ஶ்ரீ:
ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம:
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
(ஸ்ரீ உ.வே முக்கூர் ஸ்ரீநிவாஸன்)
( 1 )

ஶ்ரீய:பதியான பகவானின் மூச்சுக் காற்றாய் விளங்கும் வேத வாங்மயமானது ஶ்ரீ ந்ருஸிம்ஹ தாபநீய உபநிஷத்தில் ந்ருஸிம்ஹனின் அழகு கம்பீரமானது என்கிறது.
ஸ்துஹி ச்ருதம்
கர்தஸதம் யுவாநம்
ம்ருகம் ந பீம
முபஹத்நு முக்ரம்
ம்ருடா ஜரித்ரே
ஸிம்ஹஸ் தவாநோ
அந்யந்தே அஸ்மிந்
நிவபந்து ஸேநா:
என்று போற்றுகிறது.
கர்தஸதம் – குகைக்குள் இருப்பவன்; யுவாநம் – இளமை மிக்கவன்; ம்ருகம் ந – அவன் ம்ருகமும் அல்ல; அவன் நரமும் சிம்ஹமும் கலந்த சேர்த்தி என்கிறது.
அந்த நரஸிம்ஹம் “மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டது“. சிம்ஹமானது சோம்பலை முறித்து தன் உடம்பை நீட்டி கர்ஜிக்கும். அந்த கர்ஜனையினால் ஆங்காங்கு இருக்கும் ஜீவகோடிகள் அதைக் கேட்டு மிரளும்.
எதற்காக புறப்பட்டது ..? ப்ரஹ்லாதனை ரக்ஷிக்கவா.? இல்லை.! ஹிரண்யகசிபுவை நிரசிக்கவா..? அதற்காகவும் இல்லை..! பின் எதற்காக..? ப்ரஹ்லாதன் வாக்கை ரக்ஷிக்க..!
கம்பன் சொல்கிறான்
சாணினும் உளனோர் தன்மை
அணுவினைச் சதகூறிட்ட
கோணினும் உளன்
மா மேருக் குன்றினும் உளன்
இந் நின்ற தூணினும் உளன்
முன் சொன்ன சொல்லினும் உளன்
இத்தன்மை காணுதி
விரைவில் என்றான் ||
எங்கேடா இருக்கிறான் ..? என்று கேட்ட ஹிரணியனிடம் , ‘நீ கேட்கிற சொல்லிலே உறைகிறான். அவன் இல்லாத இடம் உண்டோ..?” “த்வய்யஸ்தி மய்யஸ்திசா – உன்னுள்ளும் இருக்கிறான், என்னுள்ளும் இருக்கிறான்” என்றான் ப்ரஹ்லாதன்.
பகவான் “சர்வ வ்யாபி – எங்கும் நிறைந்தவன்” எனும் குணத்தை இங்கு குழந்தை சொன்னது. அந்த சின்ன அசுரக்குழந்தை சொன்ன வாக்கினை காப்பதற்கு நரம் கலந்த சிங்கமாய் நரஸிம்ஹனாய் எங்கும் நிறைந்தான்.
அப்படி பாகவதோத்தமர்கள் வாக்கை காப்பதற்காக எப்பொழுதும் மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்படத் தயாராக காத்திருக்கும் ஸிம்ஹத்திடம்தான் நாம் முக்கியமான ஒன்றை கோரவேண்டும். அது என்ன கோரிக்கை..? அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்..!
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
(ஸ்ரீ உ.வே முக்கூர் ஸ்ரீநிவாஸன்)
( 2 )

பாகவதோத்தமர்கள் வாக்கைக் காப்பதற்காக எப்பொழுதும் மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்படத் தயாராகக் காத்திருக்கிறான் பகவான் ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹன். அவனிடம் நாம் ஒன்றே ஒன்றைத்தான் கோரவேண்டும். வேறு எதையும் கோரக்கூடாது.
ஆண்டாள் பகவானிடம் என்ன கோர வேண்டும் என்பதைத் திருப்பாவையிலே 23-ஆம் பாசுரத்திலே காட்டிக் கொடுக்கிறாள்:
மாரி மலைமுழைஞ்சில்
மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம்
அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர் பொங்க
எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து
முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே
நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்றிங்ஙனே
போந்தருளிக் - கோப்புடைய
சீரிய சிங்காசனத்திருந்து
யாம் வந்த காரியம்
ஆராய்ந்தருள் ஏலோர் எம்பாவாய்.
நாம் அந்தச் சிங்கத்திடம் கோர வேண்டியது ‘யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளவேண்டும்‘ என்பதே! வேறு எதையுமே கோரக்கூடாது.
யாம் வந்த காரியம் என்ன..? பகவத் தியானத்துடன் இருப்பது; பகவானுக்குக் கைங்கரியம் செய்வது!
