ஶ்ரீ காயத்ரி மஹா மந்த்ர மஹிமை
( முக்கூர் ஶ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹாசாரியார்)
காயந்தம் புருஷம் த்ராயதே இதி காயத்ரி
ப்ராஹ்மண தனம் காயத்ரி
முன்பொரு காலத்தில் ஒருவர் ஸ்ராத்தம் பண்ணிக் கொண்டு இருந்தார். எப்பொழுது பண்ணுவார் என்றால் நன்றாக ஸலக்ஷணகனபாடியாக, நித்ய அக்னிஹோத்ரம் பண்ணக்கூடிய உயர்ந்த அதிகாரியாக, கிடைத்தார் என்றால் பித்ரு தினம் பண்ணுவார். இல்லையென்றால் விட்டு விடுவார்.
ஒரு நாள் அவர் க்ருஹத்திற்கு ஒரு மஹான் போனார். உடனே “இவர் சிறந்த மஹான். அதனால் ஸ்ராத்தம் பண்ண வேண்டும் ” என்று வரித்தார். அதன்படி ஸ்ராத்தம் நடந்து கொண்டு இருந்தது.
கடைசியில் எல்லா தத்தமும் ஆன பிறகு “பூமௌ தத்தேன பிண்டேன த்ருப்தாயாம் பராங்கதம்” என்று சொல்லி கர்த்தா அந்த பிண்டத்தை வைத்து அதன் மேலே கட்டை விரலால் எள்ளையும் ஜலத்தையும் விட வேண்டும்.
அதன்படி கர்த்தா எள்ளை ஒத்திக் கொண்டு அதோடு ஜலத்தை சேர்த்து பிண்டத்தின் மேல் விடுவதற்காக, பாத்திரத்தில் இருந்த தீர்த்தத்தை சேர்க்கப் போகையில், வந்திருந்த போக்தாவான அந்த மஹான் ஜலத்தை பார்த்து ஜலத்தை அப்படி இப்படி என்று சமிக்ஞை செய்ய, கர்த்தா பாத்திரத்தை கவிழ்த்தால் ஜலம் விழவில்லை..!
த்ரவ ரூபமான ஜலம் திடமாகியிருந்தது. கர்த்தா இப்படி அப்படி என்று திருப்பித் திருப்பி பார்த்தாலும் தீர்த்தம் விழவில்லை. கர்த்தா விழிக்கிறார். அவருக்கு அப்போதுதான் வந்திருப்பவர் பெரிய மஹான் என்று தெரிய வந்தது..!
கர்த்தா அந்த மஹானிடம் “ஸ்வாமி, ஜலம் விழமாட்டேங்கிறதே. ஏன் இப்படி ஆயிற்று..? ” என கேட்டார்.
அந்த மஹான் சொன்னார் “உமக்கு எப்பப் பார்த்தாலும் விலக்ஷணமான பெரிய அதிகாரியாக கிடைத்துக் கொண்டு இருப்பாரா ? நீங்கள் தர்மத்தை உணர வேண்டாமா? காயத்ரி ஜபிக்கக்கூடிய மஹானை வரித்து நீங்கள் ஸ்ராத்தம் பண்ணவேண்டாமா..?”
ஸர்வமும் காயத்ரிக்குள்ளே அடக்கம் இல்லையா? காயத்ரியை ஜபிக்காது போனால் தப்பு. காயத்ரி ப்ராஹ்மண தனம். அப்பேர்ப்பட்ட காயத்ரியை ஜபித்தால் ஸமஸ்த வேதங்களையும் பாராயணம் பண்ணின பலன் ஏற்படும்.
“அப்படிப்பட்ட காயத்ரியை ஜபிக்கக் கூடியவரை நீங்கள் வரிக்க வேண்டும் என்பதற்காகத் தான் நான் உங்கள் க்ருஹத்திற்கு வந்தேன்” என்று சொல்லி ஜலத்திற்கு மீண்டும் அப்படி இப்படி என்று சமிக்ஞை செய்தார். ஜலம் விழுந்தது..!
அந்த க்ருஹத்திற்கு வந்தவர் ஆபஸ்தம்ப மஹரிஷி. ஆப: என்றால் தீர்த்தம் என்று பொருள். அதை ஸ்தம்பிக்கப் பண்ணி கீழே விழாமல் நிறுத்தி வைத்ததால் அவருக்கு ஆபஸ்தம்பர் என்று பெயர்..!!
காயத்ரி என்றால் ஸமஸ்த வேத ஸாரம் என்பது.
