ஶ்ரீ ஸ்வாதி மஹாயஜ்ஞங்கள்



ஶ்ரீ ஸ்வாதி நக்ஷத்ர ஶ்ரீ மஹாநாரஸிம்ஹ மஹா மந்த்ர
ஜப ஹோம மஹா யஜ்ஞங்கள் – விவரணம்

ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மிநரஸிம்மாச்சாரியார், பெருமாள் ஆக்ஞையை சிரமேற்கொண்டு, 107ற்கும் மேலான ஸ்வாதி யஜ்ஞங்களை இந்தியாவின் பல இடங்களில் நடத்தியுள்ளார். ந்ருஸிம்ஹனின் அவதார தினமான ஸ்வாதி நக்ஷத்திரத்தன்று யஜ்ஞம் நடைபெறும். ஜூன் 1981ல் ஆஸ்திக ஸமாஜத்தில் முதல் யஜ்ஞம் நடந்தேறியது. 90வது யஜ்ஞம் புது டில்லியில் நடந்தது. 97வது யஜ்ஞம் முதல் பெரும்பாலும் ந்ருஸிம்ஹ க்ஷேத்ரங்களில் குறிப்பாக மங்களகிரி, வேதாத்ரி, கடிகாசலம், அந்தர்வேதி, யாதகிரி, ஷோபநாத்ரி, வாடபல்லி, ஸிம்ஹாசலம், ஹ்ருஷீகேசம், நைமிஸாரண்யம், ப்ருந்தாவனம், ஸ்ரீரங்கம், நங்கைநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற்றன. ‘ஸர்வேஜனா சுகினோ பவந்து’ என்ற வேத வாக்கியத்தின்படி ஸ்ரீ ஸ்வாமி எல்லா யஜ்ஞங்களையும் லோக க்ஷேமத்திற்காகவே செய்துள்ளார்.

அவர் யஜ்ஞங்களை நடத்திய விதத்தைப் பார்த்தவர்களுக்கு ந்ருஸிம்ஹனிடம் ஸ்வாமி கொண்டிருந்த அசஞ்சலமான பக்தியை உணர முடியும். ஸ்ரீ ந்ருஸிம்ஹ மஹாமந்திரத்திலுள்ள முப்பத்திரண்டு பீஜாக்ஷரங்களுக்கேற்ப ஸ்ரீ ஸ்வாமி லோக க்ஷேமத்தின் பொருட்டு மட்டபல்லி ஸ்ரீ ராஜ்யலக்ஷ்மி ஸமேத யோகாநந்த லக்ஷ்மிநரஸிம்ஹன் சங்கல்பித்த காலத்தில், இடத்தில், முறையில் பாரத தேசத்தின் பல்வேறு இடங்களில் நடத்திய எல்லா ஸ்வாதி யஜ்ஞங்களிலும் முப்பத்திரண்டு அங்கங்கள் இடம்பெறும்.

Table Of Contents
  1. ஶ்ரீ ஸ்வாதி நக்ஷத்ர ஶ்ரீ மஹாநாரஸிம்ஹ மஹா மந்த்ர ஜப ஹோம மஹா யஜ்ஞங்கள் – விவரணம்

1. யஜ்ஞ க்ஷேத்ர நிர்ணயம்

க்ஷேத்ர நிர்ணயம்


யஜ்ஞம் நடைபெறவிருக்கும் க்ஷேத்ரம் பெருமாள் ஆவிர்பாவத்தின்போதோ அல்லது ஸ்ரீ ஸ்வாமியின் ஸ்வப்னத்திலோ ராஜ்யலக்ஷ்மி ஸமேத ஸ்ரீ யோகாநந்த லக்ஷ்மி ந்ருஸிம்ஹனால் சூசிப்பிக்கப்படும். உதாரணமாக, 105வது யஜ்ஞத்தின்போது பகவான் ஆவிர்பவித்து 106வது யஜ்ஞம் இரண்டு நதிகள் மாலையாக சேரும் ஸ்வயம் வ்யக்த யோகாநந்த நரஸிம்ம க்ஷேத்ரத்தில் நடைபெற வேண்டும் என்றான். சில நாட்களுக்குப் பின் இந்த க்ஷேத்ரம் மூசி, க்ருஷ்ணவேணீ கூடும் ஸங்கம க்ஷேத்ரமான ஸ்ரீ வாடபல்லி என்பது தெரிந்தது.

2. யஜ்ஞ வாடிகை தேர்வு

யஜ்ஞ வாடிகை தேர்வு


பெருமாள் யஜ்ஞ க்ஷேத்ரத்தை தெரியப்படுத்தியவுடன், ஸ்ரீ ஸ்வாமி யஜ்ஞ வாடிகையை தேர்வு செய்ய அந்த க்ஷேத்ரத்திற்கு விஜயம் செய்வார். யஜ்ஞ வாடிகை அமைக்க விஸ்தாரமான இடம் வேண்டும். ஹோம குண்டம் அமைக்கவும், பக்தர்கள் அமருவதற்கும், ரித்விக்குகள் தங்குவதற்கும் போதுமான இடம் இருக்கவேண்டும். மேலும் நதிக்கரையில் யஜ்ஞ வாடிகை அமைக்கப்படவேண்டும். யஜ்ஞ வாடிகை அமைக்கும் பணி யஜ்ஞத்திற்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிடும். பல சமயங்களில் யஜ்ஞ வாடிகை அமையும் இடம் வனமாகவோ, மலையாகவோ, பள்ளத்தாக்காகவோ, வயல் வெளியாகவோ இருக்கும். ஸ்ரீ வாடபல்லியில் தேர்வு செய்யப்பட்ட இடம் பாறைகள் நிறைந்து மேடு பள்ளமாக இருந்தது. அதை சீர் செய்து ஒரு விஸ்தாரமான பந்தலுக்கடியில் யஜ்ஞ வாடிகை துரிதமாக அமைக்கப்பட்டது.

3. யஜ்ஞ வாடிகை நிர்மாணம்


விஸ்தாரமான யஜ்ஞ வாடிகை சன்னிதி, கலச வேதிகை, ஹோம சாலை, மேடை, மடப்பள்ளி என்கிற ஐந்து ப்ரத்யேக இடங்களைக் கொண்டிருக்கும். ஸ்ரீ ஸ்வாமியின் யஜ்ஞ மூர்த்தி, பல்வேறு திவ்ய தேச மூர்த்திகள் மற்றும் ஆழ்வார்கள் வீற்றிருக்கும் சன்னிதி 15 சதுரடி மண்டபத்தில் அமையும். பெருமாள் சன்னிதிக்கு முன்பாக 120 சதுரடியளவில் கலச மண்டபம் எழுப்பப்படும். இந்த மண்டபத்தில் ப்ரதான பிந்துஸ்தானம் நடுவிலும், அதைச் சுற்றி சுதர்சன ஷட்சக்ரம், அதைச் சுற்றி 10, 108, 1008 கலசங்கள் ப்ரதிஷ்டை செய்வதற்கு மேடைகள் அமைக்கப்படும். பெருமாள் ஆக்ஞையின்படி 1,3,5 அல்லது 32 ஹோம குண்டங்கள் அமைக்கப்படும். ப்ரதான ஹோம குண்டம் 8 அடி ஆழம் இருக்கும். ஹோம குண்டத்தின் அகாரங்கள் சுதர்சன சக்கரமாகவோ, சதுரமாகவோ, அரைவட்டமாகவோ, வட்டமாகவோ அமையும். ஹோம குண்டத்தின் முகப்பில் கூர்மம், சிம்மம், மத்ஸ்யம், சர்ப்பம் போன்ற படங்கள் வரையப்படும். பாலிகை வைப்பதற்கு ப்ரத்யேக மேடை அமைக்கப்படும். பெருமாளுக்கு ப்ரசாதம் செய்வதற்கென ஒரு மடப்பள்ளியும் யஜ்ஞத்திற்காக வரும் பக்தர்களுக்கு அமுது படைக்க மற்றொரு மடப்பள்ளியும் நிர்மாணிக்கப்படும். ஸ்ரீ ஸ்வாமி யஜ்ஞவாடிகையின் அருகாமையில் 10 சதுரடி பரப்பளவுள்ள சிறிய அறையில் யஜ்ஞம் முடியும்வரை தங்குவார்.