யஜ்ஞத்திலே ‘வஸோர்தாரா‘ ஹோமத்தில் நெய்யானது எவ்வாறு அறுபடாமல் சேர்க்கப்படுகிறதோ, அதுபோன்று அவனுடைய கல்யாண குணங்களை எப்பொழுதும் நினைத்துக்கொண்டு, அவன் பொருட்டுக் கைங்கரியங்கள் செய்வது நமக்குச் சிறந்த பலன்களைக் கொடுக்கும்.
அப்பொழுது ஒருவர், ‘ஸ்வாமி! பகவத் தியானம், பகவத் கைங்கரியம் என்று இவற்றிலேயே ஈடுபட்டுக் கொண்டிருந்தால், வாழ்க்கை நடத்த வேண்டாமா..? மனைவி, மக்கள் என்று இவர்களைக் காப்பாற்ற வேண்டாமா..? குடும்பத்தை நடத்துதல் என்கிற பெரிய பொறுப்பு இருக்கிறதே?’ என்று அங்கலாய்த்துக் கொண்டார்.
வாஸ்தவம்தான். அதற்கு நம் முன்னோர்கள் அன்றாட வாழ்க்கையிலேயே சுலபமான வழிகளை நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
அவை என்ன..? தொடர்ந்து பார்ப்போம்..
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
(ஸ்ரீ உ.வே முக்கூர் ஸ்ரீநிவாஸன்)
( 3 )

பகவத் தியானம் – பகவானின் நினைவு என்பது அறுபடாமல் இருக்க வேண்டும். அதற்காக சாஸ்த்ரங்களை நன்கு உணர்ந்த நம் பெரியோர்கள், நாம் தினமும் செய்யக்கூடிய கடமைகளில் பகவன் நாமாவைச் சொல்லுதல், பகவானை நினைத்தல் என்பதை வைத்திருக்கிறார்கள். அது எப்படி.?
நாம் காலையில் எழுந்திருக்கும் பொழுது ‘ஹரி ஹரி ஹரி ஹரி.. ஹரி ஹரி ஹரி‘ என்று பேரரவத்துடன் சொல்லிக்கொண்டு எழுந்திருக்க வேண்டும்.
ஆண்டாள் திருப்பாவையில்
மெல்ல எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
என்று காலையில் எழுந்திருக்கும் பொழுது ‘அரியென்ற பேரரவத்துடன்‘ எழுந்திருக்க வேண்டும் என்கிறாள்.
ஏன் பெரிய குரலில் சொல்லவேண்டும், மனதிற்குள் தியானம் செய்யக்கூடாதா என்றால்..? பரோபகாரம். நாம் பெருத்த குரலில் ‘அரி அரி’ என்று சொன்னால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூட அலறி அடித்துக்கொண்டு எழுந்திருக்க வேண்டுமாம்.! அவர்கள் காதில் அந்த ஹரி நாமம் விழும்போது, அவர்களுக்கும் சொன்ன பயன் ஏற்பட்டுவிடுகிறது.!
அது என்ன ஏழு முறை சொல்வது.?
ஸ்வாமி தேஶிகன் ஶ்ரீ வைணவ தினசரி என்கிற ப்ரபந்தத்தின் ஆரம்பத்திலேயே
வரி இருள் அழி வழி
மனம் வரும் உணர்வொடு
கரிகிரி மருவிய
கரியவன் அடி இணை |
பரிவொடு பரவு நல்
அடியவர் பழ உரை
அரி அரி அரி அரி
அரி அரி அரியே ||
என்று “அரி அரி அரி அரி அரி அரி அரியே” என்று ஏழு முறை சொல்லவேண்டும் என்பதற்காக ஏழு அரி சொல்கிறார்.
‘அதிகாலையில் இருள் விலகும் நேரத்தில் விழித்தெழுந்தவுடன், மனத் தெளிவோடு காஞ்சி வரதராஜப் பெருமாளின் துயரரு சுடரடிகளை நினைத்து, மிகுந்த அன்புடன் ஏழு முறை ‘ஹரி’ நாமத்தைச் சொல்வதே ஒரு சிறந்த தினசரி வழக்கம் ஆகும்’ என்பது தேறிய பொருள்.
ஸப்த வியாஹ்ருதிகளுக்கு அப்பால் இருக்கும் ஹரியை ஏழு முறை தியானிக்கிறோம்.
ஶ்ரீ ந்ருஸிம்ஹ தத்துவத்தில் ஹரி என்று சொல்லப்படுவன் ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹனே.!