இது நிஜமாகவே நடந்தது.. காக்கிநாடாவுக்கு பக்கத்திலே பிடாபுரம் என்ற ஊர். பிடாபுரம் ராஜ ஸமஸ்தானம் ரொம்ப உயர்ந்தது. ஒரு இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை அந்த ஊரில் பெரிய மஹான்கள் வந்திருந்து பத்து நாட்கள் எல்லா ஸாஸ்திரங்களிலும் வித்வத் ஸதஸ் நடப்பதுண்டு.
அங்கே ராஜாவுக்கு குழந்தை பிறந்திருந்த போது புண்யாஹ வாசனத்திற்கு ஆந்திரதேசம், தமிழ்நாடு, அக்கம் பக்கம் என்று பல்வேறு இடங்களில் இருந்து ஏகமாக வித்வத் கோஷ்டியினர் வந்திருத்தனர்.
ஏகப்பட்ட பேர் சாப்பிடுவதற்கு காத்துக் கொண்டு இருந்தனர். ஆசீர்வாதம் ஆக வேண்டும். அப்பொழுது தனியாக விடப்பட்டிருந்த, அந்த குழந்தை பக்கத்திலே ஜலம் இருந்த தொட்டியில் விழுந்து அகால மரணத்தை அடைந்தது. அது யாருக்கும் தெரியாது. ராணிக்கு மாத்திரம் தெரியும்.
புண்யாஹவாசனம் நடக்க வேண்டிய நாளில் இந்த மாதிரி குழந்தை மாண்டு போய் விட்டது என்று தெரிந்தால் யாராவது சாப்பிடுவார்களா? எவ்வளவு கஷ்டம் ஏற்படும்? இத்தனை ப்ரஹ்ம வித்துக்களும் பட்டினியாக போக நேரிடுமே என்று குழந்தை இறந்ததை சொல்லவே இல்லை அவள்.
ஆசீர்வசன ஏற்பாடு பண்ணியிருந்த பெரிய ஸதஸில் ராஜாவுக்கு பக்கத்தில் அந்த ராணி குழந்தையை நன்றாக மூடிக்கொண்டு, மடியிலே வைத்து, அது உயிரோட இருக்கிற மாதிரியே பாவனை செய்து, அதை அணைத்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தாள்.
ஆந்திர தேசத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு ஒவ்வொரு வித்வானும் எழுந்து தம்பதிகள் இருக்கும் இடத்திற்கு வந்து அக்ஷதையை அந்த தம்பதிகளின் சிரஸில் சேர்த்து மந்த்ரங்களைச் சொல்லி ஆசீர்வாதம் பண்ணியபிறகு அவரவர் இடத்திற்கு சென்று அமர்ந்து விடுவார்கள். உட்கார்ந்த இடத்தில் இருந்தே போடும் வழக்கம் கிடையாது. இந்த வழக்கத்தை இப்பவும் பார்க்கலாம்.
அவர்களுக்கு ஸம்பாவணை பண்ணும் பொழுது தம்பதிகள் எழுந்து அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று பண்ணுவார்கள். இப்பவும் அந்த வழக்கம் இருக்கிறது. தூரத்திலிருந்து அக்ஷதையை போட மாட்டார்கள்.
அதன்படி ப்ரஹ்மவித்துக்கள் ஒவ்வொருவராக ராஜா ராணி மற்றும் குழந்தை இருக்கும் இடத்திற்கு வந்து அவர்கள் சிரஸில் அக்ஷதையை சேர்ப்பித்து ஆசீர்வாதம் பண்ண ஆரம்பித்தனர்.
ஒரு வேதவித்து “ஆயுஷ் மந்தம் ! வர்சஸ் வந்தம் !” என்கிறார். இன்னொருத்தர் வந்து “ஆயுரஸி .. விஸ்வாயுரஸி …ஸர்வாயுரஸி .. ஸர்வமாயுரஸி” என்கிறார். அடுத்தவர் வந்து “அம்ருதம் வை ஹிரண்யம் அம்ருதகும் ஸுவர்கோ லோகே … அம்ருத ஏவ ஸுவர்கே லோகே ப்ரதிதிஷ்டதி .. ஸதமானம் பவதி” என்கிறார்.
இப்படி மஹான்கள் எல்லாம் ஆசீர்வாதம் பண்ணும் பொழுது என்ன நடந்தது..?
இந்த குழந்தை காலை அசைக்க ஆரம்பித்தது. செத்துப் போய் விட்டது என்று நினைத்த குழந்தை பிழைத்து உயிரோடு வந்து காலை ஆட்டுகிறது, கண்ணை உருட்டுகிறது, கையை ஆட்டுகிறது. அந்த ராணிக்கு அவ்வளவு ஸந்தோஷம் ஏற்பட்டதாம்.