4. ஸ்வாகதம்


வேத, மங்கள வாத்ய கோஷத்துடன் ஸ்ரீ ஸ்வாமி யஜ்ஞமூர்த்தி மற்றும் திவ்ய தேச மூர்த்திகள் சகிதம் ப்ரவேசிக்கும்போது பூர்ண கும்பத்துடன் வரவேற்கப்படுவார். பின்னர், சுமங்கலி ஸ்திரீகள் ஆரத்தி எடுப்பார்கள்.

5. சங்கல்பம்


சங்கல்பம் மற்றும் விஷ்வக்சேன ஆராதனத்துடன் மஹா யஜ்ஞம் தொடங்கும். யஜ்ஞம் எந்த விக்னங்களும் இல்லாமல் நடந்தேற விஷ்வக்சேன ஆராதனம் நடைபெறும். யஜ்ஞ வாடிகை முழுவதும் புண்யாக வசன தீர்த்தத்தால் சுத்தப்படுத்தப்படும். ஸ்ரீ ஸ்வாமி நடத்திய ஸ்வாதி யஜ்ஞங்கள் அனைத்தும் நிஷ்காம்யமாக லோக க்ஷேமத்தை முன்னிட்டே நடைபெற்றன என்பதை நாம் என்றென்றும் நினைவு கொள்ளவேண்டும்.

6. அங்குரார்ப்பணம்


அங்குரார்ப்பணம் அல்லது ம்ருத்ஸங்க்ரஹணம் யஜ்ஞத்தின் முதல் நாள் நடைபெறும். பூவராஹ பெருமாளை எழுந்தருளச் செய்து, பூஸூக்த பாராயணத்துடன் புற்று மண்ணை புனிதப் படுத்துவார்கள். தொடர்ந்து, அந்த புனித மண் 32 மடக்குகளில் நிரப்பப்பட்டு ஸ்ரீ ஸ்வாமி, கோவில் பட்டர்கள், ரித்விக்குள் மற்றும் பக்தர்களினால் நவ தானியங்கள் சேர்க்கப்படும். அவ்வாறு நிரப்பப்பட்ட மடக்குகள் ப்ரதக்ஷணமாக யஜ்ஞ வாடிகையைச் சுற்றி எடுத்து செல்லப்பட்டு அதற்காக ப்ரத்யேகமாக அமைக்கப்பட்ட மேடையில் வைக்கப்படும். தினமும் தீர்த்தம் சேர்த்துவர சில நாட்களில் அவை முளைத்து செடியாக வளர ஆரம்பிக்கும்.

7. ரக்ஷா பந்தனம்


மங்கள வாத்ய முழக்கத்துடன் ஸ்ரீ ஸ்வாமியின் சன்னிதியிலிருக்கும் எல்லா மூர்த்திகளுக்கும் ரக்ஷை (மஞ்சள் கயிறு) கட்டப்படும். பெருமாளுக்கு வலக்கையிலும் தாயாருக்கு இடக்கையிலும் ரக்ஷை அணிவிக்கப்படும். பின்னர், ஸ்ரீ ஸ்வாமி, ரித்விக்குகள், கைங்கர்யபாரர்கள், பரிசாரகர்கள், நாதஸ்வர வித்வான்கள், பூக்காரர்கள் மற்றும் எல்லா பக்தர்களுக்கும் ரக்ஷா பந்தனம் செய்யப்படும். யஜ்ஞ சமயத்தில் துர்தேவதைகளிடமிருந்து எல்லோரையும் காக்கவே ரக்ஷா பந்தனம். லோக க்ஷேமத்தை முன்னிட்டே ஸ்ரீ ஸ்வாமி யஜ்ஞங்களை நடத்தினாலும், ரக்ஷை கட்டும்போது பெயர், நக்ஷத்திரம் கோத்திரத்துடன் சங்கல்பம் செய்யப்படும். ரக்ஷை அணிந்துகொண்டவர்கள் யஜ்ஞம் முடியும்வரை யஜ்ஞ வாடிகையை விட்டு வெளியே செல்லக்கூடாது என்பது பெருமாள் மற்றும் ஸ்ரீ ஸ்வாமியின் (கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்கள்) அன்புக் கட்டளை. ரக்ஷா பந்தனம் ஆனதும் ஸ்ரீ ஸ்வாமி எல்லோருக்கும் வெற்றிலை, பாக்கு, தேங்காய், தட்சிணை வழங்குவார்.

8. தீக்ஷை


ஸ்ரீ ஸ்வாமி, ரித்விக்குகள், கோவில் பட்டர்கள், கைங்கர்யபாரர்கள், பரிசாரகர்கள், நாதஸ்வர வித்வான்கள், பாகவதோத்தமர்கள் அனைவருக்கும் தீக்ஷா வஸ்திரம் வழங்கப்படும். வேஷ்டி, அங்கவஸ்திரத்தை மஞ்சள் கலந்த நீரில் நனைத்து காயவைத்து கொடுப்பார்கள். யஜ்ஞத்தில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் தீக்ஷா வஸ்திரமே உடுத்தவேண்டும் என்று ஸ்ரீ ஸ்வாமி விரும்புவார்.

9. பானகாராதனம் மற்றும் பகவத் ஆராதனம்


ஒவ்வொரு மஹாயஜ்ஞமும் விமரிசையாக ஶ்ரீ யஜ்ஞமூர்த்தி மற்றும் சன்னதி மூர்த்திகளுக்கு பானகாரதனத்துடன் ஶ்ரீ ஸ்வாமியினால் ப்ராரம்பிக்கப்படும். ஸ்ரீ ஸ்வாமிகளின் சன்னிதி மூர்த்திகளுக்கு அனுதினமும் வைபவமாக நடைபெறும் அதிகாலை விஸ்வரூபம், காலை அபிகமனம், மதிய இஜ்ஜை மற்றும் சாயங்கால பானக ஆராதனம் யஜ்ஞ சமயத்திலும் விமரிசையாக நடைபெறும்.

மங்களகிரி ம்ஹாயஜ்ஞத்தின் பானகாராதன வைபவங்களை இங்கே காணலாம்.

