கம்பன் கவிதையில் நரசிங்கச் சிரிப்பொலி

[ஸ்ரீ. உப. வித்வான் முக்கூர் லக்ஷ்மீநரஸிம்ஹாசார்ய ஸ்வாமி, விஜயவாடா]
(1971 கார்த்திகை ஶ்ரீ ந்ருஸிம்ஹப்ரியா பத்திரிக்கையில் வெளியான கட்டுரை)

‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்‘ என்ற பெருமையைப் பெற்றவர் கம்பர். இவர் கவிதைகள் கற்றோரின் கருத்தில் களிநடம் புரியும். இவ்வளவு பெருமை இவருக்கு ஏற்படக் காரணம் இவரது சிறந்த பக்தியே.

யுத்தகாண்டம் ஆரம்பமாகிறது. இது கதாநாயகனான இராமபிரான் தன் பகைவனான இராவணனைப் போரில் கொன்று வென்றதைக் கூறும் பாகம் என்று பொருள்படும். யுத்தகாண்டத்தை ஆரம்பிக்குமுன் கம்பர் காப்புச் செய்யுளில் ஸ்ரீந்ருஸிம்ஹனைத் துதிக்கிறார்:—

ஒன்றே என்னில் ஒன்றேயாம்,
பலவென் றுரைக்கிற் பலவேயாம்,
அன்றே என்னில் அன்றேயாம்,
ஆமென் றுரைக்கின் ஆமேயாம்,
இன்றே என்னில் இன்றேயாம்,
உளதென் றுரைக்கின் உளதேயாம்,
நன்றே நம்பி குடிவாழ்க்கை,
நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா!

இந்தச் செய்யுள் பொதுப்படையாகப் பகவானின் தன்மையைக் கூறினாலும், அவனுடைய அவதாரத்தில் ஸ்ரீந்ருஸிம்ஹாவதாரத்தைச் சிறப்பாக மெய்ப்பொருளெனக் காட்டுகிறது.

‘ஏக:‘ என்று ஒன்றான பகவான் ‘பஹு‘வாக மாறினான். முதல் இரண்டடிகளில், ‘பஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி’ என்ற உபநிஷத் வாக்கியம் அறுதியிடப்பெறுகிறது. ”உடல் மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்” என்பது பராங்குசனின் பனுவல். அவரைப் போன்ற ஞானிகள் உட்கண் கொண்டு நோக்கும்போது. ‘நிற்கின்றதெல்லாம் நெடுமால்’ என்று உணருகின்றனர். ஆனால் மந்தமதிகளும் தன்னுடைய இந்தப் பெருமையை உணர்வதற்காக ஸ்ரீந்ருஸிம்ஹாவதார காலத்தில் பகவான் எங்கும் காணப்பட்டான்.

இவ்வாறு இறந்த காலத்தையிட்டு இந்த அவதாரச் சிறப்பைப் பேசிவிட முடியாது. நம் தூப்புல்குலமணி, ‘அதுநாபி கரீஸ! நூநம் த்ரைலோக்யமேததகிலம் நரஸிம்ஹகர்பம்’ என்று பறை சாற்றினார். இப்போதும் என்றும் அண்டபகிரண்டங்களெல்லாம் நிறைந்து காணப்படுகிறான். காணப்படுவான் இறைவன். சந்தேகம் யாதுமில்லை. ‘எங்குமுளன்’ என்றான் குழந்தை. பகவான், ‘குழந்தை எவ்விடத்தைக் காட்டுவானோ?’ என்று எண்ணி, ஸர்வவியாபியானான். ஆனால், வந்தது ஒரு தூணிலிருந்துதான். மீதமுள்ள எல்லாச் சராசரங்களிலும் பகவான் ந்ருஸிம்ஹ ரூபத்தில் நிலைத்துவிட்டான். இதை வர்ணிக்கிறார் கம்பர். இவ்வாறு இவர் நரசிங்கமூர்த்தியைத் துதிப்பதற்குக் காரணம் உண்டு.