மஹதாஸீர்வசன பலம். அங்கு வந்திருந்த அத்தனை மஹான்களும் பரம காயத்ரீ ஜபம் பண்ணும் மஹான்கள். அவர்களுடைய திருக்கரங்களால் மந்த்ரம் சொல்லி ஆசீர்வதித்ததால் மரித்த குழந்தையும் எழுந்து விட்டது. இது காயத்ரீயின் ப்ரபாவம் என்று பிற்பாடு தெரிந்தது. இப்பவும் இதை அங்கு எழுதி வைத்திருக்கிறார்கள். ஆகையால் அந்த குழந்தை பிழைத்தது மஹான்களின் ஆசீர்வாத பலத்தினால் தான்.
ஒருத்தர் கேட்டார் ” ஒரு பிடி அக்ஷதையை எடுத்து ‘ஸதமானம் பவதி’ என்று நாமே போட்டுக் கொள்ளக் கூடாதா ? அவர் தான் போட வேண்டுமா?……. என்றால். அவருக்கு தான் அந்த அதிகாரம் இருக்கிறது. ஏனென்றால் அந்த வேதத்தைக் கற்று நித்ய அக்னீ ஹோத்ரம் பண்ண வேண்டும். அந்த காரியத்தில் இருக்கக் கூடிய அவரால் தான் அனுக்ரஹிக்க முடியும்..!!
உதாரணத்திற்கு, பசுவை எடுத்துக் கொண்டால், அது புல்லை சாப்பிடுகிறது, வைக்கோலை சாப்பிடுகிறது, புண்ணாக்கை சாப்பிடுகிறது, தவிட்டை சாப்பிடுகிறது. இது மொத்தத்தையும் சாப்பிட்டு அது “ஸர்வோப ஜீவியம்” என்று எல்லோருக்கும் உபயோகமான பாலைக் கொடுக்கிறது. இந்த புல்,வைக்கோல், புண்ணாக்கு, தவிடு மொத்தத்தையும் நாமே சாப்பிட்டால் பசு கொடுக்கிற மாதிரி பாலை நம்மால் கொடுக்க முடியுமா..? பாலுக்கு பசுவிடம் தானே போக வேண்டி இருக்கிறது.
அது மாதிரி அனுக்ரஹம் என்பது அந்த காயத்ரீயை ஜபிக்கும் மஹான்களுடைய மஹதாசீர்வசனம். கட்டாயம் அந்த ஆசீர்வாதத்திற்கு உயர்ந்த பலம் உண்டு. அதனால் ஸமஸ்த வேதத்தையும் முழுவதும் தரித்துக் கொண்டிருக்கும்படியான மஹான்களுடைய ஆசீர்வாதத்தின் பலனை ப்ரத்யக்ஷமாகக் கண்டார்கள்.
ஆகையால் இந்த இடத்தில் காயத்ரீ ஸ்வரூபமாகவே பகவான் இருக்கிறான்.
பூர்வ காலத்தில் மஹரிஷிகள் “தஸ்மாத் விவிதே தஸ்மாத் .. தஸ்மாத் விவிதே வீருதே விவிதே வீருதே விவிதே தஸ்மாத்”….போன்ற கடினமான வேத ஸ்வரங்களைக் கொண்ட ருக் வேதத்தைப் போட்டுக் கடைந்தார்கள்.. அதைக் கடையக் கடைய இந்த ருக் வேதத்திலிருந்து அனைத்து வேத மந்த்ரங்களும் சுருக்கமாக எட்டு அக்ஷரங்களாக தேர்ந்து நின்றன..!
அதே மாதிரி ரொம்பக் கடினமாக இருக்கக் கூடியது யஜுர் வேதம். “தேவீர் அக்ரே புவோ …. அக்ரே புவோ தேவீர்…. தேவீர் அக்ரே புவோ ….அக்ரே புவோ அக்ரே புவ:….” அந்த மாதிரி கடினமாய் இருக்கக் கூடியது யஜுர் வேதம். யஜுர் வேதம் மஹா காடிண்யம். அதைப் போட்டுக் கடைந்தார்கள். அதிலிருந்து எட்டு அக்ஷரங்கள் தோன்றின..!
அதற்கடுத்தது “ஹா ……யா …..கீ……ஹாயா …..ஆவாஹா …..” என்று கான ரூபமானது ஸாம வேதம். காந்தார ஷட்ஜம ருஷபாதி ஸமஸ்த சங்கீத சாஸ்த்ரத்திற்கு மூலமாக இருக்கக் கூடிய அனைத்தும் ஸாம கானத்தில் தான் இருக்கின்றன. ஆகையால், “ஸ்ரீயங்கவீ தத் ருத்ரோ காதுகா ருத்ரங்கவீ ஹை ……ஹா ……ஹாயா …..ஹீ” என்று அந்த ருத்ரனுக்குப் ப்ரீதியான உயர்ந்ததான கானம் இது. இப்படி ரதந்தரம், ஆர்ஜிகம், ஸ்தோபம் என்று பல கானம்.