10. தீர்த்த ஸ்வீகரணம்


ஸ்ரீ ஸ்வாமியின் முன்னிலையில் ரித்விக்குகள் வேத கோஷங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் ஒலிக்க யஜ்ஞ வாடிகையையொட்டி அமைந்திருக்கும் புண்ணிய தீரத்திலிருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்படும். 10 ப்ரதான கலசங்கள் வெள்ளியாலும், 108 கலசங்கள் செப்பினாலும், 1008 கலசங்கள் மண்ணினாலும் செய்யப்பட்டிருக்கும். எல்லா கலசங்களுக்கும், அதில் இருக்கும் தீர்த்தம் எந்த விதத்திலும் கெடாமல் இருக்கும் பொருட்டு, ரக்ஷை கட்டப்படும். 10, 108, 1008 கலசங்கள் அவற்றுக்காக ப்ரத்யேகமாக அமைக்கப்பட்ட கலச வேதிகையில் வைக்கப்படும். முதலில் கலச வேதிகையை சுத்தப்படுத்தி கோலமிட்டு, வாழை இலை, தர்ப்பம், அரிசி, வஸ்திரம் பரப்பப்பட்டு அதன் மேல் கலசங்கள் வைக்கப்படும். கலசத்தில் தீர்த்த பரிமளம் (ஏலக்காய், ஜாதிக்காய், குங்குமப்பூ, பச்சை கற்பூரம், லவங்கம்) சேர்க்கப்பட்டு பின்பு மாவிலை, தேங்காய், கூர்ச்சம் வைத்து வஸ்திரங்கள், பூக்களால் அலங்கரிக்கப்படும். நடுவில் ஒரு கலசம் ப்ரதானமாகவும் அதைச் சுற்றி ஒன்பது கலசங்களும் வைக்கப்படும். நடுவில் இருக்கும் கலசம் யஜ்ஞ ந்ருஸிம்ஹனையும் மற்ற 9 கலசங்கள் நவ நரஸிம்ஹரையும் குறிக்கும். தச கலசங்களுக்கும் பல நிற ஜரிகை வஸ்திரங்கள் அணிவிக்கப்படும். 108 கலசங்கள் 108 திவ்ய தேசங்களையும், 1008 கலசங்கள் அஷ்டாக்ஷரம், த்வாதசாக்ஷரம், புருஷ ஸூக்தம், மற்றும் மஹாநாரஸிம்ஹ மந்திரத்தைக் குறிக்கும். ஆவிர்த்தி யஜ்ஞ மந்திரங்கள் ஜபித்த பின்னர் கலச ப்ரதிஷ்டை செய்யப்படும். தினமும் கலசங்களுக்கு புது பஷ்பங்கள் அணிவிக்கப்படும். ப்ருந்தாவனத்தில் நடந்த ஸ்வாதி யஜ்ஞத்தின்போது 10 கலசங்களை சுற்றி வட்டமாக 108 கலசங்களும், அதைச் சுற்றி வட்டமாக 1008 கலசங்களும் ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. “யஜ்ஞ வாடிகையில் பகவான் க்ருஷ்ணனை சுற்றி கோபிகைகள் வட்டமாக சூழ்ந்து ஆனந்த நர்த்தனம் புரிவது போல் இருக்கின்றது” என்று ஸ்ரீ ஸ்வாமி திருவாய் மலர்ந்தார்.

11. கலஸப் பிரதிஷ்டை & தேவதா ஆவாஹனம்


ஸ்ரீ ஸ்வாமி எல்லா ஸ்வாதி யஜ்ஞங்களிலும் லக்ஷ்மி ந்ருஸிம்ஹனையும், சுதர்சனாழ்வாரையும் சேர்த்தே ஆவாஹனம் செய்வார். விஷ்ணு சஹஸ்ரநாமத்தினால் 1008 கலசங்களும், ந்ருஸிம்ஹ அஷ்டோத்ரத்தால் 108 கலசங்களும், மூல மந்திரத்தால் தஸ கலசங்களும் ஆவாஹனம் செய்யப்படும்.

12. கலஸ ஜபம்


ஜபம் ஆரம்பிக்கும்போது எல்லா கலசங்களுக்கும் ஸ்ரீ ஸ்வாமி அக்ஷதை சமர்ப்பிப்பார். 120 சதுரடியளவுள்ள கலச வேதிகையின் ஒரு மூலையில் நின்று ஸ்ரீ ஸ்வாமி சமர்ப்பிக்கும் அக்ஷதை சரியாக ஒவ்வொரு 10, 108, 1008 கலசங்களையும் சென்றடையும் அழகைப் பார்க்க கண் ஆயிரம் வேண்டும். ஜபம் ஆரம்பிக்கும் முன் ஒரு கலசத்தில் தீர்த்தம் சேர்த்து மாவிலை, தேங்காய் வைத்து அந்த கலசத்தில் ப்ரும்மாவை ஆவாஹனம் செய்வதன் மூலம் லோக க்ஷேமத்திற்காக நடக்கும் ஜபத்திற்கு ப்ரும்மாவே சாட்சியாக இருக்கின்றார். எல்லா கலசங்களுக்கும் ஜபம் முடிந்த பின் அந்த கலசத்தை சிறிது நகர்த்தி வைப்பதன் மூலம் ப்ரும்மாவை ஸ்ரீ ஸ்வாமி ஸ்வஸ்தானத்திற்கு அனுப்பி வைப்பார். அதுவரை அந்த கலசம் சிறிதளவும் இடம் மாறாமல் வைக்கப்படும். பல ஆவிர்த்தி ஜபம் செய்யப்படும். ஜபத்தில் தைத்திரீய ப்ரச்னம், புருஷ ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம், நீளா ஸூக்தம், மந்த்ரராஜபத ஸ்தோத்ரம், நாரஸிம்ஹ மூல மந்திரம், சுதர்சனமாலா மந்திரம், ந்ருஸிம்ஹ அஷ்டோத்ர ஸத நாம ஸ்தோத்ரம், சுதர்ஸன ஷட்கம், மந்த்ரராஜபத வேத மந்த்ராணி, 32 அக்ஷரங்கள் கொண்ட மந்த்ரராஜ தேவதா மந்த்ராணி ஆகியவை அனுஸந்திக்கப்படும்.

மேலும் ந்ருஸிம்ஹ தாபனீய உபநிஷத் மந்திரத்தின் மூலம் ந்ருஸிம்ஹனும், அஹிர்புத்ய ஸம்ஹிதை மூலம் சுதர்ஸனரும், பத்ம ஸம்ஹிதை மூலம் மஹாலக்ஷ்மி தாயாரும் உபாஸிக்கப்படுவார்கள். இவ்வனைத்து ஜப மந்திரங்களையும் ஸ்ரீ ஸ்வாமியுடன் சேர்ந்து ரித்விக்குகள் ஜபிப்பார்கள். ஒவ்வொரு ஆவிர்த்தி ஜபமும் சுமார் 3 மணி நேரம் நடக்கும். ப்ரதான கலசங்கள் ஒவ்வொன்றிற்கும் 2 அல்லது 3 ஆவிர்த்தி ஜபம் நடக்கும். முறையே 108, 1008 கலசங்களை சேர்த்து 2 அல்லது 3 ஆவிர்த்தி ஜபம் நடக்கும். ஒவ்வொரு ஆவிர்த்தி ஜபம் முடிந்த பின்பு சதுர் வேதங்களிலிருந்தும் கனம் மற்றும் ப்ரபந்த பாராயணம், மங்கள ஹாரத்தி, நைவேத்தியம் நடைபெறும். அன்றைய தின ஜபங்கள் முடிந்த பின் பெருமாளுக்கு ஆராதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு ப்ரசாதம் வழங்கப்படும். மேற்கண்டவாறு கலச ஜபம் பல வாரங்கள் இடைவிடாது நடைபெறும்.

