ஶ்ரீ:
ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம:


ஶ்ரீ மாலோல பஞ்சகம்
श्री मालोल पञ्चकं

[முக்கூர் ஶ்ரீ லக்ஷ்மீ நரஸிம்ஹாச்சாரியார்]

மாத்ருதேவோ பவ” என்கிறது உபநிஷத்து. ‘தாயாரைத் தெய்வமாகக் கொண்டிரு’ என உறுதியுடன் கூறுகிறது. ‘ச்ருதேரிவார்த்தம் ஸ்ம்ருதிரந்வகச்சத்‘ என்கிற மஹாகவியின் வாக்கின்படி, வேதத்தை அடியொற்றி, தர்மசாஸ்திரமும் இதையே வலியுறுத்துகின்றது. “யதா மாதரம் ஆச்ரித்ய ஸர்வேஜீவந்திஜந்தவ: – ததாக்ருஹா ச்ரமம் ப்ராப்ய வர்த்தந்தே இதர ஆச்ரமா:” “எப்படித் தாயை அண்டி எல்லா ஜீவ ராசிகளும் வாழ்கின்றனவோ அவ் வண்ணமே இல்லறத்தை அண்டித்தான் எல்லா ஆச்ரமங்களும்’ என்கிறது ஸ்ம்ருதி.

கௌசல்யா சுப்ரஜா ராமா‘ என்கிறார் மகரிஷி. ஸ்ரீராமனை ‘மன்னுபுகழ் கௌசலைதன் மனி வயிறு வாய்த்தவனே‘ என்கிறார் ஸ்ரீ குலசேகரப்பெருமாள். ‘ब्रह्मण्यो देवकीपुत्रः‘ என்கிறது ஸ்ரீ புராணரத்னம். ‘யசோதை இளஞ்சிங்கம்‘ என்றும், ‘ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர‘ என்றும் சூடிக் கொடுத்த நாச்சியாரின் அநுபவம்.

இப்படி ச்ருதி, ஸ்ம்ருதி, இதிஹாஸ, புராண, ஆழ்வார்களது திவ்ய ஸ்ரீஸூக்திகள் அனைத்தும் அன்னையின் ஏற்றத்தைப் பரக்கப் பேசுகின்றன. ‘காயத்ரியைக் காட்டிலும் மந்த்ரமில்லை, தாயைக் காட்டிலும் தெய்வமில்லை’ என்கிற ப்ரமாண வசனம் தாயன்புக்கு உவமையே இல்லை. அப்படிப்பட்ட உயர்ந்த தாயை இழத்தல் பெரும் துக்கம். இழந்து வாழ்வது மிகவும் கடினம்.

இதை இப்போது அடியேன் அநுபவித்துக் கொண்டிருப்பதனால் அடியேனே பரம ப்ரமாணமாகிறேன். கம்பராமாயணத்தில் அழகான பாசுரமொன்று: சித்திரகூடத்தில், பரதன் வாயிலாக, தசரதன் மாண்டுவிட்ட செய்தியைக் கேட்டு அலறும் பரந்தாமன் ஸ்ரீராமன் பலவாறு புலம்புகிறான். அதில் ஒன்று:

தேனடைந்த சோலைத் திருநாடு கைவிட்டுக்
கானடைந்தேன் என்னத் தரியாது காவலநீ
வானடைந்தாய் இன்னம் இருந்தேன் நான் வாழ்வுகந்தே
ஊனடைந்த தெவ்வருயிர் அடைந்த ஒள்வேலோய்

நான் நாட்டை விட்டுக் காட்டை அடைந்தேன் என்று சொல்லக் கேட்டு அதைச் சகிக்க மாட்டாமல் நீ இறந்தாய்! நானோ நீ இறந்தாய் என்று தெரிந்தும் சாகாமல் உயிரோடு இருக்கிறேன்! (உன் அன்பு எங்கே! என் அன்பு எங்கே!) என்பது. இவ்வண்ணமே அடியேனும் அலறுகிறேன். தேற்றுவாரார்! ஈடு செய்ய முடியுமா இந்த இழப்பை? அப்போது ஒரு குரல் கேட்கிறது!

தாயே தந்தை என்றும் தாரமே கிளைமக்களென்றும்‘ பரகாலனின் பனுவல்கள் செவிப்படுகின்றன. அறியாமை இருள் அகல்கின்றது. கலியனுரை குடிகொண்ட கருத்துடையோன் கனிமொழி நினைவில் ஊறுகின்றது.

பயின்மதி நீயே! பயின்மதி தருதலின்
வெளியும் நீயே! வெளியுற நிற்றலின்
தாயும் நீயே! சால தந்துகத்தலின்
தந்தையும் நீயே! முந்தி நின்றளித்தலின்.

கர்மாதீனமான ஸம்பந்தங்கள் அழியக் கூடியவை. இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் அவன். ஆத்மபந்து, அவனே தாயும் தந்தையும் சுற்றமும் மற்றும் எல்லாம் என்பதை உணர முடிகின்றது.