“அரங்கே கேயம் …க்ராமே கேயம்“. காட்டில் ஒரு விதமாக கானம் பண்ண வேண்டும். நாட்டிற்கு அல்லது க்ராமத்திற்கு வரும் பொழுது வேறு விதமாக கானம் பண்ண வேண்டும். அந்த கான ரூபமாக இருப்பவன் பகவான். “வேதானாம் ஸாம வேதோஸ்மி” “வேதங்களுக்குள் ஸாம வேதமாய் இருக்கிறேன்” என்கிறான் பரமாத்மா. அப்பேர்ப்பட்ட ஸாமவேதத்தைப் போட்டுக் கடைந்தார்கள். கடைந்து அதில் இருந்து எடுத்தது எட்டு அக்ஷரங்கள்..!
அதர்வண வேதத்தைக் கடையவில்லையா. என்றால் இந்த மூன்று வேதங்களையும் கடைந்தாலே அதர்வண வேதத்தைக் கடைந்ததாக ஆகிறது. லௌகிக பாஷையில் நாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால், இந்த மூன்று வேதங்களும் “தியரி” என்று எடுத்துக் கொண்டால் அதர்வண வேதத்தை “ப்ராக்டிகல்” என்று எடுத்துக் கொள்ள வேண்டும்..!
இந்த மூன்று வேதங்களில் என்ன படிக்கிறோமோ அதை ப்ராக்டிகலாக நிரூபணம் செய்வது அதர்வண வேதம். மூன்று வேதங்களிலும் இருப்பதைத் தான் அது சொல்கின்றது. ஆனால் எல்லாவற்றையும் நிரூபித்துக் காட்டுகிறது. ஆகையால் இந்த மூன்று வேதங்களைச் சொன்னால் அதர்வண வேதத்தையும் சொன்னதாக ஆகும்.
இவ்வாறு மூன்று வேதங்களைக் கடைந்ததில் மூன்று எட்டு அக்ஷரங்கள் தோன்றின. இந்த மூன்று எட்டு அக்ஷரங்களையும் கூட்டினால் இருபத்தி நான்கு அக்ஷரங்கள். இது ஒரு மந்த்ரமாகத் திகழ்ந்தது. அது தான் காயத்ரீ, ‘த்ரிபதா காயத்ரீ, அஷ்டாக்ஷரா காயத்ரீ, சதுர் விம்சதி அக்ஷராணி காயத்ரீ‘. இருபத்தி நான்கு அக்ஷரங்களைக் கொண்டது காயத்ரீ. ஒரு பாதத்திற்கு எட்டு அக்ஷரங்கள். மூன்று பாதங்களுக்கு மூவெட்டு இருபத்தி நான்கு அக்ஷரங்கள்..!
இதை மேலும் சுருக்கினார்கள் மஹரிஷிகள். இதை அதர்வண வேதம் இவ்வாறு சொல்கிறது “ருக் வேதாத் பூ: ஜாயதா ! யஜுர் வேதாத் புவ: ! ஸாம வேதாத் ஸுவ: !” ருக் வேதத்திலிருந்து “பூ:” என்றும், யஜுர் வேதத்திலிருந்து “புவ:” என்றும் ஸாம வேதத்திலிருந்து “ஸுவ:” என்றும் இப்படி மூன்று பதங்கள் தோன்றின. இது ஒரு மந்த்ரமாயிற்று. இவற்றை சேர்ந்து உச்சரிக்கும்போது “பூர்புவஸ்ஸுவ:” என்று ஆனது. இதற்கு வ்யாஹ்ருதி மந்த்ரம் என்று பெயர்..!
மஹரிஷிகள் இதை மேலும் சுருக்கினார்கள். முதல் பதத்திலிருந்து “அ” என்ற அக்ஷரமும் இரண்டாம் பதத்திலிருந்து “உ” என்ற அக்ஷரமும் மூன்றாம் பதத்திலிருந்து “ம” என்ற அக்ஷரமும் ஆக “அ , உ , ம” . என்ற மூன்று அக்ஷரங்கள் தோன்றின. இவற்றை சேர்த்து இழைத்ததில் “ஓம்” என்கிற ப்ரணவம் தோன்றியது. அதை மேலும் சுருக்கமுடியாது. அது உயிர் முடிச்சு. ஆகையால் அது வேதமனைத்துக்கும் வித்து. அது வேத மூலம்.
அந்த ப்ரணவத்தை விவரித்தால் வ்யாஹ்ருதி. வ்யாஹ்ருதியை விவரித்தால் காயத்ரீ. காயத்ரீயை விவரித்தால் எல்லா வேத மந்த்ரங்களும். அனைத்து வேத மந்த்ரங்களும் காயத்ரீயில் அடங்கும். காயத்ரீ வ்யாஹ்ருதியில் அடங்கும். வ்யாஹ்ருதி ப்ரணவத்தில் அடங்கும்..!!