13. அரணி மதனம் & அக்னி ப்ரதிஷ்டை


ஜபம் முடிந்தபின் ஹோமம் ஆரம்பமாகும். ப்ரத்யக்ஷ தேவதையான அக்னியை இரண்டு விதங்களில் உருவாக்கலாம். முன் காலத்தில் மஹரிஷிகள் கையை காண்பித்த உடனே ஹோம குண்டத்தில் அக்னி உற்பத்தியாகிவிடும். அரணி மதனத்தின் மூலமும் வைதீக அக்னியை உண்டாக்கலாம். ஸ்ரீ ஸ்வாமி அரணிக்கட்டைக்கு பூஜைகள் செய்து ஒரு ஆவிர்த்தி ஜபம் செய்வார். அதற்கடுத்து, ஸ்ரீ ஸ்வாமியும் மற்றொருவரும் சேர்ந்து அரணிக் கட்டையை மத்தைக் கடைவது போல் கயிற்றால் கடையும்போது அக்னி உற்பத்தியாகும். அந்த அக்னியை மடக்கில் வைத்து விசுறும்போது அக்னி மேலும் ஜ்வலிக்கும்.

பொதுவாக ஸ்ரீ ஸ்வாமியின் ஸ்வாதி யஜ்ஞங்களில் அரணி மதனம் ஆரம்பித்த ஒரு சில விநாடிகளில் அக்னி பகவான் உத்வேகத்துடன் ஆவிர்பவிப்பான்; சில சமயங்களில் அதிக நேரம் ஆகும். குறிப்பாக அயோத்யா மண்டபத்தில் நடந்த யஜ்ஞத்தின்போது 8 மணி நேரம் அரணி மதனம் செய்த பின்னரும் அக்னி உண்டாகவில்லை. அரணி மதனம் செய்து அக்னி உண்டாவதைப் பார்க்கும்போது ஒரு கோடி ரூபாய் கிடைத்தவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைப் போன்று பன்மடங்கு மகிழ்ச்சி உண்டாகும் என்று ஸ்ரீ ஸ்வாமி சொல்லுவார்.

அக்னி உண்டான பிறகு ஸ்ரீ ஸ்வாமியின் முகம் மிகவும் ப்ரகாசமாக இருக்கும். மடக்கில் வைத்த அக்னியை ஸ்ரீ ஸ்வாமி யஜ்ஞ வாடிகையிற்கு ப்ரதக்ஷணமாக எடுத்து வருவார். பின்பு அந்த அக்னியை ப்ரதான ஹோம குண்டத்தில் ப்ரதிஷ்டை செய்வார். ப்ரதான ஹோம குண்டத்திலிருந்து அக்னி எடுத்து மற்ற ஹோம குண்டங்களில் ப்ரதிஷ்டை செய்யப்படும். அரணி மதனத்தன்று விசேஷமான கலந்த சாதம் மற்றும் கேசரி பெருமாளுக்கு அமுது செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும்.

14. ஹோமம்


பெரும்பாலும் ஸ்வாதி யஜ்ஞ ஹோமம் சுதர்சன ஆகாரத்தில் அமைக்கப்பட்ட ப்ரதான ஹோம குண்டத்தில் நடைபெறும். சில சமயம் பெருமாள் ஆஜ்ஞையை முன்னிட்டு ஒன்றுக்கு மேற்பட்ட ஹோம குண்டங்களிலும் ஹோமம் நடைபெறும். குறிப்பாக, வாடபல்லி மற்றும் ப்ருந்தாவன யஜ்ஞங்களில் 3 ஹோம குண்டத்திலும், ஸிம்ஹாசலத்தில் 5லும், மட்டபல்லியில் 32 ஹோம குண்டங்களிலும் ஹோமம் மிகவும் விசேஷமாக நடந்தேறியது. ஹோமம் ஆரம்பிப்பதற்கு முன் ஸ்ரீ ஸ்வாமி ஹோம குண்டத்திற்கு புஷ்பங்கள், மந்த்ர அக்ஷதை சமர்ப்பிப்பார். ஹோமத்தைக் காக்கும் பொருட்டு நான்கு திசைகளிலும் சமித்துகள் ப்ரத்யேக மந்திர ஜபத்துடன் வைக்கப்படும். அக்னி தேவதை ஹோம குண்டத்தைவிட்டு வெகு உயரத்தில் செல்லாமல் இருக்க ஹோம குண்டத்தினருகில் பெரிய பாத்திரத்தில் தீர்த்தம் வைக்கப்பட்டிருக்கும்.

ஹோமத்தின்போது ஸ்ரீ ஸ்வாமி மான் தோல் பரப்பிய கூர்மாசனத்தில் அமர்ந்து ஹோம குண்டத்தில் ஹவிஸ்களை சேர்ப்பார். எல்லா ஆஹூதிகளும் நெய்யினால் சுத்தி செய்யப்பட்டு ஹோமத்தில் சேர்க்கப்படும். கலச ஜப மந்திரங்களே ஹோமத்தின்போதும் ஸ்வாஹாகாரத்துடன் சொல்லப்படும். சொல்லப்படும் மந்திரத்திற்கேற்ப ஸ்வாஹாகாரங்கள் பல்வேறு கால அளவுகளில் அமையும். ஆனால் ஒவ்வொரு ஸ்வாஹாகாரம் சொல்லும்போதும் ஸ்ரீ ஸ்வாமி இம்மி பிசகாமல் ஹவிஸ்களை அக்னியில் சேர்ப்பதை பார்த்த கண்கள் பாக்கியம் பெற்றவை. ஸ்ரீ ஸ்வாமியின் தலைமையில் ரித்விக்குகள் மந்திரங்களை அனுஸந்திப்பார்கள். சமித்து, க்ஷுரான்னம், ஆஜ்யம் (நெய்), 32 வித பக்ஷணங்கள், பால், தயிர், தேன், அருகம்புல், வில்வம், மூலிகைகள், பழங்கள், மற்றும் புஷ்பங்கள் ஹவிஸாக சமர்ப்பிக்கப்படும். சமித்து, ஷீரான்னம், ஆஜ்யம் ஆகிய மூன்றிலும் ஒரு ஆவிர்த்தி ஹோமம் நடைபெறும். ஒரு ஆவிர்த்தி முடிய 3 மணிகாலம் ஆகும். குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் ஹோம குண்டத்தின் அக்னி ஜ்வாலைக்கு முன் ஸ்ரீ ஸ்வாமி அமர்ந்து கொண்டு ஆடாமல், அசையாமல் மிகுந்த ச்ரத்தையோடு மந்திரங்கள் சொல்லி ஹவிஸை ஹோம குண்டத்தில் சமர்ப்பிப்பார்.

