Sri:
Sri Lakshminrusimha Parabrahmanaē Nama:

वेदम् परम प्रमाणम् – வேதம் பரம ப்ரமாணம்

स्त्रीधर्मः
ஸ்த்ரீ தர்மம்

[ ஶ்ரீ முக்கூர் ஶ்ரீநிவாஸன்]

எல்லா தர்மங்களும் சிறந்து விளங்க ஸ்த்ரீ தர்மம் முக்கிய காரணமாய் இருக்கிறது. ஏனென்றால் புருஷ தர்மமே ஸ்த்ரீ தர்மத்தில் அடங்கியுள்ளது. ஸ்த்ரீ தர்மம் கெட்டுப்போனால் புருஷ தர்மமும் கெட்டுப்போகிறது.

​இப்ப பாருங்கோ, வேதமானது க்ருஷ்ண யஜுர்வேத தைத்தரீய ஸம்ஹிதை ஆரம்பத்திலேயே ‘தரிச பூர்ணமாச யஜ்ஞம்‘னு ஒரு மஹா யஜ்ஞத்த பத்தி ரொம்ப அழகா சொல்லியிருக்கு. ஒரு கிருஹஸ்தன், ஒரு குடும்பஸ்தன் யஜ்ஞம் பண்ணனும்னா, அவன் தனியா போய் பண்ண முடியுமா? சாஸ்திரம் என்ன சொல்றதுன்னா, தர்மபத்தினி – மனைவி இல்லாம ஒரு வைதிக காரியமும் பண்ண முடியாது! அவளுக்குத்தான் “ஸஹ தர்மசாரிணீ“னு பேரு. கணவன் பண்ணக்கூடிய எல்லா தர்மத்திலயும் சரிபாதி அவளுக்குப் போயிடும்.

​இந்த யஜ்ஞத்துல பத்தினியோட ஸ்தானம் என்னன்னு பாருங்கோ. யஜ்ஞம் ஆரம்பிக்கறச்சே, ஆக்னீத்ரன் (ருத்விக்குகளில் ஒருவன்) வந்து தர்ப்பை கயிற்றைக் கொண்டு வந்து பத்தினியோட இடுப்புல கட்டனும். இதுக்கு ‘யோக்த்ர பந்தனம்‘னு பேரு. 

வேதம் சொல்கிறது

​‘ஆசா ஸானா ஸௌமனஸம் ப்ரஜாம் ஸௌபாக்யம் தனூம்…’ (आशा साना सौमनसं प्रजाꣳसौभाग्यं तनूम् । अग्नेऽनुव्रता भूत्वा संनह्ये सुकृतायकम् ।)‘ என்று.

இந்த வேத மந்த்ரமானது நமது ஸம்பரதாயத்திலே விவாஹ ஸமயத்திலே, அதாவது மாங்கள்ய தாரண சமயத்திலேயும் சொல்லப்படுகிறது. ஆசீர்வாத மந்த்ரம் என்றே பெயர் இதற்கு..!

எவ்வளவு அழகான மந்திரம் பாருங்கோ.! “நன்மனம் உடையவளும், நல்மக்களைப் பெற்றவளும், மங்களகரமான தேகத்தை உடையவளுமான இந்த வேள்வித் தலைவியை நான் நலன் கருதி கட்டுகிறேன்.” இங்க கயிறு கட்டுறதுங்கறது அவளை அடிமைப்படுத்தறதுனு அர்த்தம் இல்லை.! இந்த யஜ்ஞத்தை பண்ணுவதற்கு உண்டான பூர்ண அதிகாரத்தை அவளுக்கு வழங்குறதுனு அர்த்தம். ஒரு தீக்ஷை அது. பத்தினிக்கு இந்த தீக்ஷை நடந்தாதான் யஜமானன் இந்த யஜ்ஞத்தையே பண்ண முடியும்!

​அதுக்கப்புறம் என்ன பண்றா? அந்த காருகபத்திய அக்னிக்கு (கிருஹஸ்தர்கள் நித்தியம் ஆராதிக்கும் அக்னி) பக்கத்துல தெற்குப் பாகத்துல, வடக்கு முகமா பார்த்து உட்காருகிறாள் அந்த பத்தினி. உக்காந்துண்டு என்ன பிரார்த்தனை பண்றா?

