ஶ்ரீ:
ஶ்ரீமதே ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம:
ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை
பேராயிரத்தின் பெருமை
முக்கூர் ஶ்ரீ லக்ஷ்மீ நரஸிம்ஹாசாரியார்
ஸஹஸ்ரநாமம் என்றாலே ஈரரசு படாதபடி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தையே குறிக்கும். “பேராயிரம் கொண்டதேன் பீடுடையன்” என்றும் “பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே” என்றும் நம்மாழ்வார் போற்றுகிறார். பேராயிரத்தின் பெருமையை ஸ்ரீ பராசர பட்டர் என்கிற ஆசார்யர் ஆறுவிதமாகப் போற்றிப் புகழ்கிறார்.
மஹா பாரத ஸாரத்வாத்
ரிஷிபி: பரிகானத:
வேதசார்ய ஸமாஹாராத்
பீஷ்மோத் க்ருஷ்ட மதத்வத:
பரிக்ரஹாதி சயத:
கீதாத்யை கார்த்ய தஸ்சந:
ஸஹஸ்ர நாம் நாமாத்யாய:
உபாதேய தமோ மத:
மேற்கண்ட இரண்டு சலோகங்களினால் ஆறுவிதமான பெருமைகளை பறைசாற்றுகிறார்.
1. மஹாபாரத ஸாரத்வாத்
ஸ்ரீ மஹாபாரதத்தின் ஸாரமாய் இருப்பதினால்:- “பாரத: பஞ்சமோ வேத:” என்று மஹாபாரதம் ஐந்தாவது வேதமாகவே போற்றப்பெருகின்றது. “யதிஹாஸ்தி ததந்யத்ர யந்நே ஹாஸ்தி நதத் க்வசித்” என்கிறபடி “எது மஹாபாரதத்தில் உள்ளதோ அதுதான் மற்றவிடங்களில், மஹாபாரதத்தில் எது இல்லையோ அது மற்றவிடங்களிளும் இல்லை”. மேலும் வாயு புராணத்தில்:-
மதிமந்தாந மாவித்ய யேநாS ச்ருதி ஸாகராத்!
ஜகத்ஹிதாய ஜநித: மஹாபாரத சந்த்ரமா:
ஸ்ரீ வேதவ்யாஸர் புத்தி என்கிற மத்தை வேதமாகிற கடலில் இட்டு நன்கு கடைந்து உலக க்ஷேமத்தின் பொருட்டு மஹாபாரதம் என்கிற சந்திரனை எடுத்தார் என்றும், ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்:-
க்ருஷ்ண த்வைபாயநம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் !
கோஹ்யந்யோ புவி மைத்ரேய மஹாபாரத க்ருத் பவேத்
ஸ்ரீ வ்யாஸருக்கு தந்தையான ஸ்ரீ பராசர மஹரிஷி தம் சிஷ்யரான மைத்ரேயரிடம் இவ்வண்ணம் கூறுகிறார்: “க்ருஷ்ண த்வைபாயனரான வ்யாஸரை எம்பெருமான் நாராயணன் என்றே நீ உணர்வாயாக. இல்லையைனில் வேறு யாரால் ஸ்ரீ மஹாபாரதம் என்கிற மஹா காவ்யத்தை இயற்ற முடியும்?” என்று இப்படி மிகவும் பெருமைவாய்ந்த ஸ்ரீ மஹாபாரதத்தின் பரம ஸாரமாய் இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் விளங்குவதால் இதன் பெருமை சொல்லில் அடங்காது.
2. ரிஷிபி: பரிகானத:
“ரிஷிபி: பரிகீதாநி” என்கிறபடி பரம ரிஷிகளால் எப்பொழுதும் கானம் பண்ணப்பெற்ற பெருமையும் இதற்குண்டு.
3. வேதாசார்ய ஸமாஹாராத்
வேதத்தை பகுத்து அதன் ஸாரார்தததையே இதன் மூலம் வெளியிட்டதினாலும், வேதாசார்யரான ஸ்ரீ வ்யாஸ பகவானால் இயற்றப்பெற்றதினாலும் இதற்குத் தனிச்சிறப்புண்டு.
4. பீஷ்மோத் க்ருஷ்ட மதத்பர:
அநேக மஹரிஷிகளால் போற்றப்பெற்றவர் பீஷ்மர். ஜ்ஞாநிகளுக்கெல்லாம் தலைசிறந்தவர். ஸ்ரீ வ்யாஸாதி மஹரிஷிகளாலும், ஏன்? ஸ்ரீ பகவான் வாஸூதேவனாலும் மிகவும் போற்றப்பெற்றவர்.
சரதல்ப கதோ பீஷ்ம: சாம்யந்நிவ ஹுதாசந:!!
என்றாரம்பித்து, அணையும் நெருப்பு போல் இருக்கும் ஸ்ரீ பீஷ்மர் போய்விட்டால் தெளிந்த தர்ம ஜ்ஞாநம் உலகில் காணமாட்டா. எனவே அவர் அணைவதற்குள் எல்லா தர்மங்களையும் அவரிடம் கேட்பாயாக என எம்பெருமான் தர்மபுத்ரரை பீஷ்மரிடம் கேட்கச்செய்கிறான். ஸ்ரீ பீஷ்மரும் எல்லா தர்மங்களையும் சொல்லிவிட்டு இந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமம்தான் எல்லா தர்மங்களைக் காட்டிலும் சிறந்த தர்மம் என்பது என்னுடைய அபிப்ராயம் என்று:
ஏஷமே ஸர்வதர்மா நாம் தர்மோதிகத மோமத:
என்று இதைக் கொண்டாடுகிறார்.
5. பரிக்ரஹாதிசயத:
மஹான்களால் எடுத்தாளப்பட்டது. “தேவோ நாம ஸஹஸ்ரவாந்” “பேராயிரம் கொண்டதோர் பீடுடையன்” என்றும் சரக ஸம்ஹிதையில்:
விஷ்ணும் ஸஹஸ்ர மூர்த்தா நம் சராசர பதிம் விபும்!
ஸ்துவந்நாம ஸஹஸ்ரேண ஜ்வராந் ஸர்வாந் வ்யபோஹதி!!
ஜ்வரம் முதலான வ்யநிகளுக்கும், சித்தப்ரமை, பிசாச க்ரஸ்நாதி ஸமஸ்த பீடைகளுக்கும் சாந்திக்காக ஸஹஸ்ரநாம ஜபம் செய்யவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
6. கீதாத்யைகார்த்யத:
ஸ்ரீ பகவானால் சொல்லப்பெற்ற கீதைக்கு ஸமமாய் விளங்குவதனாலேயும் இதன் பெருமை வாசாம கோசரம். பகவான் சொன்னது கீதை. பகவானே கேட்டது ஸஹஸ்ரநாமம். அவனே உகந்து கேட்டது ஸஹஸ்ரநாமம் என்றால் இதன் பெருமையை விவரிக்க இயலுமோ!
இத்தகைய பெருமைவாய்ந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பெருமையைத் தொடர்ந்து இவ்வருடமும் 2-2-92 ஞாயிறு முதல் 11-2-92 செவ்வாய் வரை 10 தினங்களுக்கு தர்ம வ்ருக்ஷமான ஸ்ரீ ஆஸ்திக ஸமாஜத்தில் அடியேனுக்கு உபந்யஸிக்கும்படியான பாக்யம் ஏற்பட்டதென்றால் "இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே".
முக்கூர் லக்ஷ்மிநரஸிம்மாசாரியார்
(Article published in 1992-93 Asthika Samajam Souvenir)