மட்டபல்லியில் நடந்த 32 ஹோமகுண்ட யஜ்ஞத்தில் 28 மணி நேரத்திற்கும் அதிகமாக தொடர்ந்து ஹவிஸை சமர்ப்பித்து யஜ்ஞம் செய்தார். அதைப் பார்த்த கண்களை பார்க்கவே கோடி கண்கள் வேண்டும். க்ஷுரான்ன ஹோமம் முடிந்தவுடன் ஸ்ரீ ஸ்வாமி குழுமியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கும் தன் கையாலேயே ஹோம சேஷம் வழங்குவார். இதுவே பல மணி நேரங்கள் நீடிக்கும். ஜபத்தை போன்று ஹோமமும் பல நாட்கள் நடைபெறும். ஒன்றுக்கு மேற்பட்ட ஹோம குண்டம் இருந்தால் எல்லா ஹோம குண்டங்களிலும் சமித்து, அன்னம், மற்றும் ஆஜ்யத்தினால் ஹோமம் நடைபெறும். எல்லா ஹோம குண்டங்களிலும் ஸ்ரீ ஸ்வாமியே ஹவிஸ் சமர்ப்பித்து யஜ்ஞ நாயகனான மட்டபல்லிநாதனை மகிழ்விப்பார்.

15. வஸோர்தாரா


ஹோமம் முடிந்த பிறகு வஸோர்தாரா ஆரம்பமாகும். இது த்ரவிய, மந்த்ர, நியம லோபங்களுக்கு பரிகாரமாக செய்யப்படும். வஸோர்தாரா ஹோமம் நடக்கும்போது நாம் மனதில் பக்தியுடன் வேண்டுபவை எல்லாம் தங்கு தடையின்றி நடந்தேறும் என்று ஸ்ரீ ஸ்வாமி சொல்வார். வஸோர்தாரா செய்ய பயன்படுத்தபடும் உபகரணம் வெள்ளி கவசம் போடப்பட்ட மரக் கரண்டி போன்றிருக்கும். அக்கரண்டியின் இறுதியில் நெய் சேர்ப்பதற்கு ஏற்ப குழிவாக இருக்கும். அதிலிருந்து நெய் ஹோமத்தில் விழுவதற்கு ஏதுவாக மறு முனையில் ஸிம்ஹ முகத்துடன் கூடிய வாய் அமைக்கப்பட்டிருக்கும். சமகம் மற்றும் மந்திரங்கள் சொல்லி நெய் ஹோமத்தில் சேர்க்கப்படும். சுமார் 2 மணி நேரம் வஸோர்தாரா ஹோமம் நடக்கும். கைங்கர்யபாரர்கள் வஸோர்தாராவை பிடித்துக்கொள்ள ஸ்ரீ ஸ்வாமி தங்கு தடையின்றி நெய்யை சேர்த்துக்கொண்டேயிருப்பார். நெய் அறுபடாமல் நூலிழை போல் தாரையாக அக்னியில் சேர்ந்து கொண்டேயிருக்கும். தொடர்ந்து நெய் சேர்ப்பதால் அக்னி 15 அடி உயரத்திற்கு ஜ்வாலையாக எழும். ஸ்ரீ ஸ்வாமி கை காண்பித்தவுடன் அக்னி ஜ்வாலை உடனே தணிந்துவிடுவதைப் பார்க்க மிகவும் ஆனந்தமாகவும் அற்புதமாகவும் இருக்கும்.

16. பூர்ணாஹூதி


ஹோமத்தில் கடைசியாக சேர்க்கப்படும் ஆஹூதிக்கு பூர்ணாஹூதி என்று பெயர். பூர்ணாஹூதியுடன் ஹோமம் நிறைவு பெறும். இதன் அங்கமாக கோ பூஜை, கன்யா பூஜை மற்றும் தம்பதி பூஜைகள் நடைபெறும். சில யஜ்ஞங்களில் பெருமாள் ஆக்ஞையின்படி ப்ரஹஸ்பதி மற்றும் சுக்ர பூஜைகளும் நடைபெறும். ப்ரதான ஹோம குண்டத்திற்கு அருகே யஜ்ஞமூர்த்திக்கு சமீபத்தில் இப்பூஜைகள் நடைபெறும். நங்கைநல்லூர் யஜ்ஞத்தில் இந்த சமயத்தில் ஸஹஸ்ர தீபாலங்காரமும் நடந்தது. கோ பூஜையில் பசு மற்றும் கன்றுக் குட்டிக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, பழம் கொடுத்து மங்கள ஹாரத்தி எடுக்கப்படும். கன்யா பூஜையில் கன்யா பெண்ணை உட்கார வைத்து சந்தனம், குங்குமம் கொடுத்து, மாலை சாற்றி, பால் பழம் கொடுத்து மங்கள ஹாரத்தி எடுக்கப்படும். தம்பதி பூஜையில் ஒரு தம்பதியை உட்கார வைத்து சந்தனம், குங்குமம் கொடுத்து, மாலை சாற்றி, பால் பழம் கொடுத்து மங்கள ஹாரத்தி எடுக்கப்படும். எல்லா பூஜைகளிலும் தங்க நாணயம், தக்ஷிணை, பட்டு வஸ்திரத்துடன் சம்பாவனை செய்யப்படும். ஸ்ரீ ஸ்வாமி தம்பதியோ அல்லது ஹோமம் நடத்தும் யஜமான தம்பதியோ மேற்கூறிய பூஜைகளை செய்வார்கள்.

பூர்ணாஹூதியின் ஓர் அங்கமாக பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரம், 9 கஜ பட்டு புடவை, பட்டு ரவிக்கைத்துண்டு, நாணயங்கள், மட்டை தேங்காய் போன்றவை ஹோமத்தில் சேர்க்கப்படும். இவற்றை தட்டுகளில் ஏந்தி பக்தர்கள் மங்கள வாத்தியம் முழங்க யஜ்ஞ வாடிகையைச் ப்ரதக்ஷணமாக சுற்றிவந்து ஸ்ரீ ஸ்வாமியிடம் கொடுக்க, அவர் அவற்றை ஆஜ்யத்தில் தோய்த்து ஹோமத்தில் சமர்ப்பிப்பார். ஸ்ரீ ஸ்வாமியே வெற்றிலை, பாக்கு, மட்டை தேங்காய், சந்தனக் கட்டை, நாணயங்கள், நவரத்தினங்கள் இன்னும் பல மங்கள பொருட்களை பட்டு துணியில் மூட்டையாக கட்டி வைப்பார். பூர்ணாஹூதி மூட்டையை தன் தலைமேல் வைத்து யஜ்ஞ வாடிகையை சுற்றி எடுத்து வந்து யஜ்ஞமூர்த்தியின் திருவடியில் வைத்து ப்ரார்த்திப்பார். பின்பு அந்த மூட்டையை அக்னியில் சமர்ப்பிப்பார். அதன் பின் ஸ்ரீ ஸ்வாமி ஹோம குண்டத்தின் முன் சாஷ்டாங்கமாக ஸேவித்து ப்ரம்மா ஆவாஹனம் செய்யப்பட்ட கலசத்தை நகர்த்தி வைப்பார். இதன் மூலம் ஹோமம் நிறைவு பெறும். பூர்ணாஹூதி ப்ரதான ஹோம குண்டத்திற்கு மட்டுமே பண்ணப்படும்.

17. அக்னி உத்வாஸனம்


பூர்ணாஹூதி முடிந்தவுடன் ஹோம குண்டத்திலிருந்து சிறிது அக்னியை ச்ருக்கு, ச்ருவம் மூலம் எடுத்து யஜ்ஞ மூர்த்தியின் திருவடியில் ஸ்ரீ ஸ்வாமி சேர்ப்பார். ஹோம குண்டத்திலிருந்து எடுக்கப்பட்ட மையை யஜ்ஞ மூர்த்திக்கு வைத்தபின் ஸ்ரீ ஸ்வாமி தனக்கும், ரித்விக்குள் மற்றும் அங்கு குழுமியிருக்கும் எல்லா பக்தர்களுக்கும் நெற்றியில் இடுவார். இந்த மையானது த்ருஷ்டி தோஷத்தை நீக்கும்.

