்லி அந்த ராணி வியந்தாள் அதனால் யாமுனருக்கு ஆளவந்தார் என்று திருநாமம்.!
25. அப்படி எல்லாவற்றையும் உயர்ந்த சாஸ்த்திரக் கண்கொண்டு பார்க்கும் ஆளவந்தார் தன் ஸ்தோத்திர ரத்தினத்தில் போக்தா, போக்யம், பிரேரிதா என்பதைப் பற்றி விசேஷமாகச் சொல்லியிருக்கிறார். அவரை நாம் தியானம் செய்தால் ஞானம், பக்தி, வைராக்கியம் – இவை மூன்றும் சித்திக்கும்..!
26. விஷ்ணு புராணத்தில் பராசர மஹரிஷி சித், அசித், ஆனந்தம், போக்தா, போக்யம், பிரேரிதா பற்றி விரிவாகச் சொல்லியிருக்கிறார்.
27. நாம் முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டியது, “ஓவ்வொன்றையும் நாம் அனுபவிக்க வேண்டுமென்றால், அவன் அருள் இல்லாமல் அனுபவிக்க முடியாது. நாம் எவ்வளவுதான் திட்டம்போட்டு ஒரு பொருளை அனுபவிக்க வேண்டுமென்று ரொம்ப சித்தமாக எடுத்து வைத்துக் கொண்டாலும் பகவத் சங்கல்பம் இல்லையென்றால் அது நழுவிப் போய்விடும்”
28. சுவாமி தேசிகன் சரணாகதியைப் பிழிந்து கொடுக்கிறார் பத்து சுலோகங்களில்… அதில் ஒரு சுலோகத்தில் ‘ஹே வரதா! தேவாதி ராஜா! நீயே இதை ஏற்றுக் கொள்ள வேண்டும்‘ என்கிறார். எதை ஏற்றுக்கொள்ள வேண்டும்..? “என்னையும் என் உடைமையையும்.. உன்னைச் சேர்ந்தது என்று அர்ப்பணிக்கிறேன். இதை நீ சுவீகரித்து அனுக்கிரஹம் பண்ண வேண்டும்..’ என்கிறார்
29. வேதத்தில் மூன்றாம் காண்டத்தில் ஒரு மந்த்ரம் வரும். அதன் அர்த்தம் என்னவென்றால் “இந்த என் ஆயுள் இருக்கிறதே அது யஜ்ஞத்தின் பொருட்டு… பிராணன் இருக்கிறதே, அது யஜ்ஞத்தின் பொருட்டு… அபானன் என்கிற வாயு இருக்கிறதே, அது யஜ்ஞத்தின் பொருட்டு… கேட்கும் சக்தியானது இருக்கிறதே, அது யஜ்ஞத்தின் பொருட்டு… மனஸ் இருக்கிறதே, அது யஜ்ஞத்தின் பொருட்டு… வாக்கு அது யஜ்ஞத்தின் பொருட்டு… ஆத்மா யஜ்ஞத்தின் பொருட்டு… பத்னி, பசுக்கள், வீடு, ஐஸ்வர்யம் எல்லாம் யஜ்ஞத்தின் பொருட்டு…” என்று சொல்கிறது மந்திரம்.
30. ‘எல்லாமே யஜ்ஞத்தின் பொருட்டு என்றால் உனக்கு என்ன..? என்று ஒருத்தர் கேட்டார். எல்லாமே யஜ்ஞத்தின் பொருட்டு என்று நாம் சமர்ப்பித்தாலும் அத்தனையும் பன்மடங்கு விருத்தி பண்ணி நமக்குத் திருப்பிக் கொடுத்து விடுகிறான் பகவான். யஜ்ஞத்தை யார் பண்ணுகிறார்களோ அவர்களுக்கே பன்மடங்கு திருப்பிக் கொடுத்து விடுகிறான்..!
31. ஆகையினாலே, ‘மஹாயஜ்ஞ ஸ்வரூபாய” என்று போற்றப்பெறும் ஶ்ரீ மட்டபல்லி யோகாநந்த லக்ஷ்மீந்ருஸிம்ஹனிடம் சர்வமும் நாம் அர்ப்பணிக்க வேண்டும். “என்னைச் சேர்ந்த அத்தனையும் உன் பொருட்டு” என்று அர்ப்பணம் பண்ணவேண்டும். அவ்வாறு நாம் அர்ப்பணிக்கிறோமா என்றுதான் அவன் பார்க்கிறான்.
32. போக்தாவாகவும், போக்யமாகவும், பிரேரகனாகவும் இருக்கும் எம்பெருமான் லக்ஷ்மீந்ருஸிம்ஹன் மட்டபல்லி யஜ்ஞவாடிகையில் ஏழாவது ஸ்தம்பத்தில் “விம்” அக்ஷரத்தில், நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்துடன் ‘கிரிஜா நரஸிம்மனாய்” காட்சி அளிக்கிறான். வலது திருக்கரத்தில் சக்கரமும், வரத முத்திரையுடனும், இடது திருக்கரத்தில் தாமரையும், அபய முத்திரையுடனும் உயர்ந்து நிற்கின்றான். அவனை நாம் தியானம் பண்ணோமானால் பரபக்தி, பரஞானம், பரமபக்தி என்கிற மூன்றும் நமக்கு நன்கு அமையும். குறையொன்றுமில்லை..!!
|| ஸகலம் பத்ரமச்நுதே! ||