எல்லா வேதங்களைப் போன்று மிகவும் விரிவாக இல்லாமலும் ப்ரணவத்தைப் போன்று மிகவும் சுருக்கமாக இல்லாமலும் இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையிலே அழகான எட்டு எட்டு அக்ஷரங்களாக மூன்று எட்டு (இருபத்தி நான்கு) அக்ஷரங்களுடன் கூடிய காயத்ரீ மந்த்ரத்திற்கு ஈடு இணை உண்டோ..?
“ந காயத்ர்யாம் பரோ மந்த்ர: ந மாதுர் தைவதம் பரம்“. “காயத்ரீயைக் காட்டிலும் உயர்ந்த மந்த்ரமில்லை. அம்மாவைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை” என்கிறது சாஸ்த்ரம். ஆகையால் காயத்ரீயைக் காட்டிலும் பரமோமந்த்ர: வேறொரு உயர்ந்த மந்த்ரம் கிடையாது.
“ருக் வேதம் உச்சாரயந்தீம் ரக்த வர்ணாம் பரதராம்“. ப்ராத: காலத்தில் – அந்த காலை வேளையில் காயத்ரீ சிவப்பு பட்டாடையை உடுத்திக்கொண்டு ருக் வேதத்தைச் சொல்லிக்கொண்டு இருக்கிறாள்..!
மத்தியான வேளையிலே அவளுக்கு ஸாவித்ரி என்று பெயர். நல்ல வெண் பட்டாடையை உடுத்திக் கொண்டு யஜுர் வேதத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறாள்..!
ஸாயங்கால வேளையில் அவளுக்கு ஸரஸ்வதீ என்கிற திருநாமம். நம் அஞ்ஞானத்தைப் போக்க அவள் கருப்புப் பட்டாடை உடுத்திக் கொண்டு ஸாம வேதத்தைச் சொல்லிக்கொண்டிருக்கிறாள். இப்படி மூன்று காலத்திலேயே மூன்று வேதங்களை முடித்துவிடுகிறாள் அவள்..!
இப்பொழுது நாம் உட்கார்ந்து கொண்டு மூன்று வேதங்களையும் பாராயணம் பண்ணவேண்டும் என்றால் ஒரு நாளில் முடியுமா..? நம் அனைவருக்கும் தாயான அவள் ஒரு தடவை எல்லா வேதங்களையும் சொல்லி விடுகிறாள். அந்த ஸக்தி பூர்ணமாக அவளிடத்தில் இருந்து கொண்டே இருக்கிறது..!
அவளுடைய குழந்தைகளான நமக்கு அவள் அவ்வளவு ச்ரமங்களை வைக்கவில்லை. “உங்களுக்காக நான் சொல்லி விடுகிறேன். என்னை நீங்கள் சொல்லுங்கள்” என்று அவள் கூறுகிறாள்..!!
ஆகையால் அந்த காயத்ரீ மந்த்ரத்தை நாம் சொல்லி விட்டால் மொத்த வேத மந்திரங்களையும் பாராயணம் பண்ண வேண்டியதில்லையே! சுலபமாக அந்த மூன்று எட்டு பாத “பஞ்சாவதானா காயத்ரீ, மஹா பாதக நாசினீ” என்று போற்றப்படும் அந்த காயத்ரீயைச் சொன்னாலே போதும்.
காயத்ரீ மந்த்ரத்தை ஜபிக்கிறபோது “பஞ்சாவதான:” என்றபடி ஐந்து இடங்களிலே நிறுத்திச் சொல்ல வேண்டும். முதலில் ப்ரணவத்தை நிறுத்திச் சொல்ல வேண்டும். அடுத்து வ்யாஹ்ருதியைச் சொல்லி நிறுத்திச் சொல்ல வேண்டும். பிறகு மூன்று வாக்கியங்களையும் தனித்து தனித்து மூச்சை விட்டு நிறுத்தி நிறுத்தி சொல்ல வேண்டும்..!
அவ்வாறில்லாமல் “குடுகுடு என்று சொல்லிவிட வேண்டும்” என்பதற்காக ஒருவர் நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தாமல் வேகமாக ஜபம் பண்ணினால் அதற்கு பலனே கிடைக்காது. ப்ரணவம் ஒன்று, வ்யாஹ்ருதி ஒன்று, மூன்று வாக்கியங்கள் என்று ஐந்து இடங்களில் நிறுத்தி சொன்னால் “மஹா பாதக நாசினீ”யான காயத்ரீ மந்த்ரம் எல்லா பாதகங்களையும் போக்கடித்து விடும்..!