‘இந்த ஆபாஸு பந்துக்களிடம் வைக்கும் பிரீதியை அவனிடம் வை’ என்கிற தெளிவு பிறக்கின்றது. அப்பா ரக்ஷகன் இல்லை என்பதை ஹிரண்யகசிபுவிடம் காணலாம். தாய் ரக்ஷிப்பவளாகாள் என்பதைக் கைகேயியிடம் காணலாம். ஸஹோதரன் ரக்ஷகனாக மாட்டான் என்பதை ராவணனிடம் காணலாம். கணவன் ரக்ஷகனாக மாட்டான் என்பதை உத்தானபாதனிடம் காணலாம். பந்து மித்ராதிகள் யாரும் ரக்ஷிக்க முடியாது என்பதை முதலை வாய்ப்பட்ட களிற்றின் பிளிறலிலிருந்து காணலாம். ஆக எல்லா விதமான சுற்றமும் ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹனே அவனே கதி.

இதை அடியேன் தாயார் ஸ்ரீ இஞ்சிமேட்டு ஸ்ரீமதழகியசிங்கரது பரிபூர்ண அநுக்ரஹத்தினால் அவனடி சேர்ந்து நன்கு அடியேனது உள்ளத்தில் ஆழப் பதிய வைத்து விட்டார். அவனையே நினைத்து நைந்து கதறி அழுகிறேன். அவனையே நினைந்து உருகினபோது ஸ்ரீஇஞ்சிமேட்டு ஸ்ரீமதழகியசிங்கரின் அநுக்ரஹத்தினால் இந்த ஸ்தோத்திரம் அடியேன் வாக்கில் வந்தது. மாத்ரு தேவதையின் நினைவாக 8-ஆவது ஸ்ரீமஹாயஜ்ஞத்தில் வெளியிட வைத்த அவனது கருணையை என்ன என்பது! ஒரு வருஷ காலம் யஜ்ஞம் வேண்டாம் என்று நினைத்த அடியேனைத் திருத்திப் பணி கொண்டான். ஸ்ரீ பகவத்பாகவத, ஆசார்ய திவ்ய க்ருபா கடாக்ஷத்தினால் தொடங்கப் பெற்ற அந்த எட்டாவது யஜ்ஞம் முதல் யாதொரு தடங்கலும் இல்லாமல் மிகவும் நல்ல முறையில் நடைபெற்று வருவது திண்ணம்.

அடியேனது துக்கத்தைப் போக்கி, ஆனந்தத்தை அளிக்கவே அடியேனது வாக்கில் தோன்றிய இந்த ‘ஸ்ரீமாலோல பஞ்சக’த்தைத் தினமும் எல்லோரும் அநுஸந்தித்தால் துக்கமே வாராது. ஸர்வ பாபங்களும் நீங்கி ஸகல நலன்களையும் அடைவார்கள் என்பது உறுதி.

ஸ்ரீ மாலோல பஞ்சகத்தின் பொருள்

  • யம நியமப்ராணாயாம ப்ரத்யாஹார ஆஸனத்யான தாரண ஸமாதி என்கிற அஷ்டாங்க யோக ஸித்தி பெற்றவர்கள் தினமும் ஸேவிக்கும் மூர்த்தியாகவும், எப்போதும் பரமானந்தமாய் விளங்குபவனும் பக்தர்களது பயத்தைப் போக்குபவனும், தாமரைக் கண்ணனும், ஸமஸ்த பாபங்களை ஹரிப்பவனும், கோரிய பலன்களைக் கொடுப்பவனுமான ஸ்ரீமாலோலனைப் (லக்ஷ்மீந்ருஸிம்ஹனை) பற்றுகிறேன்.
  • சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பானென்று ஒன்றியொற்றி உலகம் படைக்கும் பிரானாயும், ஒரு கல்பகோடி யுகத்திற்கு ஒரு ஜீவனாவது தன்னை உள்ளபடி கண்டு உஜ்ஜீவிக்கக் கடவன் என்கிற பரம காருண்யத்தினால் முத்தொழிலும் நடத்தும் பிரானாய், தாமரைக் கண்ணனும், எல்லாப் பாபங்களையும் போக்குபவனும், கருத வரம் தருபவனுமான ஸ்ரீமாலோலனையே அடைகிறேன்.
  • கமலையுடன் கலந்து நிற்பவனும், காருண்யம் நிரம்பியவனும், எவ்வுலகத்தவரும் ஒருமுகமாய் ஸேவிக்கும்படியான ஏற்றமுடையவனும், தாமரைக்கண்ணனும், பரபங்கள் அனைத்தையும் களைபவனும், வேண்டிய வரமளிப்பவனுமான ஸ்ரீமாலோலனையே தஞ்சமாகக் கருதி அவனையே சரணமடைகிறேன்.
  • பக்தனான ப்ரஹ்லாதனைக் காத்தவனும், ஒத்தாரும் மிக்காரும் அற்ற மேம்பட்டவனும், கருடமலையில் உறைபவனும், பங்கயக் கண்ணனும், சிங்க உருக் கொண்டவனும், கோரிய வரம் அளிப்பவனுமான ஸ்ரீமாலோலனைச் சரணமடைகின்றேன்.
  • அஹோபில மட ஆஸ்தானத்தில் தற்போது 44-ஆம் பட்டத்தில் மூர்த்தாபிஷிக்தராய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீ வேதாந்ததேசிக யதீந்த்ர மஹா தேசிகனால் (முக்கூர் ஸ்ரீமதழகியசிங்கர்) தினமும் நன்கு ஆராதிக்கப்பெறுபவனும், மேலானவனும், மங்களமானவனும், பங்கயக் கண்ணனும், பாபங்களைப் பொசுக்குபவனும், வேண்டிற்றெல்லாம் தருபவனுமான ஸ்ரீமாலோலனையே பற்றுகிறேன்.
  • ந்ருஸிம்ஹ திவ்ய பாதுகாஸேவக ஸ்ரீவண் சடகோப ஸ்ரீ ஸ்ரீரங்க சடகோப யதீந்த்ர மஹாதேசிகனது (ஸ்ரீஇஞ்சிமேட்டு ஸ்ரீமதழகியசிங்கர், 42-ஆம் பட்டம்) பரிபூர்ண க்ருபையால் அடியேனால் சொல்லப்பட்ட மங்களமான இந்த ஸ்தோத்திரத்தைத் தினமும் அநுஸந்திப்பவர்கள் அனைவரும் எல்லா விதமான பாபங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.