இதே காண்டத்தில் கம்பர், வீடணன் அடைக்கலப் படலத்துக்கு முன்பாக, ‘இரணியன் வதைப் படலம்’ என்று வீடணன் வாயிலாக ஸ்ரீந்ருஸிம்ஹாவதார வைபவத்தைத் துராத்மாவான இராவணனுக்கு உபதேசிக்க வைக்கிறார். இந்தப் படலத்தைக் குறித்துக் கர்ணபரம்பரையாக வழங்கும் விவரம் வருமாறு:—

கம்பர் ஸ்ரீரங்கத்தில் ஆயிரக்கால் மண்டபத்தில் தமது இராமாயணத்தை அரங்கேற்றி வருகையில், ‘இரணியன் வதைப் படலம்’ வாசித்தபோது அங்கிருந்த சில வித்வான்கள், ”ஆதிகாவ்யமான வால்மீகி ராமாயணத்தில் இரணியன் வதை சொல்லப்படவில்லையே? இது என்ன நவீனமாக இருக்கிறதே! ஏதேனும் தெய்வீகம் செய்து காட்டினாலன்றி இது அங்கீகரிக்கப்பட மாட்டாது” என்று ஏககண்டராகக் கூறிவிட்டனர். ஸ்ரீமந்நாதமுனிகள் இவ் விஷயத்தில் ஒன்றுஞ் சொல்லாதிருந்தார். பின்பு கம்பர், ‘பகவத் ஸங்கல்பத்தின்படி ஆகட்டும்’ என்று துணிந்து இந்தப் படலத்தை மேட்டழகியசிங்கர் சந்நிதியில் வாசித்தார். அப்பொழுது அந்தப் பெருமான் தமது திருக்கரங்களை நீட்டித் திருமுடியைத் துளக்கி வாய்திறந்து பெருஞ்சிரிப்புச் சிரித்து ஆரவாரித்தார். அது கண்டு எல்லாரும் வியந்தனர். மேலும் சிலர், ”திருச்சித்திர கூடத்தில் மூவாயிரவர் பிள்ளையொன்று, இந்தக் கம்ப ராமாயணத்து நாகபாசப் படலத்துச் சில கவிதைகளை வாசித்த அளவில் பிழைத்தெழுந்தது. இங்கே இரணியன் வதைப் படலத்தை வாசித்த அளவில் அர்ச்சாவிக்ரக ரூபமாக எழுந்தருளி யிருக்கிற மேட்டழகியசிங்கப் பெருமான் திருவுள்ளமுவந்து அந்த உகப்பு யாவர்க்கும் புலனாகும்படி சிரக்கம்பத்தோடு அட்டகாசமும் செய்தான். ஆதலால் இந்தப் பெருங் காவியம் தெய்வந்தன்மையுடையது” என்று இந்த நூலை மிகவும் மெச்சிக் கொண்டாடினார்கள்.

இரணியன் வதைப் படலத்தை வாசித்ததும் அர்ச்சாவதாரமூர்த்தியின் சிரிப்பொலியைக் காட்டிலும், கம்பன் கவிதை சிரிக்கும் அழகே அழகு! மகாபாவியான இரணியன் சிறுபாலனான பிரஹ்லாதனைப் பலவாறு துன்புறுத்துகிறான். மிகுந்த கோபம் மூட்ட இரணியன் குழந்தையை அதட்டி இவ்வாறு கேட்கிறான்: ”உன் ஹரி ‘எங்குமுளன்’ என்கிறாயே, அவ்வாறாயின் இந்தத் தூணில் இருப்பானோ? இருந்தால் காட்டுக” என்றான். பரம பாகவதோத்தமனான குழந்தை கரம் குவித்து இவ்வாறு உரைக்கிறான்:—

சாணினு முளனோர் தன்மை
யணுவினைச் சதகூ றிட்ட
கோணினு முளன்மா மேருக்
குன்றினு முளன் இந்நின்ற
தூணினு முளன்நீ சொன்ன
சொல்லினு முளன் இத்தன்மை
காணுதி விரைவி னென்றான்
நன்றெனக் கனகன் நக்கான்.

”யான் சொன்ன அந்த எம்பெருமான் சாணிலும் இருக்கிறான். சிறிய ஓர் அணுவை நூறு கூறாகப் பகிர்ந்த பகுப்பிலும் இருக்கிறான். மாமேரு மலையிலும் இருக்கிறான். இவ்விடத்தே இந்தத் தூணிலும் இருக்கிறான். நீர் அவனைக் குறித்து இகழ்ச்சியாகச் சொன்ன சொல்லிலும் இருக்கிறான். இந்த உண்மைத்தன்மையை விரைவில் சோதித்து அறிந்திடுக” என்றான் பிரகலாதன்.