ப்ருஹ்மம் என்று பெயர். காயத்ரி என்றால் ப்ருஹ்மோபதேசம். அப்பேர்ப்பட்ட ப்ருஹ்மத்தை விளக்க வந்தது காயத்ரீ மந்த்ரம் ஆனதினாலே தேஜஸை கொடுக்கக் கூடியது காயத்ரி.
“தேஜோ வா காயத்ரீ தேஜோ வை காயத்ரீ“.என்றபடி தேஜஸ், காந்தி, பலம் எல்லாவற்றையும் கொடுக்க வல்லது காயத்ரீ..!!
ஆனால் காயத்ரீ ஜபிக்காமல், ஸந்தியாவந்தனம் பண்ணாமல், ஒருவர் “ஸத்ய நாராயண விரதம் இருக்கிறேன்” என்கிறார். இன்னொருவர் ஸந்தியாவந்தனம் பண்ணாமல் “லக்ஷஅர்ச்சனை பண்ணுகிறேன்” என்கிறார்..!
இன்னொருவர் ஸந்தியாவந்தனம் பண்ணாமல் “யக்ஞம் பண்ணுகிறேன்” என்கிறார். ஒருவர் அஹோராத்ரம் பண்ணிக்கொண்டு இருக்கிறார். ஸந்தியாவந்தனம் பண்ணினாரா என்றால் பண்ணவில்லை. பலன் உண்டா? என்றால் கிடையாது.
ஸகாலத்தில் ஸந்தியாவந்தனம் பண்ணின பிறகு தான் மீதி கார்யத்தைப் பண்ண வேண்டும் . “ஸந்த்யாஹீன:: அநர்ஹ: அசுசி: ஸர்வ கர்மஸூ” ஸந்தியாவந்தனம் பண்ணாமல் மீதி கர்மா பண்ணுவதற்கு அவனுக்கு யோக்யதை இல்லை. ஆகையால் காயத்ரீயை ஜபிக்காமல் ஆயிரம் உத்தம கார்யங்கள் பண்ணினாலும் என்ன ப்ரயோஜனம்..?
அம்மாவுக்கு ஒரு “வ்ருதா தீர்த்தம் வ்ருதா தானம் வ்ருதா யக்ஞம் வ்ருதா ஹுதம் யஸ்ய மாதா உபேக்ஷிதா” என்று சாஸ்திரம் சொல்கிறது.. அம்மாவுக்கு ஒரு புடவை வாங்கித் தரமாட்டேன் என்கிறான். நித்யம் பத்து பேருக்கு வஸ்திர தானம் பண்ணிக்கொண்டு இருக்கிறான். அம்மாவுக்கு அன்னம் (சாதம்) போட மாட்டேன் என்கிறான். நித்யம் பத்து பேருக்கு அன்னதானம் நடந்து கொண்டிருக்கிறது.
அவனது வீட்டிலோ அம்மாவை விழுந்து நமஸ்கரிக்க மாட்டேன் என்கிறான். ஆனால் “நூற்றியெட்டுதிவ்ய தேசத்திலே இன்னும் நான்கு தான் பாக்கி என்கிறான் அதில் இரண்டு இங்கே கிடையாது. க்ஷீராப்தி இங்கே இல்லை. வைகுண்டமும் இங்கே இல்லை. அதனால் இன்னும் இரண்டு தான் பாக்கி..!” என்கிறான்.
ப்ரத்யக்ஷ தேவதையான தாயாரை வணங்காமல் ஆயிரம் உத்தம கர்மாக்களைப் பண்ணினாலும் பலன் ஏற்படுமா ? அந்த மாதிரி தாயான காயத்ரீ மந்த்ரத்தை விட்டுவிட்டு, ஆயிரம் மந்த்ரங்களை நான் ஜபிக்கிறேன் என்றால் மீதி மந்த்ரங்கள் பலனைக் கொடுக்குமா ? ஒரு நாளும் கொடுக்காது.
ஆகையால் இதை ஜபித்த பின் மற்ற மந்திரங்களை ஜபிக்கலாமே ஒழிய இதை ஜபிக்காமல் மற்ற மந்த்ரங்களை ஜபித்தால், அந்த தேவதைகளெல்லாம் பலனைக் கொடுக்கவே மாட்டார்கள். அதனால் தான் வேதம் சொல்கிறது
யோ வா அயதா தேவதம் யக்ஞமுபசரதி | ஆ தேவதாப்யோ வ்ருஶ்ச்யதே | பாபீயான் பவதி |
யோ யதா தேவதம் | ந தேவதாப்ய ஆவ்ருஶ்ச்யதே | வஸீயான் பவதி ||
இப்ப பாருங்கள்……….. ஒருவர் மிகவும் ஏழையாக இருந்தார். அவர் குடும்பத்தில் தாரித்ர்யம் போகவே இல்லை. ஆனால் நித்ய பூஜையை அவர் விடவே இல்லை. எவ்வளவோ ச்ரமப்பட்டு அந்த பூஜைக்கான புஷ்பங்களை ஸம்பாதித்துக் கொண்டு வந்து தான் வைத்துக் கொண்டு, இருக்கும் பூஜை விக்ரஹங்களுக்கு ஆராதனை பண்ணிக் கொண்டு இருந்தார்.