பாடசாலை விடுமுறையின் பொழுது அரண்மணைக்கு வந்த குழந்தை பிரக்லாதனை இரண்யகசிபு தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டு
‘குழந்தாய் பிரக்லாதா, இவ்வுலகத்தில் சிறந்தது எது.?’ என்று கேட்டான். பாடசாலையில் தன்னுடைய பெருமையை மட்டுமே சொல்லிக்கொடுக்கச் சொல்லியிருக்கிறான் இரணியன். அதனால் இரணியன்தான் எல்லாவற்றிலும் சிறந்தவன் என்று குழந்தை சொல்லும் என்பது அவன் எதிபார்ப்பு.!
ஆனால் குழந்தை பதில் சொல்கிறது..
தத் ஸாது மன்யேऽஸுரவர்ய தேஹினாம்
ஸதா ஸமுத்விக்னதியாம் அஸத்க்ரஹாத் |
ஹித்வாத்மபாதம் க்ருஹமந்தகூபம்
வனம் கதோ யத் ஹரிமாச்ரயேத ||
(ஶ்ரீமத் பாகவதம்)
“நிலையற்ற உலக ஆசைகளாலும் குடும்பப் பற்றாலும் மனித மனம் எப்போதும் கவலையில் தவிக்கிறது; ஆத்மாவைச் சீரழிக்கும் இந்த ஆடம்பர வாழ்க்கை ஒரு ‘பாழடைந்த இருண்ட கிணறு’ போன்றது என்பதால், இதிலிருந்து முற்றிலும் வெளியேறி அமைதியான காட்டுக்குச் சென்று ஸ்ரீஹரியின் திருவடிகளில் சரணடைவதே ஒரு மனிதனுக்குரிய மிகச் சிறந்த வழியாகும் என நான் கருதுகிறேன்” என்றான் பிரக்லாதன்.
ஸமஸ்க்ருதத்தில் ‘ஹரி‘ என்றால் சிம்மம். அதனால் காட்டிற்கு சென்று ‘மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட” காத்திருக்கும் ந்ருஸிம்ஹனை தியானம் செய்வதுதான் எல்லாவற்றிலும் சிறந்தது என்பது பிரக்லாதனின் கூற்று. இதைக் கருத்தில்கொண்டுதான் பகவான் சிம்ம முகத்தோடு அவதரித்தான்.
ஆக, காலையில் நாம் ‘அரி அரி அரி அரி… அரி அரி அரி” என்று ஏழு முறை சொல்வதன் மூலம் ஶ்ரீந்ருஸிம்ஹனையே தியானம் செய்கிறோம். அதனால், அந்த நாள் முழுவதும் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் சௌக்கியமாக அமைய உத்திரவாதம் செய்துக்கொள்கிறோம்.
“சரி… எப்பொழுதும் அறுபடாமல் தியானம் செய்ய வேண்டும் என்று சொன்னீரே, காத்தால மாத்திரம் சொன்னால் போதுமா.?” என்று கேட்டார். அதற்கும் பதில் இருக்கிறது. தொடர்ந்து பார்ப்போம்..
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
(ஸ்ரீ உ.வே முக்கூர் ஸ்ரீநிவாஸன்)
( 4 )

பகவானுடைய நினைவு அறுபடாமல் இருக்க இருக்க வேண்டும். அதற்காக நம் முன்னோர்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் செய்யக்கூடிய செயல்களில் பகவானுடைய திருநாமங்களைச் சொல்லுதல், அவனுடைய கல்யாண குணங்களை நினைத்தல் என்பதைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னால் எழுந்திருக்க வேண்டும். அவ்வாறு எழுந்திருக்கும்பொழுது ‘ஹரி ஹரி ஹரி ஹரி… ஹரி ஹரி ஹரி” என்று ஏழு முறை உரத்த குரலில் சொல்லிக்கொண்டு எழுந்திருக்க வேண்டும் என்கிற சுலபமான கடமையைப் பார்த்தோம்.
அடுத்து, நாம் ஸ்நாநம் செய்யும்பொழுது திரிவிக்கிரமனைத் தியானம் செய்து விட்டு ஸ்நாநம் செய்தால், கங்கா ஸ்நாநம் செய்த பலன் ஏற்பட்டுகிறது. பகவான் வாமனனாய் அவதரித்து, திரிவிக்கிரமானாய் வளர்ந்தான். அவ்வாறு வளர்ந்து மூவுலகங்களையும் தன் திருவடியால் அளந்தான்.
அவனுடைய திருவடியானது நீண்டு வளர்ந்து பிரம்மா உட்கார்ந்திருக்கும் சத்யலோகம் வரைச் சென்றது. பிரம்மா உடனே தன் கமண்டலத்திலிருந்து பகவானுடைய திருவடியில் தீர்த்தம் சேர்க்கிறார். அந்த தீர்த்தமே பூலோகத்திலே கங்கையாக ப்ரவஹித்தது.
“ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி” என்று ஆண்டாள் விசேஷமாக இந்த திரிவிக்கிரமனை தியானம் செய்கிறாள்.