18. கலச உத்வாஸனம்


கலசங்களுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு ஜபத்தின்போது ஆவாஹனம் செய்யப்பட்ட தேவதைகள் அவர்களுடைய ஸ்வஸ்தானத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

19. திருமஞ்சனம்


யஜ்ஞ மூர்த்தி, திவ்ய தேச மூர்த்திகள், க்ஷேத்ர மூர்த்திகள், ஆழ்வார் மற்றும் ஆசார்ய மூர்த்திகள் திருமஞ்சனவீதியில் எழுந்தருளப் பண்ணப்படுவார்கள். ஆவாஹனம் செய்யப்பட்ட அதே க்ரமத்தில் 108 மற்றும் 1008 கலசங்களும் யஜ்ஞ வாடிகையை சுற்றி ப்ரதக்ஷணமாக எடுத்து வரப்படும். ஜப மந்திரங்களால் ஜபிக்கப்பட்ட கலச தீர்த்தத்தினால் ஸ்ரீ ஸ்வாமி திருமஞ்சனம் செய்வார். ஒவ்வொரு வரிசை கலச தீர்த்த திருமஞ்சனம் முடிந்ததும் பெருமாளுக்கு விசேஷ ஹாரத்தி, மற்றும் உபஹாரம் செய்யப்படும்.

20. கட்டியம்


ஸஹஸ்ர மற்றும் ஸத கலச திருமஞ்சனம் முடிந்த பின் எல்லா பெருமாளுக்கும் மஞ்சள் காப்பு சாத்தப்படும். ரித்விக்குகளுக்கு ஸ்ரீ ஸ்வாமி பரிவட்டம் கட்டுவார். பின்னர் கட்டியம் கூறப்படும். கட்டியத்தில் திவ்ய ப்ரபந்த பாசுரம் மற்றும் ந்ருஸிம்ஹ ஸ்லோகங்களை அனுஸந்தித்து பெருமாளை ‘மஞ்சனம் ஆட வாராய்’ என அழைப்பார்கள்.

21. ஸஹஸ்ரதாரா, சங்கதாரா, சக்ரதாரா


கட்டியம் முடிந்த பின்னர் 10 ப்ரதான கலசங்களும் கலச வேதிகையிலிருந்து எடுத்து வரப்படும். ஸ்ரீ ஸ்வாமி 1008 த்வாரங்கள் கொண்ட ஸஹஸ்ரதாரா என்னும் வெள்ளி தட்டைக் கொண்டு திருமஞ்சனம் செய்வார். சங்கு வடிவிலும் சுதர்சன சக்கர வடிவிலும் அமையப்பெற்ற வெள்ளியிலான சங்கதாரா, சக்ரதாராவினால் ஸஹஸ்ரதாராவில் கலச தீர்த்தம் சேர்க்ககப்படும். சஹஸ்ரதாரா திருமஞ்சனம் முடிந்தபின் எல்லோருக்கும் பெருமாள் திருமேனியை அலங்கரித்த மஞ்சள் காப்பு விநியோகிக்கப்படும். 1992ல் நடந்த நைமிஸாரண்ய மஹாயஜ்ஞத்தின்போது ஸ்ரீ ஸ்வாமி தொடர்ந்து 8 மணி நேரம் திருமஞ்சனம் செய்தார். நைமிஸாரண்ய க்ஷேத்ரத்திலுள்ள 43வது பட்ட ஜீயருக்கும் திருமஞ்சனம் செய்தார். திருமஞ்சனம் முடிந்த பின் எல்லா மூர்த்திகளையும் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து விசேஷ அலங்காரம் நடைபெறும். அலங்காரம் முடிவதற்கே 2 மணி நேரமாகும்.

22. அவப்ருதம்


யஜ்ஞத்தின் முடிவில் எல்லோருக்கும் செய்யப்படும் ஸ்நானத்திற்கு ‘அவப்ருத ஸ்நாநம்’ என்று பெயர். திருமஞ்சனத்தின்போது திருமஞ்சனவீதி வழியாக வரும் கலச தீர்த்தம் பெரிய பாத்திரங்களில் நிரப்பப்படும். பல ஆவிர்த்தி ஜப மந்திரங்களால் புனிதமும் சக்தியும் அடைந்த கலச தீர்த்தம் பெருமாளின் திருமேனி சம்பந்தமும் சேர்ந்து மேலும் அதீத சக்திகளை பெற்றிருக்கும். குழுமியிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களை தம்பதியராகவும் தனியேயும் அமரச்செய்து அவர்களுடைய சிரஸில் ஸ்ரீ ஸ்வாமியே அந்தத் தீர்த்தத்தை சேர்ப்பார். தீர்த்த பரிமளம் சேர்ந்திருப்பதனால் அவப்ருத ஸ்நானம் மிகுந்த புத்துணர்ச்சி அளிக்கும். எல்லோருக்கும் அவப்ருத ஸ்நானம் முடிந்தபின் கடைசியாக ஸ்ரீ ஸ்வாமி தனக்கும் தன் பத்னிக்கும் தீர்த்தம் சேர்ப்பார்.

23. தீர்த்தவாரி


ஸ்ரீ ஸ்வாமியின் முன்னிலையில் மங்கள வாத்தியம் முழங்க பல்லக்கில் ‘ஸ்ரீசடாரியையும் சக்கரத்தாழ்வாரையும் ரித்விக்குகள் நதிக்கரைக்கு எழுந்தருளச் செய்வார்கள். ஸ்ரீசடாரி, சக்கரத்தாழ்வார் சகிதம் ஸ்ரீ ஸ்வாமி, ரித்விக்குகள், பக்தர்கள் எல்லோரும் ஏக காலத்தில் நதியில் தீர்த்தமாடுவார்கள். சில யஜ்ஞங்களில் அதே சமயத்தில் நதிக்கரையில் அவப்ருத ஸ்நானமும் நடைபெறும்.

24. பாலிகை கரைத்தல்


மங்கள வாத்திய கோஷ்டியுடன் சுமங்கலி ஸ்திரீகள் ஸ்ரீ ஸ்வாமியின் பத்னியின் முன்னிலையில் மடக்குகளில் செழித்து வளர்ந்திருக்கும் பாலிகையை எடுத்துச் சென்று நதியில் கரைப்பார்கள்.

25. சாற்றுமுறை


கலசங்களில் சாற்றிய வஸ்திரங்கள் யஜ்ஞ வாடிகையில் இருக்கும் எல்லா புருஷர்களுக்கும் பரிவட்டமாக கட்டப்படும். அதன்பின் பெரிய சாற்றுமுறை மிக விமரிசையாக நடக்கும். அப்போது சதுர் வேதங்கள் மற்றும் திவ்ய ப்ரபந்தங்கள் அனுஸந்திக்கப்படும். சுண்டல், புளியோதரை, கேசரி, தோசை, நவநீதம் மற்றும் தத்யோன்னம் பெருமாளுக்கு அமுது செயய்ப்பட்டு எல்லோருக்கும் ப்ரசாதமாக வழங்கப்படும். கோஷ்டி ஆரம்பிக்கும்முன் ஸ்ரீ ஸ்வாமி தானே எல்லோருக்கும் ஸ்ரீசடாரி சாற்றுவார்.