இதைச் செவியுற்ற இரணியன் மிக்க கோபாவேசத்துடன் தனது முஷ்டியினால் தூணைப் புடைத்தான். அங்கு அப்பொழுதே அவன் வியப் பெருஞ்சிரிப் பொலியுடன் மிகவும் விசித்திரமான நரசிங்க ரூபத்துடன் காட்சியளித்தான் பகவான். இந்த விபவமூர்த்தியின் சிரிப்பொலி ஆச்ரிதர்களுக்கு ஆனந்ததாயகமாகவும், அதே சமயத்தில் தீயவர்களின் இருதயத்தில் கம்பத்தை உண்டாக்குவதாகவும் இருந்தது. கம்பத்தின் அருகில் பரம ஸாது ஒருவனும் பரம துஷ்க்ருத் ஒருவனும் நின்றுகொண்டிருக்கும் போது சிரிப்பொலி கேட்கிறது. ஸாதுவான பிரஹ்லாதன் அதை ரஸிக்கிறான். துஷ்டனான இரணியனின் சிரிப் பொலிக்கு இதுவரையில் சராசரங்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. ஆனால் இந்தச் சிரிப்பொலி இவனையே நடுங்க வைத்தது. இரணியன் கேட்கிறான்:—

ஆரடா சிரித்தாய்? சொன்ன
அரிகொலோ அஞ்சிப் புக்க
நீரடா போதா தென்று
நெடுந்தறி நேடினாயோ?
போரடா பொருதி யாயிற்
புறப்படு புறப்ப டென்றான்
பேரடா நின்ற தானோ
ருலகெலாம் பெயரப் போவான்.

”சிரித்த நீ ஆரடா? இவன் சொன்ன திருமாலோ? நீ முன்பு எனக்கு அஞ்சிப்புக்கு ஒளித்துக்கொண்டிருந்த கடலில் இடம் போதாதென்று நீண்ட இந்தத் தூணைத் தேடி இதனுள்ளும் ஒளித்தாயோ? என்னோடு நீ போர் செய்ய வல்லையாயின் வெளிப்புறப்படு புறப்படு!” என்றான்.

அப்பொழுது,

பிளந்தது தூணு மாங்கே
பிறந்தது சீயம் பின்னை
வளர்ந்தது திசைக ளெட்டும்
பகிரண்ட முதலா மற்றும்
அளந்ததப் புறத்துச் செய்கை
யாரறிந் தறைய கிற்பார்
கிளர்ந்தது ககன முட்டை
கிழிந்தது கீழும் மேலும்.

அந்தத் தூண் பிளவுபட்டது. அவ்விடத்திலிருந்து சிங்கமூர்த்தி வெளித் தோன்றியது. அந்தத் திருவுருவம் உடனே எட்டுத் திக்குகளையும் அளாவி வளர்ந்தது. இந்த அண்டத்துக்கு வெளியிலுள்ள வேறு அண்டம் முதலியவற்றையும் அளாவியது. இவ்வண்டத்துக்கு அப்பால் நடந்த செய்கையை அறிந்து சொல்ல வல்லவர் யாவர் உளர்? அண்டகடாகம் கீழும் மேலும் பீறிப் பிளந்தது. தோன்றின உருவம் மறுபடி இரணியனைத் தோன்றவொட்டாமல் ஒழித்துக் கட்டியது.

இங்கு நாம் கவனித்தற்பாலது ஒன்று உண்டு: பகவான் ஸ்ரீந்ருஸிம்ஹன் அட்டகாசத்துடன் இரண்டு முறை சிரித்தான். ஒன்று: விபவாவதார வைபவச் சிரிப்பு. மற்றொன்று: அர்ச்சாவதார வைபவச் சிரிப்பு. இரண்டுக்கும் காலம் வேறு. சிரிப்பொலி கேட்டவர்களும் வேறாயினர். இடமும் மாறுபட்டது. ஆனால் நமக்கு, மிகவும் பாக்கியசாலிகளான அவர்களுக்கே கிடைக்காத ஒன்று கிடைத்திருக்கிறது. நாம் ஒரு சேர ஒரே இடத்தில் இரண்டு சிரிப்பொலிகளையும் கம்ப ராமாயணத்தின் மூலம் கேட்டு அநுபவிக்கிறோம்.

Scroll to Top