​‘சுப்ரஜஸ்த்வா வயகும் சுபத்னீருப சேதிம…’ (सुप्रजस्त्वा वयꣳ सुप्त्नीरूप सेदिम । अग्ने सपन दम्भन मदब्धासो अदाभ्यम् ।)

“ஹே அக்னி பகவானே! ஒருவராலும் வெல்ல முடியாத, எங்களை எந்த பகையாலும் அழிக்க முடியாத காருகபத்திய அக்னியே! நாங்கள் நல்ல புத்திர பாக்கியத்தோட, நல்ல கணவனோட உன்னை வந்து அடைகிறோம்.” என்று அக்னியிடம் ப்ரார்த்தனை. இங்க ‘சுபத்னீ:’ னு பன்மையில வருகிறது. அப்படின்னா அவ தனக்காக மட்டும் பிரார்த்திக்கல, தன் சந்ததியில வரக்கூடிய அத்தனை பெண்களும் தீர்க்க சுமங்கலியா, நல்ல பர்த்தாவோட வாழணும்னு லோக க்ஷேமத்துக்காக பிரார்த்தனை பண்றா! அப்ப கணவன் சொல்றான், “யுஞ்சா மே யஜமானா சாதௌ” – “என்னோடு ஒற்றுமையா இருந்து இந்த வேள்வியை நீ நடத்துவாயாக”னு.

​யக்ஞம் பூர்த்தியாகும் தருணம். இப்ப அந்த இடுப்புல கட்டின தர்ப்பை கயிற்றை ஹோதா அவிழ்த்து விடணும். அப்பொது அவர் சொல்கிறார்

இமம் விஷ்யாமி வருணஸ்ய பாசம்…’ (इमं विष्यामि वरुणस्य पाशं यमबध्नीत सविता सुकेतः । धातुश्च योनौ सुकृतस्य लोके स्योनं मे सह पत्या करोमि ।)

“ஹே யஜமானியே! சூரியனால் கட்டப்பட்ட வருண பாசம் மாதிரி இருந்த இந்தக் கட்டை நான் அவிழ்க்கிறேன். இந்த யஜ்ஞம் பண்ணின புண்ணியத்தின் பலனால, நீயும் உன் கணவனும் சேர்ந்து பிரம்ம லோகத்துல (அல்லது உயர்ந்த நற்கதியில்) இன்பத்தை அடையணும்.” அதாவது, இந்த லோகத்துல மட்டும் இல்லை, எந்த லோகத்துக்குப் போனாலும் நீங்கள் பிரியாமல் தம்பதிகளாகவே இருந்து நற்கதி அடையணும்னு ஆசீர்வாதம் பண்றார்..!

​கடைசியா, அந்த பத்தினி ‘பூர்ண பாத்திரம்’ (ஜலம் நிறைந்த பாத்திரம்) கையில எடுத்துண்டு எழுந்து நிக்கறா. அப்ப அவ சொல்ற வேத மந்திரம் இருக்கே… அது அத்தனை ஸ்திரீகளுக்கும் ஒரு மிகப்பெரிய ரக்ஷை..!

​‘ஸமாயுஷா ஸம் ப்ரஜயா சமக்னே வர்சஸா புன: | ஸம் பத்னீ பத்யாஹம் கச்சே ஸமாத்மா தனுவா மம |’ (समायुषा सं प्रजया समग्ने वर्चसा पुनः । सं पत्नी पत्याहं गच्छे समात्मा तनुवा मम ।)

“ஹே அக்னி பகவானே! நான் பூர்ண ஆயுளை அடையணும். என் மக்கள் எல்லாரும் சௌக்கியமா இருக்கணும். என் கற்புங்கிற கீர்த்தி உலகத்துல ஓங்கி நிக்கணும்.” 

அதோட நிறுத்தல அவ.. “புன: பத்னீ பத்யாஹம் கச்சே” – “. இதே கணவனோட நான் மீண்டும் மீண்டும் மனைவியாகவே வாழணும்!” அப்படின்னு பிரார்த்திக்கிறா..!

​இப்ப நன்னா கவனிக்கணும். ஜென்மாந்திரங்களிலேயும் இவரே எனக்கு கணவனாய் அமய வேண்டும் என்கிறாள். அடுத்த ஜென்மானு ஒன்னு வந்தா, அதிலயும் நான் இவருக்கே தர்மபத்தினியா வரணும்னு ஒரு ஸ்திரீ பிரார்த்தனை பண்றான்னா, அந்த பாதிவ்ரத்ய தர்மம் எவ்வளவு ஒசத்தியானது பாருங்கோ..!

​வேதம்ங்கறது ஏதோ ஹோம குண்டத்துல நெய்யை கொட்டறதுக்கு மட்டும் இல்லை. ஒரு ஆணும் பெண்ணும் எப்படி அன்னியோன்னியமா வாழணும், எந்த லோகத்துக்குப் போனாலும் எப்படி இணைபிரியாமல் தர்மத்தின் வழியில நிற்கணும்னு சொல்லிக் கொடுக்கறதுதான் வேதம்.

​அதனாலதான் வேதம் பரம ப்ரமாணம்… வேத சப்தம் சத்தியமானது!

Scroll to Top