வேதமானது “இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம்” – “பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணு, இந்த மூவுலகங்களையும் தனது மூன்று அடிகளால் அளந்து, தனது திருவடிகளைப் பதித்து உலகை வியாபித்தார்” என்று விசேஷமாகக் கொண்டாடுகிறது.
அதனால் நம்முடைய அன்றாட செயலான ஸ்நாநத்தின்பொழுது திரிவிக்கிரமனைத் தியானித்தால் கங்கா ஸ்நாநமும் ஆகிறது,! பகவத் தியானம் என்பதும் அறுபடாமல் தொடர்கிறது..!
அடுத்து ஆகாரம் உட்கொள்ளும் முன் “கோவிந்தனை” தியானம் செய்ய வேண்டும். “கோவிந்த கோவிந்த கோவிந்தா” என்று மூன்று முறை சொல்லி அன்னம் உட்கொண்டோமேயானால், நமக்கு நல்ல செரிமானமும் அதனால் சிறந்த ஆரோக்யமும் அமைகிறது.
அதுபோன்று, நாம் வெளியே வேலையாகக் கிளம்பும்பொழுது ‘கெடுவிடராயவெல்லாம் கேசவாவென்ன” என்று “கேசவா கேசவா கேசவா கேசவா” என்று கேசவனைத் தியானம் செய்து, நான்கு முறைச் சொல்லிவிட்டுக் கிளம்பினால் இடர்கள் கெடும். நாம் எதற்காகச் செல்கிறோமோ அந்த காரியம் நன்கு நடக்கும்.
முக்கியமாக, சாயங்காலம் சூரியன் அஸ்தமிக்கும்பொழுது ந்ருஸிம்ஹனைத் தியானம் செய்ய வேண்டும்.
பெரியாழ்வார் “அந்தியம்போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை | பந்தனை தீரப் பல்லாண்டு பாடுதுமே” என்று அந்த சாயங்கால சமயத்திலே அவதரித்த ந்ருஸிம்மனுக்குப் பல்லாண்டு பாடுகிறார்.
ஶ்ரீ ந்ருஸிம்ஹ தத்துவத்தில், பகவான் ந்ருஸிம்ஹனுடைய அனுக்கிரஹம் இருந்தால் நம்முடைய இந்திரியங்களை கெட்ட வழியிலே இழுக்கும் அந்த சாயங்கால சமயத்தை வெல்லலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
சாயந்திர வேளை என்பது மிகவும் கொடியது. அது பலவிதமான கெட்ட செயல்களைச் செய்யத் தூண்டும். கொடியவனான இரணியன் பல கெட்ட காரியங்களைச் செய்தான். அவனை பகவான், ந்ருஸிம்மனாக சாயங்கால வேளையிலே அவதரித்து முடித்தான். அதனால் நம்முடைய மனதும் மற்ற விஷயங்களில் செல்லாமல் இருக்க அந்த சாயங்கால வேளையில் பகவான் ந்ருஸிம்மனைத் தியானம் செய்தல் விசேஷம்.
ஶ்ரீ ஈஸ்வரன் ‘ஶ்ரீ மந்த்ரராஜ பத ஸ்தோத்திரத்திலே“
ஸர்வேந்த்ரியை: அபிவிநா
ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா |
யோ ஜானாதி நமாம்யாத்யம்
தமஹம் ஸர்வதோமுகம் ||
என்று ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹன் நம்முடைய எல்லா இந்திரியங்களிலும் ஆட்சி செய்பவன். அவன் உள்ளும் புறமும் நன்கு பார்க்ககூடியவன். நம் மனது என்கிற இந்திரியத்தை அடக்கி ஆளக்கூடியவன். அப்படிப்பட்ட ஸர்வதோமுகனை – எங்கும் பார்க்கக்கூடியவனை, நமாமி அஹம் – நான் வணங்குகிறேன்” என்கிறார்.
அதனால் ந்ருஸிம்ஹனை நாம் அவனுடைய அவதார சமயத்திலே தியானம் செய்தால் நம் மனதை அவன் திருவடிகளிலே செலுத்துவதற்கு அவனே காரணமாய் நிற்பான்.
அடுத்து நாம் படுத்து உறங்குவதற்கு முன்னால் “மாதவா மாதவா மாதவா மாதவா” என்று நான்கு முறை சொல்லி அந்த லக்ஷ்மீநாராயணனைத் தியானம் செய்தால் நம்மை அந்த நித்திரையின் போது பகவானே ரக்ஷிக்கிறான் – காக்கிறான்.
அதனால் நம்முடைய அன்றாடச் செயல்களிலேயே பகவன் நாமாக்களைச் சொல்வதன் மூலம் நமக்கு பகவத் தியானம் என்பது அறுபடாமல் தொடர்கிறது.
சரி, தூங்கும்பொழுது எப்படி பகவத் தியானத்துடன் இருப்பது..?