ச்லோகங்களின் உட்பொருள்

  • முதல் ச்லோகத்தில் “आनन्दो ब्रह्माति ठथजानात् “ என்கிற உபநிஷத் வாக்கியம் ஆராயப்பட்டது.
  • இரண்டாம் ச்லோகத்தில் “यतो वा इमानि भूतानि जायन्ते” முதலான உபநிஷத் வாக்கியங்கள் கருதப்பட்டன.
  • மூன்றாம் ச்லோகத்தில்  “य:  पूर्व्याय वेधसे  नवीयसे”முதலான வேத வாக்கியங்கள் விசாரிக்கப் பெற்றன.
  • நான்காம் ச்லோகத்தில் “अम्भस्य पारे “ ஸௌலப்யம் நினைக்கப்பட்டது.
  • ஐந்தாம் ச்லோகத்தில் “देवामित आचार्य  मुपासीत” இத்யாதி உபநிஷத் வாக்கியத்தில் ஓதப் பெற்ற அர்ச்சாவதார பூ என்கிறபடி, ஸ்ரீஆசார்ய மகிமை பேசப்பட்டது.
  • ஆறாம் ச்லோகத்தில் “आचार्यादिह  समधिकामन्याम्  न मन्यामहे” என்கிற ஆசார்ய கடாக்ஷத்தின் ஏற்றமும் பலச்ருதியும் பேசப்பட்டன.
இந்த 'ஸ்ரீமாலோல பஞ்சக'த்தை எல்லோரும் தினமும் ஸேவித்து ஸகல நலன்களையும் அடைய வேண்டி, ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஆஜ்ஞையினால் ஸங்கல்பிக்கப் பெற்ற 108-ஸ்ரீஸ்வாதீ நக்ஷத்ர ஸ்ரீ மஹா நாரஸிம்ஹ மஹா மந்த்ர ஜப ஹோம மஹா யஜ்ஞ வரிசையில் எட்டாவது ஸ்ரீ மஹா யஜ்ஞம் 17.1.82, 18.1.82 ஞாயிறு, திங்கள் (தை மீ 4, 5 ஆகிய இரண்டு தினங்களில் ) ஸ்ரீயஜ்ஞக் கமிட்டியாரின் சார்பில் நவம்பர் 10, கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை 600 004 (கமிட்டி அலுவலகம்) இல் அதிவிமரிசையாய் நடந்து கொண்டிருந்தபோது வெளியிடப்பட்டது.

முக்கூர் லக்ஷ்மீ ந்ருஸிம்ஹதாஸன்


ஸ்ரீ மாலோல பஞ்சகம் (ச்லோகங்கள்)

  1. யோகி த்யேயம் ஸதாநந்தம் பக்தாநாம் அபயங்கரம் |
    மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||
  2. ஸர்க – ஸ்திதி -விநாசாநாம் கர்த்தா கர்த்ருபதி: ஸ்வயம்|
    மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||
  3. ரமாஸகம் தயாபூர்ணம் ஸர்வலோக நமஸ்க்ருதம் |
    மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||
  4. ப்ரஹ்லாத வரதம் ச்ரேஷ்டம் கருடாத்ரி நிவாஸிநம்|
    மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||
  5. வேதாந்தகுருணா நித்யம் ஸேவ்யமாநம் பரம் சுபம் |
    மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||

ஸ்ரீ ரங்கயோகிக்ருபயா ப்ரோக்தம் ஸ்தோத்ரமிதம் சுபம் |
ய: படேத் ச்ரத்தயா நித்யம் ஸர்வபாபை: ப்ரமுச்யதே ||

Scroll to Top