ஒரு நாள் அந்த வீட்டிற்கு ஒருத்தர் வந்தார். “இவ்வளவு ஏழ்மையில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறீர்களே. இந்த பூஜையில் தான் லோபம் இருக்கிறது. அதனால் இந்த விக்ரஹங்களை எல்லாம் மூட்டை கட்டி நடுத்தெருவில் போட்டு விடுங்கள். இவை மொத்தத்தையும் விசிறி தூரப் போட்டு விடுங்கள். நான் ஒன்று கொடுக்கிறேன். அதை வைத்துக்கொண்டு பூஜை பண்ணுங்கள். உங்களுக்கு க்ஷேமம் ஏற்படும்” என்று வந்தவர் சொன்னார்.
அவர் சொன்னதில் நம்பிக்கை ஏற்பட்டது இவருக்கு. எல்லா விக்ரஹங்களையும் எடுத்து மூட்டை கட்டி விட்டார். தாத்தா தாத்தா அவருடைய தாத்தா காலத்திலிருந்து நானூறு வருடங்களாக பூஜை பண்ணிக்கொண்டு இருக்கிற அத்தனை மூர்த்தங்களையும் மூட்டை கட்டி அவர் சொன்னமாதிரி தூரக்கொண்டுபோய் போட்டு விட்டார்..அவர் கொடுத்ததை உள்ளே வைத்துக்கொண்டு பூஜை பண்ண ஆரம்பித்தார். ஆனால் தாரித்ர்யம் இன்னும் ஜாஸ்தியாக போய்விட்டது..!
கதை கேட்டுக் கொண்டிருக்கிற நமக்கெல்லாம் ஒரு ஸந்தேகம் வரும். “புதிதாக வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறதே ஒரு தெய்வம், அது செல்வத்தைக் கொடுக்கக்கூடாதா இவருக்கு? இவரது தாரித்ர்யத்தைப் போக்கக் கூடாதா ? ”
ஆனால் அந்த புதிதாக வந்த தெய்வம் நினைக்கிறதாம் “தாத்தா தாத்தா காலத்திலே இருந்து இருந்ததுக்கே ப்ரயோஜனம் இல்லை. நடுத்தெருவிலே போட்டு விட்டான். நம்மை எத்தனை நாள் பூஜை பண்ணப் போகிறான்..?”
“இன்னொருத்தர் வந்து சொன்னால் நம்மையும் தூக்கிப் போட்டு விடுவான். இவனுக்கு கொடுப்பதை விட கொடுக்காமலே இருக்கலாம்” என்று அதுவும் வாயை மூடிக் கொண்டு இருந்து விடுமாம். புதிதாக வந்த தெய்வமும் கொடுக்காதாம்..!
ஆகையால் தெய்வத்தின் சக்தியை நிர்ணயம் பண்ண நீ யார் ? “ஜன்மாந்திரத்திலே நாம் பண்ணின பாபம் இப்பொழுது சிரமப்படுகிறோம்” என்று நினைக்காமல் “இந்த தெய்வத்திற்கு சக்தியா ? அந்த தெய்வத்திற்கு சக்தியா?” என்று நீ ஏன் விசாரிக்கின்றாய்? உனக்கு விதிக்கப்பட்டதை நீ செய்ய வேண்டியது தானே. அதைத் தான் இங்கே வேதம் சொல்கிறது. “யோ வா அயதா தேவதம்” என்று. நமக்கு அழகாக எடுத்துச் சொல்கிறது.
ஆகையால் தெய்வ சக்தியை நீ நிர்ணயம் பண்ணாதே. “நம்முடைய பாபம். அதனால் சிரமப்படுகிறோம்_ ” என்று எவன் பகவானிடத்தில் விக்ஞாபனம் பண்ணுகிறானோ, அவன் தான் மேன்மையடைவான்.