குறிப்பு எல்லா புருஷர்களுக்கும் பரிவட்டம் கட்டப்படும் என்றோம். இது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கும் என்று சந்தேகம் எழுவது சாத்தியமே! அதற்கு சான்று பின் வரும் குறிப்பு. விஜயவாடா பாத சிவாலயத்தில் 1988ல் நடந்த ஸ்வாதி யஜ்ஞத்தின்போது ஸ்ரீ ஸ்வாமி ஒரு பிச்சைக்காரருக்கு தானே அவப்ருத ஸ்நானம் செய்தார். அந்த முதியவர் கோவில் கதவுக்கு அருகில் நின்று கொண்டு யஜ்ஞத்தை முழுவதும் அனுபவித்துக் கொண்டிருந்தார். அவரை ஸ்ரீ ஸ்வாமி அழைத்து தானே அவருக்கு பரிவட்டம் கட்டினார். ஸ்ரீ ஸ்வாமி எல்லோரையும் எந்த பாகுபாடும் இல்லாமல் பகவத் ஸ்வரூபமாகவே, பாகவதர்களாகவே நடத்தினார் என்பதற்கு இதுவே சான்று.

26. அன்னக்கூட உற்சவம்


அன்னக்கூட உற்சவத்தில் அன்னத்தினால் சிறு குன்று அமைத்து மனோம்பு, தேன்குழல், வடை, மைசூர்பாகு உட்பட பலவித பக்ஷணங்களைக் கொண்டு அலங்கரிக்கப்படும். அதைச் சுற்றி கதம்ப குழம்பு பாத்திரங்களில் வைக்கப்படும். பின்னர், யஜ்ஞமூர்த்தியை அன்னகூடத்தில் எழுந்தருளச் செய்வார்கள். அன்னக்கூடத்திற்கு பூஜை, ஹாரத்தி நடந்தபின் அன்னத்தோடு, கதம்ப குழம்பு சேர்த்து பிசைந்த கதம்பசாதம் எல்லோருக்கும் விநியோகிக்கப்படும். கதம்ப சாதத்தின் சுவையை நாவினால் உணரத்தான் முடியுமேயொழிய வருணிக்க இயலாது.

27. கல்யாண உற்சவம்


யஜ்ஞம் முடிந்த பிறகு, சாந்திக்காக திவ்ய தம்பதிகளுக்கு கல்யாண உற்சவம் நடைபெறும். ஸ்ரீ ஸ்வாமியின் முன்னிலையில் கைங்கர்யபாரர்கள் கல்யாண உற்சவத்தை விமரிசையாக நடத்துவார்கள். கங்கண தாரணம், மாலை மாற்றுதல், மாங்கல்ய தாரணம் எல்லாம் மிகவும் சிறப்பாக நடந்தேறும்.

28. டோலோத்ஸவம்


கல்யாண உற்சவம் முடிந்ததும் திவ்ய தம்பதிகளை டோலையில் எழுந்தருளப் பண்ணுவார்கள். பக்தர்கள் எல்லோரும் பக்தி பரவசத்துடன் பாடல்களை பாடி திவ்ய தம்பதிகளை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிப்பார்கள். ஸ்ரீ ஸ்வாமி சந்நிதியில் நடக்கும் டோலோத்ஸவம் பல சமயங்களில் இரவு முழுவதும் நடைபெறும்.

29. ததீயாராதனை


ததீயாராதனையின்போது ஸ்ரீ ஸ்வாமி, ரித்விக்குகள், பக்தர்களோடு ஒரே பந்தியில் உட்கார்ந்து சாப்பிடுவார். யஜ்ஞம் நடக்கும் எல்லா நாட்களுமே பக்தர்களுக்கு கல்யாண சாப்பாடு (ப்ரசாதங்களுக்கு மேலாக) பரிமாறப்படும். யஜ்ஞம் ஆரம்பித்தது முதல் அன்றைய தினம்வரை வெறும் நீராகாரமே ஸ்ரீ ஸ்வாமியின் தினப்படி ஆகாரம். ததீயாராதனையின் போதுதான் ஸ்ரீ ஸ்வாமி உணவு உட்கொள்வார்.

30. வித்வத் ஸதஸ்


ததீயாராதனைக்குப்பின் வித்வத் ஸதஸ் தொடங்கும். அப்போது ஸ்ரீ ஸ்வாமி ரித்விக்குகள், கோவில் பட்டர்கள், கைங்கர்யபாரர்கள், பரிசாரகர்கள், நாதஸ்வர வித்வான்கள், பூக்காரர் மற்றும் யஜ்ஞத்திற்கு உதவி நல்கிய எல்லோருக்கும் தக்ஷிணை அளிப்பார். தக்ஷிணையினால்தான் யஜ்ஞம் பூர்ணத்வம் அடையும் என்று ஸ்ரீ ஸ்வாமி சொல்வார். சம்பாவனை முடிந்தபின் ஸ்ரீ ஸ்வாமி 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து முடிந்த யஜ்ஞம் பற்றியும் பின் வரப்போகின்ற யஜ்ஞ க்ஷேத்ரத்தைப் பற்றியும் உபன்யாசம் செய்வார். யஜ்ஞத்தில் கலந்து கொண்ட எல்லோருக்கும் நன்றி தெரிவிப்பார். பின்னர், பாகவதோத்தமர்கள் ஸ்ரீ ஸ்வாமி தம்பதியரிடம் பிரியாவிடை பெறும்போது அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமம் மற்றும் யஜ்ஞ பக்ஷணங்கள் வழங்கப்படும்.

31. நாம சங்கீர்த்தனம்


எல்லா யஜ்ஞங்களிலும் ஜபம், ஹோமம் நடைபெறாத சமயங்களில் வேத, மங்கள வாத்ய கோஷத்தோடு நாம சங்கீர்த்தனமும் நடைபெறும். ஸ்ரீ ஸ்வாமி எல்லாவற்றையும் செவியுற்று, மகிழ்ந்து வித்வான்களுக்கு மரியாதை செய்வார். திருமதி ராதா க்ருஷ்ணஸ்வாமியின் சீரிய தலைமையில் ஸ்ரீ லக்ஷ்மிந்ருஸிம்ஹ ப்ரபாவத்தை நாடெங்கும் சென்று பாடி மகிழ்விக்கும் வனமாலிகா குழுவினர் குதூகலத்தோடு நாம சங்கீர்த்தனத்தில் பங்கு கொள்வர்.

32. சுப மங்களம்


நம்மில் பலருக்கு பூர்ணாஹூதியுடன் யஜ்ஞம் நிறைவேறிவிடும். இன்னும் சிலருக்கு வித்வத் ஸதஸ் யஜ்ஞத்தின் கடைசி அங்கம். ஆனால் ஸ்ரீ ஸ்வாமி இன்னுமொறு விசேஷமான அங்கத்துடன் யஜ்ஞத்தை நிறைவு செய்வார். யஜ்ஞம் முடிந்து தன் ஜாகைக்கு வந்தவுடன் ஸ்ரீ ஸ்வாமி யஜ்ஞத்திற்காக பொருள் மற்றும் சரீர உழைப்பை நல்கிய அனைவருக்கும் தானே யஜ்ஞம் நன்றாக நடந்தேறியதை விளக்கி, உதவிக்கு நன்றி நவின்று, யஜ்ஞ ப்ரசாதம், பெருமாள் படம் மற்றும் காசுகளை அனுப்புவார். எந்த பாரபட்சமும் இன்றி எல்லோருக்கும் கடிதம் எழுதுவார். பல இல்லங்களில் அவருடைய மணியான எழுத்துக்களை பொக்கிஷமாக பாதுகாத்து வருவதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.

ஶ்ரீ ஸ்வாதி மஹா யஜ்ஞங்கள் அட்டவணையும், அவை நடந்த இடங்களும்

ஶ்ரீ ஸ்வாமி 108ற்கும் மேற்பட்ட ஶ்ரீ ஸ்வாதி மஹயஜ்ஞங்களை பாரத தேசத்தில் பல்வேறு இடங்களில் நடத்தியுள்ளார். அவற்றின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

யஜ்ஞம்நடந்த இடம்எஜமானர்
1st24, Venkatesan St, Chennai – 17Sri Swami
2nd24, Venkatesan St, Chennai – 17Sri Swami
3rd14, Valmiki Street, Chennai-17Sri Vidyasagar
4th24, Venkatesan St, Chennai – 17Sri Swami
5th“Sesha Bhavanam”, 10 East Mada Street Chennai – 4Sri Srinivasachar
6thSri Sringeri Shankara Mutt, Chennai – 1Sri Bhakta Jana Sabha
7thSri Desika Bhavanam, Chennai – 4Sri Swami
8th10, East Mada Street, Chennai – 4Sri Lakshmi Narasimha Maha Yagna Committee
9thSri Malola Kalyana Mandapam, Chennai – 17Sri Lakshmi Narasimha Maha Yagna Committee
10th10, Soundararajan St, Chennai – 17Sri Mahadeva lyer
11thSelaiyur, Tambaram, ChennaiSita Rama Bhakta Sabha
12th38, 5th St, Padmanabha Nagar, ChennaiSri R. Krishnaswamy lyengar
13thSri Anantha Padmnabhaswamy Temple, ChennaiSri Sathsangam, Adyar
14th to 20th24, Venkatesan St, Chennai – 17Sri Swami
21stSri Anantha Padmnabhaswamy Temple, ChennaiSri Sathsangam, Adyar
22nd24, Venkatesan St, Chennai – 17Sri Swami
23rdIndustrial Estate, Ambattur ChennaiSri K. Vidyasagar
24thSri Rama Temple, TVS Nagar, MaduraiEikya Vaishnava Sabha
25th to 27thSri Godavari Theeram, Rajamundry (AP)Sri Swami
28thKakinada, E.G. Distt (AP)Sri Swami
29thSri Vasavi Mahal, Salem -1Sri R.Srinivasan
30thMangalagiri, Near VijayawadaSri Swami
31st24, Venkatesan St, Chennai – 17Sri Swami
32nd36, Jawahar Nagar, Agaram ChennaiSri Narayanan
33rd24, Venkatesan St, Chennai – 17Sri Swami
34thSri Sankara Matam, Perambur, ChennaiSri Sathgyra Sangeetha Sabha
35thI.I.T. Chennai – 36Sath Sangam
36thSri Panduranga Temple, SalemSri Vaishnava Sabha
37thSri Vaishnava Sabha, SalemSri A. Rukmangadha lyer
38th“Selva kudil”, Shevapet, SalemSri Kancheepumar
39thTriplicane, Chennai – 5Sri Rama Navami Committee
40th24, Venkatesan St, Chennai – 17Sri Swami
41stSri Rama Temple, TVS Nagar, MaduraiEikya Vaishnava Sabha
42ndKakinadaSri Swami
43rdMangalagiri, Near VijayawadaSri Swami
44thSimhachalam (AP)Sri Swami
45thKakinadaSri Swami
46th & 47thAntharvedi (AP)Sri Swami
48th & 49thSri Godavari Theeram, Rajamundry (AP)Sri Swami
50thAntharvedi (AP)Sri Swami
51stKakinadaSri Swami
52ndTriplicane, Chennai -5Sri Guruvayurappan Seva Samithi
53rdKorattur, ChennaiSatsangham
54th & 55thKakinadaSri Swami
56thSimhachalam (AP)Sri Swami
57thKumili, Near Sri Koormam (AP)Sri Krishnam Raju
58thM.S.K. Kalyana Mandapam, SalemSri R. Rajagopalan
59thM.S.K. Kalyana Mandapam, SalemSri N.Srinivasan, Sri M.S.Krishnamurthy lyer
60thSimhachalam (AP)Sri Swami
61stSri Ramakrishna Kalyana Mandapam, CoimbatoreSri Ramakrishna Sabha
62ndSri Ayodhya Aswametha Maha Mandapam, ChennaiSri Rama Samaj
63rdMadipakkam, ChennaiSathsangam
64thM.S.K. Kalyana Mandapam, SalemSri S. Srinivasan, Sri R. Rajagopalan, Sri M.S.K & Sri Srinivasan
65thKakinadaSri Swami
66thSri Godavari Theeram, RajamundrySri Swami
67th to 69thKakinadaSri Swami
70th10, New Colony, Tuticorin – 3Sri V.A. Subramania lyer
71st to 73rdKakinadaSri Swami
74thKumili, Near Sri Koormam (AP)Sri Krishnam Raju
75thMangalagiri, Near VijayawadaSri Swami
76thSimhachalam (AP)Sri Swami
77thKakinadaSri Swami
78thNarmada Theeram, Near HoshingabadSri Swami
79thAntharvedi (AP)Sri Swami
80th & 81stSri Ayodhya Aswametha Maha Mandapam, ChennaiSri Rama Samaj
82ndMangalagiri, Near VijayawadaSri Swami
83rdKakinadaSri Swami
84thSimhachalam (AP)Sri Swami
85th & 86thKakinadaSri Swami
87th & 88thAntharvedi (AP)Sri Swami
89thArasavalli, Near Vijayanagaram (AP)Sri Swami
90thSector 3, Rama Krishna Puram, New DelhiSri Swathi Sri Lakshmi Narasimha Maha Mantra Yagna Sewa Committee
91stSri Lakshmi Narasimha Swamy Temple, VijayawadaSri Swami
92ndSri Soundararaja Perumal Temple, Agaram, ChennaiSri Swami
93rdToovey Puram, TuticorinSri Viswanatha lyer
94thKakinadaSri Swami
95thBlue Bells Matriculation School, KilkattalaiSri Swami
96thSri Lakshmi Narasmiha Navaneetha Krishnan Temple NangainallurSri Krishna Baktha Jana Sabha Nangainallur
97thSri Panaka Narasimha Temple, Mangalagiri (AP)Sri Swami
98thAntharvedi (AP)Sri Swami
99thSholingar (TamilNadu)Sri Swami
100thVedadri (AP)Sri Swami
101stHrishikesh (UP)Sri Swami
102ndYadagirigudda (AP)Sri Swami
103rdShobanadri (AP)Sri Swami
104thMattapalli (AP)Sri Swami
105thNaimisaranyam (UP)Sri Swami
106thVadepalli (AP)Sri Swami
107th & 107ASimhachalam (AP)Sri Swami
107BSri Brindavan (UP)Sri Swami
107CSrirangamSri Swami
107DMattapalliSri Swami
Scroll to Top