ஸந்தோஷத்தில் இருக்கும்போது, “பெரியோர்கள் பண்ணிய புண்ணியம்” என்று சொல்ல வேண்டும். ” நான் நிறைய புண்ணியம் பண்ணினேன். அதனால் ஸந்தோஷமாக இருக்கிறேன்” என்று சொல்லக் கூடாது. கஷ்டப்படும்போது “அடியேன் பண்ணின பாவம். அதனால் அனுபவிக்கிறேன்” என்று சொல்ல வேண்டும். “இதை யார் சொல்கிறார்களோ அவர்களிடத்தில் பகவானின் அனுக்ரஹம் பரிபூர்ணமாக இருக்கும். தாரித்ர்யம் விலகும்” என்று சொல்லப்படுகிறது..!
ஆகையால் அப்படிப்பட்ட காயத்ரீயை ஜபித்த பிறகு தான் மற்றவற்றை ஜபிக்க வேண்டும். தாயாரை மறந்த மாதிரி அந்த காயத்ரீயை விட்டுவிடலாமா..?
அதனால் பகவான்
அர்க்க மண்டல மத்யஸ்தம். ஸூர்ய கோடி ஸமப்ரபம் |
ப்ரஹ்மாதி ஸேவ்ய பாதாப்ஜம். நௌமி ப்ரஹ்ம ரமாஸகம் ||
என்று சூர்ய மண்டல அந்தர்வர்த்தியாய் ஸூர்ய நாராயணனாய் ப்ரகாசிக்கிறான். அதனால் அந்த காயத்ரீ மந்த்ரத்திலே, அந்த ஸூர்யனே ஒரு மாதம் தென்படாமல் போய் விட்டான் என்று வைத்துக் கொள்வோம். நம்மால் வாழ முடியுமா? எந்த ஜீவராசியாவது உயிர் வாழ முடியுமா..?
ஆகையால் நமக்கு ப்ரத்யக்ஷ தேவதை அந்த ஸூர்யன். ஆகையால், பகவான் இராமபிரான் இராமாயணத்தில் கஷ்டப்படுகிறான். குடும்பம், வீடு, மனைவி, மக்கள் இதைப் பற்றி பேசுகிறார்களே ஒழிய ஆகாயத்திலே ப்ரகாசிக்கக்கூடிய சூரியனை கைகூப்பி வணங்குகிறவர்கள் எத்தனை பேர்..?
” ஆஸாதிகா: க்ரமயை வ” ஸூர்ய நமஸ்காரமில்லாமல் சாப்பிடவே கூடாது. ஸூர்யனைப் பார்க்காமல் சாப்பிடக் கூடாது. ஸூர்யனைப் பார்க்காமல் யாராவது சாப்பிட்டால் அவர்களை யாரென்று அருணத்திலே வேதமே சொல்கிறது.
இந்த மாட்டுச் சாணமெல்லாம் போட்டு இருக்கும் இடத்திலே சாணியிலேயே சில புழுக்கள் உற்பத்தி ஆகும். அவை அதிலேயே தோன்றும், சாணி உலர்ந்து போனால் அவை அதிலேயே மாண்டு போகும். ஸூர்யனைப் பார்க்காமல் சாப்பிடுபவர்கள் அந்த புழுவுக்கு ஸமானம் என்கிறது வேதம்.
“ஆஸாதிகா: க்ரமயை வ” என்றால் எவ்வளவு மட்டமாக இருக்கிறது என்று பாருங்கள். ஆகையால் பூர்வ காலத்தில் மஹான்கள் ஸூர்யனைப் பார்க்காமல் சாப்பிட மாட்டார்கள். சில சமயத்தில் மப்பும் மந்தாரமுமாக இருக்கும். பிசுபிசு என்று தூறல் போட்டுக்கொண்டு இருக்கும். ஸூர்யனே தென்படாது. ஒரு இரண்டு மூன்று நாட்கள் தென்படவில்லையென்றாலும் மூன்று நாட்களும் உபவாஸமாக இருப்பார்கள். அப்படி இருந்து ஸூர்யன் என்று தெரிகிறதோ அன்று ஸூர்யனைப் பார்த்த பிறகு தான் சாப்பிடுவார்கள்..!
ஆகையால் ஸூர்யனை நமஸ்காரம் பண்ணாமல் சாப்பிடுபவன் பாபத்தையே சாப்பிடுகிறான். சர்ம வியாதி, ஹ்ருதய ரோகம், நேத்ர ரோகம், ஸ்வாஸ ரோகங்கள் இத்யாதிகள் அனைத்தையும் போக்கடிக்கிறான் ஸூர்யன்.
“ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத்” பாஸ்கரனிடத்திலிருந்து (ஸூர்யனிடத்திலிருந்து) தான் பரிபூர்ண ஆரோக்யத்தைப் பெற வேண்டும்.
அப்படிப்பட்ட அந்த ஸூர்ய நாராயணனை த்யானம் பண்ணக்கூடிய காயத்ரீ மந்த்ரம் எல்லா மந்த்ரங்களுக்குள்ளும் உயர்ந்ததான மஹா மந்த்ரம்.